மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

ஆவாரை... சர்க்கரை நோய்க்கு அருமருந்து!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் ‘ஆவாரை’ எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

நமது தமிழகச் சூழலில் எத்தனையோ மூலிகைகள் காணப்பட்டாலும், காண்போர் மனதையும் கண்களையும் தன் பொன்னிறப் பூக்களால் கொள்ளை கொள்ளும் மூலிகை, ஆவாரை மட்டுமே. எவ்வளவு வறட்சியிலும் காய்ந்து போகாத அற்புத சக்தி உடைய ஆவாரை, பல்லாண்டு வாழக்கூடிய ஒரு புதர்த் தாவரம். யாரும் இதை நட்டு வைத்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தரிசு நிலமெல்லாம் தானாகவே முளைத்து வளரும் இயல்புடையது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. இவை ஐந்தையும் சேர்த்துப் பயன்படுத்துவதை ‘ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்பார்கள்.

ஆவாரையின் தாவரவியல் பெயர் கேஸ்ஸியா ஆரிகுலாட்டா (CASSIA AURICULATA). வாகன வசதிகள் இல்லாத பழங்காலங்களில் நடந்தேதான் செல்ல வேண்டியிருக்கும். அப்படிச் செல்லும்போது வெயிலைச் சமாளிக்க... ஆவாரை இலைக் கொத்தைப் பறித்துத் தலையில் வைத்து, அதன் மேல் தலைப்பாகை கட்டிக் கொள்வார்கள். இப்படிச் செய்யும்போது வெயிலின் தாக்கம் தலையில் இறங்காமல், தலை குளுகுளுவென இருக்கும். இதனால் உடலில் சூடு ஏறாது. தற்போதும் கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள் இதுபோலச் செய்வதைப் பார்க்க முடியும்.

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

முற்காலங்களில் அரச குடும்பத்தினர், ஜமீன்தார் குடும்பத்தினர் தெருக்களில் நடக்க மாட்டார்கள். பல்லக்கில்தான் பயணிப்பார்கள். இப்படி உடலுழைப்பே இல்லாத அரச குடும்பத்தினருக்குத்தான் அக்காலங்களில் சர்க்கரை வியாதி என்று சொல்லப்படும் ‘மதுமேக நோய்’ வந்தது. அதனால்தான் இந்நோயை சித்த மருத்துவத்தில் ‘ராஜ நோய்’ என்று பதிவு செய்துள்ளனர். தற்போது ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்றான பிறகு, பரவலாக அனைவருக்குமே ராஜ நோயும் வந்துவிட்டது.

இப்படி இந்நோய் பரவலானதால், இந்நோய்க்கான மருத்துவக் குறிப்பு சொல்பவர்களும் பெருகிவிட்டனர். தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் சர்க்கரை நோய்க்குப் பல விதமான ஆலோசனைகள் இலவசமாக வலம் வருகின்றன. ‘பாகற்காய் அவித்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும். வெண்டைக்காயின் பிசுபிசுப்பை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும். சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரைகொல்லிப் பொடி சாப்பிட்டால் சர்க்கரை நோய் முற்றிலுமாகக் குணமாகும்...’ என்ற ரீதியில் ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இவை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

சர்க்கரை நோய்க்குச் சித்தமருத்துவம் பதிவு செய்து வைத்துள்ள ஒரே மூலிகை ஆவாரை மட்டும்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். மற்ற மருந்துகள், மூலிகைகள் ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு அறிகுறிக்கு உரியவைதான். அதாவது, துணை மருந்துகள்தான். அவை சர்க்கரை நோய்க்கு மருந்தாகாது.

‘சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த இயலுமா?’ என்று கேட்பவர்களுக்கு இப்பாடல் வரிகள்தான் பதில்.

‘ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங்கோட்டம்
 
மேவிய மருதந் தோலும் விரைந்துட றொக்கக்கொண்டு
 
பூவிரி குழலினாளே! பொருந்தவே தன்னையுண்ணக்
 
காவிரி நீரும் வற்றிக் கடல்நீரும் வற்றுந்தானே...’
        
- தேரன் குடிநீர்-100


‘ஆவாரைப் பஞ்சாங்கம், கொன்றைப்பட்டை, நாவல்பட்டை, கடலழிஞ்சிப்பட்டை (பொன்கொறண்டி அலைகடல்), கோரைக்கிழங்கு (முத்தக்காசு), கோட்டம், மருதம்பட்டை ஆகிய ஏழு மருந்துப் பொருள்களை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து... அதனுடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 1 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிக் குடித்து வர, இனிப்பு நீரும் (காவிரி நீர்) உப்பு நீரும் (கடல் நீர்) முற்றிலுமாகக் குணமாகும்’ என்பதுதான் இப்பாடலின் பொருள்.

