
ஓவியம்: ஹரன்
புதிதாய் வாங்கிய குதிரை வண்டியில், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் தோட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர். குறுக்கு வழியில் வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவைப் பார்த்தவுடன் வண்டியை ஓரங்கட்டினார், ஏரோட்டி. காய்கறியும் வண்டியில் ஏறிக்கொள்ள, பேசிக்கொண்டே தோட்டத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார், ஏரோட்டி.

“என்னய்யா வண்டியெல்லாம் புதுசா இருக்கு...” என்று கேட்டார், காய்கறி.
“ஈரோட்டுல நடந்த கால்நடைக் கண்காட்சியில் வாங்கினேன். எத்தனை நாள்தான் மாட்டு வண்டியிலேயே போறது, இனிமே குதிரை வண்டியில் போவோம்” என்றார், ஏரோட்டி.
“அதுவும் சரிதான்” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கொரு தர்பூசணித் துண்டை எடுத்துக் கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.
“கிடக்குறது கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில வைன்னு சொல்ற மாதிரி, அ.தி.மு.க எம்.ஏல்.ஏ-க்கள் ஓட்டுப் போட்ட மக்களை மறந்துட்டு, கூவத்தூர்ல ரெண்டு வாரம், கூத்தடிச்சுக்கிட்டிருந்தாங்க. நாட்டுல ஏராளமான பிரச்னைகள் இருக்கும்போது, இப்படி கும்மாளம் போட்டவங்களை மக்கள் மறக்க மாட்டாங்க. நம்ம திருப்பூர் மாவட்டத்துல அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைக் கொண்டு வர்றதுக்காகக் கிட்டத்தட்ட அறுபது வருஷமா அந்தப் பகுதி மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு தேர்தல்லயும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுக்கிறதோட சரி... இன்னைக்கு வரைக்கும் அந்தத் திட்டம் வந்தபாடில்லை. அந்தப் பகுதி மக்கள் இலவு காத்த கிளியாட்டம் காத்துக்கிட்டு இருக்காங்க. ரெண்டு மூணு வருஷமாவே கடுமையான வறட்சி நிலவுறதால, அவினாசி பகுதிகள்ல நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு. 1,500 அடி ஆழத்துக்குப் போர்வெல் போட்டாலும் தண்ணி கிடைக்கிறதில்லை.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியா நிறைவேத்தணும்னு போன வருஷம் போராட்டத்தை ஆரம்பிச்சாங்க. அப்போ 12 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துச்சு. அதையடுத்துத் திட்டத்தை நிறைவேத்த மூன்று கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கி ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துச்சு. ஆனா, அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியும் துரும்பைக்கூட நகர்த்தலை. அதனால, இப்போ திரும்பவும் மக்கள், போராட்டத்தைத் துவக்கியிருக்காங்க. குழந்தை, குட்டிகளோட குடும்பம் குடும்பமா மக்கள் கூட ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கூடி, உண்ணாவிரதம் உக்காந்துட்டாங்க.
உள்ளூர் அரசியல்வாதிகள், அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், விவசாயச் சங்கத்துக்காரங்கன்னு எல்லாரும் மக்களோட சேந்துக்கிட்டாங்க. ‘ஏப்ரல் 24-ம் தேதிக்குள்ள நிதி ஒதுக்கி, வேலைகளை ஆரம்பிக்கணும். இல்லாட்டி மே
1-ம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதம் நடத்துவோம்’னு அறிவிச்சிருக்காங்க, போராட்டக்காரர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த எழுச்சி இந்தப் போராட்டத்துக்கும் கிடைச்சிருக்கு. அரசியல், சாதி, மத, இனம் எல்லாத்தையும் கடந்து அங்கே கூடுன மக்கள்... ‘வேண்டும், வேண்டும்... அத்திக்கடவு நீர் வேண்டும்’னு ஒரே கோஷத்தைத்தான் எழுப்பிட்டு இருந்தாங்க. ரொம்பப் பிரமிப்பா இருந்துச்சு. ஆனா, அரசாங்கம்தான் அதைக் கண்டுக்கவே இல்லை. புதுசா பதவியேத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதைப்பத்தி ஒரு அறிக்கைகூட விடலை. அதனால ரொம்ப வருத்தத்துல இருக்கிறாங்க அவினாசிப் பகுதி மக்கள்” என்று வாத்தியார் சொல்லி முடிப்பதற்குள் தோட்டம் வந்து சேர்ந்துவிட்டது, குதிரை வண்டி.
