மகசூல்
தொடர்கள்
Published:Updated:

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”
பிரீமியம் ஸ்டோரி
News
“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

ஆலோசனை சொல்லும் வேளாண் பல்கலைக்கழகம்பாடம் கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

வறட்சி சொல்லும் பாடம்!  - அனுபவங்களைத் தேடி ஓர் ஆய்வுப் பயணம்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

திநீர்ப் பங்கீட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டு அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பது கானல் நீராகிவிட்டது. அதேபோலப் பருவ மழைகளையும் நம்மால் கணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. புவி வெப்பமயமாதல் எனும் இயற்கை நிகழ்வு காரணமாகத் தாறுமாறான வானிலையைத்தான், இனி எப்போதும் நாம் எதிர்கொண்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். இன்னொரு பக்கம், தாறுமாறான தொழில்வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக, நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தகைய சூழலில், இந்த விவசாயிகளின் அனுபவங்களில் இருக்கும் உண்மைகளில் இருந்துதான் இனி நாம் பாடம் கற்க வேண்டும். கடந்த இதழில் நாம் பதிவு செய்திருந்த மூத்த விவசாயிகளின் அனுபவங்கள் தொடர்கின்றன.

நாம் சுற்றுப்பயணம் செய்த கிராமங்களில், பெரும்பாலானவை பழைமையான அடையாளங்களை இழந்தே காணப்பட்டன. ஆடு, மாடுகளைப் பார்ப்பதே அரிதாகத்தான் இருந்தது. ஏரி, குளங்கள் காய்ந்து கிடந்தன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உப்பூர், ஆலங்காடு, கோபாலசமுத்திரம், தில்லைவளாகம், இடும்பாவனம், தொண்டைய காடு, வீரன் வயல், மேலப் பெருமழை, கீழப் பெருமழை, குன்னூர் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் விதைப்புச் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தன.

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

உதயமார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த விவசாயி செங்குட்டுவன் மிகுந்த ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார். “இங்கே ஒரு பெரிய ஏரி இருந்துச்சு. அதோட பரப்பளவு 160 ஏக்கர். அந்த ஏரி தண்ணீர் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேல பாசனம் நடந்துச்சு. ஆற்றுத் தண்ணீர் வரலைன்னாலும் அந்த ஏரியில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி வறட்சிக் காலங்கள்ல பயிரைக் காப்பாத்திடுவோம். அப்போ எல்லாம், மூணு வருஷத்துக்கு ஒரு தடவை ஊர் மக்களே ஒண்ணா சேர்ந்து ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்திடுவோம். ஏரி பராமரிப்பை, அரசாங்கம் தன் கையில் எடுத்த பிறகு, மக்கள் எந்த வேலையையும் செய்ய முடியலை. அப்படியே விட்டதால கொஞ்ச வருஷங்கள்லயே ஏரி முழுமையாவே தூர்ந்துப் போயிடுச்சு. இப்போ யாருக்கும் பயனில்லை” என்றார்.

இதே பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி அழகிரிசாமி, “எனக்குத் தெரிஞ்சு, இந்தப் பகுதிகள்ல வெண்தாமரை ஓடை, திருவாசகம் ஓடை, கண்டான் ஓடைன்னு ஏகப்பட்ட ஓடைகள் இருந்துச்சு. அதே மாதிரி கிராமங்கள்ல நிறைய குளங்களும் இருந்துச்சு. அதனால வறட்சிக் காலங்கள்ல அந்தக் குளத்து தண்ணீரை வெச்சு சமாளிச்சுக்குவோம். அந்த நீர்நிலைகள் எல்லாமே அழிஞ்சுப் போனதாலதான், இப்போ இவ்வளவு மோசமான நிலை. சுத்து வட்டாரத்துல இறால் பண்ணைகள் பெருகிட்டதால, நிலத்தடிநீரும் உப்பா மாறிடுச்சு. பயிர்களைக் காப்பாத்தக் கொஞ்சம்கூட வழியில்லாம போயிடுச்சு.

முன்னாடி இந்தப் பகுதிகள்ல பாரஞ்சம்பா, கார் நெல்தான் பயிர் பண்ணிக்கிட்டு இருந்தோம். அது எல்லாமே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அந்த நெல் ரகங்களைப் பயிர் பண்ணி இருந்தா, ஓரளவுக்காவது வறட்சியைத் தாக்குப்புடிச்சி வளர்ந்திருக்கும். ஆனா, அதெல்லாம் இப்ப எங்க பகுதிகள்ல நடைமுறையில இல்லை” என்றார், கவலையோடு.

