மகசூல்
தொடர்கள்
Published:Updated:

அன்று கல்லுக்கொல்லை... இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை
பிரீமியம் ஸ்டோரி
News
அன்று கல்லுக்கொல்லை... இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

15 ஏக்கர்... ரூ10 லட்சம் வருமானம்!மகசூல்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

“எந்த வேலையா இருந்தாலும், அதுல முழுமையான ஈடுபாடு இருக்கணும். அப்படி இருந்துட்டா எடுத்த வேலையில வெற்றி நிச்சயம்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு. அது சத்தியமான வார்த்தைங்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். அதேபோல, ‘ஒவ்வொரு விவசாயியும் ஒரு வியாபாரியா மாறினாத்தான் முழுமையான லாபம் பார்க்க முடியும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வாரு. அதையும் நான் கடைப்பிடிச்சிட்டிருக்கேன்.

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

நாம என்ன தொழில் செஞ்சாலும், ஆதித்தொழில் விவசாயம்தானே. நம்ம பாட்டன், முப்பாட்டன்னு யாராவது ஒருத்தர் நிச்சயம் விவசாயியாகத்தான் இருந்திருக்க முடியும். நம்ம ஊர் மனுசங்க எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும், விவசாயம் செய்யணும்ங்கிற எண்ணம், நிச்சயம் அடிமனசுல அரிச்சுகிட்டே இருக்கும். எங்களுக்குள்ளேயும் அப்படி இருந்த விவசாய எண்ணம்தான், பொட்டல் காடா இருந்த இந்த இடத்தை அழகான தோட்டமா உருவாக்கியிருக்கு” என்று சந்திக்கும் விவசாயிகளிடம் சந்தோஷமாகச் சொல்கிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராதாகிருஷ்ணன்.

அன்று புன்செய்... இன்று நன்செய்

புதுக்கோட்டையில் இருந்து பொற்பனைக்கோட்டை வழியாக ஆலங்குடி செல்லும் சாலையில், 9-ம் கிலோமீட்டரில் இருக்கிறது, ராயவலம். இங்கு, ஒரு காலத்தில் காடுபோல முட்கள் நிறைந்த புன்செய் நிலைத்தை நெல் விளையும் நன்செய் நிலமாக மாற்றியிருக்கிறார், கண்ணன்.

வரப்புகளில் பலா மரங்கள்; நிலத்தின் ஓரங்களில் மகோகனி, மலைவேம்பு மரங்கள்; பசுமைக் கட்டி நிற்கும் நெல் வயல்; வெண்மையாகச் சிரித்து வரவேற்கும் சம்பங்கி; நாட்டு மாடுகள், நாட்டுக் கோழிகள், புறாக்கள், மீன்குளம், வெண்பன்றி என ஒரு ஒருங்கிணைந்த பண்ணையமாகப் பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சியளித்தது, அந்தத்தோட்டம்.

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

நிலக்கடலை அறுவடைப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த கண்ணனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்கு ஹோட்டல் தொழில்தான் பிரதானம். ‘பழனியப்பா மெஸ்’னு சொன்னால் புதுக்கோட்டையில எல்லோருக்கும் தெரியும். அதுக்குக் காரணம் எங்க உபசரிப்பும், வாடிக்கையாளர்கள் உடல்நிலை மீதான அக்கறையும்தான். ஹோட்டல் தொழில்ல இருந்தாலும் அப்பாவுக்கு விவசாயத்து மேலேயும் ஆர்வம் இருந்தது. 1997-ம் வருஷம் இந்த இடத்தை வாங்கினாரு. இந்த இடத்தை ‘கல்லுக்கொல்லை’னு சொல்லுவாங்க. ஒரு காலத்துல இதைக் குப்பை, கழிவுகள் கொட்டுகிற இடமா வெச்சிருந்தாங்க. அதனாலதான் இந்த இடத்தோட பெயர் கல்லுக்கொல்லை. அப்பா வாங்கிய பிறகு, குப்பைகளையெல்லாம் அப்புறப் படுத்தினோம். நாங்க வாங்கும்போதே முந்திரி மரங்கள் இருந்துச்சு. ஆனா, பராமரிப்பு இல்லாம முந்திரி தோப்புக்குள்ள காட்டுமுள் நிறைஞ்சு புதரா இருந்தது. அதையெல்லாம் சீராக்கிட்டு, வரப்பு ஓரங்கள்ல பலா மரங்களை நட்டு வெச்சாரு.

