மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

வனதாசன் ரா.ராஜசேகரன்தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

“மரத்துக்கு மரம் இலைகள் உரசும் ஓசையில்கூட எவ்வளவு வேறுபாடு? சொரசொரப்பான இலைகளுக்கென்று ஓர் ஓசை. வழுவழுப்பான இலைகளுக்கு வேறு ஓசை. அதுவே தடித்த இலைகள் என்றால் தனித்த ஓசை. இவையெல்லாம் தனித்தனி பண்புகள் அல்லாமல் வேறு என்ன? இதோடு கூடுதலாகக் கேட்கும் சில்வண்டுகளின் ஓசை, பறவைகளின் குரல்கள் இவையெல்லாம் தாளங்கள். இவை அனைத்தும் சேர்ந்த முழு இன்னிசைக் கச்சேரியே காட்டின் பாடல். நாம் வாக்மேனில் கேட்கும் பாடல்கள் எல்லாம் இதற்கு முன் எம்மாத்திரம்?” ‘சூழலியல் எழுத்தாளர்’ நக்கீரன் தனது காடோடி நாவலில், காட்டின் இசையை இப்படிப் பதிவு செய்திருப்பார்.

மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

இயற்கையை உள்ளன்போடு நேசிப்பவர்கள், அடிக்கடி இப்படிப்பட்ட இசையைக் கேட்டிருக்க முடியும். உயிர்ப்போடு இருக்கும் கானகத்தில் மட்டுமல்ல, இயந்திரத்தனமாக இயங்கும் கான்கிரீட் காடுகளிலும் மனிதர்களை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கிறது இயற்கையின் இன்னிசை. மனிதன் கேட்க மறுத்தாலும் மரங்கள், பறவைகள் வாயிலாகத் தனது கச்சேரியை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, இயற்கை.

2011-ம் ஆண்டுப் ‘பசுமை விகடன்’ இதழில், ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ என்ற தலைப்பில் வணிக ரீதியிலான மரங்கள் வளர்ப்பு பற்றிய தொடர் கட்டுரைகள் எழுதியிருந்தேன். உலகெங்கும் உள்ள பசுமை விகடன் வாசகர்களிடம் அந்தக் கட்டுரைகள் ஏற்படுத்திய தாக்கம், என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மரங்களைத் தனி விவசாயமாக மேற்கொள்ளும் முயற்சியில், அனேகம் பேர் ஈடுபட்டார்கள். கட்டுரையைப் படித்துவிட்டு, மலைவேம்பு பயிரிட்ட பல விவசாயிகளில் பலர் தற்போது அறுவடையை முடித்துவிட்டார்கள். அதில், சற்றேறக்குறைய நாம் குறிப்பிட்டிருந்த தொகையே லாபமாகக் கிடைத்த மகிழ்ச்சியைத் தொலைபேசி மூலமாக என்னைத் தொடர்புகொண்டு சொன்னபோது... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தத் தொடரின் வீச்சுக் காரணமாக, பல நூறு ஏக்கர் தரிசு நிலங்களில் மரசாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏக்கர் கணக்கில் மரம் வளர்க்காவிட்டாலும், தோட்டத்தில் சில மரங்களாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

உயிர்ச்சூழலை, உயிர்ப்போடு வைத்திருப்பதில் மரங்களின் பங்கு அலாதியானது. எண்ணில்லா உயிர்களுக்கு உறைவிடம், உணவு கொடுக்கும் அட்சய பாத்திரம், மனிதர்களுக்கு மருந்து எனப் பலவகைகளிலும் பயன்படுகின்றன, மரங்கள். எள்ளைவிட சிறிய விதையில் இருந்து எத்தனை பெரிதான, வலிமையான ஆலமரம் உருவாகிறது பாருங்கள். அதுதான் இயற்கையின் அருட்கொடை. ஒரு நாட்டின் வனவளம்தான் அந்த நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். அதனால்தான் ‘வனம் அழிந்தால் இனம் அழியும்’ என்றார்கள்.

மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

முன்னெப்போதையும்விட, தற்போது அதிகளவில் வனவளத்தைக் காப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதகுல வளர்ச்சியிலும் சரி, தனி மனித வளர்ச்சியிலும் சரி மரங்களின் பங்கு இன்றியமையாதது. வன வளத்தை அதிகரிக்கும் நோக்கில் தற்போது விவசாய நிலங்களிலும் வணிக ரீதியிலான மரங்கள் வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மலைவேம்பு, தேக்கு, குமிழ், மகோகனி எனப் பல்வேறு மரங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில், பல இடங்களில் விவசாய நிலங்களில் இருந்த பயன்பாட்டு அடிப்படையிலான பாரம்பர்ய மரங்களை அழித்து, கட்டடங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

இப்படி புதிதாக உருவாகும் குடியிருப்புப் பகுதிகளில் அழகுக்காக வெளிநாட்டு மரங்களை நட்டு வைக்கிறார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்பாகச் சென்னையை உலுக்கிய ‘வர்தா’ புயலில் அப்படிப்பட்ட அழகு மரங்கள் என்னவானது என்பது அனைவருக்கும் தெரியும். நமது நாட்டு தட்பவெப்பத்துக்கும், மண்வகைக்கும் ஏற்றவை, பாரம்பர்யமாக நம் மண்ணில் உள்ள அரசு, ஆல், இலுப்பை போன்ற அகன்ற இலை தாவரங்கள்தான். மரங்களையும் வணிகரீதியாகப் பார்க்கும் உலகில், ‘பாரம்பர்ய மரங்களால் என்ன நன்மை கிடைக்கும்? நாம் ஏன் அந்த மரங்களை வளர்க்க வேண்டும்’ எனக் கேள்வி எழலாம். இந்த மரங்கள் பிராண வாயு, உணவு, உடை, உறைவிடம், நிழல், எரி பொருள், பசுந்தீவனம், பசுந்தாள் உரம், மண் பாதுகாப்பு, மழை ஈர்ப்பு, மூலிகை மருந்துகள், மன அமைதி... எனப் பல வகைகளிலும் பயன்படுகின்றன. புயல்களில் தாக்குப்பிடித்து, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை, நம் பாரம்பர்ய மரங்கள். அதே நேரம் மனித வாழ்வில், இவை தவிர்க்க முடியாத தாவரங்கள். சமூகம், தனிமனித பயன்பாட்டு அடிப்படையிலான பாரம்பர்ய மரங்களைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்தத் தொடர் முழுவதும் ஒவ்வோர் இதழிலும் ஒரு மரம் என்ற வகையில், பயன்பாட்டு அடிப்படையிலான பாரம்பர்ய மரங்கள், அவற்றின் குணங்கள், பயன்பாடு, மருத்துவப் பயன், சுற்றுச் சூழலுக்குச் செய்யும் நன்மைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த மரங்களை அகர வரிசைப்படி விளக்க இருக்கிறேன். அந்த வகையில் ஆக்சிஜன் தொழிற்சாலையான அரசமரம் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

- வளரும்

இவரைப்பற்றி...

மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

ரா.ராஜசேகரன். பி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.