மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!

மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!

காலையிலேயே நாளிதழ்களை எடுத்துக்கொண்டு ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்துடன் தோட்டத்துக்கு வந்து விட்டார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வாத்தியார், செய்திகளைப் படிப்பதில் கவனம் செலுத்த, தோட்ட வேலைகளில் மும்முரமானார், ஏரோட்டி. வெயில் ஏறத்தொடங்கியதும் மாடுகள் கத்த... ஏரோட்டியைச் சத்தம் போட்டு அழைத்தார், வாத்தியார். அந்த நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட்டார்.

மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி இடம் மாற்றிக் கட்டிவிட்டு வந்த ஏரோட்டி, “இன்னைக்கு வெக்கை அதிகமா இருக்கு. மழை வரும்போல இருக்கே’’ என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார்.

ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கிவைத்தார், வாத்தியார். “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் ஒரு கடிதம் எழுதியிருக்கார். அதுல, ‘தமிழகத்துல இப்போ நிலவுகிற வறட்சி மாதிரி இனிமே தொடராம இருக்கிறதுக்குச் சில வேலைகளைத் தமிழக அரசு செய்யணும். பருவமழை சமயத்துல அபரிமிதமா பொங்கி வர்ற காவிரித் தண்ணீரைச் சேமிக்கிறதுக்குப் பொதுப்பணித்துறை மூலமா நடவடிக்கை எடுக்கணும். இப்போதே அணைகள், நீர் நிலைகள் எல்லாத்தையும் தூர்வார நிதி ஒதுக்கணும். உடனடியா வேலைகளை முடிச்சு அடுத்த பருவமழை சமயத்துல கிடைக்கிற தண்ணீரை முழுசா சேமிக்க ஏற்பாடு செய்யணும்’னு குறிப்பிட்டிருக்கார். வழக்கமா இதுமாதிரியான கோரிக்கை கிணத்துல போட்ட கல்லுமாதிரி கிடக்கும். ஆனா, தமிழக அரசு அண்மையில ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கு. அதுல மழைநீரை திறம்படச் சேமிக்க, நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த, நீர்நிலைகளை மீட்டெடுக்க நம்மோட பண்டைய குடிமராமத்து திட்டத்துக்குப் புத்துயிர் கொடுக்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கு. இதுக்கு மார்ச் மாசத்துல 100 கோடி ரூபாயும் அடுத்து வர்ற ஏப்ரல், மே மாசங்கள்ல 300 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி இருக்கு தமிழக அரசு” என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!

“முதலமைச்சர் இந்த அறிவிப்பை முறையா செயல்படுத்துவோம்னு சொல்லியிருக்கார்ல. அதனால நம்பிக்கை வைக்கலாம்யா” என்று சொல்லிய காய்கறி, தான் கொண்டு வந்திருந்த ‘கல்லாமை’ மாங்காயைக் கழுவி, கீற்றுகள் போட்டு ஆளுக்கு இரண்டாகக் கொடுத்ததோடு, தயாராக தான் கொண்டு வந்திருந்த உப்பு, வறுத்த கடுகுப்பொடி கலவையையும் எடுத்துக்கொடுத்தார்.

அதை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“இப்போ நிலவுற கடுமையான வறட்சியால மாட்டுத் தீவனத்துக்குக் கடும் தட்டுப்பாடு. மாடுகளுக்குக் குடிக்கிறதுக்குக்கூட தண்ணி இல்லை. அதனால, விவசாயிகள் மாடுகளை வித்துட்டே இருக்கிறாங்க. இதனால, பால் உற்பத்தி குறைய ஆரம்பிச்சிருக்கு. பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்கிறதுக்காகத் தனியார் பால் நிறுவனங்கள் எல்லாம், கொள்முதல் விலையை லிட்டருக்கு 30 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தி இருக்கு. அதேமாதிரி, விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்திட்டாங்க. ஆனா, இன்னமும் ஆவின் நிறுவனம் விலையை அதிகரிக்கவில்லை. ஏற்கெனவே ஆவின் கொள்முதல் அளவு ரொம்பக் குறைஞ்சு போச்சு. விலையை உயர்த்தலைனா விவசாயிகள், தனியார் நிறுவனங்களுக்குப் பாலைக் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால, தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியா, ஆவின் நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தணும்னு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்காரங்க ஆவின் நிறுவனத்துக்குக் கோரிக்கை வெச்சிருக்காங்களாம்” என்றார்.

“ஆமாய்யா, ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை அதிகரிச்சு நுகர்வோருக்கு நியாயமான விலையில் பால் விற்பனை செஞ்சாத்தான் சரிப்பட்டு வரும். இல்லாட்டி, பால் விற்பனை முழுக்க முழுக்கத் தனியார் கைக்குப் போயிடும். மத்த மாநிலங்கள்ல எல்லாம் அரசு கூட்டுறவு பால் நிறுவனங்கள் சிறப்பாதான் செயல்படுது. ஏகப்பட்ட திட்டங்கள் போட்டு லாபத்தை அதிகரிக்கிறாங்க. தமிழ்நாடு மட்டும் இந்த மாதிரி விஷயத்துல, ஏந்தான் பின்தங்கிக் கிடக்குதுன்னு தெரியலை. ஆனா, ஒரு காலத்துல பால் உற்பத்தியிலயும், கறவை மாடு வளர்ப்புலயும் முன்னோடியா இருந்தோம். அந்தக் காலம் திரும்பவும், வரணும்”னு ஏரோட்டி சொல்லி முடிக்க, மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.

‘விளையும் விலையும்’ தொடர் இந்த இதழில் இடம்பெறவில்லை.