மகசூல்
தொடர்கள்
Published:Updated:

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

பாரம்பர்யம்ஆர்.குமரேசன், ஜி.பழனிச்சாமி, துரை.நாகராஜன்படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார், சி.தி.கோகுல் ராஜ்

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

ல்லிக்கட்டு... தொன்று தொட்டு தமிழன் பின்பற்றக்கூடிய பாரம்பர்ய விஷயங்களில் இதுவும் ஒன்று. முற்காலங்களில், இந்த வீர விளையாட்டில் களம் இறங்கும் காளை மாடுகளின் கழுத்தில் புளியங்கொம்பால் ஆன வளையத்தை மாட்டு வார்களாம். இவ்வளையம் ‘சல்லி’ என அழைக்கப் பட்டிருக்கிறது. அதனால் சல்லிக்கட்டு என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு. அதேபோல முற்காலத்தில் புழக்கத்தில் இருந்த சல்லிக்காசுகளை துண்டில் கட்டி, காளைகளின் கொம்பில் கட்டி விடுவார்களாம். மாட்டை அடக்கும் வீரர்களுக்கு சல்லிக்காசு கட்டப்பட்ட பணமுடிப்பை வழங்கி விடுவார்களாம். இப்படி சல்லிக்காசுகளை துண்டில் கட்டுவதாலும் சல்லிக்கட்டு என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. முன்பு சல்லிக்கட்டு எனச் சொல்லப்பட்ட வார்த்தை மருவி ஜல்லிக்கட்டு என ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் காலங்காலமாக நடந்து வரும் வீர விளையாட்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

காளைகளுடனான இந்த வீர விளையாட்டு மூன்று விதங்களில் நடத்தப்படுகிறது. நான்கு புறங்களிலும் வேலி அடைக்கப்பட்ட மைதானத்தில் காளைகளை அவிழ்த்துவிட்டு அவற்றை விரட்டிப் பிடிப்பது, ‘வேலி ஜல்லிக்கட்டு’. இருபுறமும் 20 அடி நீளக் கயிற்றால் பிணைக்கப்பட்ட காளைகளை அடக்கி அதன் கொம்பிலிருந்து சன்மானத்தை எடுப்பது, ‘வடம் ஜல்லிக்கட்டு’. சிறிய, குறுகலான பாதை வழியே மூக்கணாங்கயிறு அறுக்கப்பட்டு சீறிப்பாய்ந்து வெளிவரும் காளைகளின் திமிலைத் தழுவி அணைப்பது, ‘வாடிவாசல் ஜல்லிக்கட்டு’. ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடப்பவைதான் வாடிவாசல் ஜல்லிக்கட்டுகள்.

திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களின் சுற்று வட்டாரப்பகுதிகளில்... இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்வதற்காகவே நல்ல தரமான நாட்டுக்காளைகளைத் தேர்ந்தெடுத்து, தினமும் பலவித பயிற்சிகளை அளித்து வளர்ப்பார்கள். ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பதை பெரும் கவுரவமாக எண்ணி வளர்ப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு. குறிப்பாக பல பந்தயங்களில் ஜெயித்த காளைகளை வைத்திருப்பதை மிகவும் பெருமையாக நினைப்பார்கள். அதற்காக ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்குபவர்களும் உண்டு. இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காளைகளை வீட்டில் ஓர் அங்கமாக நினைத்து வளர்த்து வருகிறார்கள், தமிழர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மிருகவதை எனக்கூறி தடை விதித்துள்ளது, உச்ச நீதிமன்றம். மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அறப்போராட்டத்தை துவக்கிவிட்டனர், இளைஞர்கள்.

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’
ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

சென்னை, மெரினா கடற்கரையில் எழுந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீ  பெங்களூரு, மும்பை, டெல்லி, அமெரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் போராட்டங்களில் இறங்கியதன் மூலம், இந்தியா முழுக்க பேரதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனவரி 16-ம் தேதி காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் தொடங்கியது இந்த அறப்போராட்டம். அதைத்தொடர்ந்து சென்னை, மெரினா கடற்கரையில் வேகமெடுக்க  17, 18 ஆகிய தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி. மைதானம், திருச்சி எம்.ஜி.ஆர். சிலை, சேலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநரகங்களிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளையும் திரைப்பட நட்சத்திரங்களையும் பின்னுக்குத் தள்ளி இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக பங்கேற்று போராட்டத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்துவிட்டனர்.

