மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

பலவித நோய்களைக் குணமாக்கும் நோனி! மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நோனி எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

நோனி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் கூறப்படாத ஒரு தாவரம். 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இது இந்தியாவுக்குள் வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, மருத்துவ வணிகத்துக்குள் வந்தது. பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் நோனி குறித்து பதிவான தகவல்களை இங்கே எழுதியுள்ளேன். அதனால், எள்ளளவும் ஐயமின்றி இதனைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

20-ம் நூற்றாண்டில் மருந்தறிவியல் துறை மற்றும் இயற்கை மருத்துவச்சந்தையில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட தாவரம் நோனி. நியூகினியா, ஃப்யூஜி முதலான பாலினேசியன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட நோனி, ஹவாய் தீவுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம், கடல் சீற்றம், எரிமலைச் சீற்றம் ஆகியவை, அன்றாடம் நடக்கக்கூடியவை. இத்தீவுகளில் வசிக்கும் மக்கள் அடிக்கடி ஏற்படும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காகத் தங்களது உடைமைகள், படகுகள் ஆகியவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பர். அப்படி அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளில் 27 தாவரங்களும் உண்டு. அவற்றை ‘கேனோ ப்ளான்ட்ஸ்’ என்பர். அவற்றில் ஒன்றுதான் நோனி.

கடற்கரையிலும் எரிமலைக் குழம்பு மணலிலும் தன்னிச்சையாக வளர்ந்து பூத்துக் காய்த்துக் குலுங்கி, பார்ப்போர் கவனத்தை ஈர்த்துள்ளது. அதைத் தொடர்ந்துதான் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது, நோனி. இத்தாவரம் குறித்து 6 ஆயிரத்து 600 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அனைத்து மருத்துவச் சிகிச்சைகளுக்கும் நோனி பயன்படுகிறது. இதனுடைய இலை, வேர், பட்டை ஆகியவையும் மருந்தாகப் பயன்பட்டாலும் பழமும், விதையும்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இது 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம் என்றாலும் இதை வளர்ப்பவர்கள், 10 அடிக்கு மேல் வளர விடுவதில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ மாமேதை த.வி. சாம்பசிவம் பிள்ளை, தனது மருத்துவப் பேரகராதியில் நோனியைப் பற்றிப் பெரு நுணா, வெள்ளை நுணா, சேயல் நுணா, வெண்ணுணா என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். நோனி என்கிற சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாகிய நுணா என்பதுதான் வேர்ச்சொல். தமிழகமெங்கும் தரிசுக் காடுகளிலும் பரவி வளரும் நுணாவும், நோனியும் வேறு வேறு வகை. ஆனால், இவையிரண்டும் ‘மொரின்டா’ எனப்படும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தவை.

நுணா, நோனி ஆகியவற்றின் இலை, பூங்கொத்து, காய், கனி ஆகியவை அனைத்தும் ஒரே அமைப்பில் இருக்கும். ஆனால், நோனி அளவில் பெரிதாக இருக்கும். நுணாவைச் சங்க இலக்கியங்களில் ‘தணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். கபிலரது குறிஞ்சிப்பாட்டில் ‘பல் பூந்தணக்கம்’ எனும் சொற்றொடர், நுணாவைக் குறிக்கிறது. எனவே, நுணா தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் தாவரம் என்பது உறுதியாகிறது. இதனுடைய கட்டையில் இருந்து மஞ்சள் நிறச் சாயம் பெறப்படுவதால் இதை ‘மஞ்சணத்தி’ என்றும் அழைக்கிறார்கள்.
 
நடவு செய்த ஒரே ஆண்டில் பூத்துக் காய்த்துப் பலன் தரும் மரமான நோனியின் பழச்சதை மற்றும் விதைப் பொடியில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மருந்துப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து உண்டால் பயனில்லை. அப்படியே முழுப் பழச்சாறாக அருந்தினால்தான் நன்மை கிடைக்கிறது. இதைத்தான் ‘மருந்துக் கூட்டுச் சக்தி’ (ஆங்கிலத்தில் ‘சினர்ஜி’) என்று சொல்வார்கள்.

