மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!

மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை...  விவசாயிகள் மகிழ்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!

ஓவியம்: ஹரன்

ரப்பில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மா அருகில் அமர்ந்திருந்தார். ஆடு, மாடுகளுக்குப் பசுந்தீவனம் அறுத்துக்கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் அவற்றைக் கொட்டகைக்குள் போட்டு விட்டு வந்து அவர்களுடன் இணைந்துகொள்ள, அன்றைய மாநாடு துவங்கியது.

‘‘பேப்பர்ல என்னங்கய்யா விஷேச செய்தி போட்டிருக்காங்க?’’ என்று கேட்டார், காய்கறி கண்ணம்மா.

‘‘ஜல்லிக்கட்டு வேணும்னு மாணவர்கள், இளைஞர்கள், பெண்களெல்லாம் அறப்போராட்டம் பண்றதுதான் நாலஞ்சு நாளா சூடான செய்தி. எல்லா ஊர்லயும் எந்தத் தலைமையும் இல்லாம, ஒருங்கிணைப்பாளர் இல்லாம அவங்களா திரண்டது, ஆச்சர்யமா இருக்கு. நான் காலேஜ்ல படிச்ச காலத்துல இப்படித்தான் மாணவர்கள் ஒண்ணு சேர்ந்து இந்தி எதிர்ப்புக்காகப் போராடினோம். அதைக்கூட ஒருங்கிணைக்க அரசியல் கட்சி ஆட்கள் இருந்தாங்க. அப்போகூட கொஞ்சம் வன்முறை, துப்பாக்கிச் சூடு எல்லாம் நடந்துச்சு. ஆனா, இப்போ, ஒரு சின்ன வன்முறைகூட இல்லாம மாணவர்கள் அறப்போராட்டம் நடத்துறது, உலகத்தையே திரும்பிப்பார்க்க வெச்சுடுச்சு. குறிப்பா அரசியல்வாதிகள், நடிகர்கள்னு யாரையும் போராட்டக் களத்துக்குள்ள விடாததுதான் முக்கியமான விஷயம். இதுபத்தி பசுமை விகடன் ஆசிரியர் குழுவுக்கிட்ட தனிச் செய்தியா பதிவு செய்யச் சொல்லியிருக்கேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தோட, அந்நிய குளிர்பானங்களைக் குடிக்கக்கூடாதுங்கிற விஷயத்தையும் மாணவர்கள் கையிலெடுத்தது ரொம்பச் சந்தோஷமா இருக்கு’’ என்று புல்லரிக்கச் சொன்னார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை...  விவசாயிகள் மகிழ்ச்சி!

அதைத் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, ‘‘தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையானு சொல்லிக்கிற மாதிரி, இன்னொரு விஷயமும் நடந்திருக்கு. ஜல்லிக்கட்டு தடையை நீக்கணும்னு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பா, உண்ணாவிரதம் இருந்தாங்க. வழக்கமா திரைப்பட நடிகர்கள் ஏதாவது துக்கக் காரியத்துக்கு வந்தாக்கூட அலப்பறையாத்தான் வருவாங்க. மைக் பிடிச்சு பேட்டிக் கொடுப்பாங்க. அதையும் நம்ம டி.விக்காரங்க நேரலைப் பண்ணுவாங்க.

இந்த முறை, ‘திரைப்பட நடிகர்களோட  உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பு பண்ணக்கூடாது’னு மீடியாக்களுக்கு மாணவர்கள் கோரிக்கை வெச்சாங்க. அதனால நடிகர் சங்கத்துக்காரங்களே முந்திக்கிட்டு, ‘எங்க போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வேணாம்’னு சொல்லிட்டாங்க. இப்போ போராட்டம் பண்ற பசங்கதான, நடிகர்களை வாழ வெச்சுட்டு இருக்காங்க. அதனால, கலக்கத்துல இருக்காங்க சினிமாக்காரங்க. அடுத்து பீதியில் இருக்குறது, பன்னாட்டுக் குளிர்பான கம்பெனிகள். அதுக்கும் தாராபுரம், திருநெல்வேலினு சில ஊர்கள்ல அச்சாரம் போட்டாச்சு. கடைக்காரங்களே அந்நிய குளிர்பானங்களை இனிமே விற்பனை செய்யமாட்டோம்னு அறிவிச்சுட்டாங்க. இந்த எழுச்சி அப்படியே எல்லா விஷயத்துக்காகவும் நீடிச்சுச்சுனா பெரிய மாற்றம் வர வாய்ப்பிருக்கு’’ என்றார்.

‘‘ஏற்கெனவே மாணவர்கள் போராட்டத்துல ஆட்டம் கண்டிருக்குற குளிர்பான கம்பெனிகளுக்கு மதுரை உயர் நீதிமன்றமும் கிலி கொடுத்திருக்கு’’ என்று பீடிகை போட்ட வாத்தியார் தொடர்ந்தார்.

‘‘திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் அமைஞ்சு இருக்குற சிப்காட் வளாகத்துல ‘கோகோ கோலா’ கம்பெனிக்காக ‘சவுத் இந்தியா பாட்லிங் கம்பெனி’ங்கிற நிறுவனமும், ‘பெப்சி’ கம்பெனிக்காக ‘பிரதிஷ்டா பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ங்கிற நிறுவனமும் இயங்கிட்டு இருக்கு.

