மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!

மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி…  அடிமாடாகும் கறவை மாடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!

ஓவியம்: ஹரன்

ரப்பில் அமர்ந்திருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்துவிட வரப்பிலேயே ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

முதல் செய்தியைச் சொல்லி மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி…  அடிமாடாகும் கறவை மாடுகள்!

“இப்போ பத்திரிகைகள், டி.வியைவிட, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல வர்ற செய்திகள்தான் அதிக முக்கியத்துவம் பெறுது. அது, பொய்யா உண்மையானுகூட ஆராய்ச்சி பண்ணாம உடனே பரப்பப்படுறதால ரெண்டு, மூணு நிமிஷத்துக்குள்ள லட்சக்கணக்கான பேருக்கு, அந்தச் செய்தி போய்ச் சேந்துடுது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டு நெல்லுக்கும் கரும்புக்கும் கொள்முதல் விலையை உயர்த்திக் கேட்டு பரப்புரை பண்ணிட்டிருக்காங்க, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்துக்காரங்க.

அவங்க பரப்பிக்கிட்டிருக்குற பதிவுல, ‘விவசாயிகள் எவ்வளவு உழைச்சாலும் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யப்படுறது இல்லை. விவசாயிகளுக்கு, தண்ணீர் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தோட கடமை. ஆனா, அதை அரசாங்கம் ஒழுங்கா செய்யாததால, வருமானம் இல்லாம இருக்கிறாங்க விவசாயிகள்.

1970-ம் வருஷம் ஒரு சட்டமன்ற உறுப்பினரோட சம்பளம் 250 ரூபாய். அந்த வருஷம் 60 கிலோ நெல்லோட கொள்முதல் விலை 40 ரூபாய். ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை 90 ரூபாய். ஆனா, இப்போ சட்டமன்ற உறுப்பினரோட சம்பளம் 55 ஆயிரம் ரூபாய். இப்போ, 60 கிலோ நெல்லோட கொள்முதல் விலை 880 ரூபாய்தான். ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையும் 2 ஆயிரத்து 300 ரூபாய்தான். அதே மாதிரிதான் தங்கத்தோட விலை, அரசு ஊழியர்களோட சம்பளம்னு எல்லாமே பல மடங்கு உயர்ந்திருக்கு. ஆனா, விளைபொருளுக்குக் கொள்முதல் விலையை உயர்த்த மாட்டேங்குறாங்க. சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிற விகிதத்துல கணக்குப் போட்டா... ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய்னு இப்போ நிர்ணயிச்சிருக்கணும். இந்த அளவு விலையெல்லாம் விவசாயிகள் கேட்கலை. கட்டுப்படியான விலையைக் கொடு, அதையும் முழுசாகக் கொடுனுதான கேக்குறாங்க’னு பதிவு பண்ணிருக்காங்க” என்றார், வாத்தியார்.

“மழைத் தண்ணியும் இல்லை, கட்டுப்படியான விலையும் இல்லைன்னா என்னதான் பண்ணுவான் சம்சாரி” என்ற ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொன்னார்.

“திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்துல வாராவாரம் திங்கள்கிழமை நடக்கிற கால்நடைகள் சந்தை முக்கியமானது. இப்போ, தென்மாவட்டங்கள்ல கடுமையான வறட்சி நிலவுறதால நிறைய பேர் கால்நடைகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, இப்போ, ஒட்டன்சத்திரம் சந்தைக்கு அதிகளவுல மாடுகள் வர ஆரம்பிச்சிருக்கு. காங்கேயம், மணப்பாறை, தேனி, ராஜபாளையம், தென்காசி, குற்றாலம்னு பல பகுதிகள்ல இருந்தும் பசுக்கள், கன்றுகள், எருமைகள், உழவு மாடுகள்னு கொண்டு வந்துகிட்டு இருக்காங்க. அதிகளவுல மாடுகள் வர்றதால, விலை குறைஞ்சுடுச்சு. இதைச் சாதகமா பயன்படுத்திக்கிட்டு கேரள வியாபாரிகள் அடிமாடுகளுக்காகப் போட்டி போட்டு வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. விவசாயிகளும் வேற வழியில்லாம வந்த விலைக்கு விற்பனை செஞ்சுட்டுப் போறாங்க” என்று கவலையுடன் சொன்னார், ஏரோட்டி.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, அதைக் கலைக்கும் வகையில், கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக்கொடுத்தார், காய்கறி.

அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “கடலூர்் மாவட்டம் முந்திரி உற்பத்திக்குப் பெயர் போனது. இந்தப் பகுதியில் பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலினு கிட்டத்தட்ட 75 ஆயிரம் ஏக்கர் நிலத்துல முந்திரி சாகுபடி நடக்குது. பெரும்பாலும் எல்லாரும்,

‘வி.ஆர்.ஐ–3’ங்கிற வீரிய ஒட்டு ரக முந்திரியைத்தான் சாகுபடி செய்றாங்க. வழக்கமா அக்டோபர், நவம்பர்ல பருவ மழை கிடைச்சதும் உரம் வெப்பாங்க. டிசம்பர்-ஜனவரி மாதங்கள்ல புதுத் துளிர்விட்டு காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல்-மே மாசங்கள்ல முந்திரியை அறுவடை பண்ணுவாங்க. ஆனா, இந்த வருஷம் சரியா பருவமழை கிடைக்காததால இதுவரை முந்திரி மரங்கள்ல துளிர் விடலையாம். அதனால, விளைச்சல் கிடைக்கிறது கஷ்டம்தான்னு விவசாயிகள் புலம்பிக்கிட்டு இருக்காங்க. இந்த வருஷம் மகசூல் குறையுற சூழ்நிலை இருக்குதாம்.

ஆனா, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் அனீஷா ராணி, ‘இப்போ முந்திரி மரங்கள் மேல தண்ணியைத் தெளிச்சி விட்டா, உடனடியா துளிர்க்க ஆரம்பிச்சுப் பூக்கள் பூக்கும்னு யோசனை சொல்லியிருக்காங்க” என்றார்.

“ஆமா, மழை பெய்யாட்டி இதைச் செஞ்சுதான ஆகணும்” என்ற வாத்தியார்,

அந்த நேரத்தில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உபயத்தால், லேசான தூறல் விழ… மூவரும் எழுந்து மோட்டார் அறைக்குச் சென்றனர். அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.