எந்த நோயாக இருந்தாலும், அந்த நோய்க்குரிய சிகிச்சையுடன் சேர்த்து நோனி பழச்சாற்றை எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகிறது. நோனிப் பழச்சாற்றைக் குடிக்கும்போது, அப்படியே விழுங்கிவிடாமல் சிறிதுநேரம் வாயில் அடக்கி வைத்திருந்து, பிறகு விழுங்குவதால் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில், நோனிப்பழச் சாற்றுடன் உமிழ்நீர் சேரும்போது உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன.

நோயற்ற நிலையில் காலை, மாலை 1 தேக்கரண்டி (5 மில்லி) தனிப் பழச்சாற்றுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் சேர்த்துக் குடிக்கலாம். மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் முதலான அனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி நோனிப்பழச்சாறு எடுத்துக்கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

சிறுநீர்ப்பைத் தொற்று, எலும்பு முறிவு, மூக்கடைப்பு, தீவிரக் காய்ச்சல், பல்வலி, இருமல், புற்றுநோய், ஆழமான காயங்கள் உள்ளிட்ட திடீர் மற்றும் தீவிர நோய் நிலைகளில் உள்ளவர்கள், தினமும் 6 முதல் 8 தேக்கரண்டி பழச்சாற்றினை இரண்டு, மூன்று வேளைகளாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உயிருக்கு ஆபத்து நேரிடும் நோயுற்ற நிலை மற்றும் விபத்தினால் உண்டாகும் அதி தீவிர நிலைகளில், தகுந்த மருத்துவச் சிகிச்சைகளோடு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 15 மில்லி நோனிப்பழச்சாறு உட்கொண்டு வந்தால் மன அமைதி உண்டாகி வலிகள் குறையும். அழிவு நிலையில் உள்ள செல்கள் விரைவில் புத்துயிர் பெறும். நோனிப் பழச்சாறு உடனடியாகப் புத்துணர்வு கொடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள், இதை அருந்தினால் குழந்தைக்கு வரும் நோய்கள் குணமாகும். உடல் பலவீனமானவர்கள், நோனிப் பழச்சாற்றை நீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். நோனிப் பழச்சாற்றைப் பூண்டுடன் எடுத்துக்கொண்டால், கொழுப்புச்சத்து குறையும். நோனிப் பழச்சாற்றுடன் வைட்டமின் டி சேர்ந்த கலவை நீரிழிவு, எலும்பு தேய்மானம், நரம்பு வலிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.

நோனிப் பழச்சாறு, புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவதோடு, அப்பழக்கத்தைக் கைவிடுபவர்களின் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

8 வயதுக்கு மேலானவர்களுக்குத்தான், நோனிப் பழச்சாறு கொடுக்க வேண்டும். ஆனால், சில நோய் நிலைகளில் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கால் தேக்கரண்டி; மூன்று வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவில் கொடுக்கலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோனிப் பழச்சாறு வழங்கும்போது, மலம் மிகவும் இளகியே வெளியேறும். சாதாரண நிலையில் பெரியவர்கள் நோனிச்சாறு குடிக்கும்போது மலம் இளகி வெளியேறுவது குடல் தூய்மையாவதன் அறிகுறியாகும். தொடர்ந்து மலம் இளகி வெளியேறினால், உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும். அடுத்த இதழில் ஆமணக்கு குறித்து பார்ப்போம்.

