
மகசூல்ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்

“இயற்கை விவசாயம் செய்யப் பதியம் போட்டது, நம்மாழ்வார் ஐயானாலும், அதைச் செய்றதுக்கான தொழில் நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டது, ‘பசுமை விகடன்’ மூலமாத்தான். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு செழிம்பாகக் கொடுத்ததுல, இன்னிக்கு இடுபொருட்களே தேவைப்படாத அளவுக்கு மண்ணை மாத்தியிருக்கு இயற்கை விவசாயம்” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி.

புதுச்சேரி மாநிலம், பாகூரை அடுத்த இருளன்சந்தை கிராமத்தில் வசிக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவிநத்தம் கிராமத்தில் இருக்கிறது, அவரது வயல். தளதளவெனச் செழித்து நின்ற தங்கச் சம்பா, கறுப்பு கவுனி நெல் பயிர்கள் காற்றில் ஆடி நம்மை வரவேற்றன. வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, நம்மைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்றார். இளநீர் கொடுத்து உபசரித்த கிருஷ்ணமூர்த்தி, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
படித்து முடித்ததும் விவசாயம்
“எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்தான். 1971-ம் வருஷம், பி.யூ.சி முடிச்சேன். உடனே அப்பா என்கிட்ட நிலத்தை ஒப்படைச்சு விவசாயம் செய்யச் சொல்லிட்டார். ஊர்ல உரக்கடையும் வெச்சிருந்தோம். உரத்தை விற்பனை செஞ்சுட்டுப் பணத்தை வசூலிக்க முடியாமப் போகவும், பயங்கர நஷ்டம். உரக்கடையையும் மூடவேண்டியதாயிடுச்சு. நிலமும் ஜப்தியில் போற சூழ்நிலை வந்ததால வெளிநாட்டு வேலைக்குக் கிளம்பிட்டேன். அங்க வேலை செஞ்சுதான் கடனை அடைச்சேன். அதுவரை, தம்பி விவசாயத்தைப் பார்த்துட்டு இருந்தாரு. 2006-ம் வருஷம் தம்பி இறந்துட்டாரு. அதனால, நான் ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.
படிப்பினை கொடுத்த ரசாயன உரம்
ஒரு ஏக்கர் நெல்லுக்கு 4 மூட்டை டி.ஏ.பி, 4 மூட்டை யூரியா, 2 மூட்டை பொட்டாஷ் போட்டாதான் விளைச்சல் எடுக்க முடியும்னு விவசாயிகள் சொன்னாங்க. ஏற்கெனவே, ரசாயன உரங்களால ரொம்ப அடிபட்டுட்டதால, நான் நெல்லை விட்டுட்டுப் பச்சைப் பயறு சாகுபடி செஞ்சேன். அந்தச் சமயத்துல (2007-ம் ஆண்டு), பாகூர்ல புதுச்சேரி அறிவியல் கழகத்துக்காரங்க நம்மாழ்வார் ஐயாவை அழைச்சுட்டு வந்து ஒரு கூட்டம் நடத்தினாங்க. அங்கேதான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன். அதுக்கு முன்ன அவரைப் பத்தி கேள்விப்பட்டதுகூட கிடையாது. நம்முடைய பாரம்பர்ய விவசாய முறைகள், வாழ்வியல் பத்தியெல்லாம் விரிவாப் பேசினாரு ஐயா. அவர் பேசினது எனக்குள்ள பல சிந்தனைகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திச்சு.
அந்தக்கூட்டத்துல, ‘நாம எல்லோரும் டீ, காபி குடிக்கிறதை நிறுத்தினாலே மலைப் பிரதேசங்கள்ல இருக்குற காடுகளைக் காப்பாற்றிடலாம். வன விலங்குகளோட வாழ்வாதாரத்தைக் காப்பாத்தலாம். அந்தளவுக்குத் தேயிலை, காபிக்காகக் காடுகள் அழிக்கப்படுது’னு ஐயா சொன்னார். அப்போ இருந்தே நான் டீ, காபி சாப்பிடறதை நிறுத்திட்டேன்” என்ற கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்தார்.
