மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் ‘சிறுகண் பீளை’ எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.

பசுமைப் புரட்சிக்குப் பிறகு அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுப் பல நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம். அவற்றில் முக்கியமானது, சிறுநீரகப் பாதிப்பு. ஏனெனில் உடலுக்குள் சேரும் நஞ்சை வெளியேற்றும் முக்கியமான வேலையைச் செய்பவை, சிறுநீரகங்கள்தான். அதே நேரத்தில் நாம் உண்ணும் இயற்கைக்கு முரணான உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவையும் சிறுநீரகங்கள்தான்.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவது அல்லது முற்றிலும் செயலிழந்து போவது, சிறுநீரகங்கள் வீங்குவது அல்லது சுருங்குவது ஆகியவைதான் இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்னைகள். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக இருக்கும், அற்புத மூலிகைதான் சிறு கண் பீளை. ‘பூளைப்பூ’, ‘பொங்கல் பூ’, ‘சிறு பீளை’ எனவும் இது அழைக்கப்படுகிறது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

மழைக்காலம் முடிந்ததும் பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும். இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. மார்கழி மாதத்தில், அதாவது பொங்கல் நெருங்கும் சமயத்தில் இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். இலையைக் கண்ணாகவும், அதையொட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் கற்பிதம் செய்தே இதற்குச் ‘சிறுகண் பீளை’ என்று பெயர் வைத்துள்ளனர். பொங்கலுக்கு முதல் நாள், வீட்டு வாசல் நிலையில் சிறு கண் பீளைப் பூங்கொத்தைச் செருகி வைக்கும் பழக்கம் இன்றும் உண்டு.

இச்செடியை ஒத்த இன்னொரு தாவரமும் உண்டு, அது பாடாண பேதி. சிறுகண் பீளையைப் போலவே கொஞ்சம் பெரிய இலைகளையும், பெரிய பூவையும் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் ‘பெருங்கண் பீளை’. இவற்றுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால்... இவை மூன்றுக்குமே சிறுநீரக நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை உண்டு. கல் கரைத்தல் மற்றும் நீர் பெருக்குதல் ஆகியவற்றுக்காக இம்மூன்று செடிகளையும் நமது தமிழ் சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இம்மூன்று செடிகளையுமே பொதுவாக, பீளைப்பூ என ஒரே பெயரில்தான் அழைக்கிறார்கள்.

இம்மூன்று மூலிகைகளின் வேர்களுக்கும் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் தன்மை உள்ளது.

பூ, தண்டு, இலை ஆகியவை சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இம்மூலிகைகளைச் சமூலமாக வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரைப் பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றன.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து... சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்... கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு... கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

சிறுபீளை குடிநீர்

சிறுபீளை சமூலம்க(ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு... ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் ‘ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்’ எனப்படும் சிறுநீரக வீக்கமும், கற்கள் அழுத்துவதால் ஏற்படும் வலியும், இக்குடிநீரால் மிக விரைவாகக் குணமாகிறது. அதிகமான கல்லடைப்பு வயிற்று வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் கூட இக்குடிநீர் குடித்த 2 மணி நேரத்தில் வலி குறைந்துவிடும்.

ஒரு முள்ளங்கிக் கிழங்கு, 2 சின்ன வெங்காயம், அரைக் கரண்டி சீரகம், ஒரு கைப்பிடியளவு நீர்முள்ளி சமூலம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, மேற்குறிப்பிட்ட குடிநீர் சரக்குகளுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் இன்னமும் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆங்கில வைத்திய முறையில், ‘லித்தோடிரிப்சி’ எனும் சிகிச்சை முறை மூலம் சிறுநீரகக் கற்களைக் கரைப்பார்கள். இச்சிகிச்சை எடுத்துக்கொண்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகும். அத்தகைய நோயாளிகளையும் மூன்று மாதங்களில் இக்குடிநீர் குணப்படுத்திவிடும். இக்குடிநீர் எடுத்துக்கொள்ளும் சமயத்தில் பால் பொருட்கள், தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இக்குடிநீரை தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்களும் கரைகின்றன. ஆனால், வெகு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதே நேரத்தில், பித்தப்பை கற்களால் ஏற்படும் வலி மற்றும் பிற அறிகுறிகள் விரைவாகக் குறையும்.

