மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பஞ்சகவ்யா! - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா!

panchagavya
பிரீமியம் ஸ்டோரி
News
panchagavya ( J.Palanisamy )

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. இத்தொடரில் வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடி... எனப் பல வகைகளில் பஞ்கவ்யாவைப் பயன்படுத்தி வெற்றி கண்டவர்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் பஞ்சகவ்யா கடந்து வந்த பாதைக் குறித்தும் அதை மனிதர்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசுகிறார் கொடுமுடி டாக்டர் நடராஜன்,

பஞ்சகவ்யா! - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா!

“கோயில் பிரசாதமாக இருந்த பஞ்சகவ்யாவை இன்று தமிழ்நாடு கடந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநில விவசாயிகளும் பயிருக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். மலேசியா, இந்தோனேஷியா, பிரேசில், ருவாண்டா போன்ற வெளிநாடுகளிலும் பஞ்சகவ்யா பயன்பாட்டில் இருக்கிறது. கொடுமுடி பகுதியில் விவசாயிகள் சிலரால் மட்டுமே அறியப்பட்டிருந்த பஞ்சகவ்யாவை... கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் மூலம் நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர், நம்மாழ்வார் ஐயாதான். ‘பிரசாதமாக இருந்த பஞ்சகவ்யா, விவசாயிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

இன்று வறட்சியால் விவசாய மரணங்கள் நிகழ்வதாக ஊடகங்கள் மூலம் அறிகிறேன். ஆனால், பஞ்சகவ்யாவைத் தெளித்துக் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பஞ்சத்திலும் பாதி வெள்ளாமை வீடு வந்து சேரும்.

ஆரம்பத்தில் பஞ்சகவ்யாவைப் புறக்கணித்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று பஞ்சகவ்யா தயாரித்து விவசாயிகளுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்கிறது. மாணவர்களுக்கும் பஞ்சகவ்யா தயாரிப்பு முறையைக் கற்றுக்கொடுக்கிறது. அதன் தொடர்ச்சியாக வளம்குன்றா அங்கக வேளாண் துறை என்கிற தனித்துறையும் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐ.ஐ.டி, பஞ்சகவ்யா குறித்து ஆராய்ச்சிக் கருத்தரங்கு நடத்தியுள்ளது. விவசாயம், கால்நடை, மனித மருத்துவம் ஆகியவற்றில் பஞ்சகவ்யா ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றிய மூன்று நாள் பயிற்சிப் பட்டறையையும் ஐ.ஐ.டி. நடத்தியுள்ளது. பஞ்சகவ்யாவின் மூலக்கூறுகளில் உள்ள உயிர் வேதியியல் மாற்றங்களைப் பல்வேறு துறை விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி சமர்ப்பித்துள்ளனர். இவையெல்லாம் பஞ்சகவ்யாவுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெருமைகள்.

 நோய்களைக் குணப்படுத்தும் ‘அமிர்த சஞ்சீவி’


கடந்த 20 ஆண்டுகளில், பஞ்சகவ்யா கரைசலில் சில மாற்றங்களைச் செய்து, ‘அமிர்த சஞ்சீவி’ என்ற பெயரில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் திரவ மருந்தாகச் செறிவூட்டம் செய்துள்ளேன். மக்களிடம் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பஞ்சகவ்யா கரைசலை உடம்பில் தேய்த்து அரை மணிநேரம் வெயிலில் நின்று, அது நன்றாகக் காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் வருவதில்லை. வெண் குஷ்டம் போன்ற கொடிய தோல் நோய்கள்கூட கட்டுப்படுத்தப்படுகிறது. இன்னமும் பஞ்சகவ்யா குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பர் அருளிய தேவாரப்பாடலில் பஞ்சகவ்யா குறித்து எழுதப்பட்டதன் மூலம் அதன் தொன்மையை அறிய முடியும்.

‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை

ஆவினிக்கு அருங்கலம் அரன் அஞ்சாட்டுதல்
 
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இலமை
 
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயமே!’

 
இதில் இரண்டவது வரியில் உள்ள ‘அரன் அஞ்சாட்டுதல்’ என்பது பஞ்சகவ்யாவைக் குறிக்கிறது.

