
தொழுதுண்டு தொடர்வோம்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்... உற்சாகம் மற்றும் நம்பிக்கையைக் கூட்டுவதாக இருக்கும் இத்தருணத்தில், உங்கள் பசுமை விகடன் இதழ், 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்றபடி விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்ட பசுமை விகடன், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் கண்கூடாகவே தெரிகின்றன.
பசுமை விகடனில் வெளிவந்த தகவல்களைப் பயன்படுத்தி வெற்றிநடைபோடும் விவசாயிகள், ‘படிச்சோம், விதைச்சோம்’ என்ற தலைப்பில் தாங்கள் பெற்ற அனுபவங்களை வழக்கம்போல பகிர்ந்துள்ளனர்.
புதுச்சேரி கிருஷ்ணமூர்த்தி, பசுமை விகடன் நடத்திய களப்பயிற்சியில் கலந்துகொண்டதன் மூலம், இயற்கை விவசாயத்துக்காகப் பரிசுகளைப் பெற்று முன்னோடியாக உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் இளங்கோ, கல்லூரி விரிவுரையாளர் பணியைத் துறந்துவிட்டு, நாட்டுமாடுகளுடன் சேர்ந்து முழுநேர இயற்கை விவசாயியாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
‘இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மாடுகள் சம்பந்தமான விழிப்பு உணர்வு, பசுமை விகடன் மூலமே எனக்குக் கிடைத்தது. நாட்டு மாடுகள் குறித்து நம்மாழ்வார் ஐயா, சுபாஷ் பாலேக்கர் போன்றோருடன் இணைந்து பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கம்தான், இன்று இயற்கை விவசாயம், நாட்டுமாடுகள், ஜல்லிக்கட்டு எல்லாம் அனைத்து மக்களிடமும் பேசுபொருளாக இருப்பதற்கு அடிப்படை’ எனப் பெருமையோடு சொல்லும் இளங்கோ, நாட்டு மாடுகள் வளர்ப்பை பிற விவசாயிகளிடம் பரப்புவதைக் கடமையாகவே கொண்டிருப்பவர்.
இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள், நாட்டு விதைகள், சிறுதானியம்... எனப் பாரம்பர்யத்தைச் சுமக்கும் இதுபோன்ற விவசாயிகளைத் தொழுதுண்டு பின் தொடர்வோம்!
-ஆசிரியர்