சிறுகண் பீளை, பெருங்கண் பீளை, பாடாண பேதி ஆகிய மூன்று மூலிகைகளும் இயற்கையாக வளரக்கூடிய ‘ஒரு பருவ’ தாவரங்கள். அவற்றைத் தை மாதத்தில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நோய்களை வராமல் தடுக்கக்கூடிய, வந்த நோய்களைக் குணமாக்கக்கூடிய அற்புத மூலிகைகளான நுணா, நோனி ஆகியவை குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

-வளரும்

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

விஷ நாராயணி!

சிறுநீரகச் செயலிழப்பு, உப்பு நீர், கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும் இன்னொரு மூலிகை ‘விஷ நாராயணி’. இந்த அரிய மூலிகையை மக்களுக்கு அறிமுகம் செய்தவர், மரு.இரா.ஜெயராமன். தமிழகத்தில் உள்ள அனைத்து மலைகளும், காடுகளும் இவருக்கு அத்துபடி. பாரம்பர்ய மருத்துவர்கள் மற்றும் சாமியார்களோடு நெருங்கிய தொடர்புடையவர். பொதிகை மலைக்காடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த அரிய மூலிகையை, அப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களிடம் இருந்து பெற்று வந்தார்.

பொதுவாக, விஷம் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் நமது பாரம்பர்ய மருத்துவத்தில், சிறுநீரக நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்துகிறோம். கை கால்கள், முகம் வீங்கிக் காணப்படுவது சிறுநீரகச் செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டால், விஷ நாராயணி மூலிகையின் இலைகளை மட்டும் ஒரு சிறு எலுமிச்சங்காயளவு இரு வேளை கொடுத்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், காணி மக்கள். அதைத் தொடர்ந்துதான் இம்மூலிகையைச் சோதனை செய்து பார்த்து அதைக்கொண்டு சிறுநீரக நோய்களைக் குணமாக்கினார், மரு.ஜெயராமன்.

கிரியேட்டினின் அளவு 8 வரை உயர்ந்து காணப்படும் நோயாளிகளுக்கு... விஷ நாராயணி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காயளவு காலை, மாலை இரு வேளைகள் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், மூன்று வாரங்களில் கிரியேட்டினின் அளவு குறையத் தொடங்கும்.

இந்நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். டயாலிசிஸ் தொடங்கப்பட்ட நோயாளிகளுக்கு இம்மூலிகையைக் கொடுத்து வந்தால், டயாலிசிஸ் சிகிச்சைக்கான நாட்களின் இடைவெளியை படிப்படியாகக் குறைக்க முடியும். சிறுநீரகச் செயலிழப்பு நோயின் கடைசிக் கட்டத்தில் ஏற்படும் மூச்சு வாங்குதல், சோர்வு ஆகியவற்றையும் இம்மூலிகை குணமாக்குகிறது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

பூனை மீசை!

பூனை மீசை எனும் மூலிகைக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையுள்ளது. தவிர இது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இது, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஜாவா நாட்டில் இருந்து அலங்காரச் செடியாக நமது நாட்டுக்கு அறிமுகம் ஆனது. இதனுடைய பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் ‘பூனை மீசை துளசி’ என்றும் அழைக்கிறார்கள்.

இச்செடியை பச்சையாக ஒரு கைப்பிடியளவு (100 கிராம்) எடுத்து ஒன்றிரண்டாக இடித்தோ அல்லது அரைத்தோ 1 லிட்டர் தண்ணீரில் இட்டு 125 மில்லியாகச் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இக்குடிநீர், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு நல்ல மருந்து. இதன் வணிகப் பெயர், ‘ஜாவா டீ’. இதன் தண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துப் பதியன் போட்டு செடிகளைப் பெருக்க முடியும்.

