மகசூல்
தொடர்கள்
Published:Updated:

கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

பாலில் ரூ300... பால்கோவாவில் ரூ900 லாபம்மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

ஞ்சில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில், இயற்கை விளைபொருட்கள், மதிப்புக்கூட்டிய பொருட்கள் என இயற்கைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால், சூழல் மேல் அக்கறை கொண்ட பல இளைஞர்கள், யுவதிகள் தங்கள் வேலைகளைத் துறந்து இயற்கை வேளாண்மை, இயற்கை அங்காடி, மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைமகள்.

சென்னை, வேளச்சேரியில் இயற்கை அங்காடி நடத்தி வருகிறார் கலைமகள். அதோடு, சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், கன்னிவாடியை அடுத்துள்ள கருப்பன்வலசு கிராமத்தில் தனது தம்பி ராமதுரை உதவியுடன் பாரம்பர்ய இனிப்பு பொருளான கருப்பட்டி பால்கோவாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

நகரத்திலும் தொடர்ந்த விவசாயப் பந்தம்

சென்னைக்கும் திருப்பூருக்கும் பயணத்திலேயே இருக்கும் கலைமகள், அவரது கிராமத்துக்கு வந்திருந்தபோது சந்தித்தோம். “நான் பொறந்து வளர்ந்த கிராமம் இது. எங்களுக்குச் சொந்தமா 6 ஏக்கர் நெலம் இருக்கு. 13 வருஷத்துக்கு முன்னாடி அப்பா தவறிட்டார். தம்பி ராமதுரைதான் விவசாயத்தைப் பாத்துக்கிறார். நான் படிச்சு முடிச்சதும் ஐ.டி கம்பெனியில வேலை கிடைச்சு சென்னைக்குப் போயிட்டேன். எனக்கு எப்பவும் விவசாயத்துல ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால, விவசாயம் சம்பந்தமான வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் குரூப்ல எல்லாம் ஆர்வமா இருப்பேன். ‘பசுமை விகடன்’ மாதிரியான விவசாயப் பத்திரிகைகளையும் படிப்பேன். அந்த வகையிலதான், மாறுபட்ட உணவுப்பழக்கத்தால வர்ற நோய்கள் குறித்துத் தெரிஞ்சுகிட்டேன்.

எனக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ரொம்ப நேரம் வேலை செஞ்சதால, உடம்புல சில பிரச்னைகள் வந்துச்சு. அப்போ நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை வாங்கிச் சாப்பிடுனு சொன்னாங்க. அதனால தேடிப்பிடிச்சு இயற்கை காய்கறிகள், கீரைகளை வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சேன். அதுல கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சது” என்ற கலைமகள் தொடர்ந்தார்.

கைவிட்ட பால் பண்ணை... நம்பிக்கை கொடுத்த பசுமை விகடன்

“ஒருமுறை ஊருக்கு வந்திருந்தப்போ விவசாயம் பத்தி தம்பிக்கிட்ட பேசிட்டிருந்தேன். அப்போ, ‘பாலுக்குச் சரியான விலை கிடைக்கிறதில்லை. அதனால கறவை மாடுகளை எல்லாம் வித்துடலாம்’னு சொன்னார். அப்போதான் எனக்கு மதிப்புக்கூட்டல் பத்தி யோசனை வந்தது. ‘ஒரு விவசாயி, தான் உற்பத்தி செய்யும் விளைபொருளில், ஒரு பகுதியை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்தால் கட்டுபடியாகிற விலை பெறமுடியும்’னு பசுமை விகடன்ல வெளியான ‘மதிப்புக்கூட்டும் மந்திரம்’ தொடர்ல படிச்சிருக்கேன். அதைத் தம்பிக்கிட்ட சொல்லி, ‘பால் விலை கட்டுபடியாகலைனு, அதை கைவிட வேணாம். மாத்தி யோசிப்போம். அடுத்த முறை ஊர் வரும்போது இதற்கான மாற்று வழி கண்டுபிடிச்சிட்டு வர்றேன்’னு நம்பிக்கை கொடுத்தேன்.

கருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

அந்தச் சமயத்துல சென்னை, காட்டுப்பாக்கம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல ஒரு வேளாண்மை கண்காட்சி நடந்தது. அங்க பால் வளத்துறை சார்பில் அமைச்சிருந்த அரங்கில் பால்ல இருந்து தயாரிக்கப்படுற பொருட்களைக் காட்சிக்கு வெச்சிருந்தாங்க. அதுல பால்கோவாவும் இருந்துச்சு. செலவில்லாமல் தயாரிக்கிற பொருளா பால்கோவா இருந்துச்சு. அந்த அரங்கிலேயே பால்கோவா தயாரிப்புத் தொழில்நுட்ப கையேடும் கொடுத்தாங்க. அப்புறம் ஊருக்கு வந்து பால்கோவா தயாரிப்பு பத்தி தம்பிக்கிட்ட பேசினேன். சந்தோஷமா அதைச் செய்யச் சம்மதிச்சாரு. என்னதான் ஏட்டுக் கல்வி இருந்தாலும் அனுபவம் என்பது ரொம்ப முக்கியம்னு பட்டுச்சு.
 
சோதனைக்கு 300 லிட்டர் பால்

இனிப்புகள் தயாரிக்கற கடையில பால்கோவா தயாரிக்கிற விதத்தையும் தம்பி கத்துக்கிட்டார். அடுத்து இயற்கை முறையிலதான் பால்கோவா தயார் செய்யணுங்கிறதுல, நாங்க தீர்க்கமா இருந்ததால, பால்கோவாவுல அஸ்கா (சீனி) சேர்க்கக்கூடாதுனு முடிவு செஞ்சோம். கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்னு முடிவு செஞ்சோம். அடுத்து சோதனை அடிப்படையில நாட்டுச் சர்க்கரை போட்டு பால் கோவா கிண்டினோம். அது கொஞ்சம் உப்பு சுவையா இருந்தது.
நாட்டுச் சர்க்கரை  கெடாமல் இருக்குறதுக்காகச் சேர்க்கிற ரசாயனங்களால தான் உப்பு சுவை வருதுனு தெரிஞ்சுக்கிட்டு, அதைத் தவிர்த்துட்டு ரசாயனக் கலப்பில்லாத பனங்கருப்பட்டி சேர்த்து கிண்டினோம்.

சோதனை செய்றதுக்கே கிட்டத்தட்ட 300 லிட்டர் பால் வீணாச்சு. ஆனா, அதையெல்லாம் கண்டுக்கலை. ஒரு கட்டத்துல பனங்கருப்பட்டி தூள் சேர்த்து செஞ்ச பால்கோவா அருமையாக வந்தது. அதனால அதையே கடைப்பிடிக்கலாம்னு முடிவு செஞ்சோம். அடுத்து, அதை எப்படி மார்க்கெட் பண்றதுனு யோசிக்க ஆரம்பிச்சோம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமா சில இயற்கை அங்காடிகள் முகவரி கிடைச்சது. அந்த அங்காடிகளைத் தேடிப்போய்க் கொடுத்தோம்.
 
வாடிக்கையாளரை ஈர்த்த மண்கலய பால்கோவா

நாங்க பால்கோவாவை பாலித்தீன் பைகள்லதான் போட்டுக் கொடுத்தோம். அது இயற்கை அங்காடிகளுக்கு வர்ற சில வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கலைனு சொன்னாங்க. வேற எப்படிப் பேக்கிங் செய்றதுனு விசாரிச்சப்போ, ஒருத்தர் ‘தேங்காய் சிரட்டை அல்லது மண் கலயத்துல பேக்கிங் செஞ்சு பாருங்க’னு யோசனை சொன்னார். அதுல தேங்காய் சிரட்டை சரிப்பட்டு வரலை. மண் கலயத்துல பேக்கிங் பண்ணி, மேல பருத்தித் துணி போட்டு மூடிக் கட்டி, எங்க ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்தோம். அந்த ஐடியாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது” என்ற கலைமகள் தங்களது கருப்பட்டி பால்கோவா அடைக்கப்பட்ட மண் கலயத்தை எடுத்துக் காட்டினார்.