-வளரும்

நுணாவின் பயன்கள்

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

‘மஞ்சணத்தி’ எனப்படும் நமது உள்ளூர் ‘நுணா’வும் அந்நிய நாட்டு நோனிக்கு சற்றும் குறைந்தது அல்ல. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் தரிசாகக் கிடக்கும் கரிசல் மற்றும் செவல் தரைக்காடுகளில் நுணா அதிகமாகக் காணப்படும். முற்காலங்களில் இம்மரத்துப் பட்டைகளில் இருந்து மஞ்சள் நிறச் சாயம் தயாரித்துத் துணிகளுக்குச் சாயத்தை ஏற்றியுள்ளனர். உடம்பில் அடிப்பட்டால் ஏற்படும் ரத்தக்கட்டு, வாதநோய்களால் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க... மஞ்சணத்தி இலைகளை அவித்து ஒத்தடம் கொடுத்து வந்துள்ளனர்.

நம் சித்த மருத்துவத்தில் குழந்தைகள் நோய்களான மாந்தம், கணம் ஆகியவற்றுக்கு மஞ்சணத்தி இலையைச் சாறு எடுத்து குடிநீராகவோ அல்லது தைலமாகவோ காய்ச்சி வழங்கப்பட்டு வந்துள்ளது. குழந்தை நோய்களைப் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் ‘அகத்தியர் பாலவாகடம்’ மற்றும் ‘தன்வந்திரி பாலவாகடம்’ ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் மஞ்சணத்தி அல்லது நுணாவை ‘மாந்தம் தீர்க்கும் மூலிகை’ என்றே கூறியுள்ளன.
நுணா இலைகளைத் துவையல் போல அரைத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தைல பதத்தில் இறக்கி கிடைக்கும் கற்கத்தை (காய்ச்சும்போது அடியில் படியும் வண்டல்) உள்ளுக்குள் சாப்பிட்டும், எண்ணெயை மேலுக்கும் அல்லது வெளியிலும் போட்டு பூசி வர வெண்புள்ளிகள் மறையும். இம்மருந்து ஆரம்ப நிலையிலேயே நல்ல பலனைத் தருகிறது. வெண்புள்ளிகளாய் இருக்கும்போதே இதைப் பயன்படுத்த வேண்டும். பெரிய பெரிய படைகளாக மாறிய பிறகு பயன்படுத்தினால், அதிகப் பலன் கிடைப்பதில்லை.

நோனியைப் போலவே நுணாவும் பல நோய்களைக் குணமாக்கும் என்பதற்குப் பின்வரும் சித்தரின் வரிகளே சான்று.

‘நுணாவின லூறுகாய் நுகரவே தனையெலாங்

கனாடவி போய்விடுங் காயநன்
றாகுமே’ -அதாவது நுணாவினை ஊறுகாய்ச் செய்து கற்பமுறையாகத் தினந்தோறும் உண்டுவர, எல்லா நோய்களும் நீங்கும். உடலும் வலிமையாகும் என்பது பொருள்.

நுணாப்பழங்களை அல்லது செங்காய்களைச் சேகரித்து ஒவ்வொரு பழத்தையும் நான்கு அல்லது எட்டு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெயில் பொரிக்கவும். பிறகு அவற்றை ஆறவிட்டு எண்ணெய்ப் பசையை நீக்கி மல்லிப்பொடி, மிளகுப்பொடி, பெருங்காயம், உளுத்தம்பருப்பு பொடி சேர்த்துத் தாளித்துக் கண்ணாடி பாட்டிலில் பக்குவப்படுத்தினால், நுணா ஊறுகாய் தயார். இதேமுறையில் நோனிப் பழங்களையும் ஊறுகாய்ப் போடலாம்.

நோனிக் காடி

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

நோனிப் பழங்களை ஒரு ஜாடியில் நறுக்கிப்போட்டு இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், சின்ன வெங்காய விழுது, நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஜாடியை காற்றுப் புகாமல் அடைத்து ஒரு வாரம் வைக்க வேண்டும். பிறகு, அதை ஒரு நாள் வெயிலில் வைத்து வடிகட்டினால் காடி கிடைக்கும். இதைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். சாதம், குருமா, குழம்பு, பொரியல் என எந்த வகை உணவானாலும் அதில் 2 தேக்கரண்டி வரை சேர்த்துப் பயன்படுத்தலாம்.

