மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!

மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மீபத்துல சென்னை, மெரினா கடற்கரையில ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமா இருந்தப்போ, அங்க போறதுக்குப் புறப்பட இருந்தேன்.

மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!

நெத்தி நிறைய நாமம் போட்டபடி, ஆஜானு பாகுவான ஒருத்தர் நடந்து வந்தாரு. பக்கத்துல வந்த பிறகுதான் தெரிஞ்சது, கால்நடைப் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருக்கிற நண்பர் அவர்.

‘‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘பிராணிகளின் நண்பன்’ இருக்கிறான் என்பதை, இப்போது நன்றாகவே பார்க்க முடிகிறது’’ என்று பேசியவர், அருகில் உள்ள ஆவின் பால் கடைக்கு அழைச்சுட்டுப் போனார். கால்நடைப் பல்கலைக்கழகத்துல பாடம் சொல்லிக் கொடுத்தாலும், அவருக்கு பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் மேல தீராத ஆர்வம் உண்டு. மசாலா பால் நுரைத் ததும்ப வந்து சேரவும், அதை ருசிக்க ஆரம்பிச்சோம். மணமான மசாலா பால் குடிச்சப்படியே மணக்க மணக்க செந்தமிழ்ல பேச ஆரம்பிச்சார் பேராசிரிய நண்பர்.

‘தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்
கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.’


கண்ணன், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னை என்ற நீளாதேவியை மணந்தார் என்பது, நம்மாழ்வாரின் (இவர் நம்ம நம்மாழ்வார் இல்லீங்க. வைணவ ஆழ்வார்.) நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல் சொல்கிறது.

கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் சகோதரர் கும்பனின் மகள், நப்பின்னையாக அவதரித்தார். தேனினுமினிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், கண்ணன் ஆடிய ஜல்லிக்கட்டுக்குச் சான்றாக அமைந்து இருக்கும் பாசுரம் இது. இந்தப் பாடலில், ‘எருதேழ் தழீஇக் கோளியர்’ என்ற தொடர், ‘ஏழு எருதுகளை வீரமாக அடக்கியவர்’ என்பது, கண்ணனை குறிப்பிடுகிறது.

தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், யாதவர்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்று. ஆயர்கள் வாழ்ந்த ஆயர்பாடியில்தான் கண்ணன் வாழ்ந்தான் என்பது கவனிக்கத்தக்கது.

முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள், காளையை அடக்குபவனை மணமகனாகத் தேர்வு செய்யும் முறையைக் கைவிட பெண்ணுகாக காளையை அடக்கிய ஆயர்குல ஆடவர்கள் சல்லிக்காசுக்காகக் காளைகளை அடக்க ஆரம்பித்தனர். ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாகத் தேர்வு செய்யும் முறையைக் கைவிட்டதுக்கான காரணம் முக்கியமானது. அதாவது, திருமணமான ஆண்கள் போட்டியில் கலந்துகொள்ள விரும்பியுள்ளார்கள். மேலும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் எனப் பழைய மூலநூல்கள் சொல்கின்றன.

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை எனப் பரவலான இலக்கியப் படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள்தாம் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாகச் செம்மைப்படுத்தி இருக்கின்றனர். இவர்களுடன் மற்ற நிலத்து மக்களும் மாடுகளை கொண்டாடியுள்ளனர்.

‘மண்’ அசையா சொத்து. ‘செல்வம்’ எனப் பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் போர் தந்திரங்களில் ஒன்று. ஆநிரை கவர்வோரும் அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால், அரண்மனை வீரர்களும் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்’’னு ஜல்லிக்கட்டுச் சம்பந்தமான வரலாற்று ஆதாரத்தைச் சொன்னவர்.

“நானும் உங்களுடன் மெரினா கடற்கரைக்கு வருகிறேன்”னு சொல்லி வண்டியில ஏறி உட்கார்ந்தார். அந்த கால்நடை பல்கலைகழகப் பேராசிரியர்.