
சுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்
உலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழ்ந்துபோகும் கரியமில வாயுவை, சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.
எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

‘ஆலமரம் போல நீ வாழ அங்கு
ஆயிரம் பறவைகள் இளைப்பாற’ - இது கவிஞர் வாலி எழுதிய பாடலில் இடம்பெற்ற வரி. ஆம்... ஓர் ஆலமரம், உண்மையில் ஆயிரக்கணக்கான பறவைகளுக்குக் குடியிருப்பாகிறது. நவீன மனிதன் அடுக்குமாடியில் குடியேறியது சமீபகாலமாகத்தான். ஆனால், பறவைகள் பன்னெடுங்காலமாக ஆலமரம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் வசிக்கின்றன. எள்ளைவிட, சிறிய விதையில் இருந்து பிரமாண்டமான ஆலமரம் உருவாவது இயற்கையின் பேராற்றல். மரங்களில் பெரியதும், பிரமாண்டமானதும் ஆலமரம்தான். அதனால்தான் நமது தேசிய மரமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது இது.
இதன் தாயகம் இந்தியா. தாவரவியலாளர்கள் வங்காளதேசத்தில் அதிகளவில் ஆலமரங்களைக் கண்டதால், இதன் தாவரவியல் பெயரில், ‘பெங்கலன்சிஸ்’ என்பதைச் சேர்த்து ‘ஃபைகஸ் பெங்கலன்சிஸ்’ எனப் பெயரிட்டனர். பெங்கலன்சிஸ் என்பது வங்காளத்தைக் குறிப்பதாகும். வங்காள மொழியில் சிறு வியாபாரிகளைப் பனியாக்கள் என அழைப்பார்கள். இப்போது போல கட்டடங்கள், கடைகள் இல்லாத அந்தக்காலத்தில், பனியாக்கள் ஆலமரத்தின் அடியில்தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் இதனைப் பனியாக்களின் மரம் என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, ஆங்கிலேயர்கள் ‘பான்யன் ட்ரீ’ (Banyan Tree) எனக் குறிப்பிட்டார்கள். இதன் மூலம், பான்யன் என்ற சொல் ஆங்கிலத்தில் நுழைவதற்குக் காரணமாக அமைந்தது, ஆலமரம்.
பரந்து விரிந்து குடைபரப்பி நிற்கும் ஆலமரத்தைப் பார்த்து மாவீரன் அலெக்ஸாண்டர் வியந்து போனதாகச் சொல்கிறது வரலாறு. ஏழாயிரம் படைவீரர்களுடன் அவன், ஆலமர நிழலில் தங்கியதாகப் படிக்கும்போது, ஆலமரத்தின் பிரமாண்டம் கண்முன்னே விரிகிறது. அந்தக் காலத்தில் பெரும்படைகள் தங்கி ஓய்வெடுக்க ஆலமரத்து நிழலையே அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

‘தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர் கிருக்க நிழலாகுமே’ என்கிறது, வெற்றி வேட்கை.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆலமரமாவது நிச்சயம் இருக்கும். அந்த மரத்தின் கீழ்தான் பஞ்சாயத்து உள்ளிட்ட ஊர் கூட்டங்கள் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள், பண்டையத் தமிழர்கள். சாலையோரங்களில் புளியமரங்களும் ஆலமரங்களும் நிழல்பரப்பி, பசுமைக் குடை பிடித்து நின்ற காட்சி, இன்றைக்கும் மனதில் சித்திரமாகத் தங்கி இருக்கிறது. சாலை விரிவாக்கம், நான்கு வழிச்சாலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை அழித்துவிட்டோம். அவற்றில் ஆலமரங்களும் அடக்கம். கிராமங்களில்கூட இன்றைக்கு ஆலமரங்களைப் பார்ப்பது அதிசயமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமமும் தற்சார்பு வாழ்க்கைதான் வாழ்ந்தன. நாகரிகம் என்ற பெயரில் நுழைந்த நுகர்வுக் கலாசாரம், தற்சார்புக்கு ஆப்பு வைத்துவிட்டது.

