மகசூல்
தொடர்கள்
Published:Updated:

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! - பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! -  பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! - பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

4 ஆயிரம் பனம்பழங்கள்... 90 நாட்கள்... ரூ46 ஆயிரம் லாபம்! மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

மிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில், பனையை மூலாதாரமாக வைத்து நடந்துவந்த பல தொழில்கள் அழிந்து போனாலும் பனங்கிழங்கு உற்பத்தி மட்டும் தவறாமல் நடந்து வருகிறது. இப்பகுதிகளில், தைப்பொங்கல் பண்டிகை அன்று சூரிய பகவானுக்கு மரவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு என ஐவகைக் கிழங்குகளைப் படைக்கும் பழக்கம், பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! -  பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

பனங்கிழங்கும் மார்கழி, தை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய கிழங்காகும். பனங்கிழங்குகளில் களிமண் கிழங்கு, செம்மண் கிழங்கு என இரண்டு வகைகள் உண்டு. இதில், செம்மண் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூர் மற்றும் வைகுண்டம் பகுதிகளில் மட்டும்தான் செம்மண் பனங்கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாகச் செம்மண் பனங்கிழங்கை உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, தேரிக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகாராஜா.  பனங்கிழங்குகளைத் தோண்டி எடுத்துக்கொண்டிருந்த மகாராஜாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்கு விவசாயம் பூர்விகத் தொழில். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு அப்பாவோட விவசாயத்துக்கு வந்துட்டேன். இருபது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் திருச்செந்தூர் தாலூகாவுல மட்டுமே கிட்டத்தட்ட ஒரு லட்சம் பனைமரங்கள் இருந்துச்சு. சீசன் ஆரம்பிச்சா திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்து கிட்டத்தட்ட 400 பனைத்தொழிலாளர்களுக்கு மேல, இங்க வந்து தங்கி பதனீர் இறக்குறது, கருப்பட்டி காய்ச்சுறதுனு வேலைகள் செய்வாங்க. காலையில பதினோரு மணியில இருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் காத்துல கருப்பட்டி வாசம் வீசிக்கிட்டே இருக்கும். ஆனா, இப்போ கணக்கெடுத்தா ஐயாயிரம் மரங்கள்கூட இருக்காது.

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! -  பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

நானும் அப்பாவும் பனைமரங்களைக் குத்தகைக்கு எடுத்து, கருப்பட்டி காய்ச்சி விற்பனை செஞ்சுட்டு இருந்தோம். பனைமரங்கள் எண்ணிக்கை குறைஞ்சதால பத்து வருஷத்துக்கு முன்னாடியே அந்தத் தொழிலை விட்டுட்டோம். இப்போ விவசாயம் மட்டும் செஞ்சுக்கிட்டிருக்கேன். ரெண்டரை ஏக்கர் நிலத்தில் குமிழ் மரம் இருக்கு. 2 ஏக்கர் நிலத்தில் தென்னை இருக்கு. 1 ஏக்கர் நிலத்தில் கற்பூரவல்லி வாழை இருக்கு. நிலத்துல அங்கங்க 60 பனைமரங்கள் இருக்கு. அதுல கிடைக்குற பனம்பழங்களை வெச்சுதான் பனங்கிழங்கு உற்பத்தி செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்கதை சொன்ன மகாராஜன், பனங்கிழங்கு உற்பத்தி குறித்துச் சொன்னார்.