அதேபோல, திருமழிசை ஆழ்வார் இயற்றிய நாலாயிரத் திவ்ய பிரபந்த பாடல் ஒன்றில்,
 
‘ஆவின் மேல் ஐந்தும் நீ

அதனுள் நின்ற தூய்மை நீ’


என்று தூய்மையான பஞ்சகவ்யாவிலும் ‘தூய்மையானவன் நீ’ என்று இறைவனை நோக்கி குறிப்பிட்டுள்ளார்.

நம்மாழ்வார் ஐயா பஞ்சகவ்யா என்ற வடமொழி சொல்லுக்கு நிகரான தூய தமிழ்சொல்லை திருக்குறளில் இருந்து கண்டு சொல்லியுள்ளார்.

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்’
என்ற குறளில் ‘ஆபயன்’ என்ற வார்த்தை பஞ்சகவ்யாவைக் குறிக்கிறது” என்ற டாக்டர் நடராஜன் நிறைவாக பஞ்சக்வயா சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

நாடு முழுவதும் ஏரளாமானவர்கள் பஞ்சகவ்யாவை பயன்படுத்தி பலன் பெற்றுள்ளார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். பஞ்கவ்யாவுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!

பஞ்சகவ்யாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்த்த பசுமை விகடனுக்கும் கோடான கோடி நன்றி!” என்று சொல்லி உற்சாகமாக விடைகொடுத்தார்.

- நிறைவுற்றது 

தொடர்புக்கு, டாக்டர் நடராஜன் செல்போன்: 94433 58379.

பஞ்சகவ்யா  குளியல்

பஞ்சகவ்யா! - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா!

கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட அன்பு சுந்தரானந்தர், சித்தமருத்துவம், யோகா, மூலிகை ஆராய்ச்சி, இயற்கை விவசாயம் என்று பன்முகத்தன்மை கொண்டவர். கூடுமானவரை இயற்கை வாழ்வியல் முறையையும் கடைப்பிடித்து வருகிறார். பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்திக் உடலைப் பாதுகாத்து வரும் ‘இயற்கை ஆர்வலர்’ அன்பு சுந்தரானந்தர் பஞ்சகவ்யா குறித்து பேசியபோது, 

“ஆன்மிகத்துல அதிக ஈடுபாடு இருந்ததால அடிக்கடி மருதமலை, பேரூர், வெள்ளியங்கிரின்னு பயணம் போவேன். சில சமயங்கள்ல அந்த இடங்கள்ல உள்ள மலை மேல ஏறி அடர்ந்த காட்டுக்குள்ள போவேன். அந்தக் காட்டுக்குள்ள நிறைய பேர் தியானம் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்ககிட்ட சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவேன். அப்போதான் மூலிகைகள் பத்தின நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

காட்டுக்குள்ள ஓடுற சிற்றோடைகள்ல குளிக்கிற சித்தர்கள் மலையில உள்ள மாட்டுச் சாணத்தை எடுத்து உடம்புல பூசிக் குளிப்பாங்க. அதுபத்திக் கேட்டப்போதான், ‘காட்டுல தானா வளர்ந்து கிடக்குற மருத்துவக் குணமுடைய பல வகையான புல், பூண்டு, செடி கொடிகளைத்தான் இந்த மலை மாடுங்க மேயுது. அந்த மாடுகளோட சாணம் நல்ல கிருமி நாசினி. அதை உடம்புல பூசிக் குளிச்சா காட்டுப்பூச்சிகள், மலைக்கொசுக்கள் கடினால தோலில் ஏற்படுற பாதிப்புகள் வராது. தோல் நோய்கள் குணமாகும்’னு சித்தர்கள் சொன்னாங்க. அதோட, ‘ஊர் நாட்டுல இருக்கிறவங்க, நாட்டு மாடுகளோட சாணம், மூத்திரத்தைக் கலந்து தேய்ச்சு குளிச்சா இதே பலன் கிடைக்கும்’னும் சொன்னாங்க. அப்போ இருந்தே சாணக்குளியலை ஆரம்பிச்சுட்டேன். சாணக்குளியலை பஞ்சகவ்யா குளியலா மாத்தினவர், ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜன்தான்.

