மகசூல்
தொடர்கள்
Published:Updated:

அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!

அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!

இயற்கையை நேசிக்கும் இளைஞர்மகசூல் கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

“எங்க தாத்தா, அப்பா யாருமே விவசாயி கிடையாது. நான் தனியார் இன்ஜினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா வேலை பார்த்துட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிச்ச பிறகு, விவசாயத்து மேல ஏற்பட்ட ஈர்ப்புனால வேலையை விட்டுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன்” என்று மிகுந்த சந்தோஷத்துடன் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ.

ஒரு பகல்பொழுதில், பதினோறாம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக, இளங்கோவைச் சந்திக்கச் சென்றோம். தான் வளர்க்கும் உம்பளச்சேரி மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த இளங்கோ, நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார்.

அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் பசுமை விகடன் எனக்கு அறிமுகம். அதுலதான் இயற்கை விவசாயத்துல கிடைக்கிற நன்மைகள் பத்தியும் ரசாயனத்தால வர்ற தீமைகள் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம், ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கைக்கு இயற்கை விவசாயம் அவசியம்னு என் மனசுல பதிஞ்சு போச்சு. அப்படியே இயற்கை விவசாய ஆசை அதிகமானதால, போன வருஷம் வேலையை விட்டுட்டு 2 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடிச்சு விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்” என்று விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன இளங்கோ தொடர்ந்தார்.

“நண்பர்கள்கிட்ட இருந்து பழைய பசுமை விகடன் புத்தகங்களையெல்லாம் தேடிப்பிடிச்சு படிச்சேன். அதுல இருந்து நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகள் முக்கியங்கிறதால, ரெண்டு உம்பளச்சேரி ரகப் பசுக்களைக் கன்னுகளோட சேர்த்து வாங்கினேன். எனக்கு ஒரு மாடே போதுமானதுதான். ஆனாலும் நாட்டு மாடுகளோட மகத்துவத்தை மத்தவங்களுக்கு உணர்த்தணுங்கிறதுக்காகத்தான் ரெண்டு மாடுகளை வாங்கினேன். தேவைப்படுற விவசாயிகளுக்குச் சாணம், சிறுநீரை இலவசமாகக் கொடுத்துட்டு இருக்கேன்.

நாட்டுமாடுகள் மேல எனக்கு பிரியம் ஏற்பட, பசுமை விகடன்தான் மூலக்காரணம். இப்போ, ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்க்குது. இந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதாரமா இருக்கும் நாட்டு மாடுகள் வளர்ப்பை பத்தி 10 வருஷமாபசுமை விகடன் சொல்லிக்கிட்டிருக்கு. சுருக்கமா சொன்னா, பசுமை விகடன் நம்மாழ்வார் ஐயா, சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் போட்ட விதை, இப்போது எங்களமாதிரி இளைஞர்கள் மூலமா பலன்கொடுக்க தொடங்கியிருக்கு” என்ற இளங்கோ மேலும் தொடர்ந்தார்.

அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!

“நம்ம நாட்டு மாடுகளுக்கு அதிகம் செலவு கிடையாது. தினமும் 3 மணிநேரம் மேய்ச்சலுக்கு விட்டுடுவேன். ஒரு மாட்டுக்கு தினமும் 1 கிலோ தவிடு, அரைக்கிலோ கடலைப்பிண்ணாக்கு கலந்து கொடுக்கிறேன். உலர் தீவனமா 2 கிலோ வைக்கோல் கொடுக்குறேன். ரெண்டு மாடுகள், ரெண்டு கன்னுகுட்டிகளுக்குச் சேர்த்தே, ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் செலவு. தினமும் கிடைக்கிற ரெண்டு லிட்டர் பாலை, லிட்டர் 50 ரூபாய்னு விற்பனை செஞ்சு, அதுல கிடைக்கிற வருமானத்தை வெச்சே மாடுகளுக்கான செலவை ஈடுகட்டிடுறேன். சாணமும், மூத்திரமும் இலவசமாகக் கிடைச்சுடுது. ரெண்டு காளை கன்னுக்குட்டிகளையும் நல்லா வளர்த்து பொலிகாளைகளாக்கி, இயற்கை முறையில் உம்பளச்சேரி மாடுகளைப் பெருக்கணும்னு ஆசைப்படுறேன்” என்ற இளங்கோ நிலக்கடலை சாகுபடி அனுபவங்களைச் சொன்னார்.

