மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

சுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

லகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

நமது பாரம்பர்யமான மரங்களைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். அந்தவகையில், மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரம் பற்றிப் பார்ப்போம்.

இயற்கையின் அற்புதப் படைப்பு அரச மரம். பிரமாண்ட தோற்றத்துடன், அகன்ற இதய வடிவிலான இலைகளுடன் பூமிக்குக் குடைபிடித்து நிற்கும் அரச மரத்தைக் காண்பதே கண்களுக்கு இதம். இதன் வேர்ப்பகுதியில் பிரம்மனும் நடுப்பகுதியில் திருமாலும் உச்சியில் சிவனும் இருப்பதாகத் தெரிவிக்கின்றன, புராணங்கள். ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள அரச மரங்களைப் பிள்ளையார் கோயில்களில் பார்க்க முடியும். ஆற்றங்கரையோரங்களிலும், சாலை யோரங்களிலும் இவை வீற்றிருக்கின்றன. 

அரச மரத்துக்கு மனிதனின் பிணிகளைப் போக்கும் சக்தி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது, அறிவியல். இதய வடிவிலான இலைகள் வழியாக வெளியேறும் காற்று மனிதர்களுக்கான உயிர்க்காற்று. அம்மரத்தின் கீழே அமர்ந்தால் பிணிகள் நீங்கும். அதனால்தான், அரச மரங்களை நட்டவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று, ஆன்மிகம் மூலமாக அறிவியலைச் சொல்லி வைத்தனர், முன்னோர். மருத்துவர்கூட, மருந்துகள் மூலமாகத்தான் குணப்படுத்துவார். ஆனால், அரச மரம் தன் நிழலில் இளைப்பாறுபவர்களை தான் வெளிவிடும் காற்றின் மூலமே குணமாக்குகிறது.

‘சித்திரை, வைகாசி மாதங்களில் மதிய வேளையில் அரசமர நிழலில் இளைப்பாறினால், தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதற்குக் காரணம் அரச மரத்தில் இருக்கும் ஒருவிதமான மின் ஆற்றலே. இந்த மரத்தை வலம் வரும்போது மனித உடலில் உள்ள மின்காந்த அலைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. அதனால், உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.

உலகையே உதறல் எடுக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், புவி வெப்பமயமாதல். அதற்கு அதிகளவு மரங்களை வளர்ப்பதே தீர்வு என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டு, மரம் நடும் பணிகள் சமீபகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி வைக்கும் மரங்களில் அரச மரங்களை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஓர் அரச மரம், தினமும் 1,800 கிலோ கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிக்கொண்டு, 2,400 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. எனவே அரச மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கரியமில வாயுவின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

இந்த மரத்தில் வலிமையான பலகைகள் செய்ய முடியாது. ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார் 600 கிலோ முதல் 700 கிலோ வரை இருக்கும். இதில் மரப்பெட்டிகள், அமரும் சிறுபலகைகள், தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம். தீப்பெட்டி தயாரிக்கலாம். இந்த மரத்தின் பட்டையில் 4 சதவிகிதம் டேனின் என்ற வேதிப்பொருள் உள்ளதால், ஒரு காலத்தில் இதன் பட்டையைத் தோல் பதனிடப் பயன்படுத்தினார்கள்.

தீமூட்டி யாகம் வளர்க்கும்போது, அரச மரக்குச்சிகளையே அதிகம் பயன் படுத்துவார்கள். இந்தக் குச்சியில் இருந்து வரக்கூடிய புகை, மூச்சுத் திணறலையும் சளித்தொந்தரவு, சோர்வு, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றையும் போக்கக்கூடியது. ‘அரச மரத்தின் பழத்தை உண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்’ என்கிறது, சித்தமருத்துவம். அரச மரத்தின் அடிப்பகுதியில் கீறினால் வடியும் பாலை, பித்த வெடிப்புகளில் தடவினால் குணமாகும். அரச மரத்தின் பட்டை, வேர், விதை ஆகியவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, அதில் தேன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

ஒலி மாசு, வளி (காற்று) மாசுக்களைக் கட்டுப்படுத்தும் மரங்களைக் காலி இடங்களிளெல்லாம் நட்டு வளர்க்க வேண்டும். மரங்களும் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற எண்ணத்தைப் பிஞ்சுகளின் நெஞ்சில் இப்போதே விதைக்க வேண்டும். அப்போதுதான் வளரும் தலைமுறையாவது ஓரளவு சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியும்.

தற்போது அரச மரக்கன்றுகள், அனைத்து அரசு மற்றும் தனியார் நாற்றுப் பண்ணைகளிலும் கிடைக்கின்றன. இது பொது இடங்கள், சாலையோரங்கள், பூங்காக்களில் நடுவதற்கு ஏற்ற மரம். மக்கள் கூடும் இடங்களில் அரச மரத்தை நடவு செய்தால், அது இலவச ஆக்சிஜன் மையமாகத் திகழும். அரச மரம் நடுவது, மிகச்சிறந்த சமூகப்பணி. மெரினாவில் யுகப்புரட்சி செய்த இளைஞர்களே... மரங்களை நடுவதிலும் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். அடுத்த சில ஆண்டுகளில் நாம் பூமிக்கே பசுமைக் குடையை உருவாக்கிவிடலாம்.

எண்ணிலடங்கா உயிர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் ஆலமரம் பற்றி அடுத்த இதழில்...

- வளரும்

அதிக வெப்பத்தையும் தாங்கும்

அரச மரத்தின் தாயகம் இந்தியா என்றாலும் இலங்கை, நேபாளம், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இதற்கு உரிமை கோருகின்றன. கடுமையான வெப்பமுள்ள (46 டிகிரி செல்சியஸ்) பகுதிகளில்கூட இந்த மரம் வளரும். குளிர் தேசங்களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் அரச மரத்தைக் காணலாம். இதன் பழத்தை உண்ணும் பறவைகள் மூலமாக, இது பரவுகிறது. கன்றுகளாகவும் இதை நடவு செய்யலாம்.

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

தீவனப் பயன்பாடு

ட இந்தியாவில், அரச இலைகளைப் பட்டுப்புழுக்களுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகள் சிறந்த கால்நடைத் தீவனம். சில இடங்களில் ஆடு மாடுகள் மற்றும் யானைகளுக்கு இது தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. இதில் புரதச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் இருப்பதால், செரிமானம் தாமதமாகும். அதனால், இதை அதிக அளவு தீவனமாகப் பயன்படுத்துவதில்லை.

மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!

அரசும் நானே... போதியும் நானே!

ந்த மரம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். ‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் சொல்வதாக இருக்கிறது. சித்தார்த்தன் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானோதயம் பெற்று புத்தனாக மாறியதாகப் படித்திருக்கிறோம். அந்தப் போதி மரம் வேறொன்றும் அல்ல; நமது அரச மரம்தான்.

இது, ‘அரசு நீழலிருந்தோன்’ எனச் சூடாமணி நிகண்டு, கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், புத்த கயாவுக்கு 5 கிலோமீட்டர் தெற்கே உள்ள ‘மகாபோதி’ கோயிலில் இன்றும்கூட புத்தரின் நினைவாக அரச மரம் போற்றப்படுகிறது.