இதை மூலிகைக் குடிநீராக ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். இது, உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதாகச் சொல்கிறார்கள். இக்குடிநீரில் 35 வகையான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மலேசியா நாட்டில், சிறுநீரகக் கல்லடைப்பு, பித்தப்பைக் கல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவாதம் போன்ற நோய்களைக் குணமாக்க பூனை மீசை பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் உயிர் வேதியியல் நிகழ்வை (மெட்டோபாலிசம்) வேகப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளதால், அதிகளவு கலோரிகளை எரித்து அதிக வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது.

பூனை மீசை, விஷ நாராயணி ஆகிய இரு மூலிகைளையும் தொட்டியில்கூட வளர்க்க முடியும்.

சித்த மருத்துவர்களுக்கு வழிகாட்டி!

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

மரு.ஜெயராமன், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும், சென்னை சித்த மருத்துவக் கல்லூரியில் துணைமுதல்வராகவும் பணியாற்றியவர். இவர், பேராசிரியராகப் பணி புரிந்த காலங்களில் மாணவர்களைப் பல்வேறு மலைகளுக்கு அழைத்துச் சென்று அரிய மூலிகைகள் குறித்துக் கற்றுக்கொடுத்துள்ளார். சித்த மருத்துவத்தில் உள்ள அரிய மருந்து செய் நுட்பங்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

இவர், பாரம்பர்ய சித்த மருத்துவர்கள் மற்றும் பட்டதாரி சித்த மருத்துவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்துவருகிறார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், அரிய மூலிகைகளையும் அரிய மருந்துகளையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

வேம்பும், தாவரவியல் பெயர்களும்
   
பொதுவாக தாவரங்கள் குறித்து, மருத்துவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிந்துகொள்ள அதன் தாவரவியல் பெயர் அவசியம். அந்த வகையில் கடந்த இதழில் வெளியான வேம்பு வகைகளின் தாவரவியல் பெயரை பலரும் கேட்டிருந்தனர். அதன் விவரம் இங்கே இடம் பெறுகிறது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

விஷங்கள் பல உண்டு!

நாட்பட்ட தோல் நோய்கள் மற்றும் ஊறலை விஷக்கடி என்பார்கள். கை, கால், முகம் வீங்குவதையும் விஷ நீர் அல்லது சுரப்பு என்பார்கள். சித்த மருத்துவ மூல நூல்களில்... கடி விஷம், படுவிஷம், தங்கு விஷம், விஷ நீர் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நச்சுயிரிகள் கடிப்பதால் ஏற்படும் நச்சு நிலை, கடி விஷம். ஒவ்வாத பொருட்கள் உடலில் படுவதால் ஏற்படும் வீக்கம், தடிப்பு, ஊறல் முதலியன படு விஷம். மல ஜலக் கழிவுகள் சரியான முறையில் வெளியேற்றப்படாமல் உடலில் தங்குவது, தங்கு விஷம் அல்லது விஷ நீர்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8

அறிகுறிகளை அல்ல... நோய்களைக் குணமாக்கும் சித்த மருத்துவம்!

நோயாளி சொல்லும் அறிகுறிகளை வைத்து, ஒரு அறிகுறிக்கு ஒரு மருந்து வீதம் ஐந்து முதல் பத்து மருந்துகளை நவீன மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.

ஆனால், பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தே, ஐந்து, ஆறு நோய்களைக் குணமாக்கும். அறிகுறிகளைக் குணமாக்குவதல்ல சித்த மருத்துவம். நோய்களைக் குணமாக்குவதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு.

அதற்கு ஓர் உதாரணம், சிறுகண் பீளை குடிநீர். இது, கற்களைக் கரைக்கும். வலியைக் குறைக்கும். சிறுநீரைப் பெருக்கும். சிறுநீரகத்தின் செயல்திறனைக் கூட்டும். சிறுநீரக வீக்கத்தைக் குறைக்கும். இதிலிருந்தே நம் முன்னோரின் அறிவுத்திறனைத் தெரிந்துகொள்ளலாம்.