“எங்க பகுதியில முன்னெல்லாம் ஆடிப்பட்டத்துல அதிகளவுல நிலக்கடலை சாகுபடி நடக்கும். ஆனா, இப்போ எல்லாரும் நெல்லுக்கு மாறிட்டாங்க. அதனால, பழைய பழக்கத்தை மீட்டெடுக்கணுங்கிற நோக்கத்துல நிலக்கடலை சாகுபடி செய்யலாம்னு முடிவு பண்ணி, ஒன்றரை ஏக்கர்ல நிலக்கடலை விதைச்சேன். இது களியும் மணலும் கலந்த இருமண் பாங்கான பூமி. இதுல நிலக்கடலை நல்லாவே விளையும்.

அன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி!

வேர் சம்பந்தமான நோய்களைத் தடுக்க அடியுரத்தோட சேர்த்து வேப்பம்பிண்ணாக்கு போடணும். ஆனா, வேப்பம் பிண்ணாக்கைவிட இலுப்பங்கொட்டையோட விலை குறைவுங்கிறதால, அதைத்தான் நான் பயன்படுத்தினேன். இதுலயும் அதிக கசப்புத்தன்மை இருக்குது. அதனால வேர் சம்பந்தமான பிரச்னைகள் கட்டுப்படுது. இலுப்பங்கொட்டையை வாங்கி ரோட்டுல கொட்டி வெச்சுட்டேன். வண்டி, வாகனங்கள் ஏறி இறங்குனதுல, அது நல்லா தூளாகிடுச்சு. அதைத்தான் பயன்படுத்துனேன்.

அதேபோல மாட்டு ஏர் ஓட்டி விதைச்சதால, அரையடி ஆழத்துல விதைக்க முடிஞ்சுது. அதனால் வேர் நல்லா பிடிச்சு வளந்தது. உடைக்காத கடலையை வாங்கி அதை உடைச்சு, பருப்பு எடுத்து விதைச்சதால முளைப்புத்திறன் நல்லா இருந்துச்சு. இந்த மாதிரியான எல்லாத் தகவல்களுமே பசுமை விகடன் மூலமா கிடைச்ச நண்பர்கள் சொன்னதுதான்” என்ற இளங்கோ நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“ஜீவாமிர்தம், புளிச்ச மோர், மூலிகைப் பூச்சிவிரட்டினு பயன்படுத்துனதுல ஒன்றரை ஏக்கர் நிலத்துல இருந்து 30 மூட்டை நிலக்கடலை மகசூலாச்சு. ஒரு மூட்டை 3 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல எல்லாச் செலவும் போக 60 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைச்சது. அதனால போன மார்கழிப் பட்டத்திலேயும் ஒரு ஏக்கர் நிலத்துல கடலை விதைச்சிருக்கேன். அது இப்போதான் முளைச்சு வந்துருக்கு. இதுலயும் நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அடுத்ததா மரச்செக்கு அமைச்சு இயற்கை முறையில் எண்ணெய் ஆட்டலாம்னு இருக்கேன்” என்றார் நம்பிக்கையுடன்.


தொடர்புக்கு,
இளங்கோ,
செல்போன்: 95002 68744

36 கிலோ விதை... 7 அடி இடைவெளி!

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விதம் குறித்து இளங்கோ சொன்ன தகவல்கள் இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36 கிலோ விதை தேவைப்படும். விதைத்த 7-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 12 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 25 மற்றும் 50-ம் நாட்களில் பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும். 45-ம் நாள் களையெடுத்து செடியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

விதைத்த 55-ம் நாளுக்கு மேல் பூ எடுக்கும். இத்தருணத்தில் 6 லிட்டர் புளித்த மோர், 50 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். பூக்கள் உதிராமல் இருக்கவும், காய்கள் திரட்சியாக இருக்கவும் இது உதவும். நிலக்கடலைக்கு அதிகத் தண்ணீர் தேவையில்லை. செடிகள் வாடாத அளவுக்குப் பாசனம் செய்தால் போதுமானது. 102-ம் நாளுக்கு மேல் கடலை முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்