பல் துலக்க ஆல், தலைக்கு அரப்பு என்ற தற்சார்பு பொருள்கள் இருந்த இடத்தைப் பேஸ்டும் ஷாம்புவும் ஆக்கிரமித்துக் கொண்டன. கார்ப்பரேட் கம்பெனிகளின் தயாரிப்புகள், உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா... கரி இருக்கிறதா? எனக் கேட்கின்றன. இதைத்தானே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
பேஸ்ட், பிரஷ் இரண்டும் ஒரே பொருளில் கிடைக்கும் அற்புதம் ஆலங்குச்சி. இலவசமாகக் கிடைக்கும் ஆலங்குச்சியால் பல் விளக்கும்போது, அதிலுள்ள பாலும், துவர்ப்புச் சுவையும் ஈறுகளை வலுப்படுத்துவதுடன், கிருமிகளை அழித்து, பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருந்தன. ஆனால், இன்றைக்கு நாம் விலை கொடுத்து வாங்கும் பேஸ்ட், பிரஷ்களால் கொடுக்க முடியாத ஆரோக்கியத்தை அள்ளித் தந்த ஆலங்குச்சிகளை அடுத்தத் தலைமுறை குழந்தைகளுக்குச் சொல்லித் தர மறந்து விட்டோம்.
இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், நாலைந்து ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சிகளை ஒரு கவரில் அடைத்து, அதற்கொரு விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். ‘ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்ற வேண்டும்’ எனப் புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்கள். வாழ்த்துவதற்கு எதற்காக ஆலமரத்தை குறிப்பிட வேண்டும் என யோசிக்கலாம். ஆலமரம் பல நூறாண்டு காலம் வாழ்வதோடு மட்டுமல்லாமல், பல விழுதுகள் மூலமாக, ஒன்றையொன்றை தாங்கும் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்துகிறது. ஓர் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. அதுபோல மணமக்கள், நீண்ட காலம் அனைத்து உறவுகளோடும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வாழ்த்தும்போது ஆலமரத்தைக் குறிப்பிட்டார்கள்.
கம்போடியா நாட்டிலுள்ள அங்கோர்வாட் கோயில் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள ‘வாட்’ என்பது வட என்ற சமஸ்கிருத சொல்லின் சுருக்கம். வட என்றால் ஆலமரம் என்று பொருள். ஆண்டாளும் பெரியாழ்வாரும் வணங்கியதாகச் சொல்லப்படும் ‘வடபத்ரசாயி’ என்பது ஆலமரக் கடவுளாகும்.
தற்போது உலகெங்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது, ஆலமரம். சூரியனின் வெப்பக்கதிர்கள் பூமியைத் தாக்காதவாறு இதன் அகன்ற இலைகள் தடுக்கும். அதோடு, மழைமேகங்களைக் கவர்ந்து இழுத்துவரும் பசுமைப் படிகட்டுகளாக விளங்குபவை, ஆல் போன்ற பால் வரும் மரங்கள். ஆலமர விழுதின் நுனியில் ‘அசிட்டோ ஃபாக்டர்’ என்ற நுண்ணுயிர் உள்ளது. இது ரைசோபியம், அசோஸ்பைரில்லம் போன்று பயிர் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு நுண்ணுயிர். இந்த நுண்ணியிர்தான் காற்றிலுள்ள நைட்ரஜனைக் கிரகித்து ஆலமரம் செழித்து இருக்க உதவுகிறது.
