மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!

மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!

ஓவியம்: ஹரன்

நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டையைப் பதிவு செய்துவிட்டு வந்துகொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தேநீர் கடையில் இருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், அவரைப் பார்த்து அழைக்கவும் இருவரும் தேநீர் அருந்திவிட்டுத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் ஒரு வாடிக்கையாளர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவர்களோடு இணைந்துகொண்டார்.

மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!


நடந்தவாறே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார். “இந்த ஆந்திராக்காரங்க திரும்ப வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கெனவே பாலாற்றுக்கு குறுக்கே நிறைய தடுப்பணைகளைக் கட்டி வெச்சு தமிழ்நாட்டுக்கு தண்ணி கிடைக்காமப் பண்ணிட்டாங்க. இப்போ ஒவ்வொரு தடுப்பணையோட  உயரத்தையும் அதிகப்படுத்திட்டே இருக்காங்க.

முன்னாடி ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்போ தடுப்பணையை உயர்த்துறதை கடுமையா எதிர்த்தாங்க. அதனால ஆந்திரா அரசாங்கம் கொஞ்சம் அடங்கி இருந்தது. இப்போ, தமிழ்நாட்டுல கேக்குறதுக்கு நாதி இல்லாமப் போயிட்டதால தடுப்பணைகளை உயர்த்துற வேலைகளை ஜரூரா செஞ்சுட்டு இருக்கு. அதோட இன்னும் நாலு தடுப்பணைகளையும் கட்டப்போறதா தகவல்கள் வருது. தடுப்பணைகளை உயர்த்துறதை எதிர்த்து நம்ம விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திட்டே இருக்காங்க. ஆனா, அதையெல்லாம் ஆந்திரா அரசாங்கம் சட்டையே செய்யலை.

இத்தனைக்கும் பாலாறு, கர்நாடகா மாநிலத்துல உற்பத்தியாகி, ஆந்திரா மாநிலத்துக்குள்ள 33 கிலோ மீட்டர் தூரம்தான் ஓடுது. தமிழ்நாட்டுல சுமார் 233 கிலோமீட்டர் தூரம் ஓடுது. அந்த 33 கிலோமீட்டருக்குள்ள நிறைய தடுப்பணைகள்இருக்குது.அதுல 12 தடுப்பணைகளை 5 அடியில் இருந்து 12 அடியா உயர்த்தியிருக்காங்க. இப்போ சின்னம்பள்ளம், புங்கனூர், நரியமேடு, இசையனூர்னு நாலு இடங்கள்ல தடுப்பணைகள் கட்டப்போறாங்களாம். அதுக்காக டெண்டர்கூட விட்டுட்டாங்களாம். இந்தத் தடுப்பணைகளைக் கட்டிட்டா, இனிமே மழை பெய்ற சமயங்கள்லகூட தமிழ்நாட்டுக்குத் தண்ணி கிடைக்காது. இந்த சூழ்நிலை உருவானா வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்ல தண்ணீர்ப் பற்றாக்குறையால கடுமையான பாதிப்பு இருக்கும்னு சொல்றாங்க. அதனால அந்தப்பகுதி விவசாயிகள்லாம் தொடர் போராட்டங்களை நடத்துறதுன்னு முடிவு பண்ணியிருக்காங்க. முதலமைச்சர்கிட்ட
இது சம்பந்தமா மனு கொடுக்குறதுக்கும் தயாராகிட்டு இருக்காங்க” என்றார்.

“அடப்பாவிகளா...” என்ற காய்கறி, “இதுக்கெல்லாம் மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் எல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா?” என்று அப்பாவியாகக் கேட்டார்.

“நமக்குத் தண்ணி இல்லைன்னா, அவங்களுக்கென்ன கவலை. யாரு எக்கேடு கெட்டுப் போனாலும் ஆளுறவங்க கவலைப்பட மாட்டாங்க. அதுக்கு ஓர் உதாரணம் சொல்றேன் கேளு” என்ற ஏரோட்டி தொடர்ந்தார்.

“பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதிகள்ல 40 மீனவ கிராமங்கள் இருக்கு. கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் மீன்பிடித் தொழில்ல இருக்காங்க. இந்தப்பகுதியில் 3 ஆயிரம் கட்டுமரங்கள்லயும் 1,500 ஃபைபர் படகுகள்லயும் மீன் பிடிக்கிறாங்க. இந்த மீனவர்களுக்கு டீசல் வாங்க மானியம் உண்டு. இந்த மானிய அட்டை கொடுக்குறது, மீனவர்கள்கிட்ட சேமிப்புப் பணத்தை வாங்கிப் பேங்க்ல கட்டுறது, அதை எடுத்துத் தர்றது, அரசு அறிவிப்புகளை மீனவர்கள்கிட்ட சொல்றது மாதிரியான வேலைகளைச் செய்றதுக்குன்னு மீன் வளத்துறையில் உதவி ஆய்வாளர்களை நியமிச்சுருக்காங்க. இவங்களுக்கான அலுவலகம் பொன்னேரியில் இருக்கு.

