
வருமானம் கொடுக்கும் கலப்புப் பயிர்கள்! பயணம்துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.
ஒரு நாள் விவசாயிகளாக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள்... மருத்துவர் ரேவதி, தனியார் நிறுவன ஊழியர்கள் ஜோதி, யமுனா, தாமரை மணாளன், சரவணன் ஜெயக்குமார் மற்றும் நீலா, தனியார் வாகன ஓட்டுநர் ராஜா, ஐ.டி துறையைச் சேர்ந்த அருண் ஆகியோர். இவர்களை அழைத்துச் செல்ல நாம் தேர்ந்தெடுத்த தோட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ‘முன்னோடி இயற்கை விவசாயி’ பேரின்பனின் பண்ணைக்கு. இவர், கடந்த பத்து ஆண்டுகளாக முழுமையாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் இயற்கை விவசாயக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆலோசனைகள் அளித்தும் வருகிறார்.

காலை 9.30 மணியளவில் ஒரு நாள் விவசாயிகளோடு பேரின்பனின் பண்ணையை அடைந்தோம். ‘சற்று நேரத்தில் வந்து விடுவார்’ என்று சொன்ன பேரின்பனின் மனைவி, மூலிகைப் பானம் கொடுத்து உபசரித்தார். அனைவரும் குடித்து முடிப்பதற்குள் பேரின்பனும் வந்துவிட, ஒரு நாள் விவசாயிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.

அறிமுகப்படலம் முடிந்ததும், இயற்கை விவசாயம் குறித்துப் பேச ஆரம்பித்தார், பேரின்பன். “அதிக செலவில்லாம பண்ணையில இருக்கிற பொருள்களையே உரமா மாத்தி, மண்ணை வளப்படுத்திப் பயிர்களை விளைவிக்கிறதுதான் இயற்கை விவசாயம். இயற்கை விவசாயத்துல மண்புழு உரம் பயன்படுத்துறது ரொம்ப முக்கியம். இதைவிட ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துறதை நிறுத்திட்டாலே, நாம இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சிட்டோம்னு அர்த்தம். இயற்கை விவசாய முறைகளைச் சொல்லும்போது மலைப்பா தெரியும். ஆனா, செய்றது ரொம்ப சுலபம்” என்ற பேரின்பன் அனைவரையும் கொய்யாத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

கொய்யாவில் ஊடுபயிராக எலுமிச்சை நடப்பட்டிருந்தது. அதைக் கவனித்த ரேவதி, “ஏன் கொய்யாவையும் எலுமிச்சையையும் கலந்து நட்டிருக்கீங்க” எனக் கேட்டார்.
“விவசாயத்துல கலப்புப் பயிர் சாகுபடி ரொம்ப முக்கியம். மகசூல்ல ஒண்ணு கைவிட்டாலும் இன்னொண்ணு கைகொடுக்கும். அதேமாதிரி நோய்கள், பூச்சிகள் பரவாம இருக்கும்” என்று பதில் சொன்ன பேரின்பன், ஆளுக்கொரு மண் வெட்டியைக் கொடுத்து... “இப்போ குழி எடுத்து நடவு செய்யப்போறோம்” என்று சொல்லிக்கொண்டே ஒரு குழி எடுத்துக் காட்டினார். அதேபோல, ஒரு நாள் விவசாயிகளும் குழிகள் எடுக்க ஆரம்பித்தனர்.
“விதைப்புக்கு முன்னாடி நிலத்தை சரியான பக்குவத்துல தயார் செய்யுறது ரொம்ப முக்கியம். ஏக்கருக்கு 2 டன் மாட்டு எரு, உயிர் உரங்கள் எல்லாத்தையும் கலந்து தூவி உழுது விடணும். விதைக்கிறதுக்கு முன்னாடி விதை நேர்த்தி அவசியம். பயிருக்குத் தேவையான இடைவெளி விடணும். அப்போதான், சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் செடிகளுக்குக் கிடைக்கும்” என்று பேரின்பன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே... “குழிகள் ரெடி. அடுத்து என்ன செய்யணும்” என்று கேட்டார், யமுனா.

