மகசூல்
தொடர்கள்
Published:Updated:

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

மகசூல்துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

“ரசாயன உரங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்தால் விளைச்சல் கூடும் என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து ரசாயன உரம் பயன்படுத்தப்படும்போது, ஆண்டுக்காண்டு அதன் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால் தண்ணீர் தேவையும் கூடுகிறது. ஒரு கட்டத்தில் மண்ணே மலடாகிப் போகிறது.

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!


ஆனால், இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து செய்யும்போது, மண் வளமாகிக் கொண்டேதான் போகுமேயொழிய வளம் இழக்காது. அதனால், செலவு குறைந்து லாபம் அதிகரிக்கிறது. ‘பசுமை விகடன்’ இதழ் மூலமாகத்தான் இயற்கை விவசாயம் பத்தி தெரிந்துகொண்டு அதைச் செய்ய ஆரம்பித்தேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்துள்ள பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ சேஷாத்திரி.

பாதை காட்டிய பயிற்சி

அறுவடை செய்த நெல்லை காயவைத்துக் கொண்டிருந்த சேஷாத்திரியைச் சந்தித்தோம். “நாங்க ஐந்து தலைமுறையா விவசாயம் செய்றோம். எனக்கும் விகடனுக்குமான பந்தம் என் அப்பா காலத்துலேயே ஆரம்பமாயிடுச்சு. ‘ஆனந்த விகடன்’ மூலமா பசுமை விகடன் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு இப்போ வரைக்கும் படிச்சுக்கிட்டு இருக்கேன். பசுமை விகடன், திண்டுக்கல்ல நடத்துன சுபாஷ் பாலேக்கரோட பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான், எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துச்சு.

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!


அதுக்கு முன்னாடி, நானும் ரசாயன உரங்களைப் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சேன். பசுமை விகடன்ல இயற்கை விவசாயம் பத்தின செய்திகளைப் படிக்கிறப்போ, இயற்கை விவசாயத்துல எப்படி இவ்ளோ வருமானம் கிடைக்கும்னு எனக்குச் சந்தேகமாத்தான் இருந்துச்சு. ஆனா, இயற்கை விவசாயத்தை நேரடியா செஞ்சு பார்த்து, நல்ல வருமானம் கிடைக்கிறது உண்மைனு நான் புரிஞ்சுக்கிட்டேன். நான், பாரம்பர்ய ரக விதைகளையும், வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துற மேம்படுத்தப்பட்ட விதைகளையும்தான் சாகுபடி செய்றேன். இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுக்கவும், நாட்டு விதைகளை வாங்குறதுக்கும் தமிழகம் முழுக்கச் சுத்தியிருக்கேன்” என்ற சேஷாத்திரி தொடர்ந்தார்.

நான்கே ஆண்டுகளில் முழு மகசூல்

“எனக்கு மூன்றரை ஏக்கர் சொந்த நிலம் இருக்கு. அதோட, எட்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்திட்டிருக்கேன். நான் விவசாயத்துக்கு வந்து 25 வருஷமாச்சு. கிட்டத்தட்ட எல்லாவிதமான பயிர்களையும் சாகுபடி செஞ்சு அனுபவப்பட்டிருக்கேன். நிறைய பாடங்களையும் கத்துக்கிட்டிருக்கேன். ரசாயன உரம் போட்ட நிலத்துல தொடர்ந்து மூணு வருஷம் இயற்கை விவசாயம் செய்துட்டா, நாலாவது வருஷத்துல இருந்து ரசாயன விவசாயத்துக்கு இணையா மகசூல் எடுத்துட முடியும்.

அதே நேரத்துல, இடுபொருளுக்கான செலவும் குறைஞ்சுடும். நிலத்துல கிணறு இருந்தாலும், எப்பவும் ஏரித்தண்ணியைத்தான் பயன்படுத்துவேன். இந்த வருஷம்தான் ஏரியில் தண்ணீர் இல்லாம கிணத்து தண்ணியைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். ஏரி வறண்டதால எங்க பகுதியில் யாரும் இந்தமுற தைப்பட்டத்துல விதைக்கிறதா இல்லை. நான் கிணத்துல இருக்குற தண்ணியைப் பயன்படுத்தி வம்பன்-8 ரக உளுந்தை விதைக்கலாம்னு இருக்கேன்.

