மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

25 சென்ட்... மாதம் ரூ25 ஆயிரம் லாபம்!பயணம்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம். 

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

இந்த முறை ஒரு நாள் விவசாயிகளாக தேர்வுச் செய்யப்பட்டவர்கள் ரயில்வே ஊழியர் பார்வதி, பள்ளி வாகன ஓட்டுநர் செல்வம், கல்லூரி மாணவர் ஜெயராமன், தனியார் நிறுவனக் கணக்காளர் கலைவாணி, ஐ.டி துறை ஊழியர் கவியரசு, தனியார் நிறுவன ஊழியர்கள்  மகேஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர். இவர்களை நாம் அழைத்துச் சென்றது திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகிலுள்ள மேலப்பேடு கிராமத்தில் உள்ள ‘இயற்கை விவசாயி’ ஜெகனின் தோட்டத்துக்கு. இவரை ‘நல்ல கீரை’ ஜெகன் என்று அழைப்பார்கள்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாரிடம் பயிற்சிபெற்ற இளம் விவசாயிகளில் இவரும் ஒருவர். கடந்த ஆறு ஆண்டுகளாக, 40 வகையான கீரைகளைச் சாகுபடி செய்து... ‘நல்லகீரை’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். காலை ஒன்பது மணியளவில் ஜெகனின் பண்ணைக்கு ஒரு நாள் விவசாயிகளோடு ஆஜரானோம். அந்த வேளையில், பண்ணையில் ஜெகன் இல்லை. அவரிடம் செல்போனில் பேசியபோது சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னார். அதனால், ஒரு நாள் விவசாயிகள் பசுமைக்குடிலுக்குள் இருந்த கீரைகளைப் பார்வையிட ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் ஜெகன் வந்துவிட, ஒரு நாள் விவசாயிகள் அனைவரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அந்தச் சமயத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் பண்ணையைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்களும் ஒரு நாள் விவசாயிகளுடன் இணைந்து கொண்டனர்.

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

“பல காரணங்களால விவசாயிகளெல்லாம் விவசாயத்தை விட்டு போயிட்டு இருக்காங்க. இளைஞர்களும் விவசாயத்துல ஆர்வம் காட்டுறது இல்லை.

நான், விவசாயக் குடும்பத்துல இருந்து வரலை. விவசாயமும் படிக்கலை. ஆர்வத்துல இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டு இறங்கிட்டேன். கிராமப் பொருளாதாரம் குறித்து ஒரு ஆய்வுல ஈடுபட்டபோதுதான், விவசாயிகளோட பல கஷ்டங்கள் எனக்குத் தெரிஞ்சது. கிராமங்கள்ல நல்ல உணவு குறித்த விழிப்பு உணர்வே இல்லைங்கறதும் தெரிய வந்தது. அதுக்கப்புறம்தான் விவசாயம் செய்ற ஆர்வமே வந்தது” என்ற ஜெகன் தொடர்ந்தார்.

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

“ரசாயன உரங்களைப் பயன்படுத்தாம மாட்டு எரு, மண்புழு உரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யானு பயன்படுத்திச் செய்றதுதான் இயற்கை விவசாயம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செஞ்ச நிலத்துல, இயற்கை விவசாயம் மூலமா உடனே மகசூல் எடுத்துட முடியாது. படிப்படியாத்தான் இயற்கைக்கு மண் மாறும். குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகும். என்னோட தேடுதலும், நம்மாழ்வார் ஐயாவோட அறிவுரையும்தான் இன்னிக்கு நான் வளந்திருக்கிறதுக்குக் காரணம். இயற்கை விவசாயத்துல ரசாயன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவே கூடாது. எல்லாரும் பூச்சி மருந்துன்னு அதைச் சொல்றாங்க. பூச்சியும் ஒரு உயிர்தான். அந்த உயிரைக் கொல்ற விஷம் நம்மையும் கொல்லத்தானே செய்யும். அதனாலதான் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டாம்னு சொல்றாங்க. பூச்சிகளை வர விடாமத் தடுக்குற இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தணும்” என்றார் ஜெகன்.

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

“நீங்க ஏன் கீரையைத் தேர்ந்தெடுத்தீங்க?” என்று சிலர் ஜெகனிடம் கேட்க, “குறுகிய காலத்தில் லாபம் ஈட்டித் தர்ற பயிர் கீரைதான். அதனாலதான் கீரை சாகுபடி செய்றேன்.