“பனை மரத்துல இருந்து கிடைக்கிற பனம்பழங்கள்ல இருந்து விதைகளைப் பிரிச்சுக்குவோம். 10 அடி நீளம் 10 அடி அகலத்துக்குப் பாத்தி எடுத்து, கால் அடி ஆழத்துக்கு மண்ணைக் கொத்தி பொலபொலப்பாக்கி, அதுல பரவலா தொழுவுரத்தைத் தூவுவோம். அதுமேல விதைகளை நெருக்கமா அடுக்கி வெச்சுடுவோம். ஒரு அடுக்கு முடிஞ்சவுடன் அது மேலேயே இன்னொரு அடுக்கு விதைகளையும் அடுக்கிடுவோம். மண் இறுக்கமா இருந்தா, அறுவடை செய்றது கஷ்டமா இருக்கும். அதனாலதான் மண்ணைப் பொலபொலப்பாக்கி விதைக்கிறோம். இப்படிச் செய்றப்போ, கிழங்கைக் காயம் படாம அறுவடை செய்ய முடியும். கிழங்குகளை ரெண்டு அடுக்கா அடுக்கி முடிச்சதும், பாத்தி ஓரங்கள்ல மட்டும் மண் அணைச்சு விடுவோம். மேலாகக் கொஞ்சம் மண்ணைத் தூவி தண்ணீர் தெளிச்சு விடுவோம். இப்படி 40 நாள் வரை தினமும் தண்ணீர் தெளிக்கணும். விதைக்கும்போது, தொழுவுரம் கட்டாயமில்லை. ஆனா, தொழுவுரம் போட்டா கிழங்கு பருமனா இருக்கும். தண்ணீர் மட்டும் தெளிச்சாலே போதும். வேற பராமரிப்பு எதுவும் தேவையில்லை.

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! -  பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

20-ம் நாள்ல விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 60-ம் நாளுக்குப் பிறகு வேர்ப் பிடிச்சு கிழங்கு பருமனாகும். 90-ம் நாள்ல அறுவடைக்கு வந்துடும். பாத்தியில் லேசா விரிசல் விட்டு இருந்துச்சுனா அறுவடைக்கு வந்துடுச்சுனு அர்த்தம். அந்தச் சமயத்துல ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்க்கணும். கிழங்கின் தோல்ல புள்ளி புள்ளியாக இருந்து, தோல் வெடிச்சு இருந்துச்சுனா அறுவடை செய்யலாம். ரெண்டடுக்கா அடுக்குனாலும் விதைகளுக்கு இடையில இருக்குற சின்னச் சின்ன இடைவெளிகள்ல மண்ணுக்குள்ள வேர்ப் பிடிச்சுப் போயிடும். பதத்துக்கு வந்த கிழங்குகளை உடனடியா அறுவடை செஞ்சுடணும். 120 நாட்களுக்கு மேல போயிடுச்சுனா, குருத்து ஓலை முளைக்க ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் கிழங்கு முத்திடும். சாப்பிட முடியாது” என்ற மகாராஜன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“புரட்டாசி, ஐப்பசி மாசங்கள்ல பனங்கொட்டையை விதைப்போம். மூணு மாசம் கழிச்சு அறுவடை செய்ய ஆரம்பிப்போம். ஒரு பனம்பழத்தில் மூணு கொட்டைகள் இருக்கும். நாலாயிரம் பனம்பழத்திலிருந்து கிடைச்ச பன்னிரண்டாயிரம் கொட்டைகளை விதைச்சிருக்கேன். அதுல எப்படியும் 11 ஆயிரத்து 500 கிழங்குங்க முளைச்சு வந்துடும். இப்போதைக்கு ஒரு கிழங்கு 4 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த விலையில விற்பனை செஞ்சா 11 ஆயிரத்து 500 கிழங்குகள் மூலம் 46 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வெளியில வாங்கினா, ஒரு பனம்பழத்தோட விலை 1 ரூபாய் 50 காசு. எனக்குச் சொந்த மரங்கள்ல இருந்து பனம்பழம் கிடைக்கிறதால, பனம்பழத்துக்கான செலவு கிடையாது. அதனால எல்லாமே லாபம்தான்” என்று சந்தோஷமாகச் சொன்ன மகாராஜா, நிறைவாக,