இயற்கை விவசாயம் செய்பவர்கள் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இடுபொருள்களைத் தயாரிக்கும்போது அதனுடன் ஆலமர விழுதின் நுனியையும் அரைத்துப் பயன்படுத்தினால், சிறப்பான பலன் கிடைக்கும். இத்தனை சிறப்புகள் உள்ள ஆலமரங்களைப் பொது இடங்களிலும் கண்மாய், குளக்கரைகளிலும் நட்டு வைத்தால்... இலவச ஆக்சிஜன், பல்துலக்க குச்சி, இயற்கை விவசாயத்துக்கு விழுது ஆகியவை கிடைப்பதோடு, மருத்துவக் குணமுடைய பால், பழம், இலை, விழுது ஆகியவையும் கிடைக்கும். அதோடு, ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து அமர்வதால், பல்லுயிர் பெருக்கமும் பராமரிக்கப்படும் என்பதில் ஐயமேயில்லை.
பண்டைய தமிழர்களுக்கு வெளிச்சமாகவும், சமையல் எண்ணெய் தரும் தாவரமாகவும் இருந்த இலுப்பை மரம் பற்றி அடுத்த இதழில்...
- வளரும்
வளர்க்கும் முறை
ஆலமரம், கடினமான களிநிலங்களைத் தவிர மற்ற அனைத்துப் நிலங்களிலும் வளரும். பறவைகளின் எச்சங்கள் மூலமாக இது பரவுகிறது. விதையில் இருந்து வளர நீண்ட நாள்கள் ஆகும். ஆனால், ஓரளவுக்கு வளர்ந்த பிறகு வேகமாக வளரும் தன்மை கொண்டது, இம்மரம். இதைப் பொது இடங்களிலும் இட வசதி இருப்பவர்கள் வீடுகளிலும் நட்டு வளர்க்கலாம். இது குளிர்ச்சியைக் கொடுக்கும் மரம். ஒரு ஆலமரம் இருந்தால் ஓசியில் ‘ஏசி’ கிடைத்தது போல இலவசமாகக் குளிர்ச்சியை அனுபவிக்கலாம்.
இதை நாற்று, போத்துகளாக நடலாம். போத்துகளை நடவு செய்ய ஐந்து அடி நீளக்கொம்புகளை வெட்டி, ஒன்றரை அடி ஆழத்தில் குழியெடுத்து அதில் நடவு செய்ய வேண்டும். மழைக்காலங்களில் நடவு செய்யும் போத்துகள் வேகமாக வளரும். செடியாக நட விருப்பமுள்ளவர்கள், நர்சரிகளிலோ அல்லது வனத்துறை அலுவலகங்களிலோ வாங்கி நடவு செய்யலாம்.
அற்புதமான கால்நடைத் தீவனம்
ஆலமரம் வெப்பமண்டல தாவரம். மற்ற மரங்களைப்போல கோடைக்காலத்தில் இலைகளை ஒரேடியாக உதிர்க்காது. ஒருபுறம் இலைகள் உதிர்ந்து வரும்போதே மறுபுறம் பளபளவெனப் புது இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும். அதனால் ஆலமரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்.
ஆடு மாடுகளுக்கு இதன் இலைகள் அற்புதமான தீவனம். ஆல இலைகளை இணைத்துத் தைத்து... சாப்பாடு உண்ணப் பயன்படுத்தலாம். ஆலம்பால் அற்புதமான மருத்துவக் குணங்களை உடையது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆலம்பாலில் ஆண்மைக்கான மருந்து இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை வேத விற்பன்னர்களும் முனிவர்களும் மேற்கொண்டதாகச் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆல் இலைகளை அரைத்து, உடலில் தோன்றும் கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறும். ஆறாத புண்களால் அவதிப்படும் நீரிழிவு நோயாளிகள், ஆலம்பாலை புண்களின் மீது தடவினால் ஆறாத புண்ணும் ஆறும். ஆழம்பழத்தை பொடிசெய்து, சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
Ficus Benghalensis தாவர குடும்பத்தைச் சேர்ந்தது, ஆலமரம். இது அத்தி வகையைச் சேர்ந்ததால் ஃபைகஸ் எனக் குறிப்பிடப்படுகிறது.