மகசூல்
தொடர்கள்
Published:Updated:

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!
பிரீமியம் ஸ்டோரி
News
அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

அதிகப் பராமரிப்பில்லை 

நோய்த்தாக்குதல் இல்லை

செடிகளை ஆடு, மாடு தின்னாது

பூவில் தினசரி வருமானம்

ஆண்டு முழுவதும் சாகுபடி

னியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலரும் வேலை உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில்தான் பணியாற்றி வருகிறார்கள். நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம், ஏற்றுமதி தடை... எனப் பல காரணங்களால் எப்போது வேண்டுமானாலும் ஆட்குறைப்புச் செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படிப்பட்ட நிலைமையை தைரியமாக எதிர்கொண்டு, வேலையை விட்டுட்டு வந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரிக்கு அருகில் உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். அவருக்கு இந்தத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது, ‘பசுமை விகடன்’தான்.

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

தனது அனுபவம் பற்றி ராமச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...

கையைக் கடித்த ரசாயன விவசாயம்

“எனக்குச் சொந்த ஊர் இதுதான் (மூலக்கரை). விவசாயம்தான் குடும்பத் தொழில். நான் பி.காம் படிச்சுட்டுத் தூத்துக்குடியில் இருக்கிற ஒரு தனியார் கம்பெனியில கணக்காளரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆனாலும், பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிறப்போலாம் தோட்ட வேலைகள் எல்லாத்தையும் செய்வேன். அதனால விவசாயம் எனக்கு நல்லா தெரியும். வேலைக்குச் சேந்ததுக்கப்புறமும் விடுமுறை நாட்கள்ல தோட்டத்துக்கு வந்துடுவேன். எங்க பகுதியில நெல், வாழை, தக்காளிதான் அதிகம் பயிர் பண்ணுவாங்க. எல்லாருமே முழுக்க ரசாயன உரம்தான் போடுவோம். ஒரு கட்டத்துல செலவு கட்டுப்படியாகாமப் போனதும் வெள்ளாமை வெக்காம நிலத்தை அப்படியே விட்டுட்டோம்.

பாதை காட்டிய பசுமை விகடன்

மூணு வருஷத்துக்கு முன்னாடி பஸ்ஸுக்காக நின்னுட்டு இருந்தேன். அப்போ, காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமாரும், மூலைப்புலி கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரனும் பசுமை விகடன் புத்தகத்தைக் கையில வெச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகம்னு தெரிஞ்சதும் அதை அவங்ககிட்ட இரவல் வாங்கிப் படிச்சேன். அதுவரை நான் பசுமை விகடனைப் படிச்சதில்லை. அதுலதான் இயற்கை விவசாயத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் புத்தகத்துல இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்ற விவசாயி பத்தி ஒரு செய்தி வந்திருந்துச்சு. அதைப் படிச்சதும் எனக்கு இயற்கை விவசாயத்தைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசை வந்தது. அடுத்த நாள், சக்திகுமாரையும், ரவீந்திரனையும் பார்த்து, ‘ரசாயன உரம் போட்டு நஷ்டப்பட்டு மூணு வருஷம் விவசாயம் செய்யாம நிலத்தைச் சும்மா போட்டு வெச்சுருக்கோம்’னு சொன்னேன்.

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

சோதனையாக நிலக்கடலை சாகுபடி

அவங்கதான் இயற்கை விவசாயம் சம்பந்தமா சொல்லி, ‘ஆரம்பத்துல 25 சென்ட் நிலத்துல மட்டும் செஞ்சு பாருங்க. நம்பிக்கை வந்த பின்னாடி முழுசா இயற்கையில் இறங்குங்க’னு சொன்னாங்க. அப்பாகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் ஒத்துக்கவேயில்லை. ‘உரம் போடாம விவசாயம் செய்ய முடியாது. திரும்பவும் நஷ்டப்படாத’னு சொல்லிட்டார். அப்புறம் அவர்கிட்ட பசுமை விகடனைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அதுக்குப் பிறகுதான் அரை மனசோட, இயற்கை விவசாயம் செய்யச் சம்மதிச்சார்.

