மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

சுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

லகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தாம். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை, சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

நமது பாரம்பர்யமான மரங்களைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். அந்தவகையில், பலவகைப் பயன்பாடு கொண்ட இலுப்பை மரம் பற்றிப் பார்ப்போம். 

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

உணவு, சோமபானம், மருந்து, எண்ணெய், ஷாம்பு, தீவனம், உரம், விறகு எனப் பழங்குடி மக்களின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைக்கும் அற்புதமான மரம், இலுப்பை. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இலுப்பை, தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த தாவரம். தற்போது அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் பட்டியலில் இலுப்பையும் இடம் பெற்றுள்ளது, வேதனையான விஷயம்.

‘மதுகா இண்டிகா’ எனப் பொதுவான பெயரில் அழைக்கப்படும் இலுப்பை, சப்போட்டா மர குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டா விதையில் முளைப்புத்திறன் குறைவு என்பதால், இலுப்பை விதையை முளைக்க வைத்து, அதில் சப்போட்டா மரத்தின் கிளையை ஒட்டுக்கட்டி சப்போட்டா நாற்றை உருவாக்குவார்கள். இலுப்பையில் இரண்டு வகைகள் உள்ளன. அகன்ற இலையைக் கொண்ட ரகம், ‘மதுகா லாட்டிபோலியோ’ எனவும், நீண்ட இலைகளைக் கொண்ட ரகம், ‘மதுகா லாஞ்சிபோலியோ’ எனவும் அழைக்கப்படுகின்றன.

அகன்ற இலை கொண்ட இலுப்பை, வட மாநிலங்களில் அதிகமாக உள்ளது. நீண்ட இலைகளைக்கொண்ட வகை, தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது. தமிழர் வாழ்வோடு ஒன்றியிருந்த பாரம்பர்ய இலுப்பை மரங்கள், தற்போது எண்ணிக்கையில் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் உள்ளன என்பது, வேதனையான உண்மை.

‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே... நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் மதி மயங்காதோர் இருக்கமுடியுமா... இப்படி எதாவதொரு மயக்கத்தில் இருப்பதைத்தான் மானுடம் விரும்புகிறது. 

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

பழந்தமிழர்கள், இலுப்பைப்பூவையும், பழத்தின் சதைப்பகுதியையும் நொதிக்க வைத்துச் சோமபானம் தயாரித்தார்கள். அது, உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மதுவாக இருந்தது. இன்றும் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இதனை விரும்பி குடித்துவருகிறார்கள். இந்தப் பகுதிகளில் இலுப்பையிலிருந்து தயாரிக்கும் பானமே பிரதான மதுவாக இருக்கிறது. இதற்காக, வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலுப்பைப்பூக்களை வாங்கி வந்து மது தயாரிக்கிறார்கள்.

மும்பைக்கு அருகிலுள்ள கரான்ஜா தீவில், அந்தக் காலத்திலேயே இலுப்பைப்பூ மதுவுக்கு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 60 ஆயிரம் பவுன் அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளதாகக் குறிப்புகள் சொல்கின்றன. மது தயாரிக்கத் தற்போது பயன்படுத்தப்படும் கரும்பு ஆலைக்கழிவு பாகுக்கு அடுத்தபடியாக, சர்க்கரையுள்ள மூலப்பொருள் இலுப்பைப்பூக்கள்தான். ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வியாபாரம் நடக்கும் தமிழ்நாட்டில் இலுப்பை மதுவையும் தயாரிக்கத் தொடங்கினால், மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மக்களின் உடல்நலனும் பாதிக்காது. நான் மதுவை ஆதரித்து இதைக் கூறவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது என்ற அடிப்படையில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பார்கள். உண்மைதான், பாலை நிலத்தில் வாழும் பழங்குடிகளுக்கு, கோடையில் குடிநீராகவும் உணவாகவும் பயன்படுகிறது, இலுப்பைப்பூ. அரிசி, மக்காச்சோளம், ஓட்ஸுக்கு இணையாகக் கார்போஹைட்ரேட் சத்து இதில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