“இயற்கையாகவே வறட்சியைத் தாங்கி வளர்ந்து பலன் கொடுக்குற கற்பகத்தரு, பனை. பனங்கிழங்குக்கு வெறுமனே தண்ணீரை மட்டும் தெளிச்சாலே போதும். முளைச்சு பலன் கொடுத்துடும். ஆனா, சிலர் வேகமா வளர்றதுக்காக யூரியாவை தண்ணீர்ல கலந்து தெளிக்கிறாங்க. அப்படித் தெளிச்சா வேகமா வளரும். ஆனா, அறுவடை செஞ்ச ரெண்டே நாள்ல கிழங்கோட தோல் சுருங்கிடும். இயற்கையா வளர்ற கிழங்கு, அஞ்சு நாள் வரைகூட அப்படியே இருக்கும். இயற்கையா வளர்ற கிழங்குதான் உடம்புக்கு நல்லது. எந்தப்பாடும் இல்லாம மூணு மாசத்துல வருமானம் கொடுக்குற பயிர் பனங்கிழங்குதாங்க” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, மகாராஜா, செல்போன்: 94862 49821 சக்திகுமார், செல்போன்: 94443 36353

பனங்கிழங்கின் சமையல் முக்கியத்துவம்

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை! -  பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி!

காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார், பனங்கிழங்கு குறித்துப் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

பனங்கிழங்குல நார்ச்சத்து அதிகம். நல்ல மலமிளக்கியா செயல்படும். மண் பானையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி, கொஞ்சம் உப்பு போட்டு தோல் நீக்குன கிழங்குகளைப் போட்டு வேக வைக்கலாம். இல்லாட்டி தீ கங்குல சுட்டும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் சுவையா இருக்கும். கிராமங்கள்ல பெரும்பாலும் சுட்டுத்தான் சாப்பிடுவாங்க. அவித்த பனங்கிழங்கை உரிச்சு, சின்னச்சின்ன துண்டுகளாக்கி சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு எல்லாத்தையும் சேர்த்து துவையலாகவும் சாப்பிடலாம். மோர் ஊத்திக் கலந்த பழையசாதத்துக்கு இந்தத் துவையலைத் தொட்டுக்கிட்டா அருமையா இருக்கும்.

அவிச்ச கிழங்கை நெட்டுவாக்குல ரெண்டாகக் கீறி, வெயிலில் ரெண்டு நாள் காய வெச்சா அதுக்குப்பேர் ‘ஒடியல்’. இதை வெட்டி இடித்து, மாவாகவும் ஆக்கலாம். இந்த மாவில் சின்ன வெங்காயம், மிளகாய், கடுகு, உளுந்து, உப்பு சேர்த்து உப்புமா செய்யலாம். பால், பனங்கருப்பட்டி, உலர்திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்துப் பாயசம் செய்யலாம். அதில்லாம கேசரி, கூழ், லட்டு, பக்கோடானு பலவிதமா சமைக்கலாம்.

தவுன் எடுத்த கொட்டை, கூடு மாதிரி இருக்கும். இதைப் ‘பனங்குடுக்கை’னு சொல்வாங்க. இதைச் சுத்தப்படுத்தி அகப்பை, குங்குமச்சிமிழாவும் பயன்படுத்துவாங்க” என்றார்.

குழந்தைகள் விரும்பும் தவுன்!

“அறுவடை செய்த பனங்கிழங்குகளில் தொங்கிக்கொண்டிருக்கும் கொட்டைகளைத் தனியா எடுத்து, அதை ரெண்டாக பிளந்தால், உள்ளே வெள்ளை நிறத்துல பஞ்சுபோல தவுன் இருக்கும். இதைச் ‘சீம்பு’னும் சொல்வாங்க. இது, இனிப்பா இருக்கும். 120 நாளுக்குள்ள கிழங்கைத் தோண்டி எடுத்தால்தான் சாப்பிடுற பக்குவத்துல தவுன் கிடைக்கும். கிராமங்கள்ல சின்னக்குழந்தைகள் இதைச் சாப்பிட ரொம்பப் பிரியப்படுவாங்க. எனக்குக் கிடைக்கிற தவுனை பக்கத்துல இருக்குற சின்னக்குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துடுவேன். வெட்டிய கொட்டைகளைக் காயவெச்சு அடுப்பெரிச்சுக்குவேன்” என்கிறார், மகாராஜா.