சக்திகுமார், ரவீந்திரன் சொல்லிக் கொடுத்த விஷயங்கள், பசுமைவிகடன்ல தெரிஞ்சுக்கிட்ட இடு பொருட்கள் பத்தின விஷயங்கள் எல்லாத்தையும் வெச்சு 50 சென்ட்ல நிலக்கடலை விதைச்சோம். அதுல நல்ல மகசூல் கிடைச்சுது. எனக்கும், அப்பாவுக்கும் இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வந்துடுச்சு. அப்போ இருந்து விடாம பசுமை விகடனைப் படிச்சிட்டு இருக்கேன்.

தன்னம்பிக்கை கொடுத்த விவசாயம்

அந்த நேரத்துல நான் வேலை செஞ்ச கம்பெனியில் திடீர்னு ஆள்குறைப்பு செஞ்சாங்க. 19 வருஷம் பார்த்த வேலையை நானே எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். அப்போ நண்பர்கள்லாம், ‘அடுத்து எங்க வேலை தேடப்போற?’னு கேட்டதுக்கு ‘இயற்கை விவசாயம் செய்யப்போறேன்’னு நம்பிக்கையா சொன்னேன். அவங்கள்லாம் ஆச்சர்யமாப் பார்த்தாங்க. பசுமை விகடன் மூலமாத் தெரிஞ்சுக்கிட்ட இயற்கை விவசாயம்தான் அன்னைக்கு எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்தது. அதனாலதான் வேலையைப் பத்தி கவலைப்படாம எழுதிக்கொடுத்துட்டு வந்தேன்.

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

அடுத்து தினசரி வருமானம் கிடைக்கிற பயிரைத்தான் செய்யணும்னு நினைச்சுதான் நாட்டுக்கேந்தியை (செண்டுமல்லி) தேர்ந்தெடுத்தேன். அதைச் சாகுபடி செய்ற சில விவசாயிகளையும் போய்ப் பார்த்துப் பேசினேன். அவங்களும், ‘அதிகப் பராமரிப்பில்லை, நோய் வராது. தினசரி வருமானம் கிடைக்கும்’னு சொன்னாங்க. வீட்டுல சொத்து பிரிச்சப்போ, எனக்குக் கிடைச்ச ரெண்டு ஏக்கர் நிலத்துல 60 சென்ட்ல செண்டுமல்லி போட்டேன். இப்போ, ஒன்றரை வருஷமா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என முன்கதை சொன்ன ராமச்சந்திரன் நிலத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

அடுத்து சம்பங்கி

“இது களிமண் நிலம். 60 சென்ட் நிலத்துல செண்டுமல்லி பறிப்பில் இருக்கு. 60 சென்ட்ல நாற்று நடவு செஞ்சு ஒரு மாசம் ஆகுது. இந்த வயல்ல பறிப்பு முடிஞ்சதும் அடுத்த வயல்ல பூ வர ஆரம்பிச்சுடும். அதனால எப்பவும் 60 சென்ட் நிலத்துல பூ கிடைச்சுட்டே இருக்கும். மீதி 80 சென்ட் நிலத்தைச் சம்பங்கி நடவுக்காகத் தயார் செஞ்சு வெச்சுருக்கேன். அடுத்த மாதம் சம்பங்கி கிழங்கு ஊன்றலாம்னு இருக்கேன்.

சுழற்சி முறையில் பறிப்பு

வழக்கமா எங்க பகுதியில் வாரத்துக்கு ரெண்டு முறைதான் செண்டுமல்லி பறிப்பாங்க. அதாவது செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல கோயிலுக்காக அதிகமா பூ வாங்குவாங்க. அந்த நாட்கள்ல, ஓரளவு விலை கிடைக்கும். பெரும்பாலும் செண்டுமல்லி விவசாயிகள் இந்தக் கிழமைகள்லதான் பறிக்கிறாங்க. அப்படிப் பறிச்சு மொத்தமா மார்க்கெட் கொண்டு போறப்போ சில சமயங்கள்ல வரத்து அதிகமாகி விலை இறங்கிப் போயிடும். அதனால, நான் 60 சென்ட் நிலத்தை மூணு பங்காகப் பிரிச்சுச் சுழற்சி முறையில் தினமும் பறிச்சு மார்க்கெட் கொண்டு போனேன். மார்க்கெட்ல கமிஷன், கழிவுனு கொடுக்க வேண்டியிருந்துச்சு. அது எனக்குச் சரிப்பட்டு வரலை.

அறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம்! - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி!

நேரடி விற்பனை... கூடுதல் லாபம்

அதனால, ஆறுமுகநேரியில் ஒரு பூக்கடையில் போய்ப் பேசி, தினமும் நேரடியா விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அந்தக் கடைக்காரங்க, ‘உங்களோட பூ நல்ல தரமா இருக்கு. ரெண்டு நாளானாலும் வாடாம அப்படியே இருக்கு’னு சொல்லி ‘என்ன உரம் போடுறீங்க?’னு கேட்டாங்க. நான், ‘இயற்கை விவசாயம் செய்றதாலதான் பூ வாடாம இருக்கு’னு சொல்லிட்டு வந்தேன்.

என்னோட பூவைப் பார்த்த பக்கத்துக் பூக்கடைக்காரங்களும் என்கிட்ட பூ கேட்க ஆரம்பிச்சாங்க. இப்போ 7 கடைகளுக்கு நேரடியாகவே பூ கொடுத்துட்டு இருக்கேன். நேரடி விற்பனைங்கிறதால கமிஷன், கழிவெல்லாம் இல்லாம, அலைச்சலும் இல்லாம வருமானம் பார்க்க முடியுது. இயற்கை விவசாயத்துல இன்னொரு நன்மையும் இருக்கு.

வழக்கமா செண்டுமல்லியில் பூக்க ஆரம்பிச்சதுல இருந்து 90 நாள் வரைதான் பூ பறிக்க முடியும். ஆனா, நான் 130 நாள் கூட பூ பறிச்சுருக்கேன். இப்போ பறிச்சுட்டு இருக்குற வயல்ல 90 நாள் முடிஞ்சு 25 நாள் ஆச்சு இன்னமும் பூ பறிச்சுட்டு இருக்கேன்” என்ற ராமச்சந்திரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

“அறுபது சென்ட் நிலத்துல இதுவரைக்கும் 2 ஆயிரத்து 237 கிலோ பூ பறிச்சி விற்பனை செஞ்சுருக்கேன். அது மூலமா 78 ஆயிரத்து 295 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.

இதுல உழவு, சாணம், பாத்தி, நாற்று நடவு, இடுபொருள், தெளிப்பு, போக்குவரத்துனு இதுவரை 13 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகியிருக்கு. அதைக்கழிச்சா 64 ஆயிரத்து 795 ரூபாய் லாபமாக் கிடைச்சிருக்கு. இன்னும் 15 நாள் பூ பறிக்கலாம். அதுல 300 கிலோ வரை பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அது மூலமா 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடை கொடுத்தார், ராமச்சந்திரன்.

தொடர்புக்கு, ராமச்சந்திரன், செல்போன்: 95436 03035.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்
 
றுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி குறித்து ராமச்சந்திரன் சொன்ன விஷயங்களை இங்குப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் நாற்றுகளை நட வேண்டும். இந்தளவு இடைவெளி இருந்தால்தான் செடிகள் உரசாமல் வளரும். செடிகள் உரசினால் பூக்கள் பெருக்காது. அறுபது சென்ட் பரப்பில் நடவு செய்ய 4 ஆயிரத்து 500 நாற்றுகள் வரை தேவைப்படும். பஞ்சகவ்யா கரைசலில் நாற்றுகளின் வேர் பகுதியை முக்கி எடுத்து பத்து நிமிடங்கள் காய வைத்துதான் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது வேர் சம்பந்தமான நோய்கள் வராது.
 