சர்க்கரை நோய் என்று கணித்துவிட்டு மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயாளிகளிடம் இந்த ஆவாரைக்குடிநீரை மூன்று மாதங்கள் வரை குடிக்கக் கொடுத்து, நோய் முற்றிலும் குணமாவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். சித்த மருந்துகளின் சிறப்பே மருந்துகளிலுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துப் பொருள்களின் கூட்டு மருந்து சக்திதான் (synergy).

சர்க்கரை நோயால் பாதிக்கப் படாதவர்களுக்கு உடற்கட்டு குலையாது. எப்போதும் ஒரே உடலமைப்புடன் இருப்பவர்களை ‘அன்று பார்த்தது போலவே இன்றும் கட்டுவிடாமல் இருக்கிறார்’ என்று கூறுவார்கள். இந்தக் கட்டு என்பது, சித்தமருத்துவம் கூறும் ஏழு உடற்கட்டுகளாகும். சாரம், செந்நீர் (ரத்தம்), ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு உடற்கட்டுகள் சேர்ந்துதான் மனித உடல் அமைந்துள்ளது. சர்க்கரை நோய், இந்த ஏழு உடற்கட்டுகளையும் உருக்குலையச் செய்யும் நோய் என்று, ‘தேரன் சித்தர்’ அவரது ‘தேரன் மருத்துவப்பாரதம்’ எனும் நூலில் எழுதியுள்ளார்.

ஆவாரைக் குடிநீர் இந்த ஏழு உடற்கட்டுகளையும் வலிமைப்படுத்தும் தன்மையுடையது. இவற்றையெல்லாம் தாண்டி, நோயின் வன்மை அதிகமானால், ‘வேர் பாரு, தழை பாரு, மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே’ எனும் சித்தர் கொள்கைப்படி இரும்பு, வங்கம், நாகம், தங்கம் முதலான உலோகங்களால் முறையாக முடிக்கப்பட்ட பற்ப, செந்தூர மருந்துகளைக் கொடுத்து வர, மதுமேகம் முழுமையாகக் குணமாகும். (ஆவாரைக் குடிநீர் தயாரிக்க வாய்ப்பில்லை என்றால், அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மதுமேக சூரணத்தையும்கூட பயன்படுத்தலாம்.

ஆவாரைக் குடிநீரில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருளுமே ஒவ்வொரு விதமான பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளன. இவை, நீடித்த சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கல்களான நரம்பு மண்டல பாதிப்பு, தோல்பாதிப்பு, அதி ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவற்றை வர விடாமல் செய்கின்றன.

கொன்றைப்பட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் தோல் பாதிப்புகளைத் தடுக்கும். நாவல்பட்டை அதிக தாகம், அதிகப் பசி ஆகியவற்றைக் குணமாக்கும். கடலழிஞ்சி என்பது காடுகளில் வளரும் ஒரு மரத்தின் பெயர். இதன் பட்டை பொன்னைப்போல் இருப்பதால் இது ‘பொன்கொறண்டி’ என அழைக்கப்படுகிறது. இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். மருதம்பட்டை இருதயத் தசைகளுக்கு வலுவைக் கொடுத்து இருதய அடைப்பு முதலான நோய்கள் வராமல் தடுக்கும். கோரைக்கிழங்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும்.

நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளும் இந்தக் குடிநீரைக் குடிக்க ஆரம்பித்தவுடன் பாதிப்புகளிலிருந்து முழுமையாக விடுபட்டு வருவது கண்கூடான உண்மை. சர்க்கரை நோயில் காணப்படும் அதிமுக்கிய அறிகுறிகளான அதிக தாகம், அதிகப் பசி, அதிமூத்திரம், எடை இழப்பு ஆகிய அனைத்தும் இக்குடிநீர் குடிக்கத் தொடங்கிய உடனே மறைந்துவிடும். இம்மருந்தை எடுத்துக் கொள்வதோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். உடலுழைப்பு குறைந்து, நடப்பதும் குறைந்து போனதுதான் சர்க்கரை நோய்க்கு முக்கியக் காரணம். அடுத்தது மாறிப்போன உணவுப்பழக்கம். இவை இரண்டையும் சரியாகக் கடைப்பிடித்தால் சர்க்கரை நோயிலிருந்து மீண்டு நெடுநாள் வாழ முடியும். இதைத்தான் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ’ என சித்தர்கள் பாடி வைத்துள்ளார்கள்.