ஒரு காலகட்டத்துல கடுமையான வறட்சியில பக்கத்து ஊர்ல இருந்து குடத்துல தண்ணியெடுத்திட்டு வந்து ஊத்தி எல்லாம் மரத்தை காப்பாத்தியிருக்கார். அப்பாவுக்கு உதவியா மாமாவும் இருந்தாரு. ஒரு கட்டத்துல முந்திரி மரங்களை அழிச்சிட்டு, நிலம் முழுக்கக் கரம்பை மண்ணை வண்டி வண்டியாகக் கொட்டி, இந்த இடத்தை வயலா மாத்தினாரு அப்பா.

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

அந்தச் சமயத்துல 2005-ம் வருஷம் படிப்பை முடிச்சுட்டு நான் தொழிலுக்கு வந்தேன். அப்போ விவசாயத்தைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. கொஞ்ச நாள்ல தோட்டத்தைப் பார்த்துட்டு இருந்த மாமா, அங்கே இருந்து கிளம்பவேண்டிய சூழ்நிலை வந்ததும், நான் தோட்டத்துக்குப் போயிட்டு வர ஆரம்பிச்சேன். அப்பத்தான் ‘பசுமை விகடன்’ பத்திரிகையும் வெளிவந்துச்சு. தொடர்ந்து அதைப் படிக்கும்போது எனக்குள்ள விவசாயத்தைப் பத்தின ஆர்வம் அதிகமாச்சு. மகசூல் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க நாமும் அதேபோல செய்யணும்னு தோணும். அதுக்குப் பிறகு பசுமை விகடன்ல இடம்பிடிக்குற பண்ணைகளுக்குப் போயி, அவங்களோட பேசி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன். அப்படியே எங்க தோட்டத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்த ஆரம்பிச்சோம்” விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன கண்ணன் தொடர்ந்தார்.

“முதல்முறையா விவசாயம் செய்யும்போது, நாலு ஏக்கர் நிலத்துல வண்டல் மண் அடிச்சு, தொழுவுரம் கொட்டி நெல் சாகுபடிக்காக வயலைத் தயார் செஞ்சேன். பசுமை விகடன்ல படிச்சது, மத்த விவசாயிகளைச் சந்திச்ச அனுபவம், எல்லாத்தையும் மனசுல வெச்சிதான் சாகுபடியில இறங்கினேன். முதல் தடவையிலேயே ஒற்றை நெல் சாகுபடி முறையிலதான் நடவு செஞ்சேன். நடவுக்குப் பிறகு, ரெண்டு முறை கோனாவீடர் ஓட்டி, களைகளை அழுத்திவிட்டோம். பாசன தண்ணியோட ஜீவாமிர்தம் கலந்து விட்டோம். மூணுமுறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிச்சோம். 120-ம் நாள் பயிர் அறுப்புக்கு வந்திடுச்சு. நாலு ஏக்கர்ல இருந்து 150 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூலாச்சு. மொத்தம் 9 ஆயிரம் கிலோ. ஒரு கிலோ நெல் பதினோரு ரூபாய்க்கு வியாபாரிங்க கேட்டாங்க. அப்படி கொடுத்திருந்தா 99 ஆயிரம் ரூபாய்தான் வருமானமாகக் கிடைச்சிருக்கும். நான் செலவு செஞ்ச தொகை கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய்.

ஆக, வியாபாரிக்கு கொடுக்க எனக்கு மனசு வரலை. நம்ம ஹோட்டலுக்கு அரிசி வெளியேதான வாங்குறோம். இதையே அரைச்சு வெச்சுக்கலாம்னு தோணுச்சு. உடனே அரைச்சுட்டேன். 5 ஆயிரம் கிலோ அரிசி கிடைச்சது. அது மோட்டா ரக அரிசிங்கிறதால டிபன் ஐட்டத்துக்கு வெச்சுக்கிட்டோம். வழக்கமா இட்லி அரிசி கிலோ 25 ரூபாய்னு வாங்குவோம். அந்த விலை வெச்சாக்கூட, வியாபாரிக்கு கொடுக்கிறதைவிட 30 ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைச்சிருக்கு. நெல் சாகுபடி கொடுத்த உற்சாகத்துல, சீரகச்சம்பா, அட்சயானு ரெண்டு ரகத்தையும் மாத்தி மாத்தி சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். எங்க ஹோட்டல் பிரியாணிக்கும் இங்கே விளையுற அரிசிதான் பயன்படுது.

