மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

ஆரோக்கியம் தரும்... ஆரை, புளியாரை, வல்லாரை!சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் ‘ஆரை’ எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

நல்ல நீர்ப்பிடிப்புள்ள குளங்கள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் வயல்வெளிகளிலும் காணப்படும் ஒரு கொடி வகைத் தாவரம்தான் ஆரை. இதில், ‘ஆரை’, ‘புளியாரை’, ‘வல்லாரை’ என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றுமே உண்ணத்தகுந்த சிறந்த கீரைகளாக இருப்பதுடன் மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.

நாலிலைகள்கொண்ட ஆரை

ஆரை, நீர் சதுப்பான இடங்களிலும் அதிக ஆழமில்லாத ஒடை, வாய்க்கால் நீரிலும் வளரக்கூடிய ‘ஒரு பருவத்தாவரம்’. ஒவ்வொரு தண்டிலும் தலா நான்கு இலைகளுடன் வேகமாகப் பரவக்கூடிய கொடி இது. மனித உடல் நன்றாக இயங்குவதற்குத் தேவையான சோடியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு ஆகிய தாது உப்புக்களை அதிகம் உள்ளடக்கிய கீரை இது.

முன்பு, கிராமங்களில் வயல் வேலையை முடித்துவிட்டு வருபவர்கள் ஆரை உள்ளிட்ட பல வகைக் கீரைகளைப் பறித்து உண்டு வந்தனர். அந்தக் கீரை வகைகளை ‘பண்ணைக் கீரை’ என்றும் சொல்வார்கள். சத்து நிறைந்த இந்தக் கீரைகள் உண்டதால், அவர்களுக்கு எவ்வித சத்து டானிக்குகளும் தேவைப் படவில்லை. ஆனால் நாகரிகமயமான இக்காலத்தில் கிராமங்களில் கூட இப்பழக்கம் மறைந்து விட்டதால்தான், சத்துக் குறைபாட்டுக்குள்ளாகி கை, கால் உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைகின்றனர்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

ஆரை இலைகளைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதைக் கீரை போல சமைத்து உண்டு வர, அதிகப்படியான தாய்ப்பால் சுரப்பு பிரச்னை கட்டுப் படும். இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறப்பான பலனளிக்கக் கூடியது. தொடர்ந்து இதைச் சமைத்து உண்டுவந்தால், போதுமான சத்துகள் கிடைப்பதோடு நீரிழிவு நோயும் கட்டுப்படும். தவிர நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு முதலான சிறுநீர்த்தாரை தொற்று நோய்களும் குணமாகும். ஒரே மூலிகை பல நோய்களைக் குணமாக்குவதுதான் சித்தமருத்துவத்தின் சிறப்பு. ஆங்கில மருத்துவத்தில், நீரிழிவு நோயாளிகளுக்குச் சத்துக்கு ஒரு மருந்து, நீரிழிவைக் குறைக்க ஒரு மருந்து, சிறுநீர்த்தாரை தொற்றுகளுக்கு ஒரு மருந்து எனத் தனித்தனியாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

ஆரை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து அதில் 100 கிராம் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து, அவற்றை 250 மில்லியாகச் சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதில் வேளைக்கு 50 மில்லி என்ற அளவில், ஒரு நாளைக்கு 5 வேளை குடித்துவந்தால்... நீரழிதல், அதிகத்தாகம் முதலியவை குணமாகும். இந்த இலையைத் துவையல்போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும்.

மூவிலைகள்கொண்ட புளியாரை

தண்டுக்கு தலா மூன்று இலைகளைக் கொண்டிருப்பது புளியாரை. இது, புளிப்புச்சுவை கொண்டிருப்பதால், புளியாரை என அழைக்கப்படுகிறது. (புளிச்சைக்கீரை வேறு, புளியாரை வேறு) இச்செடியில் அழகிய மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கும். இந்த இலைகளைக் கீரையாகச் சமைத்தோ அல்லது துவையலாகவோ உண்டு வர, தீராத வயிற்றுப்புண்கூட குணமாகும். புளியாரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர மூலவாயு, மூலக்கடுப்பு, ரத்தக் கழிச்சல், பித்தமிகுதி, சுவையின்மை, மயக்கம் ஆகியவை தீரும்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

