மகசூல்
தொடர்கள்
Published:Updated:

இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!

இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!சந்தைதுரை.நாகராஜன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

யல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும், சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. அதனால்தான் ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை இத்தொடரில் பார்த்துவந்தோம். இந்த இதழுடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது.

இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!

விவசாயிகள், உற்பத்தி செய்வதைவிட சந்தைப் படுத்துவதில்தான் அதிக கஷ்டங்களையும்  நஷ்டங்களையும் எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. ஒரே பயிரையே தொடர்ந்து பயிர் செய்வதும் சில சமயங்களில் நஷ்டத்துக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அதேபோல சந்தையின் தேவையை அறிந்து சாகுபடி செய்யாததும், நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு பயிருக்கு தற்போது கிடைத்த விலை, அடுத்த பருவத்துக்கும் கிடைக்குமா என்று யோசிக்காமல், அதே பயிரை விளைவிக்கும்போதுதான் பிரச்னையே உருவாகிறது. இப்பிரச்னைகளைக் களைவதற்காக, முன்கூட்டியே திட்டமிடும் வகையில்தான் ‘சந்தைக்கேற்ற சாகுபடி’ எனும் இத்தொடர் வெளிவந்தது.

ஒவ்வொரு பயிருக்குமான பருவம், ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்யும்போது கிடைக்கும் விலை, வல்லுநர்களின் கருத்துகள், பயிருக்கேற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஆகியவை குறித்த விவரங்கள் இத்தொடரில் தொடர்ந்து அலசப்பட்டன. தமிழ்நாட்டில் காய்கறிகள், மலர்கள், தானியங்கள் கால்நடைகள்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பல சந்தைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சி-டாக் (C-DAC) ஆகியவற்றின் அறிவுரைப்படி கொச்சி, கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, திருச்சி, ஓசூர், கும்பகோணம், மதுரை, மேட்டுப்பாளையம், தலைவாசல், பண்ருட்டி, திருநெல்வேலி மற்றும் பெங்களூரு ஆகிய சந்தைகளின் விலை நிலவரங்களைப் பற்றிய தகவல்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான agritech.tnau.ac.in மூலமாக வெளியிடப்படுகின்றன.

இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!

இந்த இணையதளப் பக்கத்தில், 160-க்கும் மேற்பட்ட விளைபொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விலை, குறிப்பிட்ட 13 சந்தைகளின் மார்க்கெட் நிலவரங்கள், விவசாய சங்கங்கள், கூட்டமைப்புகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட சந்தைகளின் முகவரிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை, முன்னோடி விவசாயிகள் பற்றிய செய்திகள் ஆகியவை இடம்பெற்று இருக்கும். சந்தை பற்றிய தகவல்களை செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் பெற agritech.tnau.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பலாம்.

இனிவரும் காலங்களில் சந்தையின் போக்கைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சாகுபடி செய்து நஷ்டத்தைத் தவிர்ப்போம். 

- நிறைவுற்றது

சூரியகாந்திக்கு நிலையான விலை!

இணையதளத்தில் சந்தை நிலவரங்கள்!

சூரியகாந்தி எண்ணெய், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் ஒன்று. இந்திய எண்ணெய் பிழிதல் அமைப்பின் கணக்கெடுப்புபடி, நடப்பு பருவத்தில் 1.74 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்ற ஆண்டில் இந்தப் பருவத்தில் 2.23 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் கரூர், தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சூரியகாந்தி பரவலாக பயிரிடப்படுகிறது. சமையல் எண்ணெயின் தேவை அதிகமாகிக்கொண்டே செல்வதால் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

2016-ம் ஆண்டில் 1.5 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உற்பத்தி பரப்பளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஊரக மேம்பாட்டு மையத்தின் கீழ் இயங்கிவரும் விலை முன்னறிவிப்பு திட்டம்... பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கிடைக்கும் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘‘கடந்த 16 ஆண்டுகளாக வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய சூரியகாந்தி விலையை ஆய்வு செய்ததில் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒரு குவிண்டால் சூரியகாந்தி விதைக்கு 3 ஆயிரத்து 300 முதல் 3 ஆயிரத்து 400 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புண்டு எனத் தெரியவருகிறது. இதற்கேற்ப விவசாயிகள் முடிவுகளை எடுக்கலாம்” என அறிவித்துள்ளது.