நாகப்பட்டினம் மாவட்டம், ஓடாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான பெரியவர் ராமலிங்கம் தனது வயலில் மிகவும் சோகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, “2 ஏக்கர்ல நேரடி நெல் விதைப்புச் செஞ்சிருந்தேன். ரெண்டு தடவை லேசா மழை பெய்ஞ்சுது. ஆனாலும் பயிர் பொழைச்சு வரலை. முன்னாடியெல்லாம் இவ்வளவு மோசமா பயிர் கருகிப்போனதில்லை. அப்பெல்லாம் நான் எரு மட்டும்தான் போடுவேன். அதன்பிறகு ரசாயன உரங்களைப் போட ஆரம்பிச்சதும், மண்ணுல உஷ்ணம் அதிகமாயிடுச்சு.

கொஞ்ச வருஷமா களைகளைக் கட்டுப்படுத்த சுலபமா இருக்கேனு, களைக்கொல்லியையும் அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம். அதனாலதான், 10 நாள் தண்ணீர் இல்லைனாலே பயிர் கருக ஆரம்பிச்சிடுது. விதைநெல், உழவு, உரம்னு இதுவரைக்கும் ஏக்கருக்கு ஏழாயிரம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டேன். வட்டிக்குக் கடன் வாங்கிதான் இதுக்கெல்லாம் செலவு செஞ்சேன். எனக்கு வேற வருமானம் கிடையாது. எப்படி இந்தக் கடன்களை அடைக்கப்போறேன்னு தெரியலை” என்று வேதனையோடு சொன்னார்.

வறட்சியை எதிர்கொள்ளத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, துணைவேந்தர் கே. ராமசாமியிடம் பேசினோம். “வறட்சியில் கருகும் பயிர்களைக் காப்பாற்றும் வகையில்... சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பல்கலைக்கழகம், ‘மெத்தலோ பாக்டீரியா’வை அறிமுகம் செய்தது. அது நல்ல முறையில் பலன் கொடுத்துவருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓர் ஒன்றியத்துக்கு ஆயிரம் லிட்டர் வீதம் எப்போதும் இருப்பு வைக்கப்படுகிறது. எங்கள் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் துறையின் மூலம் விவசாயிகளின் கவனத்துக்கு இந்தத் தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வறட்சியின் ஆரம்ப நிலையிலேயே இதை வாங்கிப் பயன்படுத்திய விவசாயிகள் தங்களது பயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அனைத்து விவசாயிகளும் முன்னெச்சரிக்கையாக இதை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

விதைப்பிலிருந்து 80 நாள் வயது வரை இதைப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் மெத்தலோ பாக்டீரியா, மூன்றரை ஏக்கர் நிலத்துக்குப் போதுமானது. 15-25 நாட்களுக்கு வறட்சியில் இருந்து பயிரை இது பாதுகாக்கும். சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் அரசே இதை இலவசமாக வழங்குகிறது. வறட்சியைச் சந்திக்கும் விவசாயிகள் அனைவரும், நம்பிக்கையோடு இதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினால், தேவைப்படும் அளவு இதை உற்பத்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டைவிட கேரள விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு அதிகமாக இருக்கிறது. 40 ஆயிரம் ஏக்கர் பரப்புக்குத் தேவையான மெத்தலோ பாக்டீரியாவை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்” என்ற ராமசாமி, மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

“அதிகமாகப் பால் தரும் மாடுகளுக்கு அதிகளவு தீவனம் தேவைப்படுவது போல், அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்களுக்குத் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது. முன்பு விளைச்சல் குறைவாக இருந்தாலும் பயிர்கள் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளர்ந்தன. முன்பு விவசாயிகளுக்கு உதவக்கூடிய துணைத்தொழில்கள் இருந்தன. குறிப்பாக ஆடு, மாடுகள் வளர்த்தார்கள். பால் மூலம் வருமானம் வந்தது. வறட்சிக் காலங்களில் ஆடுகளை விற்று பொருளாதார நெருக்கடிகளை எளிதாகச் சமாளித்தார்கள். வீட்டு வாசலில் பெரிய வைக்கோல் போர் இருக்கும். அது அவர்களுக்கு மிகப்பெரும் கவுரவம். தவிரச் சேமிப்பு பழக்கமும் இருந்தது. பணத்தைச் சேமித்ததோடு மட்டுமல்லாமல், குதிர்களில் தானியங்களையும் சேமித்தார்கள். அவை கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருந்தன.

