Published:Updated:

சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!

சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!

சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 8பாசனம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

ண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான்.

சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!

இனியாவது தண்ணீரைப் பணத்தைப்போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசி வருகிறது, இக்குறுந்தொடர்.

சொட்டுநீர்க் குழாய்கள் பராமரிப்பு பற்றி நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ் சொன்ன விஷயங்கள், இந்த இதழிலும் தொடர்கின்றன. “சொட்டுநீர்ப் பாசன கருவிகள் அமைப்பவர்கள், பெரும்பாலும் ‘வென்ச்சுரி’ என்ற உரம் உறிஞ்சுக் கருவியைப் பொருத்துவதில்லை. உரக்கரைசல் அல்லது நுண்ணூட்டக் கரைசலைப் பாசன நீருடன் கலந்து பயிர்களுக்குச் சீரான முறையில் விநியோகம் செய்ய வென்ச்சுரி மிகவும் அவசியமானது. அதனால், வென்ச்சுரி இருந்தால்தான், சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக முழுமையான பலன் எடுக்க முடியும்.

டிரிப்பர்களில் உள்ள உப்பை நீக்க, 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி அமிலத்தைக் கலந்து அதில் டிரிப்பர்களைப் போட்டு ஊற வைக்க வேண்டும். டிரிப்பர் மூன்று தட்டு போன்ற அமைப்பு என்பதால் அதிக நேரம் ஊறவைத்துதான் உப்பை அகற்ற முடியும். இதேபோலத்தான் மைக்ரோ டியூப்களில் உள்ள உப்பையும் அமில நீரில் ஊறவைத்துதான் அகற்ற முடியும்.

கிணற்று நீரில் பாசி பிடித்து இருந்தாலும் சொட்டுநீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படும். பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி இ.எம் கரைசலைக் கலந்து மாதம் ஒருமுறை கிணற்றுக்குள் ஊற்றிவந்தால், கிணற்று நீரில் உப்பின் அளவு குறைவதோடு, பாசி பிடிப்பதும் தடுக்கப்படும். இதனால், குழாய்களில் அடைப்பையும் தவிர்க்கலாம். கிணற்றுக்குள் உள்ள ஃபுட் வால்வில் பாசிகள் அடிக்கடி அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் ஃபுட் வால்வை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல ஃபில்டரையும் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும். பெரும்பாலும் விவசாயிகள், ஸ்கிரீன் ஃபில்டர் அல்லது டிஸ்க் ஃபில்டர் ஆகியவற்றைத்தான் அமைத்திருப்பார்கள். ஃபில்டரைச் சுத்தம் செய்யும் முன், ஒருமுறை நன்றாகக் குலுக்க வேண்டும். பிறகு, டிஸ்க் ஃபில்டர் வால்வைக் கழற்றி, குலுக்கி தண்ணீரில் கழுவ வேண்டும். உள்ளே உள்ள மெல்லிய வலையில் தூசி, துரும்புகள் ஒட்டிக்கொண்டிருந்தால், டூத் பிரஷ் மூலம் அவற்றை நீக்க வேண்டும்.

சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!

இது மாதிரியான சிறு குறைபாடுகளைச் சரிசெய்யும் முறைகளை விவசாயிகள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழாய்களில் துளை ஏற்பட்டால், அந்தப் பகுதியை நீக்கிவிட்டு கனெக்டர் மூலமாக இணைத்துக் கொள்ளலாம். இதை, விவசாயிகளே செய்துகொள்ள முடியும். தண்ணீர்ப் பாயும் போது அனைத்து டிரிப்பர்களிலும் தண்ணீர் சொட்டுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கனெக்டர், டிரிப்பர், மைக்ரோ டியூப், சொலூஷன், கத்தரிக்கோல், பிளேடு, செல்லோ டேப் போன்ற பொருட்கள் அடிக்கடி தேவைப்படும் என்பதால், இவை கட்டாயம் தோட்டத்தில் இருக்க வேண்டும்” என்றார், பிரிட்டோ ராஜ்.

நவீனப் பாசன முறைகளில், சொட்டுநீர் அமைப்புக்கு அடுத்து ‘ஸ்ப்ரிங்க்ளர்’ எனும் தெளிப்புநீர்ப் பாசனம், ‘ரெயின் கன்’ எனும் மழைத்தூவிப் பாசனம், ‘ஃபாகர்’ எனும் நுண்ணீர் தூவிப் பாசனம் எனப் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றில், நமக்குத் தேவையானதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பவர்கள், அரசு அங்கீகாரம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து உபகரணங்களை வாங்கி, தாங்களே அமைத்துக் கொள்ளும்பட்சத்தில் குறைவான செலவே ஆகும். அதன்பிறகுகூட, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநரை அணுகி மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ள நிலையில், நிலத்தடி நீரும் குறைந்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவுவது சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நவீன நீர்பாசன முறைகள்தான். மிகச் சிறிய நாடான இஸ்ரேல், விவசாயத்தில் மாபெரும் புரட்சி செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், நீர் மேலாண்மை முறைகள்தான். வாய்க்கால் வழியாகப் பாசனம் செய்தால்தான் பயிர் நன்றாக வளரும் என்ற எண்ணம் நம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.  ஒவ்வொரு பயிருக்கும் அதற்குத் தேவையான அளவு நீர் கிடைத்தாலே போதும். அப்படித் தேவையான அளவு நீரைப் பயிரின் வேருக்கு அருகே கொடுக்கும் வேலையைத்தான் சொட்டுநீர்ப் பாசனம் செய்கிறது. சொட்டுநீர்ப் பாசனத்தில் களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்!

இனிவரும் காலங்களில் தண்ணீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. அதைச் சமாளிக்க, ஒவ்வொரு சொட்டு, நீரையும் முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நவீனப் பாசன முறைகளை அமைப்பதோடு, நம் பணி நின்றுவிடக் கூடாது. மழை நீரை நம் நிலத்துக்குள் அறுவடை செய்யும் முறைகளையும் தெரிந்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும். ஒரு வயலில் விழும் மழை நீர் அடுத்த வயலுக்குப் போகக்கூடாது. அதற்கு ஏற்ப, வரப்பு ஓரங்களில் நீளவாக்கில் குழிகளை எடுத்து வரப்பின் கரைகளை உயர்த்த வேண்டும்.

சரிவான இடங்களில் நீரின் வேகத்தைத் தடுக்கும் விதமாகப் பிறை வடிவக் கரைகளை ஆங்காங்கு ஏற்படுத்தி தண்ணீரின் வேகத்தைக் குறைக்க வேண்டும். கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணற்றின் அருகே மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விவசாய நிலத்திலும் பண்ணைக்குட்டை அவசியம் இருக்க வேண்டும். இப்படித் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, நம் நிலத்திலுள்ள நீராதாரங்களிலும் நீர்மட்டம் உயரும். இப்படி ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை முறைகளைக் கைகொண்டால்தான் எதிர்காலத்தில் விவசாயத்தில் ஏற்படவிருக்கும் கடுமையான சவால்களைச் சமாளிக்க முடியும்.
 
சிக்கனமான பாசனம் மூலம், வளமாக வாழ்வோம்!

- நிறைந்தது