
நாஞ்சில் நாட்டின் பசுமைப் பயணம்!நினைவலைஇ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்
‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?’ என்று கேட்டால், அனைவரும் ‘தஞ்சாவூர்’ என்று சொல்லிவிடுவோம். ஆனால், ஒரு காலத்தில் கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிய பகுதி, நம் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் பகுதிதான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அது, ‘நாஞ்சில் நாடு’ என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம்.

தற்போது இந்த மாவட்டத்தில் அதிகளவில் மிளகு, ரப்பர் போன்றவைதான் சாகுபடி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் அதிகளவு நெல் விளைந்த நாஞ்சில் நாட்டின் பெருமை குறித்து அறிந்து கொள்வதற்காக தோவாளை தாலூகா, துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி செண்பகசேகரன் பிள்ளையைச் சந்தித்தோம்.
“நாஞ்சில் என்றால் ‘கலப்பை’ என்று பொருள். நஞ்சைப் பயிரான நெல்லை, அதிகம் விளைவித்த பகுதி என்பதால் குமரி மாவட்டத்துக்கு நாஞ்சில் நாடு என்ற பெயர் உண்டு. மதுரை, மருத நிலம் சூழ்ந்த பகுதி; நீலகிரி, குறிஞ்சி நிலம் உள்ள பகுதி. இப்படி ஒரு மாவட்டம் முழுவதும் ஒரே வகை நிலமாகத்தான் இருக்கும். ஆனால், குமரியில் ஐவகை நிலங்களில் பாலை தவிர்த்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களும் உண்டு.
மன்னர் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதி, கேரள மாநிலத்தோடு இணைந்திருந்தது. அப்போது, கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை உள்ள பகுதிகள் கேரள மாநிலத்துக்குள் இருந்தன. கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி குறைவு. ஆனால், குமரி மாவட்டம் முழுவதும் நீர்வரத்து கால்வாய்கள் உள்ள பகுதி. தண்ணீர் பிடிப்புள்ள பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி நடைபெற்றன. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு நெற்களஞ்சியமாக விளங்கியது, நாஞ்சில்நாடு. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ‘நஞ்சையும் புஞ்சையும் நனை கொளும் நாஞ்சில் நாடு’ என்று பாடியிருக்கிறார்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கிய செண்பகசேகரன் பிள்ளை, தொடர்ந்தார்.

“குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பைப்பூ என நெல் சாகுபடிக்கு இரண்டு பருவங்கள் உண்டு. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலானது, கன்னிப்பூ பருவம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலானது, கும்பைப்பூ பருவம். வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை இரண்டுமே நாஞ்சில் நாட்டுக்குத் தவறாமல் கிடைத்துவிடும். அந்தக்காலத்தில் மழை இல்லாமல் போனால், விவசாயிகள் திருவிதாங்கூர் மன்னரிடம் சொல்வார்களாம். மன்னர் பத்மநாப சுவாமியிடம் மனமுருக வேண்டுவாராம். உடனே, மழை பெய்துவிடுமாம்.
1908-ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர் கட்டிய பேச்சிப்பாறை அணைதான் இன்றும் நெல் சாகுபடிக்கு உயிர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையைக் கட்டிய மிஞ்சின் என்ற பொறியாளரை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை புகழ்ந்து பாடியிருக்கிறார்.

ஜூன் மாதம் கன்னிப்பூ பருவம் ஆரம்பித்ததும், சமஸ்தானத்தில் இருந்து ஓலை வரும். ‘இந்தக் கிழமையில், இந்த நேரத்தில் ஏர் அடிக்க வேண்டும்’ என்று தண்டோரா போட்டுச் சொல்வார்களாம். அந்த நேரத்தில்தான் விவசாயிகள் ஒன்றாக உழவு செய்வார்கள். தன் நிலம்தானே என்று நினைத்த நேரத்தில் உழ முடியாது. அதேபோல, விதைப்புக்கு ‘நாள் வித்துப் பிடித்தல்’ என்றும் அறுவடை செய்ய ‘நாள் கதிர் அறுத்தல்’ என்றும் சமஸ்தானத்தின் மூலமாகத்தான் அறிவிக்கப்படும். கும்பைப்பூ பருவத்துக்கும் இதே விதிமுறைகள்தான்.

ஒவ்வொரு பருவத்திலும் அறுவடை முடிந்ததும் வயலிலும் வீட்டிலும் முதல் மரக்கா நெல்லை தெய்வங்களுக்குப் படைத்து, அந்த நெல்லை தனியாகப் பெட்டிகளில் எடுத்து வைப்பார்கள். மீதமுள்ள நெல்லைக் குத்தி, உறவினர்களை அழைத்துப் பல வகைக் கறிகாய்கள் சமைத்து விருந்து கொடுப்பர். இதற்குப் ‘புத்தரிசி சாப்பிடுதல்’ என்று பெயர். குழந்தைப் பிறந்தவுடன், அறுவடை செய்த நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அந்தத் தண்ணீரைத் தொட்டுதான் சேனை வைப்பார்கள். நாஞ்சில் நாட்டுச் சூழலுக்கு ஏற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் இருந்தன. அவற்றில், ‘கட்டிச்சம்பா’, ‘கொச்சிசம்பா’ ஆகியவை மட்டும்தான் தற்போது உள்ளன” என்ற செண்பகசேகரன் பிள்ளை நிறைவாக,
“1950-களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்றது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் தாலூகா, நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்துக்குத் தண்ணீர் தர கேரள அரசு மறுத்ததால், விளவங்கோடு தாலூகா பகுதிகளில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்று வந்த நெல் சாகுபடி அடியோடு அழிந்தது. அடுத்து அதிகளவு விளைநிலங்கள் வீட்டுமனைகளானதும் இங்கேதான்.
அதேநேரத்தில் ரப்பர், மிளகு போன்ற பணப்பயிர்கள் சாகுபடியும் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போது, மாவட்டத்தில் 6 ஆயிரத்து 375 ஹெக்டேர் பரப்பில்தான், நெல் சாகுபடி நடக்கிறது” என்றார் வருத்தத்துடன்.