பாதை காட்டிய பயிற்சி
“அதுக்கப்புறம், இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு எடுத்துட்டேன். அந்தச் சமயத்துல (2009-ம் ஆண்டு), புதுச்சேரி அறிவியல் கழகத்தோடு சேர்ந்து பாகூர்ல, ‘இனியெல்லாம் இயற்கையே’ங்கிற மூணு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது, பசுமை விகடன். அந்தப் பயிற்சியிலேயும் கலந்துக்கிட்டு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் இந்த ஒன்பது வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தமிழ்நாட்டுல பசுமை விகடன் எங்க கூட்டம் நடத்தினாலும் அதுல நான் கலந்துக்குவேன். அதேமாதிரி நம்மாழ்வார் ஐயா இருந்தவரைக்கும் அவர் கலந்துக்கிட்ட பெரும்பாலான கூட்டங்கள்ல நானும் போய்க் கலந்துக்கிட்டு வந்துருக்கேன்.

“ஆரம்பத்துல பாரம்பர்ய நெல்லை பயிர் செய்ய ஆரம்பிச்சப்போ, ஐயாதான் ‘ஒரு போகம் மட்டும் பாரம்பர்ய நெல்லை பயிர் செய்’னு சொன்னாரு. அப்படி நான் விளைவிச்ச பாரம்பர்ய நெல்லை வியாபாரிகள் யாரும் வாங்கல. அதை, நானே கைக்குத்தல் அரிசியாக அரைச்சு வெச்சேன். அத, எங்க விக்கிறதுன்னு தெரியாம ஐயாகிட்டயே கேட்டேன். ‘விலையை மட்டும் நீ நிர்ணயம் செய். வீட்டுக்குப் போறதுக்குள்ள உனக்குப் போன் வரும்’னு சொன்னார். அதேபோல என்னோட அரிசியை விற்பனை செய்ய ஐயா ஏற்பாடு செஞ்சார்.
விற்பனைக்குப் பிரச்னை இல்லை
இப்போ எங்கிருந்தோ எல்லாம் போன்ல கூப்பிட்டுப் பேசி பாரம்பர்ய அரிசியை வாங்கிட்டு இருக்காங்க. அஞ்சு வருஷமா பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா, கவுனி, கருங்குறுவை, சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பானு பாரம்பர்ய ரகங்களை மட்டும்தான் பயிர் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்போ விற்பனைக்கெல்லாம் பிரச்னையேயில்லை. என்னைத்தேடி வர்றவங்ககிட்டயும் பாரம்பர்ய நெல் விதைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்லிட்டு இருக்கேன். நிறையப் பாரம்பர்ய நெல் திருவிழாகள்ல கலந்துக்கிட்டுப் பேசியிருக்கேன். இயற்கை விவசாயத்தாலயும், பாரம்பர்ய நெல் சாகுபடியாலயும்தான் எனக்கு ‘கிருஷி கர்மாண் புரஸ்கார்’ விருது கிடைச்சது. பிரதமர் கையால், இந்த விருதை வாங்கினேன். இதுபோல இன்னும் பத்து விருதுகளை வாங்கியிருக்கேன். அதுக்கு நம்மாழ்வாரும், பசுமை விகடனும்தான் காரணம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்ன கிருஷ்ணமூர்த்தி, விருதுகளை நம்மிடம் எடுத்துக்காட்டினார்.
மூன்று பயிர் சாகுபடி... அடுத்து நிலத்துக்கு ஓய்வு
தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, “எனக்கு மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல நாலரை ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன். ரெண்டு ஏக்கர்ல காய்கறிகள், சிறுதானியங்கள், நிலைக்கடலைன்னு சாகுபடி செய்வேன். அரை ஏக்கர்ல தென்னை, வாழை, மூலிகைப் பயிர்கள்னு கலந்த ஒரு காடு இருக்கு. வருஷத்துக்கு ஒரு போகம் நெல், அடுத்து பச்சைப் பயறு, அடுத்து உளுந்துன்னு வரிசைப்படி விதைப்பேன். அதுக்கப்புறம் நிலத்துக்கு ஓய்வு கொடுத்துடுவேன்.