“ஏன், இயற்கை விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்றீங்க” என்று கேட்டார், கவியரசு. “இயற்கை விவசாயம் செய்ற விவசாயிகள் அதிகரிச்சா பொருட்களோட விலை தானாகவே குறைஞ்சுடும். சில இடங்கள்ல அதிக விலைக்கு விற்பனை செய்றது உண்மைதான். இயற்கை பொருட்களுக்கு இருக்கிற தேவையைப் பயன்படுத்திக்கிட்டு லாபம் பார்க்குறாங்க. அப்படி செய்றது தவறுதான்” என்ற ஜெகன், அனைவரையும் மாடிக்கு அழைத்துச் சென்று மரப்பெட்டிகளில் வளர்ந்து வரும் கீரைகளைக் காட்டினார். “இந்தப் பெட்டிகளை நானே தயாரிச்சேன். இதுல மண், மரத்தூள், மாட்டு எரு, மண்புழு உரம் போட்டு கீரை வளர்க்கிறேன். இதுல இருக்குற வெந்தயக் கீரை, பத்தே நாள்ல வளர்ந்துடும். இந்த மாதிரி வீடுகள்ல நீங்களே காய்கறிகளையும் கீரைகளையும் வளர்க்க ஆரம்பிச்சிட்டா செலவே இல்லாம உற்பத்தி செஞ்ச இயற்கை காய்கறிகளைச் சாப்பிட முடியும்” என்றார். தொடர்ந்து வீட்டுத்தோட்டம் குறித்து எழுந்த சந்தேகங்களை ஜெகனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு கீழே இறங்கி வந்த ஒரு நாள் விவசாயிகளுக்கு மூலிகைப் பானம் வழங்கப்பட்டது.

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

“இது திருநீற்றுப்பச்சிலை, நாட்டுச்சர்க்கரை, தண்ணீர் கலந்து தயாரிக்கப்பட்டது. உடம்புக்கு ரொம்ப நல்லது” என்ற ஜெகன், கீரை சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார்.

“இங்கே கீரை சாகுபடி செய்றதுக்கு உழவு ஓட்டறதில்லை. களை பறிக்கிறதில்லை. அதனால, நல்ல லாபம் எடுக்க முடியுது. கீரை சாகுபடிக்கு முதலீடும் குறைவு. 15 ஏக்கர் அளவுல இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்கி, அதுமூலமா தினமும் 5 ஆயிரம் கட்டு கீரைகளை உற்பத்தி செய்றதுக்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்கோம். மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்கணும்னு, சந்தா வாங்கிட்டு கீரையை டெலிவரி செய்ற முறையை அறிமுகப் படுத்தினோம். 4 ஆயிரத்து 460 ரூபாய் பணத்தை முன்கூட்டியே வாங்கிடுவோம். அப்படி சந்தா கொடுத்தவங்களுக்கு 44 வாரங்களுக்குக் கீரை கொடுக்கிறோம். ஒரு வாரத்துக்கு 5 கட்டு கீரைனு கொடுத்துடுவோம். நாங்க விளைவிக்கிற 40 வகையான கீரைகளைக் கலந்து டெலிவரி செய்றோம். அதோட, வாடிக்கையாளர்கள் கேட்கிற இயற்கை விளைபொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறோம்” என்றார்.

“கீரை வளர்ப்பு லாபகரமா இருக்குமா” என்று கேட்டார், கலைவாணி. “லாபம் இருக்குறதாலதான் நான் ஆறு வருஷமா கீரை சாகுபடி செய்றேன். சரியான இயற்கை முறையில் சாகுபடி செஞ்சா, கண்டிப்பா லாபம் எடுக்க முடியும்” என்றார் ஜெகன்.

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

ஜெகனின் தங்கை மீரா, ஒருநாள் விவசாயிகளைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று நாற்பது வகையான கீரைகள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் தெளிவாக விளக்கினார். அனைத்தையும் சுற்றிப்பார்த்து முடிப்பதற்குள் மதிய வேளை வந்துவிட்டதால் அனைவரும் மதிய உணவை சாப்பிட்டனர். கீரை சாகுபடி செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் சாப்பிட்டு முடித்தவுடனே, அனைவரும் வயலுக்குக் கிளம்பிவிட்டனர். அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார், ஜெகன்.

“நிலத்தைச் சமன்படுத்தி, 25 அடி நீளம், 4 அடி அகலத்துல செவ்வகப்பாத்தி அமைக்கணும். 25 சென்ட்டுக்கு 75 செவ்வகப் பாத்திகளை அமைக்கலாம். பாத்தி மேல வைக்கோலைப் பரப்பி அது மேல, மாட்டு எரு, மண்புழு உரம், இலை தழைகள் எல்லாத்தையும் கலந்து பரப்பணும். அதுக்கு மேல நுணா இலை, வேப்ப இலைகளைப் போடணும். இப்படிப் பாத்தி அமைச்சுட்டா மூணு வருஷம் வரை விதைச்சு, அறுவடை செய்துட்டே இருக்கலாம். கீரை விதைகளை இயற்கை உரங்களோட கலந்து, ஒரே இடத்துல குவியலா விழாத மாதிரி பரவலாகத் தூவணும். ஒரு பாத்தியில் குறைந்தபட்சம் 10 வகையான கீரைகளை சாகுபடி செய்ய முடியும். அதேமாதிரி 70லிருந்து 150 கீரைக் கட்டுகளை அறுவடை செய்யலாம்.

