மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !

மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

‘‘ஹேய்... ஹேய்... ஓடுறா... ஓடுறா...’’-ங்கிற வண்டிக்காரர் சத்தமும் ஜல், ஜல்னு ஓடுற மாடுகளோட சலங்கை ஒலியும் இணையும்போது, மாட்டு வண்டிப் பயணம் தாலாட்டு போலவே இருக்கும்.

மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் அனுபவிக்காத, அரிய விஷயங்கள்ல மாட்டு வண்டிப் பயணமும் உண்டு. சங்க காலந்தொட்டுத் தமிழ் நிலத்தில் வணிகத்துக்கும் பயணத்துக்குமான எண்ணற்ற பெருவழிகள் இருந்ததை வரலாறு நெடுகிலும் பார்க்கலாம். அதியமான் பெருவழி, கொற்கைப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, கொங்குப் பெருவழினு ஏராளமான பெருவழிகள் இருந்திருக்கு. அந்தக் காலத்துல, அரசர்கள் குதிரை வண்டியிலேயும், மக்கள் மாட்டு வண்டிகள்லயும் பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்காங்க. பெண்கள், குழந்தைகள் பல்லக்கு மூலம் பயணம் செய்திருக்காங்க. குதிரை, பல்லக்குப் பயணங்களைக் காட்டிலும், மாட்டு வண்டிப் பயணம்தான், செலவு குறைந்தது. இதுல இன்னொரு வசதி, ஒரே நேரத்தில் பல பேர் பயணம் செய்ய முடியும்.

இப்படிப் பயணம் செய்யுற மாட்டு வண்டிக்கு, ‘சவாரி வண்டி’னு பேரு. இந்தச் சவாரி வண்டியில பயன்படுத்துற காளை மாடுகளுக்குச் சில தகுதிகளைச் சொல்லி வெச்சிருக்காங்க. அதாவது, மாட்டின் நிறம், சரீரம், எலும்புகள், தலை, கொம்புகள், கண்கள், காதுகள், கால்கள், குளம்புகள், சுழிகள் போன்றவை ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும்னு பட்டியல் நீளுது. சில குறிப்புகள், சோதிடமாகவும், சில குறிப்புகள் காளைமாட்டைத் தலைமுறை தலைமுறையா பயன்படுத்தின அனுபவம் மூலமாகவும் உருவாக்கியிருக்காங்க.

`சவாரி மாடுகளுக்கு மயிலை, கறுமயிலை, சங்கு வெள்ளை, கறுவெள்ளை, சந்தனப்புல்லை, இருண்ட சுவலை போன்ற நிறங்கள் இருப்பது உத்தமம்’னு கால்நடை சோதிடம் சொல்லுது. ஆனா, மாடுகள் வளர்த்தவர்களோட அனுபவப் பாடமோ, `கறுப்பு, வெள்ளை, செவலை... எந்த நிற மாடுகளானாலும் `துணையடிக்கால் மாடுகள்’ தூரத்துப் பயணத்துக்கு ஏற்றதல்ல’னு சொல்லி வெச்சிருக்காங்க.

‘அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது, துணையடிக்கால் மாடு எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், முன்னங்கால்கள் ஒன்றோடொன்று சன்னமாக உராயும்படியான கால் அமைப்புக்கொண்டதாக இருக்கும். இந்த வகை மாடுகள் சீரான வேகத்தில் மட்டுமே நடக்கும்; ஒருபோதும் ஓடாது. தூரத்துப் பயணத்துக்கு இதுபோன்ற மாடுகளைக் கொண்டு செல்வது புத்திசாலித்தனம் அல்ல. இரவுக்குள் அருகில் இருக்கும் நகரத்துக்கு அல்லது சத்திரத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், மாடுகளைச் சற்றே விரட்டிச் செல்லவேண்டிய தேவை இருக்கும். அப்படிப்பட்ட சூழலில், மற்ற வண்டிகள் வேகமாகப் போகத் துணையடிக்கால் மாடுகள் பூட்டிய வண்டி மட்டும் பின்தங்கி, ஏதாவதொரு வகையில் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது’ என்று பழங்கால ஆவணத்துல மாட்டு வண்டிப் பயணம் சம்பந்தமா விளக்கமா சொல்லி வெச்சிருக்காங்க.

நம்ம முன்னோருங்க, மாடுகள, வேலை செய்யுற விலங்காக நடத்தல. தங்களோட குடும்பத்துல ஒருத்தராத்தான் நினைச்சு வளர்த்தாங்க. அதனாலத்தான், ‘ஆதீண்டு குற்றி’ய நட்டு வெச்சாங்க.

அது என்ன ஆதீண்டு குற்றின்னு தானே நினைக்கிறீங்க? தன்மத்தறி, நடுதறி, ஆவுரிஞ்சு, ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு கல், மாடுசுரகல்னு இதுக்குப் பலபேரு உண்டு. இது சம்பந்தமா ஏராளமான தகவல்கள் ஐங்குறுநூறு உட்பட பல தமிழ் நூல்கள்ல சொல்லப்பட்டிருக்கு.

‘ஆ’ங்கிற சொல்லுக்கு ‘மாடு’ன்னு அர்த்தம். மாடுகளுக்கு உடம்பில தினவெடுக்கும்போது, இந்தக் கல்லுல உரசி, தினவைப் போக்கி மகிழ்ச்சி அடையும். மந்தை வெளியிலும் குளம், குட்டை மாதிரியான இடத்துக்குப் பக்கத்திலும் உயரமான கல் தூணை நட்டு வெச்சிருக்காங்க. இப்படிக் கல்லை நட்டு வெச்சதுக்குப் பின்னாடி ரெண்டு விஷயங்கள் அடங்கியிருக்கு. அதாவது, மாடுகளுக்கு, மனுசங்க மாதிரி உணர்வு உண்டு. உடம்புல தினவெடுக்கும்போது, மரத்துல உரசி, மரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாதுன்னுதான் இப்படிச் செய்தாங்க.

ஒரு மனுஷன் தன்னோட வாழ்நாள்ல, 1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் (ஏழை, எளியோர்க்கு வைத்தியம் மற்றும் தங்குமிட உதவிகள்) 2. நிழல் தரும் மரங்கள் நட்டு சோலை அமைத்தல்னு கடைப்பிடிக்க வேண்டி 32 அறங்கள் பட்டியல்ல ‘ஆதீண்டு குற்றி’ நட்டு வைக்கணும்னு நம்ம முன்னோருங்க எழுதி வெச்சிருக்காங்க.

மாடுன்னா, அது பால் கொடுக்கக்கூடிய இயந்திரம்தான்னு சில பேர் நினைக்கிறாங்க. மாடுகளுக்கும் மனிதர்கள் போல பாலுணர்வு உண்டு. மாடுங்க பருவத்துக்கு வந்த உடனே, செயற்கைக் கருவூட்டல் செய்ய ஓடுற காலம் இது. இந்த நவீன காலத்துலயும் ‘ஆதீண்டு குற்றி’யை யாராவது நட்டு வெச்சா, அவங்களை “ம்மா... ம்மா”னு மாடுங்க வாய் நிறைய வாழ்த்தும்!