இந்த எழுச்சியால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 19-ம் தேதி, டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து அவசரச் சட்டம் பிறப்பிக்க கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி நேரடியாக உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனே தமிழக அரசு அவசரச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்கி மத்திய  அரசுக்கு அனுப்பி, அதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர்ராவ் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை பிறப்பித்துவிட்டார். இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிரடியாக நடந்தேற காரணமே இளைஞர்களின் திடீர் எழுச்சிதான். இந்த எழுச்சி, நாட்டு மாடுகள் மீது மக்களின் கவனத்தை குவிய வைத்துள்ளது. அதேபோன்று அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கும் எதிராகவும் பேச வைத்துள்ளது. 

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

இந்நிலையில் நாட்டு இன கால்நடைகளைக் காப்பாற்றும் விதமாக இயங்கிவரும் ‘சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய’த்தின் அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் இப்போராட்டங்கள் குறித்துப் பேசினோம். “ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒத்த கருத்தில்தான் இருக்கிறது. நலச்சங்கம் என்கிற பெயரில் வெளிநாட்டு நிதி உதவி பெறும் சில அமைப்புகள்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவு செய்து தடை கோரி வழக்கு தொடுக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை மாணவர்களும், இளைஞர்களும் அணியாகத் திரண்டு உணர்த்திவிட்டார்கள்.

மனிதனுக்கும் கால்நடைகளுக்குமான உறவு 7,000 ஆண்டுகள் தொன்மையானது. சிந்து சமவெளி, மெஸபடோமியா, சீனாவின் மஞ்சள் நதி, மெக்ஸிகோ ஆகிய உலகின் முக்கிய நாகரிகங்களில் கால்நடைகளின் பங்களிப்பு அபரிமிதமானது. நாடோடிகளாக இருந்த மனிதன், குழுக்களாகப் பிரிந்து நிரந்தமாகக் குடியமர்ந்த போது வாழ்க்கைத் தேவைக்கான மாற்றத்தை விலங்குகள் மூலம் ஏற்படுத்தினான். அதில் நாய், மாடு, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளை தன் தேவைக்குப் பயன்படுத்தினான். ஆனால், விலங்குகளை கொடுமைப் படுத்தவில்லை.

200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் கூட ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்யவில்லை. ஆனால், தார்க்குச்சி கொண்டு மாடுகளை குத்தினாலோ கழுத்துப்புண் இருப்பதைக் கண்டாலோ, ஜீவகாருண்ய சட்டத்தின்படி மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் முறையை பிரிட்டிஷ் அரசாங்கம்தான் கொண்டு வந்தது. அது, இன்று வரை அமலில் இருக்கிறது. அந்தச் சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், எருமை மாட்டுக்கும் பசு மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத என்.ஜி.ஓக்கள் சிலர் ஒன்று கூடி ‘ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது’ என்று போராடுகிறார்கள். இவர்கள் வழக்குக்கு செலவழிக்கும் பணம் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அண்டை நாட்டின் நிதியுதவிப் பெற்று, நம் மீதே போர் தொடுக்கிறார்கள், நம் நாட்டு மக்கள். இதைவிட வேறு என்ன கொடுமை இருக்க முடியும்?” என்று கேட்ட கார்த்திகேய சிவசேனாபதி தொடர்ந்தார்.

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

“ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலத்தில் சிந்திக்கும் ஒரு வர்க்கத்தினர்தான் பீட்டா, புளுகிராஸ் போன்ற அமைப்புகளில் உள்ளனர். இவர்கள் மட்டும்தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள். இவர்களோடு ‘ஃபேஷன் சமூக ஆர்வலர்கள்’ சிலரும் கைகோத்துள்ளனர். உண்மையிலேயே தடை செய்ய வேண்டியது  மிருக நல வாரியத்தைதான். ஜல்லிக்கட்டு தடையின் பின்புலத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் சதியும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள நாட்டு இனங்களை அழிக்க வேண்டும் என்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். அவற்றில் விவசாயம்தான் அவர்களின் முக்கியக் குறி. முதலில் நாட்டுரக நெல் விதைகளை அழிக்கும் விதமாக ஐ.ஆர்-8 என்கிற வீரிய விதை நெல்லைப் புகுத்தினார்கள். அடுத்தடுத்து பல வீரிய ரகங்கள் படையெடுத்தன. ஒரு கட்டத்தில் நாட்டு ரகங்கள் வழக்கொழிந்தன. அடுத்த போகத்துக்கான விதை நெல்லுக்காக விவசாயிகள் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோலத்தான், நாட்டு மாடுகளை அழித்து வெளிநாட்டு சீமைப்பசுக்களைக் கொண்டு வர வேண்டும் என அவர்கள் துடிக்கிறார்கள். அதனால்தான் காளை வளர்ப்பை ஒழிக்கும் விதமாக ஜல்லிக்கட்டுக்குத் தடை கேட்கிறார்கள். இதற்கு நம் சகோதரர்களே கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