25 சென்ட்டிலிருந்து மாசத்துக்கு 5 ஆயிரம் கட்டுகள் கிடைக்கும். இதை நேரடியாக விற்பனை செஞ்சா ஒரு கட்டுக்கு சராசரியாக 15 ரூபாயும், சந்தையில் விற்பனை செய்தா ஒரு கட்டுக்கு சராசரியா 8 ரூபாயும் கிடைக்கும். சந்தை விலைக்கே என்றாலும் மாசத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல செலவு 15 ஆயிரம் போக 25 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும். தற்போது மருத்துவர்கள், டி.வி., பத்திரிகை வாயிலாக கீரை பத்தி நல்ல விழிப்பு உணர்வு உருவாகியிருக்கு. அதனால விற்பனைக்கு பிரச்னை இருக்காது” என்று சொன்ன ஜெகன், பாத்தி எடுக்கும் விதத்தைச் செய்துகாட்ட ஒரு நாள் விவசாயிகளும் அதேபோலச் செய்தனர்.

தொடர்ந்து, கீரை விதை நடவு, அறுவடை செய்யும் விதங்களையும் ஜெகன் விளக்க, ஒரு நாள் விவசாயிகள் அதுகுறித்த பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டனர். மாலை நேரம் நெருங்கிவிட அனைவருக்கும் தேநீர் கொடுக்கப்பட்டது. அதைப் பருகிவிட்டு ஒரு நாள் விவசாயிகள் விடைபெற்றனர்.

தொடர்புக்கு, ஜெகன், செல்போன்: 90420 11768

ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

பார்வதி, ரயில்வே ஊழியர்: “40 வகையான கீரைகளை ஒரே இடத்துல இன்னிக்குதான் பார்த்தேன். விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்துட்டுதான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன். நல்ல அனுபவம் கிடைச்சது. முதல் வேலையா மாடியில் கீரைகள் வளர்க்கப்போறேன்.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

செல்வம், பள்ளி வாகன ஓட்டுநர்: “நிறைய புதுத் தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் தெரியும். இங்கேதான் கீரை வளர்ப்பு குறித்து முழுசாகத் தெரிஞ்சுகிட்டேன். ஏற்பாடு செய்த பசுமை விகடனுக்கு நன்றி.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

ஜெயராமன், கல்லூரி மாணவர்: “விவசாயத்துல அதிக ஆர்வம் உண்டு. படிக்கிறப்பவே இந்தப் பயிற்சிக்கான வாய்ப்பு கொடுத்ததுக்குப் பசுமை விகடனுக்கு நன்றி. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. எங்க வீட்டுல கீரைகளை வளர்க்கணும்னு முடிவெடுத்துட்டேன்.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

கலைவாணி, தனியார் நிறுவனக் கணக்காளர்: “ரொம்ப நல்லா இருந்தது. பதிவு பண்ணிட்டு எப்போ கூப்பிடுவாங்கனு காத்துக்கிட்டிருந்தேன். எனக்கு விவசாயம் சம்பந்தமா சுத்தமாகத் தெரியாது. வயல்ல வேலை செய்ற விவசாயிகளோட கஷ்டத்தை அனுபவபூர்வமா உணர்ந்துட்டேன். தாத்தா விவசாயம் செய்துட்டு இருக்கார். அவருக்கு இனிமே உதவியா இருக்கணும்னு முடிவு செஞ்சுட்டேன்.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

கவியரசு, ஐ.டி துறை ஊழியர்: “இந்த நாள் அருமையாகவும் உபயோகமாகவும் இருந்தது. இதுக்கு முன்னாடி எனக்கு விவசாயம் குறித்து எதுவுமே தெரியாது. இப்போ, ரொம்ப ஆர்வம் வந்துடுச்சு.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

மகேஸ்வரன், தனியார் நிறுவன ஊழியர்: “இயற்கை விவசாயத் தொழில்நுட்பம், வகை வகையான கீரை விவசாயம் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். வாய்ப்பளித்த பசுமை விகடனுக்கு நன்றி.”

ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி!

முருகன், தனியார் நிறுவன ஊழியர்: “லாபம் கொடுக்கும் இயற்கை முறை கீரை சாகுபடி குறித்து தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப உபயோகமா இருந்தது.”

நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.