நோனியில் குணமாகும் நோய்கள்

ந்து லிட்டர் குடிநீரில் ஒரு தேக்கரண்டி நோனிப் பழச்சாறு கலந்து வைத்துக்கொண்டு அவ்வப்போது அருந்தலாம். உலர்ந்த நோனிப் பழங்களைத் தேவையான அளவு நீர் சேர்த்து சூரியப் புடம் வைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த நீருடன் எலுமிச்சைச்சாறு அல்லது வேறு பழச்சாறுகள், தேன் சேர்த்து அருந்தலாம்.

நோனி நீரை புண், வெட்டுக்காயங்கள், எலும்பு முறிவு, சுளுக்கு, தோல் நோய்கள், வலி, வீக்கம், கட்டி, முகப்பரு, முகச் சுருக்கம், பூச்சிக் கடி போன்றவற்றுக்கு வெளிப்பிரயோகமாக உபயோகப்படுத்தலாம்.

கல்லீரல், அட்ரினல் சுரப்பிப் பாதிப்பு, விதை வீக்கம், மூட்டுவலி, சுளுக்கு, ஆண்குறி விறைப்புத்தன்மை இன்மை போன்றவற்றுக்கு நோனி பழச்சதையைக்கொண்டு வெளிப் பிரயோகமாகப் பற்றுப்போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
நோனிப் பழச்சாற்றைப் பஞ்சில் தோய்த்து முதுகு தண்டுவடத்தில் 1 மணி நேரம் வைத்து எடுத்தால் முதுகுவலி, தசைப்பிடிப்பு, முதுகுத் தண்டுவட பிரச்னைகள், பலவீனங்கள் குணமாகும்.

ஒரு பங்கு நோனிப் பழச்சாறுடன் 4 பங்கு நீர் கலந்து மூடிய கண்கள்மீது வைத்து அவ்வப்போது அழுத்தி வந்தால் கண்களில் ஏற்படும் ஒவ்வாமை, கட்டி, பார்வைக் கோளாறு, அரிப்பு, கண் சிவத்தல் போன்றவை குணமாகும்.

இதே அளவு நோனிப் பழச்சாற்றை பஞ்சில் தோய்த்து நகத்தின் மீது வைத்து வந்தால், நகத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகும். ‘நோனிப் பழச்சாற்றைச் சுட்ட களிமண் அல்லது சுத்தமான களிமண்ணுடன் சேர்த்து கட்டி, வீக்கம், பீனிசம் போன்றவற்றுக்குப் பற்றுப் போடலாம்.

ஒரு தேக்கரண்டி நோனிப் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு அல்லது சோள மாவு சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசினால், முகம் பொலிவாகும்.

நோனிப் பழச்சாறுடன் சமபங்கு தண்ணீர் சேர்த்து மூக்கில்விட தும்மல், அரிப்பு, பீனிசம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாறுடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்தால், தொண்டையில் ஏற்படும் தொற்று, கரகரப்பு, வறட்சி, சதை வளர்ச்சி; பல்வலி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை குணமாகும். இச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஈறில் வைத்தால் ஈறு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

ஒரு வாளி வெந்நீரில் 15 மில்லி பழச்சாற்றைக் கலந்து இடுப்புக் குளியல் செய்தால் மூலம், பௌத்திரம், ஆசனவாய், ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்று, புண், கட்டி ஆகியன குணமாகும்.