தொடர்ந்து பேசியவர், “இந்த புதிய முயற்சி நல்லாப் போக ஆரம்பிக்கவும், ஒரு கட்டத்துல என் வேலையை விட்டுட்டு வேளச்சேரியில் இருக்கிற வீட்டுலேயே ஒரு இயற்கை அங்காடி ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சு ஒன்றரை வருஷமாச்சு. இப்போ, நிறைய பேரு விரும்பி வாங்கிறதால, நல்லா போய்ட்டிருக்கு. நிறைய வெளி மாவட்ட இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்தும் பொருட்களை வாங்கி விற்பனை செய்றேன். இப்போ அம்பது பேருக்கு மேல நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்காங்க. கடை சீக்கிரத்திலேயே வியாபாரம் சூடு பிடிச்சதுக்கு, எங்களோட சொந்த தயாரிப்பான மண்கலய பால்கோவாதான் காரணம்” என்ற கலைமகள் நிறைவாக,

பல மடங்கு லாபம்

“பத்து லிட்டர் பாலை விற்பனை செய்தா 300 ரூபாய் கிடைக்கும். அதுல மாடுகளுக்குச் செஞ்ச செலவுகள் போக 150 ரூபாய்தான் லாபமா நிக்கும். பத்து லிட்டர் பால்ல இருந்து 3 கிலோ பால்கோவா தயாரிக்கலாம். 3 கிலோ பால்கோவா தயாரிக்க பாலோடு சேர்த்து 1050 ரூபாய்ச் செலவாகும். அதை கிலோ 650 ரூபாய்னு விற்பனை செஞ்சா 1,950 ரூபாய் கிடைக்கும். இந்தக் கணக்குல பார்த்தா பத்து லிட்டர் பால்ல இருந்து 900 ரூபாய் லாபமா கிடைக்கும்.

தினமும் 40 லிட்டர் பால் கிடைக்குது. அதுலதான் பால்கோவா தயாரிச்சுட்டு இருக்கோம். மாடுகளை விற்பனை செய்ற யோசனையில இருந்த எங்களுக்கு, மதிப்புக் கூட்ட ஆரம்பிச்ச பிறகு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. மக்கள்கிட்ட விஷமில்லாத உணவு குறித்த விழிப்பு உணர்வு அதிகமா இருக்கு. அதே நேரத்துல இயற்கைப் பொருட்களை வித்தியாசமாக் கொடுக்குறப்போ கண்டிப்பா நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு, கலைமகள், செல்போன்: 99622 50949

புது யுக்தி இருந்தால் வெற்றி நிச்சயம்!

பால்கோவா தயாரிப்புக் குறித்துப் பேசிய கலைமகளின் தம்பி ராமதுரை, “நாங்க விறகு அடுப்புலதான் பால்கோவா தயாரிக்கிறோம். கேஸ் அடுப்பைப் பயன்படுத்துறதில்லை.

10 லிட்டர் பால்ல இருந்து 3 கிலோ பால்கோவா தயாரிக்கலாம். அதுக்கு ஒன்றரை கிலோ பனங்கருப்பட்டி, 100 கிராம் சுக்குப்பொடி, 200 மில்லி நெய், 50 கிராம் ஏலக்காய்த் தேவைப்படும். பாலைத் தவிர்த்து மற்ற பொருட்களுக்கான செலவு 750 ரூபாய் ஆகும். எரிபொருட்களுக்குப் பெரிய செலவில்லை.

10 லிட்டர் பாலின் விலை 300 ரூபாய். 3 கிலோ பால்கோவாவுக்கான உற்பத்தி செலவு 900 ரூபாய். பால் கோவாவின் விற்பனை விலை 1,950 ரூபாய். அந்தக்கணக்கில் 900 ரூபாய் லாபம். புது யுக்தியைக் கையாண்டால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு நாங்களே உதாரணம்” என்றார்.