“அங்க இருக்கிற மாட்டு எருவையும் சாம்பலையும் எடுத்திட்டு வரணும். ரெண்டு பங்கு எரு, ஒரு பங்கு சாம்பல்னு கலந்து, ஒரு குழிக்கு ரெண்டு கிலோ அளவுல போட்டு மேல் மண்ணைக் கொண்டு மூடணும்” என்றவர், அதைச் செய்தும் காண்பித்தார். அதேபோல ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் ஆர்வமுடன் எருவையும் சாம்பலையும் கலந்து குழிக்குள் இட்டு, மண்ணைக் கொண்டு மூடினர்.
அவர்களிடம் சில விதைகளைக் கொடுத்து விதைக்கச் சொன்னார், பேரின்பன்.
“இதெல்லாம் என்ன விதை” என்று கேட்டார், ஜோதி.

“தர்பூசணி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம், காராமணி விதைகள்தான் இது. விதையோட நுனிப்பகுதி மேல்நோக்கி இருக்கிற மாதிரி விதைக்கணும். அப்போதான் வேகமா முளைக்கும்” என்று பேரின்பன் சொன்னவுடன், அனைவரும் குழிகளில் விதைகளை விதைத்தனர்.
விதைத்து முடிக்கும்போது உணவு வேளை நெருங்கிவிட்டது. ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் கைகால்களைக் கழுவிவிட்டு சாப்பிடத் தயாராகினர். வாழை இலையில் தங்கச்சம்பா அரிசிச் சோறு, கத்திரிக்காய் சாம்பார், வெந்தய ரசம், குதிரைவாலி தயிர் சாதம் என்று பரிமாறினார்கள். குதிரைவாலி தயிர் சாதத்தைச் சிலர் ஆச்சர்யத்துடன் பார்க்க... “இதுதான் நம்ம பாரம்பர்யம். ஆனா, இப்போ அதை அதிசயமா பார்க்கிறோம். நம்ம பாட்டன் காலத்துல சத்தான சாப்பாடு சாப்பிட்டாங்க. இப்போ சாப்பாடுங்கிற பேர்ல விஷத்தை சாப்பிடுறோம்” என்றார், பேரின்பன்.