நோனிப் பழச்சாறு தயாரிக்கும் முறை

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

நோனிக்காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த நிலையில் வெள்ளை நிறமாக மாறும். இந்நிலையிலுள்ள காய்களைப் பறித்து, நன்றாக நீரில் கழுவிச் சுத்தம் செய்துகொள்ளவும். பிறகு அவற்றை உலர்த்திப் பெரிய தட்டில் வைத்தால், ஓரிரு நாட்களில் அவை நன்கு பழுத்து மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும். இப்பழங்களை ஒரு துளையிட்ட பாத்திரத்தில் வைத்து கீழே ஒரு பாத்திரத்தை வைத்து இறுக மூடிவிட்டால் (காபி ஃபில்டர் போன்ற பாத்திரத்தில்) ஒரு வாரத்துக்குள் சாறு சொட்டுச் சொட்டாக வடிந்து, கீழுள்ள பாத்திரத்தில் சேர்ந்துவிடும். ஆறு கிலோ பழத்தில் இருந்து ஒரு லிட்டர் சாறு கிடைக்கும்.

ஒரு மண்பானையில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்தத் தண்ணீருக்குள் இருக்குமாறு சாறுள்ள பாத்திரத்தை வைத்து சூடாக்க வேண்டும். மண்பானையில் உள்ள நீர் முழுவதும் ஆவியான பிறகு, சாறு உள்ள பாத்திரத்தை குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்தில் வைக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு, இச்சாற்றை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, இறுக மூடிவைக்க வேண்டும். 

சாகுபடி செய்வது எப்படி?

நோனியை விதை மற்றும் விண்பதியன் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பெரிய பழங்கள் கொடுக்கும் மரங்களிலிருந்து பழங்களைச் சேகரித்து விதைகளைப் பிரித்து, அவற்றை ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும். இப்படி வளரும் நாற்றுகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் நட்டு, 2 மாதங்கள் வரை வளர்த்து, பிறகுதான் நிலத்தில் நடவு செய்ய வேண்டும். 2 சதுரஅடியில் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழி ஆறிய பிறகு செம்மண், மணல், தொழுவுரம் ஆகியவற்றைச் சமஅளவில் கலந்து குழிக்குள் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதிகமான கன்றுகள் நடவு செய்யும்போது 10 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

ஹவாய் நாட்டில் இருந்து வந்த மரங்களில் பெரிய சதைப்பற்றுள்ள பழங்கள் கிடைக்கின்றன. சந்தை வாய்ப்பை உறுதி செய்துகொண்ட பிறகு, அதிக அளவில் நோனி மரங்களை வளர்ப்பது நல்லது. வீட்டுக்கு 2 அல்லது 3 நோனி மரங்கள் இருந்தால், வீட்டில் உள்ள அனைவரும் ஆண்டு முழுவதும் நோனிப் பழச்சாறு குடித்து நோயில்லாமல் வாழ முடியும்.   

நோனி பழச்சாற்றை உட்கொள்ளும் அளவு

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

ரு நாளுக்கான அளவு

நோயற்ற நிலை - 30 மில்லி முதல் 60 மில்லி

நோயுற்ற நிலை - 180 மில்லி

ஒரு வேளைக்கான அளவு

பழப்பொடி (தனி) - 1 கிராம்

பழப்பொடி (விதையுடன்) - 1 கிராம்

15 மில்லி முதல் 30 மில்லியளவு நோனிப் பழச்சாற்றை, 360 மில்லி பிற பழச்சாறுகளுடன் சேர்த்து அருந்தலாம். அல்லது சிறிது தேன் சேர்த்து அருந்தலாம். அதேபோல பழப்பொடியையும் சூப், பழச்சாறுகள் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். ஃப்ரூட் சாலட் மீது தூவியும் சாப்பிடலாம். கருப்பட்டி காபி தயாரித்தும் குடிக்கலாம்.

நோனித் தாத்தா

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9

கோவில்பட்டியை அடுத்த காளாம்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். 84 வயதான இவர், இயற்கை முறையில் 100 நோனி மரங்களை வளர்த்து வருகிறார். அவற்றில் கிடைக்கும் பழங்கள் மூலம் நோனிப் பழச்சாறு தயாரித்து குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் நல்ல திரட்சியான நோனிப் பழங்கள் காய்க்கின்றன.