1990-ம் வருஷக் கடைசியில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இயற்கை விவசாய விழிப்பு உணர்வு பயணம் செய்தார் நம்மாழ்வார். அப்போ அவர் ஈரோடு வந்தப்போ அவர்கிட்ட பேசி அந்தப் பயணத்துல நானும் சேர்ந்துக்கிட்டேன். அந்தப் பயணத்துல டாக்டர் நடராஜனும் வந்தார். பயணத்தப்போ, நான் சாணி பூசி குளிக்கிறதைக் கவனிச்ச டாக்டர், ‘போற இடத்திலெல்லாம் உங்களுக்குச் சாணி கிடைக்கிறது கஷ்டம். அதனால நீங்க பஞ்சகவ்யா பூசி குளிங்க. வெறும் சாணத்துல கிடைக்கிற பலனைவிட இதுல அதிகப் பலன் கிடைக்கும். 15 நாளைக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா பயன்படுத்திக் குளிச்சாலே போதுமானது’னு சொல்லி 5 லிட்டர் பஞ்சகவ்யாவையும் கொடுத்தார். அப்புறம் நானே பஞ்சகவ்யா தயாரிச்சுக் குளிக்க ஆரம்பிச்சுட்டேன்.

பதினேழு வருஷமா 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவைப் பூசிக் குளிச்சுட்டு இருக்கேன். மத்த நாட்கள்ல பச்சை சாணத்தைப் பூசிக் குளிப்பேன். அதனால, தோல் பளபளனு இளமை மாறாம இருக்கு. உடலுக்கும் புத்துணர்வு கிடைச்சுச் சுறுசுறுப்பா செயல்பட முடியுது. நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்குது” என்றார்.

கடல் கடந்த பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா! - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, ருவாண்டோ. இங்கு இந்தியாவைச் சேர்ந்த சிலர் நெல் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்துள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேத்தன் கவுடா.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடந்த பசுமை விகடன் கண்காட்சிக்கு வந்திருந்த சேத்தன் கவுடாவிடம் பேசினோம். “நீர்வளம், நிலவளம், மனிதவளம் ஆகிய மூன்று வளங்களும் கொட்டிக்கிடக்கும் நாடு ருவாண்டோ. இங்கு விவசாயம் செய்ய வருபவர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது, அந்த நாடு. விவசாயம் செய்யத் தேவையான நிலங்களை அரசாங்கமே குத்தகைக்குக் கொடுக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 300 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து நெல் விவசாயம் மேற்கொண்டு வருகிறேன்.

அதில் 5 ஏக்கர் நிலத்தில் மட்டும் இயற்கை விவசாயம் செய்கிறேன். அங்குள்ள நாட்டு மாடுகளைப் பயன்படுத்திப் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் மூன்றையும் தயாரித்து பயிருக்குக் கொடுக்கிறேன். அதில் விளையும் அரிசியைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம். இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு அங்கு குறைவாகத்தான் உள்ளது. அரசாங்க அனுமதியில்லாமல் புதிய விஷயங்களை அந்த மக்களிடம் பேசமுடியாத நிலை அங்கு இருக்கிறது. வரும் காலத்தில் ருவாண்டோ அதிபரைச் சந்தித்து இயற்கை விவசாயம் குறித்துப் பேசவுள்ளோம்” என்கிறார், சேத்தன் கவுடா. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும், பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு உதவும் ஆராய்ச்சி

பஞ்சகவ்யா! - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா!

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம்குன்றா அங்கக வேளாண்மைத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் சோமசுந்தரம், பஞ்சகவ்யாவை ஆராய்ச்சிக்கு உட்படுத்திப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர்.

“பஞ்சகவ்யாவில் அறிவியல், உயிர் வேதியியல் தனிமங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், முதுகலை வேளாண்மை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். பல மாணவர்கள் பஞ்சகவ்யாவை உள்ளடக்கிய இயற்கை இடுபொருட்களின் மூலக்கூறுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பஞ்சகவ்யாவை நீண்டகாலம் அதே வீரியத்துடன் இருப்பு வைக்கும் ஆராய்ச்சியும் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் குழுவில் நானும் உள்ளேன். எதிர்காலத்தில் பஞ்சகவ்யாவை ஏற்றுமதி செய்ய இந்த ஆராய்ச்சி மிகவும் உதவும்” என்கிறார், சோமசுந்தரம்.