சுவையான உணவை ஒரு பிடி பிடித்த ஒரு நாள் விவசாயிகள் சற்று ஓய்வெடுத்தனர். சிறிது நேரம் கழித்து அனைவரையும் அழைத்த பேரின்பன், “வாங்க, ஜீவாமிர்தம் தயாரிக்கலாம்” என்றார். உடனே அனைவரும் எழுந்து பேரின்பனோடு சென்றனர்.
“ஒரு கைப்பிடி நிலத்தோட மண், 2 கிலோ ஏதாவதொரு வகை பயறு மாவு, 2 கிலோ வெல்லம், 10 லிட்டர் நாட்டுப்பசு மூத்திரம், 10 கிலோ நாட்டுப் பசு சாணம் எல்லாத்தையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் டிரம்ல போட்டு நல்லா கலக்கணும். அதோட 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து டிரம் மேல வெயில் படாத மாதிரி நிழல்ல வைக்கணும். தினமும் இரண்டு தடவை இதை வலப்புறமாக ஒரு நிமிஷம் கலக்கி விடணும். இந்தக் கரைசல்ல இருக்கிற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வலச் சுற்றுலதான் நீந்திக்கிட்டு இருக்கும். அதனாலதான், அதோட போக்கிலேயே கலக்கணும். மாத்தி கலக்கினா நுண்ணுயிரிகள் இறந்துடும். இப்படி செஞ்சா மூணு நாள்ல ஜீவாமிர்தம் தயாராகிடும். இது கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் கலந்த கலவை. இதை, 15 நாளுக்கு ஒருமுறை பயிருக்குக் கொடுத்தா நல்ல மகசூல் கிடைக்கும்” என்றார், பேரின்பன்.
“ஜீவாமிர்தத்தைத் தெளிச்சு பூச்சிகளை விரட்ட முடியுமா” என்று கேட்டார், அருண்.
“இது வளர்ச்சி ஊக்கிதான். இருந்தாலும் இதைப் பயிர்ல தெளிக்கிறப்போ இந்த வாசனைக்குப் பூச்சிகளும் வராது. ஆனா, பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துறது ரொம்ப நல்லது. அடுத்து, இயற்கை விவசாயத்துல முக்கியமான மூடாக்கு பத்தி பார்ப்போம்” என்ற பேரின்பன் அதுகுறித்துச் சொல்லத் தொடங்கினார்.
“மண் மூடாக்கு, இலை மூடாக்கு, உயிர் மூடாக்குன்னு பல வகைகள் இருக்கு. மண் மூடாக்குங்கறது, கோடைக்காலத்துல செய்ற உழவு. இதனால மண்ணோட மேல் பகுதி மூடாக்காகச் செயல்பட்டு, மண்ணுல இருக்கிற ஈரப்பதத்தைக் காப்பாத்தும். கோடை மழை பெய்யும்போது மழை நீரைச் சேமிக்க உதவும்.
பயிரை நடவு செஞ்ச பிறகு, பாத்திகள்ல பயிருக்கு இடையில் காய்ந்த இலைதழைகள், வைக்கோல் மாதிரியான பண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் போடுறதுதான் இலை மூடாக்கு. இது களைகளை வளரவிடாம செய்யும். ஈரப்பதத்தையும் பாதுகாக்கும். அப்படியே மட்கி மண்ணுல உரமாகிடும். இந்த மாதிரி மூடாக்கு அமைச்சு தொடர்ந்து ஜீவாமிர்தம் பயன்படுத்துனா, மண்புழுக்கள் எக்கச்சக்கமாகப் பெருகும்.
அடுத்து உயிர் மூடாக்கைப் பார்ப்போம். தக்கைப்பூண்டு, சணப்பு மாதிரியான பயிர்களை விதைச்சு, அது ஓரளவுக்கு வளர்ந்ததும் பிடிங்கி, அப்படியே மூடாக்காகப் போடலாம். அதோட முதன்மைப் பயிருக்கு ஒத்த ஊடுபயிர்களை விதைக்கிறதும் உயிர் மூடாக்குதான். இதனால தழைச்சத்து மண்ணுல பெருகும். பயறு வகை தாவரங்கள், காத்துல இருக்கிற நைட்ரஜனை கிரகிச்சு மண்ணுல சேர்க்கும். அதனாலதான் இங்க பப்பாளிக்கு இடையில ஊடுபயிரா உளுந்து போட்டிருக்கேன். இதுமாதிரி எல்லா பயறு வகைகளையும் ஊடுபயிரா விதைக்கலாம். ஊடுபயிர்கள் மூலமா கூடுதல் வருமானமும் கிடைக்கும்” என்ற பேரின்பன், பப்பாளித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று உயிர் மூடாக்கைக் காட்டி விளக்கினார்.

