மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!

மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

சில வருஷங்களுக்கு முன்னாடி ஐதராபாத்துல காடு வளர்ப்பு சம்பந்தமான கருத்தரங்கு நடந்துச்சு. நாடு முழுவதிலுமிருந்து பழங்குடி மக்கள், மரம் வளர்ப்பு ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள்னு ஏராளமானவங்க வந்திருந்தாங்க. அப்போ, ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்திருந்த பழங்குடி இன தலைவர், மரங்களைப் பத்தி சொன்ன தகவல் ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. 

மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!

‘சப்தபர்ணா’ (தமிழ் மொழியில் ‘ஏழிலைப்பாலை’) என்று சொல்லப்படும்  மரத்தைப் பற்றி பலவகையான செய்திகள் உலா வருகின்றன. இதைப் பேய்கள் வாழும் மரம் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால், இந்த மரத்திலிருந்துதான், பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கரும்பலகைகள் செய்யப்படுகின்றன. மேலும், கல்வி கற்றலுக்கு உதவும் உபகரணங்கள் செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான், இந்த மரம் ‘ஸ்காலரிஸ்’ (Scholaris) என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. எங்கள்  பகுதியில் வாழும் பழங்குடி மக்கள், இதைத் தெய்வமாக வணங்குவதுண்டு.  காட்டுப் பகுதியில்தான் பழங்குடி மக்களின் இருப்பிடம் இருக்கும். தாங்கள் வாழும் பகுதியில் இந்த வகை மரங்களை ஒன்றிரண்டு கட்டாயம் வளர்ப்பார்கள். இந்த மரத்தில் உள்ள பூவின் மணம், ரம்மியமானது. மனிதர்கள் இந்த மணத்தை நுகர்ந்தால், நரம்புகள் தூண்டப்பட்டுக் காமவயப்படுவார்கள்.

இந்தப் பூவின் மணம் யானைகளுக்குப் பிடிக்காது. எனவே, இந்த மரங்கள் உள்ள பகுதியில், யானைகள் எட்டிப்பார்க்காது. ஆனால், இந்த மரங்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள காட்டுப் பகுதியில் மதம் பிடிக்கும் நிலையில் உள்ள யானை சென்றுவிட்டால், அதன் வேகம் அதிகரித்துவிடும். மதம் உச்சகட்டத்துக்குச் சென்று, இந்த மரத்தை வேருடன் பிடிங்கி, எறிந்துவிடும்.

மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!

ஆக, இந்த மரத்தின் பூக்கள் இன்பம் தரும் மருந்தாகவும் அளவு கூடினால் விஷமாகவும் உருமாறும் சக்தி படைத்தவை. காம உணர்வினை தூண்டும் சக்தி படைத்த, இந்த மரத்துக்குப் பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி செல்லாமல் இருப்பதற்காகத்தான், மரத்தில் தீய ஆவிகள், பேய்கள் உள்ளன என்று சொல்லியுள்ளார்கள் என நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல, இந்த மரங்களின் அருகில் பெண்கள் சென்று, மரத்தைத் தொட்டுப் பார்த்தால் போதும், அடுத்த சில நாட்களில் மரங்கள் பூக்கத் தொடங்கிவிடும் எனவும் செவிவழிச் செய்திகள் உள்ளன. இப்படி ஏராளமான நம்பிக்கைகளும் புனைவுகளும் இந்த மரத்தை சுற்றி வருகின்றன. நவீன அறிவியல்படி, இந்த மரத்தை ஆய்வு செய்தால் பல அரிய தகவல்கள் கிடைக்கும்’’னு ஏழிலைப் பாலை மரத்தோட புகழை அருமையா சொல்லி முடிச்சார் அந்தப் பழங்குடித் தலைவர்.  தமிழ் இலக்கியத்துல கூட ஏழிலைப்பாலை பத்தின தகவல் பரவிக் கிடக்குது.

‘பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக, காத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது-ஓர் களிறு...’

என கம்பராமாயணம் சந்திரசயிலப் படலத்துல கம்பர் அழகா பாடி வெச்சிருக்காரு. அதாவது, மதவெறியால் யானை பாகனுக்கு அடங்காமல் அங்குசமும் நிமிர்ந்திட மதத்துக்கான மணம் வந்த வழியை நாடிச் சென்று, அங்குள்ள ஏழிலைப்பாலை மரத்தைப் பொடிப்பொடியாக ஆகுமாறு தன் முன்னங்கால்களால் தேய்த்ததுங்கிறதுதான், இந்தப் பாட்டோட பொருள்.

இன்னொரு கூடுதலான சம்பவமும், இந்தக் கருத்தரங்கு சமயத்துல நடந்துச்சி. கசங்கிப்போன வேட்டி சட்டையோட, ஒருத்தர் எல்லார்கிட்டேயும், மரம் வளர்ப்பு சம்பந்தமா, தெலுங்குல பாட்டுப் பாடிக்கிட்டிருந்தார். கூடவே, நம்ம ஊர் ‘மரம்’ கருணாநிதி மாதிரி மரக்கன்னுகளையும் அன்பளிப்பா கொடுத்துக்கிட்டிருந்தாரு. ஆனாலும், அவரைப் பெருசா யாரும் கவனிக்கலை. சிலபேரு, அந்த ஆளு மரம் மரம்னே அலைவார். மனநிலை சரியில்லாதவர்ன்னு வேற சொன்னாங்க. ஆனா, மனுஷன் ஆத்மார்த்தமா, ஓடி ஓடி மரக்கன்னுகளைக் கொடுத்துக்கிட்டிருந்தாரு.

மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!

மதியம், சாப்பாட்டு நேரத்துல பேச்சுக் கொடுத்தேன், ‘‘தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், ரெட்டிப்பள்ளி கிராமம்தான் சொந்த ஊர். என் முழுப்பெயர் தாரிப்பள்ளி ராமையா. விவசாய நிலம் கொஞ்சம் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் விவசாயத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள். நான் மரம் நடும் வேலையை முழு நேரமாகச் செய்கிறேன். என்னுடைய கனவு, ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்பதுதான்’’னு சொல்லிட்டு, அடுத்த ஆளுக்கு மரக்கன்னு கொடுக்கப் போயிட்டாரு.

சமீபத்துல நாளிதழ் படிக்கும்போது, ஒரு செய்தி கண்ணுல பட்டது... ‘தெலங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுச் சாதனை படைத்துள்ளார் ராமையா. இதற்காக இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது ராமையாவுக்கு வழங்கப்படுகிறது’னு இருந்துச்சு. ராமையா மாதிரியான ‘பச்சை மனுஷங்க’ளோட உழைப்பையும் உலகம் உற்றுப்பார்க்கிற நேரம் வந்துடுச்சுனு நம்பிக்கை முளைக்குது.