புளியாரை இலைச் சாற்றை காலை, மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் குடித்து வர அமீபிக் சீதபேதி நோய் குணமாகும். ரத்தமும் ஜலமுமாக அடிக்கடி கழிவதை ‘கிராணிக் கழிச்சல்’, ‘சீதபேதி’ என்பர். இதில் ஒரு வகைதான் அமீபிக் சீதபேதி. சிலருக்கு மலங்கழிக்கும்போது ஆசனவாய் வெளிவந்து விடும். அப்படி வரும் ஆசனவாய் தானாகவே உட்சென்று விடும். ஆனால், சிலருக்கு விரல்களால் அழுத்தி உள்ளே தள்ள வேண்டியிருக்கும். இந்நோய் கண்டவர்கள், தொடக்க நிலையிலேயே புளியாரை இலைச்சாற்றை குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வேளைக்கு 15 மில்லி முதல் 30 மில்லி வரை குடிக்கலாம்.

புளியாரை இலைகளைச் சிறிது தண்ணீர்விட்டு அரைத்து வலியுடன்கூடிய கட்டிகள் மற்றும் வீக்கத்தின் மீது போட்டு வந்தால் குணமாகும்.
 
புளியாரை இலைகளுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து மரு, பரு, பாலுண்ணி ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஒரு மாதம் வரை பூசி வர, அவை தழும்பில்லாமல் மறையும்.

கிராணி நோய்களால் பாதிக்கப்பட்டோர் புளியாரைக் கீரையை உணவாகவோ துவையலாகவோ சாறெடுத்தோ குடித்து வர விரைவில் குணமாகும். புளியாரைக் கீரை பச்சையாகக் கிடைக்காத நிலையில் ‘புளியாரை நெய்’ என்னும் சித்த மருத்துவ மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஓரிலைகொண்ட வல்லாரை

ஒவ்வொரு தண்டும் ஒரு கொடியாக உருவாகிப் பரவக்கூடியது, வல்லாரை. இதில் தண்டில் தனித்தனி இலைகளாக உருவாகும். இது, நினைவாற்றல் பெருகவும் மூளை செல்கள் வலுவாகவும் உதவுகிறது. தவிர, வலிப்பு நோய் உள்ளிட்ட பல நோய்களைக் குணமாக்குகிறது.

‘வல்லாரை யினிலை மருவுகற்ப மாய்க்கொள்

எல்லாப் பிணிகளு மிலாமையா மெய்யினில்..’
 
‘வல்லாரைக் கற்பமுண்ண வல்லாரை யார் நிகர்வார்

கல்லாரைப் போலக் கலங்காமல்..’ என, வல்லாரை அனைத்து நோய்களையும் குணமாக்கும்’ எனத் தேரையர் எனும் சித்தர் குறிப்பிட்டுள்ளார்.

வல்லாரையோடு உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து கீரையாகவே சமைத்து உண்டு வந்ததால்தான் நம் முன்னோர் நோய்களை வென்று வாழ்ந்து வந்தனர். வல்லாரையைப் போலவே வடிவமைப்புள்ள ‘எலிக்காதிலை’ எனும் கீரையையும் வல்லாரை என ஏமாற்றுபவர்கள் உண்டு. அதனால், கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

வல்லாரை இலையைத் தூசு, மண் போக நன்கு கழுவி, நீரை வடித்து நிழலில் காய வைக்க வேண்டும். 13 பங்கு எடை உலர்ந்த வல்லாரை இலைகளுடன், ஒரு பங்கு எடை வசம்பு சேர்த்துப் பொடியாக்கிக்கொண்டு இதனை உண்டு வரலாம். வல்லாரை, இயல்பில் வெப்பமானது என்பதால் வசம்பு சேர்ப்பது அவசியம்.

500 மில்லி கிராம் பொடியை 3 மில்லி நெய்யில் கலந்து உண்டுவந்தால் வாயு, அண்ட வீக்கம் (விதை வீக்கம்), யானைக்கால், தோல்நோய்கள், நெறிக்கட்டு, மாதவிடாய்க் கோளாறு ஆகியவை நீங்கும். அதோடு மூளை பலம், சுறுசுறுப்பு, சிந்தனைத்திறன் ஆகியவை மேம்படும். 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவிட்டுப் பிறகு, 48 நாள்கள் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு மண்டலம் உண்ணலாம். இவ்வாறு ஒரு மண்டல இடைவெளி விட்டுச் சுழற்சி முறையில் எத்தனை முறை வேண்டுமானாலும் உண்டு வரலாம். ஆனால், கால இடைவெளி அவசியம்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11