குதிரையை அவிழ்த்துக் கட்டி, அதுக்குக் கொஞ்சம் குதிரை மசால் தீவனத்தைப் போட்டார் ஏரோட்டி. உடனே அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார் வாத்தியார்.
“எப்பவுமே செழிப்பா இருக்கும் கோயம்புத்தூர் பகுதியிலயும் இப்போ வறட்சி தாண்டவமாடுது. கோயம்புத்தூருக்கு மேற்குப்பக்கம் சிறுவாணி அணை, நொய்யலாறு இருக்கு. வடக்குப்பக்கம் பவானி, பில்லுார் அணை இருக்கு. தெற்குப்பக்கம் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறுன்னு நீராதாரங்கள் இருக்கு. ஆனா, பருவ மழை பொய்த்துப்போய் இந்த நீராதாரங்கள் வறண்டு கிடக்கு. இதனால, கோயம்புத்தூர் மாவட்டத்துல கடுமையான வறட்சி நிலவுது. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போயிடுச்சு. அதனால, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துல போட்டிருந்த பயிர்கள் கருகிப்போயிடுச்சு. பல வருஷம் பலன் கொடுத்துட்டு இருந்த தென்னை, பாக்கு மரங்கள்கூட கருகிகிட்டு இருக்கிறதால விவசாயிகள் கடும் விரக்தியில் இருக்கிறாங்க. ஆடு மாடுகளுக்குக் கூட குடிக்கத் தண்ணியில்லை.
இந்த நிலைமையில் மாவட்ட நிர்வாகம் கூட்டம் போட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்துல புதுசா போர்வெல் போடுறதுக்குத் தடை விதிச்சிருக்காங்க. ‘அடுத்து மழை பெய்ஞ்சு நிலத்தடி நீர்மட்டம் உயர்ற வரைக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்துல, தனிநபர் பயன்பாட்டுக்கோ விவசாயத்துக்கோ எங்கேயும் போர்வெல் போடக்கூடாது’ன்னு அறிவிச்சிருக்கு மாவட்ட நிர்வாகம். ஆனா, ஏற்கெனவே இருக்கிற போர்வெல்களைப் புதுப்பிச்சுக்கலாம்னு சொல்லியிருக்காங்க” என்றார் வாத்தியார்.
“மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினம். இதை முன்னிட்டு, விவசாயத்துல பெண்களோட பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக பசுமை விகடன் இதழைப் பெண்கள் சிறப்பிதழாக கொண்டு வந்திருக்காங்க” என்று காய்கறி சொல்லி முடிக்கும் நேரத்தில்,
‘மும்முனை மின்சாரம் வந்துவிட்டது’ என ஏரோட்டியின் செல்போனில் குறுஞ்செய்தி வர... “மோட்டாரைப் போட்டு விட்டுட்டு வந்திடுறேன்” என்று எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
வறட்சி நிவாரணம் ரூ.2,247 கோடி ஒதுக்கீடு!

விவசாயிகளுக்கு ரூ. 2,247 கோடி பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அறிவித்துள்ளார். அறிவிப்பின் சிறப்பம்சங்கள் இங்கே...
வறட்சி குறித்த கள ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 16,682 வருவாய் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூ.2,247 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. வேளாண் பயிர் சாகுபடி செய்த 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான 46,27,142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.2,049 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தோட்டப்பயிர் சாகுபடி செய்த 3,27,398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4,04,326 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு ரூ.197 கோடியும் பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.1 கோடியும், ஆக மொத்தம் ரூ.2,247 கோடி வேளாண் இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465, மானாவாரிப் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000, நீண்டகாலப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287 மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428 லிருந்து ரூ.3,000 வரையிலும் இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும்.
இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 லட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்துக்கு ஏற்றவாறும் பயிர் இழப்புக்கு ஏற்றவாறும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாக பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய முடிய, இந்தக் காப்பீட்டுத் தொகையைக் காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.