நாற்று நடவு செய்த உடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, மண்ணைக் காய விடாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் செடிகள் மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். நடவு செய்து 30-ம் நாளுக்கு மேல் மொட்டுக்கள் வரும். அந்தச் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி மீன் அமினோ அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல் பூக்களை அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் பூக்கள் குறைவாகத்தான் கிடைக்கும். படிப்படியாக மகசூல் அதிகரித்து 60-ம் நாளுக்கு மேல் முழு மகசூல் கிடைக்கும். பூக்களின் எடை தாங்காமல் செடிகள் சாய்ந்தால் செடிகளின் தூரில் மண் அணைத்துவிட வேண்டும்.

அதிகபட்ச விலை 120 ரூபாய்

“அறுபது சென்ட் நிலத்தை மூணாப் பிரிச்சு தினமும் 20 சென்ட் நிலத்துல மட்டும் பூ பறிப்பேன். 20 சென்ட் நிலத்துல இதுவரை குறைந்தபட்சமா 13 கிலோ பூ பறிச்சுருக்கேன். அதிகபட்சமா 28 கிலோ பூ பறிச்சுருக்கேன். அதேமாதிரி எப்பவும் ஒரு கிலோ செண்டுமல்லி 30 ரூபாய்ல இருந்து 40 ரூபாய் வரை விற்பனையாகும். எப்பவாச்சும்தான் விலை குறையும். சில சமயங்கள்ல நூறு ரூபாய்க்கு மேலேயும் விற்பனையாகும். நான் குறைந்தபட்சமா கிலோ 20 ரூபாய்னு விற்பனை செஞ்சுருக்கேன். அதிகபட்சமா 120 ரூபாய்னு விற்பனை செஞ்சுருக்கேன். நான் சந்தை விலை நிலவரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு அந்த விலையிலதான் விற்பனை செய்றேன். நேரடியா விற்பனை செய்றதால கமிஷன் கிடையாது. அதனால லாபம் அதிகமாகுது” என்கிறார், ராமச்சந்திரன்.

இலைச்சுருட்டலுக்கு மோர்க்கரைசல்..!

சி
ல சமயங்களில் செண்டுமல்லியில் இலைச்சுருட்டல் பிரச்னை வர வாய்ப்புண்டு. ஏதாவது செடியில் இலைகள் சுருண்டு காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் புளித்தமோரைக் கலக்கி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பெருமையைக் கொடுத்த பசுமை விகடன்!

“வாழையில உரத்துக்குக் கூட காசு கொடுக்க முடியாம நஷ்டப்பட்டு, வெள்ளாமை ஏதும் செய்யாம நிலத்தை மூணு வருஷம் சும்மா போட்டுருந்தப்போ கூட எங்க ஊர்க்காரங்க யாரும் எதுவும் சொல்லலை.

ஆனா, இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சப்போ, ‘கிறுக்கன் மாதிரி சாணியைக் கரைச்சு ஊத்திக்கிட்டு அலையுறான்’னு கேலி பேசுனாங்க. ஆனா, நான் எடுக்குற மகசூலைப் பார்த்துட்டு, என்னைக் கேலி செஞ்சவங்கள்ல சிலபேர் என்கிட்டயே இயற்கை விவசாயத்தைக் கத்துக்கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. அந்தளவுக்கு எனக்குப் பெருமை தேடித்தந்தது, பசுமை விகடன்தான்” என்று நெகிழ்கிறார், ராமச்சந்திரன்.

நாற்றுகளை நாமே உற்பத்தி செய்யலாம்

“மறு நடவுக்கான நாற்றுகளை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். சில செடிகளில் மட்டும் பூக்களைப் பறிக்காமல் விட்டால், அப்படியே செடியில் பூக்கள் வாடிவிடும். அவற்றைப் பறித்து உதிர்த்தால் விதைகள் கிடைக்கும். விதைகளை ஓலைப் பெட்டியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்தியில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குச்சியால் 3 அங்குல இடைவெளியில் கோடு போட்டால் எளிதாக விதைக்கலாம். விதைத்து தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், நான்காம் நாள் முளைத்து வரும். 18-ம் நாளில் இருந்து 22-ம் நாளுக்குள் நாற்றைப் பிடுங்கி நடவு செய்துவிட வேண்டும்” என்கிறார், ராமச்சந்திரன்.