இந்த ரெண்டு நிறுவனங்களுக்கும் 99 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கு தமிழக அரசு. அதோட, இந்த ரெண்டு நிறுவனங்களுக்கும் தாமிரபரணி ஆத்து தண்ணியை... 1,000 லிட்டர் 37 ரூபாய் 50 காசுனு அரசாங்கமே விற்பனை செய்யுது. இப்படி இந்த ரெண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படுது. ஆனா, அந்த நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்னும், அரை லிட்டர் குளிர்பானத்தை 30 ரூபாய்னும் விற்பனை செய்யுது.

இந்த நிலைமையில், திருநெல்வேலி நுகர்வோர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பிரபாகர், ‘தாமிரபரணி ஆறுதான் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் ஆதாரம். அந்த ஆத்து தண்ணியைக் குளிர்பான நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யுது. இதனால குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பிருக்கு. அதனால, அந்த நிறுவனங்கள் ஆத்துல இருந்து தண்ணி எடுக்கத் தடை விதிக்கணும்’னு போன நவம்பர் மாசம், மதுரை உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்குப் போட்டிருந்தார்.

உடனே உயர் நீதிமன்றம், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதிச்சுடுச்சு. அந்த வழக்கு இப்போ விசாரணைக்கு வந்தப்போ, ரெண்டு குளிர்பான நிறுவனங்கள் சார்பா ‘ஒப்பந்த அடிப்படையில்தான் அரசாங்கத்துக்கிட்ட இருந்து உபரி நீரை வாங்குறோம். இதுல விதி மீறல் இல்லை. இடைக்காலத் தடையால், தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்படுது’னு சொன்னாங்க. ஆனா, அதை ஏத்துக்காத நீதிபதிகள் இடைக்காலத்தடையை நீட்டிச்சு பிப்ரவரி 8-ம் தேதிக்கு இறுதி விசாரணையை ஒத்தி வெச்சுட்டாங்க’’ என்றார்.

‘‘நல்ல விஷயம்தானே’’ என்று சொன்ன காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கொரு ஆயக்குடி கொய்யாப்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

‘‘பருவமழை சரியா கிடைக்காததால தமிழ்நாடு, கேரளா மாநிலங்களோட பல பகுதிகள்ல தென்னை மரங்கள் கருகிப்போச்சு. அதனால, தேங்காய், கொப்பரை உற்பத்தி கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. அதே நேரத்துல கொப்பரைக்குத் தேவையும் அதிகரிச்சுட்டே இருக்குறதால, கொப்பரை விலை உயர்ந்துட்டே இருக்கு. ஆனா, கொப்பரை உற்பத்தி பண்ண வழியில்லாம இருக்காங்க, தென்னை விவசாயிகள். போன வருஷம் மே மாசம்லாம் ஒரு கிலோ கொப்பரைக்கு 50 ரூபாய்கூட விலை கிடைக்கலை. கொஞ்சம், கொஞ்சமா விலை அதிகரிச்சு இப்போ 80 ரூபாய் அளவுக்கு வந்துடுச்சு.

மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை...  விவசாயிகள் மகிழ்ச்சி!

விலையேற்றத்துக்கு வரத்து குறைஞ்சதும் காரணமா இருந்தாலும், போன வருஷத்தைவிட இந்த வருஷம் தேவையும் அதிகமா இருக்கு. போன வருஷம் ரொம்பவும் விலை குறைவா இருந்ததால, நிறைய விவசாயிகள் விற்பனை செய்யாம இருப்பு வெச்சுட்டாங்க. மார்க்கெட்டுக்கு வந்த கொப்பரைகளைக் குறைஞ்ச விலைக்கு வாங்கி, வியாபாரிகளும் எண்ணெய் ஆலைகளும் இருப்பு வெச்சுட்டாங்க.

இப்போ, வியாபாரிங்ககிட்டயும், ஆலைகள்கிட்டயும் கொப்பரை இருப்பு குறைஞ்சுட்டதால தேவை அதிகமாயிடுச்சு. போன வாரம், பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல முதல் தர கொப்பரை, அதிகபட்சமா கிலோ 78 ரூபாய்னு ஏலம் போயிருக்கு. பரமத்தி வேலூர் பக்கத்துல இருக்குற வெங்கமேடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல... முதல் தர கொப்பரை அதிகபட்சமா கிலோ 80 ரூபாய் 39 காசுனு ஏலம் போயிருக்கு. அதனால இருப்பு வெச்சுருந்த விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைச்சுருக்கு.

வர்ற பிப்ரவரி மாசத்துக்குப் பிறகு கிலோ 100 ரூபாய் அளவுக்குப் போயிடும்னு வியாபாரிகள் கணிச்சிருக்காங்களாம்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சில மழைத்தூறல்கள் விழ, மூவரும் அருகில் உள்ள கொட்டகைக்குள் சென்றனர். அத்தோடு மாநாடும் முடிவுக்கு வந்தது.