வல்லாரைப் பொடி, வல்லாரை நெய், வல்லாரை இளகம் (லேகியம்), வல்லாரை மிட்டாய் எனப் பல்வேறு வடிவங்களில் வல்லாரை தற்போது கிடைக்கிறது. வல்லாரையில் உள்ள பிராமிக் அமிலம், ஐசோபிராமிக் அமிலம், பிரமோசைடு, பிராமினோசைடு முதலிய மருந்தியல் பொருள்கள் மூளையின் செயல்திறனை இயல்பாக வைத்திருக்க உதவுகின்றன. அதோடு மனஅழுத்தம் குறையவும், மூளை செல்கள் திறம்படச் செயல்படவும் உதவுவதால் சுறுசுறுப்பு உண்டாகி நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரைக்கு என்றே தனியாக ஒரு நூல் வெளியிடும் அளவுக்கு வல்லாரைப் பற்றிய செய்திகள் உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க வல்லாரையை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
ஆவாரை, பொன்னாவாரை குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

- வளரும்

கீரை      தாவரவியல் பெயர்

ஆரை    -  Marsilea Quadrifolia
 
புளியாரை
    -  Oxalis Corniculata

வல்லாரை    - Centella Asiatica

வல்லாரைக்குத் தனி நூல்
 
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அப்துல்லா சாகிப் எனும் சித்த மருத்துவ அறிஞர், ‘கடுக்காய், வல்லாரையின் தனி மாண்பு’ என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். இவரது முயற்சியால் வல்லாரை பற்றிய அனைத்து தகவல்களும் மறைந்துவிடாமல் நமக்குக் கிடைத்துள்ளன. தவிர, ‘அரைபோக வைத்திய நவநீதம்’ எனும் 10 தொகுதிகள் கொண்ட நூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்தமருத்துவ மருந்துகளின் தயாரிப்பு முறைகளையும் இவர் எழுதியுள்ளார்.

கணை நோய்க்குக் கண்கண்ட மருந்து

கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்து உடல் தேறாமல் இருக்கும். இதை, சித்தமருத்துவத்தில் கணச்சூடு என்போம். இதுதான் ‘ப்ரைமெரி காம்ப்ளெக்ஸ்’ எனப்படுவது. 1960-ம் ஆண்டுக்கு முன் வரை ‘கணை எண்ணெய்’ என்பது அனைத்து தாய்மார்களுக்கும் பாட்டிமார்களுக்கும் தெரிந்த ஒன்று. பல்வேறு முறைகளில் கணை எண்ணெய் தயாரிப்புக் குறித்து ‘பாலவாகடம்’ என்னும் சித்த மருத்துவ நூல் கூறுகிறது. அவற்றில் மிக எளியமுறை இது.

வல்லாரைச்சாறு-100 மில்லி, சிற்றாமணக்கெண்ணெய்-100 மில்லி எடுத்து கலந்துகொள்ளவும். 10 கிராம் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த விழுதை கலந்து வைத்த எண்ணெயில் இட்டு, காய்ச்சி தைல பக்குவத்தில் இறக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதைச் கைக்குழந்தைகளுக்கு 3 மில்லி முதல் 5 மில்லி அளவு வரை காலை, மாலை என இருவேளையும் ஒரு வாரம் கொடுத்தால் கணச்சூடு நீங்கி உடல் நலம் மேம்படும். 

பாடகர்களுக்குப் பலன் தரும் வல்லாரை

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் 7 முறை ஊறவைத்துப் பாவனை (பக்குவம்) செய்து உலர்த்திப் பொடித்து உண்டுவர, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொண்டை கரகரப்பு நீங்கி குரல்வளம் உண்டாகும்.

உலர்ந்த வல்லாரை இலை, வெட்பாலை விதை, வசம்பு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றைச் சம எடையில் எடுத்துப் பொடி செய்து வைத்துகொள்ளவும். இதிலிருந்து தினமும் இருவேளை 25 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து உண்டு வர தொண்டை கபம், தொண்டைக்கம்மல் நீங்கி நல்ல குரல்வளம் உண்டாகும். இது பாடகர்களுக்கு மிகச்சிறப்பான பலனைத் தரும்.

வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும்.

வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்துகொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக்கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் (நீர்க்கடுப்பு) தீரும்.

வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.

வல்லாரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவர... யானைக்கால் வீக்கம், விதை வீக்கம் குறையும்.