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

‘மெஸ் பூ’

புதுக்கோட்டை மாவட்டம் மரம் வளர்ப்புல முன்னோடி மாவட்டம். பொதுவா எல்லா நிலத்திலேயும் மரங்கள் இருக்கும். எங்க பண்ணையில வேலி ஓரங்கள்லயும், வரப்புகள்லயும் மரங்களை நட்டு வெச்சிருக்கோம். மகோகனி, மலைவேம்பு, தேக்கு மாதிரியான வணிகரீதியில் பலன் தரக்கூடிய மரங்கள் ஆயிரத்துக்கும் மேல இருக்கு. இதுமூலமா வருமானம் கிடைக்கக் குறைஞ்சது ஏழு வருஷமாகும். அதுவரைக்கும் தினசரி வருமானம் வர்ற மாதிரியான பயிர்களை நடவு செய்யலாம்னு யோசனையில இருந்த நேரத்துல, பசுமை விகடன்ல சம்பங்கி சாகுபடி சம்பந்தமா, திண்டுக்கல் மருதமுத்து பேட்டி வந்தது. அதைப் படிச்சதும், நேரா அவங்கத் தோட்டத்துக்குப் போய்ப் பார்த்து, அவர்கிட்ட பேசினேன்.

அவர் கொடுத்த ஆலோசனை, ஊக்கம் காரணமா எங்க தோட்டத்திலேயும் 70 சென்ட் இடத்துல சம்பங்கி நடவு செஞ்சேன். இந்த நிலத்துல களைகள் அதிகமா வருங்கிறதால பிளாஸ்டிக் மூடாக்கு  ஷீட் போட்டு சம்பங்கி நடவு செஞ்சிருக்கேன். இப்ப அது மகசூல்ல இருக்கு. இந்த வயல்ல சம்பங்கி நல்லா வரவும், அடுத்து இன்னொரு ஏக்கர்லயும் நடவு செஞ்சிட்டேன். மொத்தம் 1 ஏக்கர் 70 சென்ட் இடத்துல சம்பங்கி இருக்கு. இப்ப தினசரி 50 கிலோவுக்கு மேல பூ கிடைக்குது. ஒரு கிலோ பூவுக்குச் சராசரியா 35 ரூபாய் விலை கிடைக்கும். சராசரியா மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பங்கி மூலமா கிடைச்சிடுது. இப்போ முழுக்க இயற்கை விவசாய முறையிலதான் எங்க பண்ணையில சாகுபடி நடக்குது. அதனால எங்க பண்ணையோட பூ, மார்க்கெட்ல தனியாகத் தெரியும். எங்க பூவை ‘மெஸ் பூ’வுன்னு தான் மார்க்கெட்ல சொல்வாங்க.

சம்பங்கி வயல்ல வரப்பு ஓரமா இருக்கிற தட்டைப் பயறு, பூச்சிகளைத் தடுக்குறதோட கணிசமான வருமானமும் கொடுக்குது. சம்பங்கி விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு விஷயத்துல கவனமா இருந்தா சாதிச்சிடலாம். கோரை அதிகமா வளர்ற நிலத்துல இதைச் சாகுபடி செஞ்சா, நஷ்டமாகிடும். அந்த மாதிரி இடங்கள்ல பிளாஸ்டிக் ஷீட் போட்டு சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சீட் அமைக்க 30 ஆயிரம் ரூபாய்ச் செலவாகும். இதை அமைச்சுட்டா களையைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை. ரெண்டாவது, பூ எடுக்க போதுமான ஆட்கள் இருக்கணும். இது ரெண்டும் சரியா இருந்து தண்ணி வசதியும் இருந்தா, துணிஞ்சு சம்பங்கி சாகுபடியில இறங்கலாம்” என்ற கண்ணன் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

