மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!

மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும்  விவசாய முதலமைச்சரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மெரிக்காவில் உள்ள நண்பர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தகவலை அனுப்பியிருந்தார். ‘அமெரிக்காவில் 1980-களில் ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) ஒரு தீவிர விவசாயி. அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவர் தனது பண்ணையில் நிலக்கடலை, மக்காச்சோளம் சாகுபடி செய்ததுடன், பொதுநல சேவையும் செய்துவந்தார். உலகின் அதிகாரமிக்க அமெரிக்கக் ஜனாதிபதியாக பணியாற்றியபோது, கிடைக்காத மனநிறைவும் மகிழ்ச்சியும் என்னுடைய பண்ணையில் இறங்கி நடக்கும்போது கிடைக்கின்றன...’ என்று அடிக்கடி சொல்லி வருகிறார். தற்போது 90 வயதைக் கடந்துவிட்ட ஜிம்மி கார்ட்டர் விவசாயத்திலும் பொதுச் சேவையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்... என அந்த வாட்ஸ்அப் தகவல் நீண்டது.

மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும்  விவசாய முதலமைச்சரும்!

‘‘நம்ம ஊரில் அரசியலில் தீவிரமாக இருந்தவர்கள் ஓய்வு காலத்தில், முழுநேர விவசாயிகளாக மாறியுள்ளவர்கள் ஏராளம். இதில் முன்னோடி, ஓமந்தூரார் என்று அழைக்கப்படும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பெருமைக்குரிய விவசாயி.

ஒரு விவசாயியாகச் சட்டமன்றத்துக்குள் சென்று, முதலமைச்சராகத் திறம்பட ஆட்சி செய்து, பதவியிலிருந்து விலகியவர் என ஓமந்தூராரைப் பற்றிச் சொல்வார்கள். அவருக்கு முன்பும் சரி, இன்று வரையிலும் சரி அவரைப்போல் விவசாயத்தின் மேல் அக்கறைகொண்ட, வேளாண் தொழில்நுட்பத்தைத் துல்லியமாக அறிந்த முதலமைச்சர் தமிழ்நாட்டில் யாருமில்லை. ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது’ என மகாத்மா காந்தி சொன்ன கருத்தில் நூறு சதவிகித நம்பிக்கைக் கொண்டவராக அவர் வாழ்ந்தார்.

விவசாயத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவம் மூலமாக அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்தவர், அவரைப்போல் வேறு யாருமில்லை என்பதால்தான் ‘விவசாய முதலமைச்சர்’ என்றே அழைக்கப்பட்டார்.
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிலையத்தை முதலமைச்சராகப் பதவி வகிப்பதற்கு முன் ஓமந்தூரார் 1945-ல் பார்வையிட்டார். அவரைக் கவர்ந்த அந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட வேண்டும் என அப்போது விரும்பினார். தனது ஆட்சிக் காலத்தில் இந்தக் கிராம நிலையத்துக்கு ஏராளமான உதவிகளையும் செய்தார். அந்த கிராம நிலையம்தான் இன்று காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு ஓமந்தூராரும் காரணம் என்பது கவனிக்கத்தக்கது.

மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும்  விவசாய முதலமைச்சரும்!

1948-ம் ஆண்டு டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய மாநில முதல்வர்களில் ஓமந்தூரார் மட்டுமே ‘வேளாண்மைத் துறைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் துணிச்சலாகச் சொன்னவர். காரணம், புதிய இந்தியாவில் விவசாயத்தைவிட தொழில்கள்தான் முக்கியம் என நேரு நம்பியிருந்தார்.

கிணறு வெட்ட மானியம், ஊற்றுநீர்ப் பாசனம், நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம், ஆறுகள் இல்லாத பகுதிகளில் புன்செய் பயிர் உற்பத்தியைப் பெருக்க ஊக்குவித்தது, சாலைகளில் புளிய மரங்கள், இலுப்பை மரங்கள், அரச மரங்கள், ஆலமரங்கள் நடச் செய்தது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைத்தது, பயிர் காப்பீடுத் திட்டம், மரவள்ளிக் கிழங்கு பயிரிட அப்போது போடப்பட்டிருந்த தடையை நீக்கி ஊக்குவித்தது, நெல், கரும்பு விலையை உயர்த்தியது என அவர் தீட்டிய விவசாய நலத்திட்டங்கள் ஏராளம்.

முதல்வர் பதவி வகிக்கும் முன்பு ஓமந்தூரிலிருந்து ஒருமுறை திண்டிவனத்துக்குச் சென்றார். அங்கு ஒரு பெரியவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் பெரியவர்களைச் சந்திக்கும்போது எலுமிச்சம்பழம் கொண்டு போய்க் கொடுப்பது சம்பிரதாயமான மரியாதை. தன் பண்ணையிலிருந்து எலுமிச்சம்பழம் எடுக்க மறந்துவிட்டதால், காய்கறிச் சந்தைக்குள் எலுமிச்சம்பழம் வாங்க சென்றார் ஓமாந்தூரார்.

ஓமந்தூரார்: நாலு எலுமிச்சம்பழம் கொடும்மா... என்ன விலை?

கூடைக்காரப் பெண்: பழம் பத்து காசு அய்யா

ஓமந்தூரார்: அஞ்சு காசு மேனிக்குக் கொடு...

கூடைக்காரப் பெண்: அஞ்சு காசுக்கு வேணும்னா அதுக்கு வேறு எலுமிச்சம்பழம் தரேன். இது வேற வகையான நல்ல பழம். சாறு ரொம்பப் பிழியலாம். பம்பாய், மெட்ராசுக்கெல்லாம் லாரி லாரியா போவுது. பாட்டில் பாட்டிலா இதோட சாறு, சீமைக்குக் கப்பல்ல போகுது. திண்டிவனம் பஜார் பூரா விசாரிச்சு பாருங்கய்யா.. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தோட்டத்துப் பழம்னு கேளு... பத்து பைசாவுக்குக் கொறஞ்சு ஒருத்தரும் தரமாட்டாங்க!

விவசாயத்திலும் ஓமந்தூரார் வெற்றி பெற்றதற்கு ஒரு சோறு பதம் இது. அரசியல் காரணங்களால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன், கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் விவசாயம் பார்த்தபடி, அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்கப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்’’ என்று, என் பங்குக்கும் ஒரு வாட்ஸ்அப் தகவலை அமெரிக்காவுக்குத் தட்டிவிட்டேன்.