மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

புறா பாண்டி

‘‘எங்கள் தோட்டத்தில் ஒட்டு ரக எலுமிச்சைச் செடிகளையும் சில மாஞ்செடிகளையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தோம். ஆனால், இன்னும் செடிகள் காய்ப்புக்கு வரவில்லை. என்ன காரணம்?’’

எம்.சுகந்தி, மதுராந்தகம்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

‘‘என்னுடைய அனுபவத்தில் ஒட்டுக் கட்டப்பட்ட எலுமிச்சை ரகங்கள் இரண்டே வருடத்திலும், மா ரகங்கள் மூன்று வருடத்திலும் காய்ப்புக்கு வந்துவிடும். அப்படி காய்ப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஒன்றுதான் இருக்க முடியும். உதாரணத்துக்கு எலுமிச்சையின் தாய்ச் செடிகள் காட்டுப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தைத் தேர்வு செய்திருப்பார்கள். இதன் மேல்பகுதியில் ஒட்டுக்கட்டும் ரகம்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டது.

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’



எலுமிச்சைச் செடிகளை நடவு செய்தவுடன் அடியில் உள்ள தாய்ச்செடிகளை வளரவிடக்கூடாது. அப்படி வளரவிட்டால், ஒட்டுக்கட்டப்பட்ட பகுதியில் உள்ள செடி வளராமல், தாய்ச்செடி வளர்ந்துவிடும். இதனால், செடியும் காய்ப்புக்கு வராது. இது எலுமிச்சைக்கு மட்டுமல்ல; மா, சப்போட்டா... என ஒட்டுக்கட்டப்படும் அனைத்து தாவரங்களுக்கும் பொருந்தும். ஒட்டுச்செடிகள் நடவு செய்பவர்களுக்கான பாலபாடம் இது. மேலும், ஒட்டு ரக எலுமிச்சையை நடவு செய்த ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துப் பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும்.

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை இப்படிப் பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் மூட்டில் இருந்து ஓர் அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 காய்கள் முதல் 300 காய்கள் வரை கிடைக்கும். இங்குச் சுட்டிக்காட்டியுள்ள தொழில் நுட்பங்களைக் கவனமாகப் பின்பற்றவும்.

ஒரு வேளை உங்கள் தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடிகளில், தாய்ச்செடிகள் தழைத்து வந்திருந்தால், அதை வெட்டி எறிந்துவிட்டு, புதிய செடிகள் நடுவதுதான் சிறந்த முறை. அதேசமயம், மா ஒட்டுச்செடிகளில் தாய்ச்செடிகள் வளர்ந்திருந்தால், தகுந்த வல்லுநரைக் கொண்டு, உங்களுக்குத் தேவையான ரகத்தை மீண்டும் ஒட்டுக்கட்டி, மாஞ்செடிகளை காய்ப்புக்குக் கொண்டு வர முடியும்.’’

தொடர்புக்கு, அந்தோணிசாமி, செல்போன்: 99429 79141.

நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.