“சம்பங்கி நிலத்துக்குப் பக்கத்திலேயே அரை ஏக்கர்ல வீட்டுக்குத் தேவையான மா, கொய்யா, வாழை, மாதுளை, சப்போட்டா மாதிரியான மரங்களை நடவு செஞ்சிருக்கோம். சம்பங்கி சாகுபடிக்கு பிறகு, பூக்களுக்கு நல்ல விலை கிடைக்குதுங்கிறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுகிட்டதால, மருதமுத்து ஆலோசனையில அரை ஏக்கர்ல ரோஜா செடிகள நடவு செஞ்சிருக்கோம். இப்ப அதுவும் மகசூலுக்கு வந்திடுச்சு. தினமும் சராசரியா அஞ்சு கிலோ பூ கிடைச்சிட்டு இருக்கு. போகப்போக மகசூல் கூடும். எங்க தோட்டத்துல சீசன்ல வர்ற பலா பழங்களை நண்பர்களுக்குக் கொடுத்தது போக, மீதியை ஹோட்டலுக்கு வர்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செஞ்சிடுறோம். கொஞ்சம் நாரத்தை மரங்கள் இருக்கு. அதுல வர்ற காயை ஊறுகாய்க்குப் பயன்படுத்திக்கிறோம்.
 
ஒருங்கிணைந்தப் பண்ணையம்

எங்க பண்ணையை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையா மாத்துற முயற்சியில இருக்கோம். 120 அடி நீளம், 80 அடி அகலத்துல ஒரு குளம் வெட்டியிருக்கோம். மழை பெய்யும்போது, நிலம் முழுக்க வழிஞ்சு போற தண்ணி, குளத்துல வந்து விழுகிற மாதிரி வாய்க்கால் அமைச்சிருக்கோம். சமீபத்துலதான் குளத்துல, மீன் குஞ்சுகளை விட்டிருக்கோம்.

பத்து ஜோடி புறாக்களை வாங்கி விட்டதுல, அது இப்போ பெருகிப்போச்சு. இப்ப அதுக்காகத் தனியா கூண்டு அமைச்சிருக்கோம். புறாவுக்குன்னு எந்தச் செலவும் இல்லை. அதுகளா வெளியே போய் இரை தேடிக்கும். அதோட கொஞ்சம் நாட்டுக்கோழிகளும் இருக்கு. இயற்கை விவசாயத்துக்குச் சாணம், மாட்டுச் சிறுநீர் தேவைப்படுறதால, நாலு நாட்டு மாடுகள் வெச்சுருக்கோம். ஓர் ஓரமா கொட்டகை அமைச்சு, அறிவியல் ரீதியா வெண்பன்றிகளையும் வளர்த்திட்டு இருக்கேன்” என்ற கண்ணன் நிறைவாக,

“நம்மளோட மண்வளம், தண்ணி வசதி ரெண்டையும் அடிப்படையா வெச்சு, என்ன விவசாயம் செய்யலாம்னு முடிவு எடுக்க தெரிஞ்சுட்டாப் போதும். கண்டிப்பா விவசாயம் நல்ல லாபம் கொடுக்கும். எங்களைப் பொறுத்தவரைக்கும், ஹோட்டல் தொழில்ல இருக்கறதால இந்தப் பண்ணையில விளைகிற பொருட்களையே உணவு தயாரிக்கப் பயன்படுத்திக்கிறோம். அதே நேரத்துல ஹோட்டல்ல வீணாகும் உணவுப் பொருட்களை, சாப்பிட்ட இலைகளைப் பண்ணைக்குக் கொண்டு வந்து, வெண்பன்றிகளுக்கு உணவாக்கிக்கிறோம். ஆக, எதுவும் வீணாகிறதேயில்லை.