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

வறட்சியைத் தாங்கும் டி.கே.எம்-13

போன போகத்துல டி.கே.எம்-13 ரக நெல்லை சாகுபடி செஞ்சுருந்தேன். இப்போதான் அறுவடை முடிஞ்சிருக்கு. இந்த ரகம், வறட்சியைத் தாங்கி வளர்ந்துச்சு. பூச்சி, நோய்த்தாக்குதலே இல்லை.
திரூர்ல இருக்குற நெல் ஆராய்ச்சி நிலையத்துலதான் விதைநெல் வாங்கினேன். இந்த ரக நெல், ஆந்திராவில் விளையுற பாபட்லா நெல் மாதிரியே இருக்கும்” என்ற சேஷாத்திரி, வருமானம் குறித்துச் சொன்னார்.

நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்

“இரண்டு ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சதுல 4,500 கிலோ நெல் மகசூல் கிடச்சுது. அதை அரிசியாக்கினா 1,920 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசியை 70 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அந்த வகையில பார்த்தா 1,920 கிலோ அரிசிக்கு, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, 34 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்சத்து 400 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இது சாகுபடிச் செலவு மட்டும்தான். அரிசியா மாத்துறதுக்குச் செலவில்லை. தவிட்டையே கூலியா எடுத்துக்குவாங்க.

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

நெல்லா விற்பனை செய்றதைவிட, அரிசியா மாத்தி நேரடி விற்பனை செய்றப்போ கூடுதல் லாபம் கிடைக்குது. நேரடி விற்பனையும், இயற்கை விவசாயமும்தான் இந்த லாபம் கிடைக்கிறதுக்குக் காரணம்” என்ற சேஷாத்திரி நிறைவாக,

“ரசாயன விவசாயத்துக்கும் இயற்கை முறை விவசாயத்துக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். ஆனா, ரசாயன விவசாயத்துல அதிகச் செலவு செய்ய வேண்டியிருக்கு. இயற்கை முறை விவசாயத்துல நல்ல லாபம் எடுக்க முடியுங்கிறதுக்கு நானே உதாரணம். இதைப்பத்தி யாராவது தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா, எப்போ வேணும்னாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சேஷாத்திரி, செல்போன்: 94447 44280

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

இரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம்! - இயற்கையில் இனிக்கும் நெல்!

ரு ஏக்கர் நிலத்தில் டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்து, சேஷாத்திரி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

நாற்று தயாராகும்போதே நடவு வயலைத் தயார் செய்ய வேண்டும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு டன் தொழுவுரத்தைக் கொட்டி, நான்கு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் கொண்டு நிலத்தைச் சமன் செய்து, சேறாக்கி, 25 சென்டிமீட்டர் இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். வயலில் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். நாற்று நட்ட 15 மற்றும் 35-ம் நாட்களில் கைகளால் களை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், வேப்பம் பிண்ணாக்கு, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து வயலில் பரவலாகத் தூவ வேண்டும். அவ்வப்போது, ஜீவாமிர்தக் கரைசலை இலை வழி தெளிப்பாகவும் தெளிக்கலாம். கதிர் பால் பிடிக்கும் சமயத்தில் வருமுன் காக்கும் விதமாக மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். கதிர் முற்றத் துவங்கும் வேளையில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி, பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

மேட்டுப்பாத்தியில் நாற்று உற்பத்தி!

டி.கே.எம்-13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.

ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதைநெல்லை தூவி விதைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இப்படி தண்ணீரைத் தெளிப்பதால், நாற்றுகள் வளையாமல் நிமிர்ந்து வளரும். விதைத்த 3-ம் நாளில் இருந்து தினமும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் எனக் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாளில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும்.