பழவேற்காடு பகுதிக்கு ஓர் உதவி ஆய்வாளர், திருப்பாலைவனம் பகுதிகளுக்கு ஓர் உதவி ஆய்வாளர்னு ரெண்டு பேர் இருக்காங்க. இவங்கள்ல ஒருத்தர் வேற ஊருக்கு மாற்றல் ஆகிப்போயிட்டார். இன்னொருத்தர் பயிற்சிக்காகப் போயிட்டார். அந்த அலுவலகத்துல இருக்கவேண்டிய ரெண்டு அலுவலக உதவியாளர்கள் பணியிடமும் காலியா இருக்குதாம். அதனால, இந்தப்பகுதி மீனவர்கள் எந்த வேலையையும் செய்ய முடியாம இருக்காங்களாம். குறிப்பா டீசல் மானிய அட்டையைப் புதுப்பிக்கிறதுக்கு அலையா அலைஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். மாசக்கணக்கா பணியில் அலுவலர்கள் இல்லாததால, விபத்துல இறந்துபோன மீனவர்களுக்கான இழப்பீடு, புயல் நிவாரணம்னு எதையும் வாங்க முடியாம ரொம்ப கஷ்டத்துல இருக்குறாங்களாம், மீனவர்கள். இதுதான் இன்னிக்கு இருக்குற ஆட்சியோட நிலைமை” என்றார், ஏரோட்டி. பேசிக்கொண்டே மூவரும் தோட்டத்துக்கு வந்துவிட மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்காக நிலத்தில் கட்டிவிட்டு வந்து உட்கார்ந்தார், ஏரோட்டி. அவர் வந்ததும், கூடையில் இருந்து ஆளுக்கொரு வெள்ளரிப்பிஞ்சை எடுத்துக்கொடுத்தார், காய்கறி.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்திச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். “தமிழகத்தை வறட்சி மாநிலமா அறிவிச்சுருக்கிறதால, மாநிலத்துல இருக்குற எல்லா விவசாயிகளுக்குமே வறட்சி நிவாரண நிதி கிடைக்க வாய்ப்பிருக்கு. அதுபோக, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்துல சேர்ந்திருக்கிற விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி, காப்பீட்டுத்திட்டத்துல கிடைக்கிற இழப்பீடுன்னு ரெண்டுமே கிடைக்கும். மாநிலம் முழுசும் அதுக்கான கணக்கெடுப்பு நடந்துட்டு இருக்கு. முன்னாடி பத்துக் கிராமங்களை ஒரு ஃபிர்கானு கணக்கு வெச்சுக்கிட்டுப் பொத்தாம்பொதுவா கணக்கெடுத்து இழப்பீடு வழங்குவாங்க. இப்போ, அப்படியில்லை. ஒரு கிராமத்திலேயே நாலு இடத்துல ஆய்வுபண்ணி எத்தனை சதவிகிதம் மகசூல் இழப்புன்னு கணக்கெடுக்கணும். இதுக்காகத் தமிழ்நாடு முழுக்க உதவி வேளாண் அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியில ஈடுபட்டிருக்காங்க. உதவி வேளாண் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், காப்பீட்டுத் துறை நியமிச்சுருக்கிற நபர்னு மூணு பேரும் கூட்டாத்தான் கணக்கெடுக்கணும்.

பல இடங்கள்ல கணக்கெடுக்குறதுக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேக்குறதா புகார் வந்துருக்கு. அவங்க கொடுக்குற சான்றிதழ் அடிப்படையில்தான் தமிழக அரசோட நிவாரணம் கிடைக்கும். அதனால, கிராம நிர்வாக அலுவலர்கள், இதுல கை வரிசையைக் காட்ட ஆரம்பிச்சுருக்காங்க. ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரை லஞ்சம் கேக்குறதா புகார் சொல்றாங்க விவசாயிங்க. ஏற்கெனவே விளைச்சல் இல்லாம நொந்துபோய்த்தான் நிவாரணத்தை எதிர்பார்த்துட்டு இருக்கோம். அதுக்கும் லஞ்சம் கேக்குறாங்களேன்னு வருத்தத்துல இருக்குறாங்க, விவசாயிங்க” என்றார்.
 
“கிராம நிர்வாக அலுவலகத்துல லஞ்சம் கொடுக்காம ஒரு வேலையும் நடக்காது. அவங்களுக்கு விவசாயினா என்ன, வியாபாரினா என்னா? அப்படியே ஊறிப்போய்ட்டாங்க” என்று வருத்தப்பட்ட காய்கறி,

“இன்னும் ரெண்டு,  மூணு வாடிக்கையாளர் களுக்கு காய் கொடுக்கணும். மார்க்கெட்ல கணக்கு முடிக்கணும். நான் கிளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்க, அத்துடன் அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

தமிழக அரசின் அறிவிப்புகள்

மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!

பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக அரசின் துணை நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே...

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு வழிவகை முன்பணமாக 171.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில், 2016-ம் ஆண்டுச் சம்பா காலத்தில் பயிர் செய்வதை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகை வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, கூடுதலாக 46.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
2015-16-ம் ஆண்டு கரும்பு அரவைக் காலத்துக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக...

10 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 92.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.