ரெண்டு தொழிலும் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்புடையதா இருக்கிறதால, கழிவுகளையும் முறையா கையாண்டு காசாக்க முடியுது. இன்னும் கொஞ்ச நாள்ல இந்தப் பண்ணையைச் சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையமா மாத்தணும்ங்கிறதுதான் எங்க லட்சியம். கூடிய சீக்கிரம் ஹோட்டலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் இயற்கையில் விளைஞ்சதாகவே பார்த்து வாங்கலாம்னு இருக்கோம். விவசாயத்தைப் பத்தி அதிகமா தெரியாத எனக்கு, இன்னிக்கு விவசாயத்தைப் பத்தி பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது, பசுமை விகடன்தான். அதுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. அதேபோல, எனக்குத் தொடர்ந்து ஆலோசனை சொல்லிட்டு இருக்கிற மருதமுத்துவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என்றபடியே நிலக்கடலை அறுவடை பணியில் கவனத்தைத் திருப்ப நாம் விடைபெற்றோம்.

தொடர்புக்கு, கண்ணன், செல்போன்: 99429 33912

மண்பானை பாசனம்

அன்று கல்லுக்கொல்லை...  இன்று நெல்லுக்கொல்லை! - வீணான நிலம் விளைநிலமான கதை

னது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால, ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைச்சு வெச்சிருக்கோம். பானையைப் புதைக்கிறதுக்கு முன்னாடி, பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டுல சின்னதா ஒரு துளை போட்டுடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைச்சிடுவோம்.

வாய்க்கால்ல தண்ணி பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் தண்ணி நிறைஞ்சிடும். நிலத்துல ஈரம் காயக்காயப் பானையில இருக்கிறத் தண்ணி சொட்டுச் சொட்டா இறங்கிட்டே இருக்கும். இதனால, செடியோட வேர்ப்பகுதி எப்பவும் ஈரப்பதத்தோட இருக்கும். பானைத் தண்ணி முழுமையா இறங்க 15 நாட்கள் ஆகும். அதுக்குள்ள அடுத்தப் பாசனம் கொடுத்துடுவோம். இதுனால, வருஷம் முழுக்கச் செடிகளுக்குப் போதுமான தண்ணி கிடைச்சு, செடிகளோட வளர்ச்சி நல்லா இருக்குது” என்றார்.

மனதை மாற்றிய மதிப்புக்கூட்டல்
 
“ஒரு சமயம் எங்க தோட்டத்துல இருந்து இயற்கை முறையில நான் உற்பத்தி செஞ்ச கத்திரிக்காயை சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ ஒரு ரூபாய்னு விலைக்குக் கேட்டாங்க. எனக்குப் பயங்கர கோபம் வந்திடுச்சு. காயை விற்பனை செய்யாம வீட்டுக்குக் கொண்டு வந்து, அறுத்து வத்தல் ஆக்கிட்டேன். மொத்தம் 750 கிலோ காயை வத்தல் ஆக்கினேன். அதுல 187 கிலோவுக்கு மேல வத்தல் கிடைச்சது. ஒரு கிலோ வத்தல் 40 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 7 ஆயிரத்து 500 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. அப்போதான், மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதால கிடைக்குற நன்மையை உணர்ந்தேன்” என்கிறார், கண்ணன்.

15 ஏக்கர்... 10 லட்ச ரூபாய் வருமானம்!

“வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்றோம். ஒருமுறை மோட்டா ரகம், இன்னொரு முறை சம்பா ரகம். நாலு ஏக்கர் நிலத்துல இருந்து மோட்டா ரகத்துல சராசரியா 5 ஆயிரம் கிலோ அரிசியும், சம்பா ரகத்துல 3 ஆயிரம் கிலோ அரிசியும் கிடைக்குது. கிலோ 25 ரூபாய் விலையில மோட்டாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும்; சம்பா ரகத்துக்குக் கிலோ 60 ரூபாய் விலையில 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் வருமானமாக் கிடைக்கும். சம்பங்கி மூலமா மாதம் சராசரியா 50 ஆயிரம் ரூபாய் கணக்குல வருஷத்துக்கு ஆறு லட்ச ரூபாய் கிடைக்குது.

மற்ற விவசாயம் மூலமா வருஷம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வெண்பன்றி மூலமா வருஷம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்குது. ஆக மொத்தம் 15 ஏக்கர்ல இருந்து 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானமாக் கிடைக்குது. இதுல பாதியைப் பண்ணை செலவுக்குன்னு ஒதுக்கிடுவேன்” என்கிறார், கண்ணன்.