ஊர்க்கோயிலுக்காக விட்ட காளைதான் அந்த ஊருக்கு பொலிகாளை. அதுதான் அந்த ஊரின் பசு மாடுகளோடு சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும். உள்ளூர் நாட்டுக் காளைகளை அழித்தால் செயற்கை முறை கருவூட்டல் முறையில் கலப்பினங்களைத்தான் உருவாக்க முடியும். தற்போதே பெரும்பாலும் பசுக்களுக்கு செயற்கை முறையில்தான் கருவூட்டப்படுகிறது. ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டை பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அவர்களுக்கு அந்த விளையாட்டின் விதிமுறைகளெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்குத்தான் காயங்கள் ஏற்படுமே தவிர, மாடுகளுக்கு சிறு கீறல் கூட ஏற்படாது என்பதுதான் உண்மை.
புலிகுளம், உம்பளச்சேரி, காங்கேயம், மலைமாடு, ஆலாம்பாடி, பர்கூர் செம்மறை போன்ற நாட்டு இன மாடுகள்தான் தமிழர்களின் கலாசார அடையாளம். இந்த மாடுகளில் ஆலாம்பாடி என்கிற இனம் அழிந்துவிட்டது. மற்ற இனங்களும் அழியும் நிலையில்தான் உள்ளன. நமது பாரம்பர்ய பெருமைப் பேசும் நாட்டு மாடுகளை காப்பாற்ற... ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், எருது பிடி போன்ற வீர விளையாட்டுகள் கண்டிப்பாகத் தேவை. அதற்கு அனைவரும் ஓரணியில் இருந்து போராட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்து, அதற்கான வல்லுநர்கள் கமிஷன் ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைக்கவேண்டும். அக்குழுவின் பரிந்துரைப்படி விதிகளை ஏற்படுத்தி தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளையும் விரைவில் மேற்கொள்வோம்” என்றார்.

இவற்றை எல்லாம் உச்ச நீதிமன்றம் புரிந்து கொள்ளுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

தடையை மீறி ஜல்லிக்கட்டு!

உச்ச நீதிமன்றத்தின் தடை இருந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த வகையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்திய ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடந்தேறியது. இதேபோன்று சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்திலும், மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிப்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களிலும் அவசரச் சட்டத்துக்கு முன்பாகவே தடையை மீறி  ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன.

ஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்!’

நாட்டு மாடுகளே நமக்கு ஏற்றவை!

நாட்டு மாடுகள் குறித்துப் பேசும் கால்நடை மருத்துவர் காசி.பிச்சை, “ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாடுகள் பால் உற்பத்தி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டவை. இந்த மாடுகளின் பாலில் ஏ1 கேசின் என்ற புரதம் அதிகம் உள்ளது. இந்த புரதத்தால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் உடலை வலுவாக்குவதில் நாட்டுமாட்டுப் பாலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

நாட்டு மாடுகள் பொதுவாகவே அனைத்து சூழலுக்கும் ஏற்ப வாழ்வதற்குப் பழகிக்கொள்ளும். வெளிநாட்டு மாடுகளோ குளிர் சார்ந்த சூழலில் மட்டுமே வாழும் தன்மையுடையது. உஷ்ணமான சூழ்நிலையில் வெளிநாட்டு மாடுகள் குறைவாகத்தான் பால் கொடுக்கும். தொடர்ந்து கலப்பின மாட்டின் பாலைப் பருகும்போது பலவித நோய்கள் ஏற்படலாம். வெளிநாட்டு மாடுகள் முழுவதும் வணிக நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை” என்கிறார்.