அடுத்து மழைக் காலங்கள்ல வயல்ல ரெண்டு சால் உழவு ஓட்டி, தக்கைப் பூண்டு விதைச்சு பூ வந்ததும் அப்படியே மடக்கி உழுதிடுவேன். ஆரம்பத்துல பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு கொடுத்திட்டு இருந்தேன். இப்போ பசுந்தாள் உரம், தொழுவுரம் ரெண்டு மட்டும்தான் கொடுக்கிறேன். பொதுவா பாரம்பர்ய ரகங்கள்கிறதால பூச்சித்தாக்குதல் அவ்வளவா இருக்குறதில்லை. தென்னந்தோப்பு முழுசாவும் பலவித மரங்கள், களைப்பயிர்கள்னு அடர்ந்த காடாத்தான் வெச்சிருக்கேன். அதுல கிடைக்கிற பல இலைதழைகளை பசுந்தாள் உரமாப் பயன்படுத்துறேன்.
ஒற்றை நாற்று சாகுபடி
இயற்கை விவசாயம் ஆரம்பிச்சதிலிருந்தே, ‘ஒற்றை நாற்று சாகுபடி’ முறையைத்தான் கடைபிடிக்கிறேன். 36 சென்டிமீட்டர் இடைவெளியில் ‘ஒரு குத்துக்கு ஒரு நாத்து’னு நடவு செய்றேன். 20-ம் நாள்ல ஒரு களை எடுப்பேன். பாரம்பர்ய நெல் பயிரோட வளர்ச்சியைக் களைகள் தடை செய்றதில. இப்போ விதைச்சிருக்கிற கறுப்பு கவுனியோட சாகுபடி காலம் 135 நாட்கள். தங்கச்சம்பாவோட சாகுபடி காலம் 150 நாட்கள். ஆனா, இயற்கை விவசாயத்துல ரெண்டுமே 135 நாட்கள்லயே அறுவடைக்கு வந்துடுது” என்ற கிருஷ்ணமூர்த்தி நிறைவாக, மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“போன போகத்துல மூன்றரை ஏக்கர் வயல்ல கறுப்பு கவுனி போட்டிருந்தேன். மொத்தம் 40 மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் ஆச்சு. ஒரு ஏக்கர் வயல்ல போட்டிருந்த தங்கச் சம்பா ரகத்துல 12 மூட்டை மகசூல் ஆச்சு. 30 மூட்டை கறுப்பு கவுனி நெல்லை அரிசியாக்கினதுல 1,500 கிலோ கிடைச்சது. அதை, கிலோ 90 ரூபாய்னு விற்பனை செய்துட்டு இருக்கேன். மீதி 10 மூட்டை நெல்லை, விதைநெல்லா ஒரு கிலோ 90 ரூபாய்னு விற்பனை செய்துட்டு இருக்கேன்.
தங்கச் சம்பா ரகத்தை ஒரு கிலோ நெல் 60 ரூபாய்னு, விதைநெல்லா விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். வைக்கோல் விற்பனை செஞ்சதுல 9 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அந்த வகையில பார்த்தா நாலரை ஏக்கர் நெல் சாகுபடியில் இருந்து மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவும் போக 2 லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி, செல்போன்: 99432 49900
அதிகரிக்கும் சந்தை வாய்ப்பு
“மாப்பிள்ளைச் சம்பா, குள்ளக்கார், சிவப்பு கவுனி மாதிரியான சிவப்பு அரிசி வகைகள் நல்லா விற்பனையாகுது. அதேபோல கிச்சிலி சம்பா, சீரகச் சம்பா, தங்கச் சம்பா மாதிரியான வெள்ளை அரிசி வகைகளுக்கும் தேவை அதிகமா இருக்கு. பாரம்பர்ய அரிசிக்கு நல்ல சந்தை உருவாகி இருக்கு” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
14 நாள் வயதில் நாற்று
“ஒற்றை நாற்று நெல் சாகுபடிக்காக நாத்து விடும்போது, எத்தனை நாளில் நாத்தைப் பிடுங்கி நடவு செய்யணும்னு குழப்பம் இருக்கு. 18 நாள், 21 நாள்னு சில பேர் சொல்றாங்க. ஆனா, நான் 14 நாள்ல பிடுங்கி நடவு செஞ்சுடுவேன். அப்படிச் செய்றப்போ பயிர் நல்ல செழிப்பா வளருது” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.