மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

புறாபாண்டி

‘‘இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் தென்னந்தோப்பில், சில மரங்கள் காய்ந்துவிட்டன. அந்த இடத்தில் இளம் தென்னங்கன்றுகளை நடவு செய்தால் சரியாக வளருவதில்லை. இதற்கு என்ன காரணம்?’’
 
ஆர்.சபாபதி, பொள்ளாச்சி.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண்மைத்துறை அலுவலர் வீரப்பன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

‘‘இளம் தென்னங் கன்றுகளைப் பாதுகாக்க தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமான, செலவு இல்லாத தொழில்நுட்பம் ஒன்றை, இன்றும் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் காணலாம்.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!



குறிப்பாக, நன்கு வளர்ந்து காய்ப்பில் உள்ள தோப்புகளில், ஆங்காங்கே சில தென்னைமரங்கள் பல காரணங்களால் இறந்துவிடுகின்றன. இதனால் தோப்பில் காலி இடங்கள் உருவாகிவிடுகின்றன. இதுபோன்ற காலி இடங்களில் மீண்டும் தென்னங்கன்றுகள் நட்டு, பாதுகாத்து, மரமாக்கப் பல சிரமங்களை விவசாயிகள் சந்திக்கின்றனர். இச்சிரமங்கள் இல்லாமல் வெற்றிகரமாகத் தென்னங் கன்றுகளை வளர்ப்பதற்கு, இப்பகுதி விவசாயிகள் சில தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

தென்னங்கன்றுகள் நடும்போது நட்ட குழியைச் சுற்றி மூன்று இடங்களில் தாழை (தாழம்பூ) செடிகளைப் பாதுகாப்பிற்காக நடவு செய்வார்கள். இதன் மூலம் தென்னங்கன்றும் வளரும்; தாழையும் வளரும். 

இளம் தென்னங்கன்றுகளின் முக்கிய எதிரி காண்டாமிருக வண்டுகளாகும். இவ்வண்டுகள் தென்னங்கன்றுகளின் கிழங்குப்பகுதியைத் தாக்குவதால் குருத்து அழுகிவிடும். இதனால் கன்றுகள் இழப்புக்குள்ளாவதுடன் நாம் முதலீடு செய்யும் பணமும் காலமும் வீணாகிறது. ஆடு மாடுகள் தொல்லை இருந்தால் தென்னம்பிள்ளைகளைக் கடித்துவிடும். அதேபோல், வளர்ந்த பிள்ளைகள் மத்தளம் கட்டும் தருணத்தில், சிவப்புக் கூண் வண்டுகள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே, தென்னந் தோப்பினுள் தென்னங்கன்றுகள் வளர்ப்பது மிகுந்த சிரமமாகிவிடும். தாழையே இளந்தென்னம் பிள்ளைகளுக்குக் காவல் தந்து தென்னையை வளர்க்க உதவி புரிகிறது. இதன் ஓலையமைப்பு பாதுகாப்பாக அமைந்துள்ளதால் தென்னம்பிள்ளைகளை வண்டுகளோ, ஆடு மாடுகளோ தீண்டாது. தென்னங்கன்றுகள் நன்கு வளர்ந்து குலை தங்கும் காலம் வரை வைத்திருந்து பிறகு, தாழையை வெட்டி நீக்கிவிடலாம். இதற்கு பராமரிப்புச் செலவு இல்லவே இல்லை. மற்றபடி, கூண்டுகள் வைத்துப் பாதுகாத்தால் ஒரு கூண்டின் விலை ரூ.1,500-க்கு மேல் போகும். ஆனாலும் வண்டுகள் உள்ளே நுழைந்துவிடும். தாழை செடிகள் நடவு செய்வதால் பல நன்மைகள் உண்டு. தாழை விழுதினை வெட்டி, நார் கிழித்துப் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு வெளிவேலியினைக் கட்டி பராமரிப்புச் செய்துகொள்ளலாம். தாழம்பூ கூந்தலுக்கும், தாழங்காய் பந்தலுக்கும் அலங்காரமாய்ப் பயன்படும். கடற்கரை ஓரங்களில் சிறந்த காற்றுத் தடுப்பானாகவும், அலைத்தடுப்பானாகவும், மண் அரிப்புத் தடுப்பானாகவும் பயன்படுகிறது.’’

தொடர்புக்கு, செல்போன்: 80128 92818.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

‘‘எங்கள் நிலத்தில் கிணறு வெட்ட திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசு, மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

எம்.ஜே.சசி, சிவகங்கை.

‘‘தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் முழு மானியத்தில் (தலா ரூ.8 லட்சத்தில்) 500 கிணறுகள் தோண்ட மத்திய அரசு உதவி செய்கிறது. அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் விவசாய நிலங்களில் பாசன கிணறுகள் வெட்டுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த ஒன்றியப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவுக்கு உள்ளது என மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஏற்கெனவே ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது. அந்த ஒன்றியப் பகுதிகளில் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கிணறுவெட்ட அனுமதி வழங்கப்படும்.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

அதன்படி மதுரையில் 30, தேனி-10, திண்டுக்கல்-22, ராமநாதபுரம்-40, விருதுநகர்-25, சிவகங்கை-20 என 27 மாவட்டங்களுக்கு 500 கிணறுகள் தோண்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பொதுப்பிரிவினரும், 30 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள், சிறு அல்லது குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். ஒரு தனிநபருக்கு பாசனக் கிணறு வெட்டுவதற்கு ரூ.8 லட்சம் முழு மானியம் வழங்கப்பட உள்ளது. பயனாளிகளின் விவசாய நிலம் அமைந்துள்ள இடம், கிணறு வெட்ட பரிந்துரை செய்யப்படும் ஆழம், கிடைக்கும் நீரின் அளவு மற்றும் தன்மையின் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விவரங்களைச் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.’’


‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நெல், பயறு வகைகள், தீவனச் சோளம்... போன்றவைகளின் விதைகள் எங்குக் கிடைக்கும்?’’
 
தி.ராஜா, லால்குடி.


‘‘கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

நீங்கள் கேட்டுள்ள நெல், பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவனத் தட்டைப்பயறு... போன்றவை ஆராய்ச்சி நிலையங்களில் இருப்புக்குத் தக்கபடி விவசாயிகளுக்கு விலைக்கு வழங்கி வருகிறார்கள். முன்பதிவு செய்தும் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்கள், ரகங்கள் குறித்தும் இங்குள்ள விஞ்ஞானிகள் பரிந்துரைசெய்வார்கள். தொடர்புகொண்டு பயன் பெறுங்கள்.’’

நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.