முன்பெல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 7 சதவிகிதம் அளவுக்குத்தான் மழையளவில் மாற்றம் வரும். ஆனால், தற்போது தக்காண பீடபூமியின் சீதோஷ்ண நிலை மாறிவிட்டதால், மழைப்பொழிவில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு 60 சதவிகித மழை குறைந்துள்ளது” என்ற ராமசாமி நிறைவாக, “குளிர்ந்த நீராவியை வெளியிட்டு, மேகங்களை மழையாக மாற்றக்கூடிய லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளிட்ட பலவகை மரங்களை அழித்ததன் விளைவுதான் மழைக் குறைவுக்குக் காரணம். இதை மீட்டெடுக்க வேண்டுமானால், அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து இயற்கை வளங்களை வளர்த்தெடுக்க வேண்டும். விவசாயிகள் நம்பிக்கை இழக்காமல், மீண்டும் பாரம்பர்யத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்றார் அழுத்தமான குரலில். 

இந்தப் பயணத்தின் வழியாக டெல்டா விவசாயிகள் சொல்லும் செய்தி... ஒரே வகையான பயிர்களை பயிரிடுவது, அதிகப்படியான ரசாயனத்தை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். தண்ணீரின் அளவுக்கு ஏற்ப பயிர் செய்வது, கால்நடைகளை வளர்ப்பது, நமது பாரம்பர்ய இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது ஆகியவைதான் விவசாயிகளை தற்கொலையிலிருந்து மீளச் செய்யும் என்பதை  அவர்களின் அனுபவங்கள் புரிய வைக்கின்றன. 

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

கைக்கொடுத்த பாரம்பர்ய ரகம்!

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே உள்ள வடுகூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வீரப்ப ராமகிருஷ்ணன், “எனக்கு 80 வயசாகுது. என் அனுபவத்துல இப்படி ஒரு வறட்சியைப் பார்த்தது இல்லை. 

முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பகுதியில தலைஞாயிறு கார், காட்டுயானம்ங்கற பழங்கால ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தோம். அதுக்கு எருகூட அதிகம் போட வேண்டியதில்லை. லேசா மழை பெய்ஞ்சாலே போதும். பயிர் நல்லா தளதளன்னு அஞ்சரையடி உயரத்துக்கு மேல வளர்ந்து வந்துடும். இப்போ, அந்த நெல் ரகங்கள் எல்லாம் இல்லை.

விவசாயிகளுக்கும் அன்றாடச் செலவுகள் கூடிப்போயிடுச்சு. பால், இறைச்சி வாங்கணும்னாகூட, நகரத்துக்குப் போயிதான் வாங்க வேண்டியிருக்கு. முன்னாடி கல்யாணம், காதுகுத்துன்னு எந்த விசேஷமா இருந்தாலும் தெருவிலேயே பந்தல் போட்டு பண்ணிடுவோம். இப்போ மண்டபம் பிடிச்சு பண்ணணும். அப்போ ஆடம்பரம்னு நினைச்ச செலவெல்லாம் இப்போ அத்தியாவசியமாகிடுச்சு. வறட்சியை எதிர்கொள்ள முடியாம போனதுக்கு இதெல்லாமும்தான் காரணம்” என்று எதார்த்தத்தைச் சொன்னார்.

“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”

அப்போ செலவு குறைவு... இப்போ செலவு அதிகம்!

திருவாரூர் மாவட்டம், கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 90 வயது முதியவரான காசிநாதன், “அப்பெல்லாம் விவசாயத்துக்குன்னு பெருசா செலவு செய்ய வேண்டியிருக்காது. குடும்பமே வயல்ல இறங்கி உழைக்கும். ஒரு சில வேலைகளுக்குக் கூலி ஆட்களைப் பயன்படுத்தினாலுமேகூட, அதிகளவுல சம்பளம் தர வேண்டியிருக்காது. ரசாயன உரத்துக்குச் செலவு பண்ணமாட்டோம். சொந்தமா உழவு மாடுகள் இருந்துச்சு. அதனால உழுகிற செலவு இல்லைங்கிறதோட, எருவும் கிடைச்சிடும். விதை நெல்லும் விவசாயிகளே எடுத்து வெச்சுருப்பாங்க. அதனால, எதுக்குமே காசு செலவு பண்ண வேண்டியதில்லை.

வறட்சியினால விளைச்சல் இல்லாமப் போனாலும்கூட, வருமானம் இல்லாமப் போகுமே ஒழிய, நஷ்டம் வராது. ஆனா, இப்போ அந்த நிலைமை இல்லை. எல்லாத்துக்குமே அடுத்தவங்களை நம்பி இருக்கிறதால உற்பத்தி செலவு பல மடங்கு கூடிப்போயிடுச்சு” என்று விரங்களை அடுக்கினார்.