பொன்னாவாரை, சுடலாவாரை, நில ஆவாரை ஆகியவற்றைப் பற்றி அடுத்த இதழில்…

- வளரும்

சிறுநீரக வியாதிகளுக்கு ஆவாரை

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

வாரை இலைகளைப் பறித்துப் பச்சையாக அரைத்து, தலை மற்றும் உடலில் பூசிக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும். இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்தும் குளிக்கப் பயன்படுத்தலாம். பெண்களுக்குச் சூட்டு வயிற்று வலி வரும் சமயத்தில், ஆவாரை இலைகளை அடிவயிற்றில் வைத்துக் கட்டினால் அல்லது முடிந்து வைத்தால் வலி குறைந்து, சிறுநீர் நன்கு பிரியும்.

ஆவாரம் பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்துக் குடிநீராகக் காய்ச்சிக் குடிக்கலாம். இப்பூவை வாழைப்பூவைச் சமைப்பதுபோல, கூட்டுக்கறியாகவோ அல்லது சிறுபருப்பு சேர்த்துக் குழம்பு வைத்தோ சாப்பிடலாம். இப்படிச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

ஆவாரம்பூப்பொடியை காலை, மாலை உணவுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துத் தண்ணீர், வெந்நீர், பால் இவற்றில் ஏதாவதொன்றில் கலந்து குடித்து வந்தால்... அதிகமான உடற்சூடு, வியர்வை நாற்றம், உடலில் உப்புப்பூத்தல், உடல்வறட்சி ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், ஆண்களுக்குச் சிறுநீருடன் விந்து வெளியாதல் போன்ற நோய்களும் குணமாகும்.

ஆவாரை விதைகளை எடுத்து அரிசிக்கஞ்சி போலக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்துவந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் சோர்வு மாறும்.

ஆவாரம்பட்டை, ஆவாரம் வேர்ப்பட்டை இரண்டுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 30 கிராம் ஆவாரம் வேர்ப்பட்டைப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராக வற்றும் வரை கொதிக்க வைத்துப் பிளாஸ்க்கில் வைத்துக் கொண்டு... ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் குடித்து வந்தால், ரத்தத்தில் கிரியேட்டினின் மற்றும் யூரியா அளவு குறையும். டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.

ஆவாரம் வேர்ப்பட்டை, எள்ளுப்பிண்ணாக்கு முதலிய பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஆவாரை லேகியம், சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக் குறைவு மற்றும் உடல் பலக்குறைவு ஆகியவற்றைக் குணமாக்கும். ஆவாரம்பட்டைப் பொடியை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பூசினால், தோல் வறட்சி, வெடிப்பு முதலியன குணமாகும்.

பொன்னிறம் கொடுக்கும் ஆவாரை

நல்மருந்து -  தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12

‘ஆவாரம்பூப் பொடியை, தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகள் உண்டால், உடலின் நிறம் பொன்னிறம் ஆகும்’ எனத் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் கோமதிநாயகம் சொல்கிறார். அவருடைய ஊரில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மரபு வழி மருத்துவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் உடலும் பொன்னிறமானதாகக் கூறுகிறார். இது சிந்தனைக்குரிய விஷயம். ஆவாரம் பூக்கள் பொன்னிறத்தில் இருப்பதாலும், மனித உடலைப் பொன்னிறமாக ஆக்குவதாலும் வட நூலார் இதை ‘ஹேம புஷ்பி’ என்று அழைக்கிறார்கள். ஹேமம் என்றால் தங்கம் என்று பொருள்.

அது, அனுபோகம்!

டந்த இதழில் வல்லாரைக்குத் தனி நூல், எழுதிய அப்துல்லா சாகிப் என்ற சித்த மருத்துவ அறிஞர் பற்றி இடம்பெற்றிருந்த செய்தியில், அவர் எழுதிய நூலின் பெயர் ‘அரைபோக வைத்திய நவநீதம்’ என தவறாக இடம் பெற்றுவிட்டது. ‘அனுபோக வைத்திய நவநீதம்’ என்பதே சரி.
 
பாலை நிறுத்தும் ஆரை!


டந்த இதழில் ‘ஆரை இலையை, கீரைபோல சமைத்து உண்டு வந்தால், அதிகப்படியான தாய்ப்பால் சுரப்புப் பிரச்னைக் கட்டுப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தேன். இந்தக் கீரை பால் சுரப்பை நிறுத்தும் தன்மை கொண்டது. பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் சுரப்பைக் கட்டுப்படுத்தவேண்டிய நிலையிலிருக்கும் பெண்கள் இந்த ஆரை இலையைப் பயன்படுத்தலாம் என்பதை கூடுதல் தகவலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- மைக்கேல் செயராசு