மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!

மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பகுதியில இப்பவும்கூட பசு மாடுகளோட நடமாட்டம் உண்டு. அந்த வழியா போற, வர ஆட்கள் பக்கத்துல உள்ள கீரைக்கடையிலிருந்து ஒரு கட்டு அகத்திக்கீரையை வாங்கி, மாடுகளுக்குக் கொடுத்துட்டு போவாங்க. ஏதோ, பெருமாள் மேலுள்ள பக்தியினாலயும், மாட்டுமேல உள்ள பரிவுனாலயும் இப்படிச் செய்யுறாங்கன்னு நினைச்சேன். ஆனா, அதுக்குப் பின்னாடி பெரிய சங்கதி அடங்கியிருக்குன்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது.

மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!


சில வருஷத்துக்கு முன்னாடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்துல, சர்வதேச தாவர உணவாளர்கள் சங்கத்தோட(International Vegetarian Union) மாநாடு நடந்துச்சு. மாநாட்டுல பல நாடுகள்ல இருந்தும் வல்லுநர்கள் வந்திருந்தாங்க. துவக்க விழாவுல, பரதநாட்டிய கலைஞரான பத்மா சுப்பிரமணியம் பேசுனாங்க. “நான் 60 வயசு கடந்தும், மேடையேறி பரதம் ஆட காரணம், நான் சாப்பிடற சைவ உணவுதான்’னு சொன்னவர், அடுத்து சொன்ன தகவல்தான் எல்லோரையும் ஆச்சர்யப்பட வெச்சது.

காஞ்சி மகா பெரியவர், தன்னோட இளம் வயதில் நடந்த முக்கியமான தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இதை ஏன் என்னிடம் சொன்னார் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். முதலில் அவர் சொன்ன தகவலைச் சொல்லிவிடுகிறேன். காஞ்சி மகா பெரியவருக்கு, 20 வயசு இருக்கும்போது, தொடர்ந்து வயிற்றுவலி வந்துள்ளது.

பல இடங்களுக்கும் பயணம் செய்யுறவங்களுக்கு உணவு, தண்ணீர் சேராமல் இப்படி உடல் உபாதை வரும் என்று ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், எது சாப்பிட்டாலும் ரத்தம் ரத்தமாக வெளியில் வந்துள்ளது. வயிற்றுவலியும், துடிதுடிக்க வைத்துள்ளது. அப்போது, காஞ்சி மடத்துக்கு வந்த ஆயுர்வேத மருத்துவர், மகா பெரியவரை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். ‘மடத்தில் உள்ள ஒரு நாட்டுப் பசு மாட்டுக்கு, தினமும் அகத்திக்கீரையை உணவாகக் கொடுங்கள். அந்த மாட்டிலிருந்து கறக்கும் பாலை, ஒரு மண்டலம் (48 நாட்கள்) சுவாமிக்குக் கொடுங்கள்’ என்று சொல்லி சென்றிருக்கிறார்.

இதன்படியே, மகா பெரியவருக்கும் அந்த மாட்டின் பாலைக் கொடுத்துள்ளார்கள். ஒரு மண்டலம் முடிந்தவுடன் மகா பெரியவருக்கு வயிற்றுவலி தீர்ந்துவிட்டது. முன்பைவிட நல்ல ஆரோக்கியமும் ஏற்பட்டுள்ளது.

இந்த அனுபவத்தை என்னிடம் ஏன் சொன்னார் என்றால், நான் நாட்டியம் ஆட உலகம் முழுக்கச் செல்லும்போது, இந்த அரிய தகவலை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். அதனால்தான், என்னிடம் சொல்லியிருக்கிறார். மகா பெரியவருக்கு வந்தது எந்த விதமான நோய் எனத் தெரியவில்லை. ஆனால், அந்த நோயைக் குணப்படுத்தும் சக்தி, நமது மாட்டுப் பாலிலும், மாடு தின்ற அகத்திக்கீரையிலும் உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. இதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து, இதன் மருத்துவத் தன்மைகளை வெளி உலக்குக்குச் சொன்னால், அகிலம் முழுவதும் நமது பாரம்பர்ய அறிவின் சிறப்பு சென்றடையும்”னு வேண்டுகோள் வைத்து, தன்னோட பேச்சை முடித்தார் பத்மா சுப்பிரமணியம்.

ஏகாதசி சமயத்துல அகத்திக்கீரைக்குக் கிராக்கி அதிகமாக இருக்கும். அதாவது, ஏகாதசி விரதம் முடிஞ்சு, துவாதசி அன்னிக்கு, காய்கறிகளோட அகத்திக்கீரையும் சேர்த்து சாப்பிடுவாங்க.

விரதம் இருந்த சமயத்துல உடம்புல ஏற்பட்ட ரசாயன மாற்றத்தை சரிசெய்யக் கூடிய சக்தி அகத்திக்கீரைக்கு உண்டு. திண்டுக்கல் பக்கம், ஒரு விவசாயி தன்னோட தோட்டத்தைச் சுற்றி, அகத்திச் செடியை நடவு செய்திருந்தார். என்னோட வந்த நண்பர், ‘இதனால என்ன நன்மை?’னு அந்த விவசாயிகிட்ட ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார்.

‘‘வயல், வரப்பு ஓரத்தில் அகத்திச் செடியை நடவு செய்யும்போது, பக்கத்து தோட்டத்திலிருந்து வர்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் மொதல்ல, அகத்தியைத் தாக்கும். அதுக்குள்ள நாம சுதாரிச்சு, பூச்சிவிரட்டியை தெளிச்சா, அதுகளோட கொட்டம் அடங்கிடும்.

கூடவே, அகத்திக்கீரை மாடுகளுக்கு அருமையான தீவனம். எங்களுக்கும் சமைச்சு சாப்பிட இரும்புச்சத்து அதிகமுள்ள சத்தான கீரைக் கிடைக்குது. எல்லாத்துக்கும் மேல, காத்துல உள்ள தழைச்சத்தை இழுத்து, என்னோட நிலத்தை வளமாக்குது. இதனால யூரியா போடற செலவு மிச்சம்”னு அகத்தியைப் பத்தி அழகா சொல்லி முடிச்சார் அந்த விவசாயி.