தொடர்ந்து மாட்டு எருவை ஊட்டமேற்றும் முறை, வெட்டி வேர் நடவு செய்யும் முறை போன்றவற்றைப் பேரின்பன் விளக்கிக் கொண்டிருக்கும்போதே, தேநீர் வர, “இதைக் குடிங்க. அடுத்து மேட்டுப்பாத்தி கீரை சாகுபடி பத்தி சொல்லிக் கொடுக்கிறேன்” என்றார். அனைவரும் தேநீரைப் பருகிவிட்டு உடனடியாகத் தயாராயினர். “கீரை சாகுபடிக்கு இரண்டு உழவு போதும். உழுதுட்டு 2 அடி உயரம், 2 அடி அகலத்துல நீளமா பாத்தி எடுக்கணும். பாத்தியில் மாட்டு எரு, சாம்பல், இலைதழைகளைப் போட்டு மட்க விடணும்” என்ற பேரின்பன், உழவிலிருந்து நடவு வரை அனைத்தையும் செய்து காட்டினார்.
தொடர்ந்து அதேபோல ஒருநாள் விவசாயிகளும் மேட்டுப்பாத்தி அமைத்து கீரை விதைகளை விதைத்தனர். அனைவரும் விதைத்து முடிப்பதற்குள் சூரியன் மறைந்துவிட, பண்ணையிலிருந்து விடைபெற தயாராயினர், ஒரு நாள் விவசாயிகள்.
“நீங்க எப்போ வேணாலும் இந்தப் பண்ணைக்கு வந்து விவசாயத்தை முழுமையாகக் கத்துக்கலாம். உங்களுக்குச் சொல்லிக்கொடுக்க நான் தயாராக இருக்கேன். தயக்கமில்லாம வாங்க” என்று சொன்ன பேரின்பன், அனைவருக்கும் விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, பேரின்பன், செல்போன்: 99946 91021
பண்ணையின் சிறப்பம்சங்கள்
• 12 ஏக்கர் நிலம்.
• நெல், பழங்கள், சிறுதானியங்கள், வெட்டி வேர் சாகுபடி
• கலப்புப் பயிர் சாகுபடி
• நாட்டு மாடுகள், நாட்டுக்கோழிகள்
• இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு
ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!
“என்னோட கட்டுரையும் ஒரு நாள் வரும்”

ரேவதி, மருத்துவர்: “புது அனுபவம் கிடைச்சிருக்கு. விவசாயம் செய்யணும்னு ஆசையா இருக்கு. இனிமேலும் இயற்கை விவசாயத்துக்கு மாறலைன்னா, அடுத்த தலைமுறையைக் காப்பாத்த முடியாது.”

நீலா, சென்னை: “இயற்கை விவசாய முறைகளைக் கத்துக்கிறதுக்கான வாய்ப்பு இது. ரொம்ப நல்லா இருந்தது, இந்த விவசாய அனுபவம்.”

ஜோதி, தனியார் நிறுவன ஊழியர், சென்னை: “இதுக்குத்தான் இவ்வளவு நாளாக காத்துக்கிட்டு இருந்தோம். வயலில் வேலை செய்யறப்போதான் விவசாயியோட கஷ்டம் புரியுது” என்றார்.

யமுனா, தனியார் நிறுவன ஊழியர், சென்னை: “என்னோட தாத்தா காலத்துக்குப் போன மாதிரி இருந்தது. நான், கூடிய சீக்கிரத்துல விவசாயியா மாறிடுவேன். முறையான விவசாயத்தை அறிமுகப்படுத்தின பசுமை விகடனுக்கு நன்றி.”

ராஜா, வாகன ஓட்டுநர், சென்னை: “இந்த ஒரு நாள் ரொம்ப நல்லாவும் உபயோகமாவும் இருந்தது. ஜீவாமிர்தம் தயாரிச்சதும் மேட்டுப்பாத்தி அமைச்சதும் எனக்கு நல்ல அனுபவம்.”

தாமரை மணாளன், செங்கல்பட்டு: “புத்தகத்துல மட்டுமே படிச்ச இயற்கை விவசாயத்தை நேரடியாகப் பார்க்க முடிஞ்சது. வாய்ப்பு கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி”

அருண், ஐ.டி ஊழியர், சென்னை: “மதுரைதான் சொந்த ஊர். எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். ஆனாலும், நேரடியாக வயலுக்கெல்லாம் போய்ப் பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு நாள் வயல்ல இறங்கினதே ஆனந்தமா இருக்கு.”

சரவணன் ஜெயக்குமார், தனியார் நிறுவன ஊழியர், சென்னை: “எனக்கு இந்தப் பயிற்சி கிடைச்சது சந்தோஷமா இருக்கு. சீக்கிரமா இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கப்போறேன். அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக்கே வந்தேன். கண்டிப்பா பசுமை விகடன்ல என்னோட விவசாயம் பத்தின கட்டுரையும் ஒரு நாள் வரும்.”
நீங்களும் ஒரு நாள் விவசாயி ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே
044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி
வரை. சனி, ஞாயிறு விடுமுறை)
மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.