1873-ம் ஆண்டுப் பீகார் மாநிலத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின்போது, இலுப்பைப்பூக்களை மட்டுமே உண்டு மக்கள் உயிர் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. காடுகளில் இலுப்பை பூக்கத் தொடங்கியவுடன், பழங்குடி மக்கள் மரத்தின் அடியில் உள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தி, கீழே விழும் பூக்களைச் சேகரிக்கத் தொடங்குவார்கள். ஆங்கிலேயர் காலத்தில், இந்தப் பூக்களுக்காக ஒரு மரத்துக்குப் பத்து பைசா முதல் ஒரு ரூபாய் வரை தீர்வையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பூவைப் போலவே இலுப்பை விதையும் சிறப்பு வாய்ந்தது. பழம் தமிழகத்தில் இருளை விலக்கியப் பெருமை இலுப்பைக்கு உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கோயில், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய்தான் பயன்பட்டது. இந்த எண்ணெயில் விளக்கெரியும்போது, மனதுக்கு இதமான ஒரு வாசனை காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால் தீவெட்டிகளிலும் இந்த எண்ணெயே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காக இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.

எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் பிண்ணாக்கை, வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

இலுப்பை எண்ணெயில் சப்போனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், இதை ஷாம்பு போல் தலைக்குளிக்கப் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலுக்கு இலுப்பைப் பிண்ணாக்குத்தூளை பயன்படுத்தி வழுக்கை, பொடுகு, நரை இல்லாமல் கூந்தலைப் பராமரித்தார்கள், நம் முன்னோர். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகள், அமோசான் காடுகளில் இருந்து கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு தயாரித்து நம் தலையில் கட்டிவிடும் எண்ணெய் வகைகளைத்தான் நாகரிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். அவற்றால், தலையில் முடி வளர்கிறதோ இல்லையோ பணப்பை மொட்டையடிக்கப்படுவது உண்மை.

அந்தக் காலத்தில் பலகாரங்கள் செய்யவும் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தினார்கள். என் பாட்டியும், அப்பத்தாவும் இலுப்பை எண்ணெயில் சுட்டுக்கொடுத்த கருப்பட்டி பணியாரமும், வெந்தயத் தோசையின் சுவையும் இன்னும் என் நாக்கில் தங்கி இருக்கிறது.

தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில், சில ஆண்டுகளுக்கு முன் வரை அம்மனுக்கான பிரசாதங்கள் இலுப்பை எண்ணெயில்தான் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இலுப்பை எண்ணெயில் சுட்டு எடுத்த அரிசி முறுக்கு பிரமாதமான சுவையில் இருக்கும் என்கிறார்கள், தஞ்சைவாசிகள்.

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

இலுப்பை எண்ணெயில் இருந்து சலவை சோப்பு, மெழுகுவத்தி, கிரீஸ் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இலுப்பை மரம் உறுதியானது. ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தும் கட்டை, கப்பல் கட்டுமானம் போன்றவற்றில் இலுப்பை மரம் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி கதவு, ஜன்னல், சட்டங்கள் போன்ற வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் செய்யலாம்.

இலுப்பை மரம், நடவு செய்த 8 முதல் 10 ஆண்டுகளிலிருந்து பலன்கள் கொடுக்கத் துவங்கும். இதன் பூக்கள், காய்கள், இலைகளை அறுவடை செய்து வருமானம் பார்க்கலாம். இவற்றை, மூலிகை வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள்.

இலுப்பை மரத்தில் உள்ள காய்கள் பழுக்கத் துவங்கும்போது, பழங்களை உண்பதற்காகப் பறவைகள், வண்டினங்கள் எனப் பல்லுயிர்களும் படையெடுத்து வரும். அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கே இதை நட்டு வைத்தால், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். இலுப்பை வளர்ப்பதன் மூலம், இயற்கை எண்ணெய் தயாரிப்பு, மதுபான ஆலைகள் எனப் பல தொழில்களை உருவாக்க முடியும். இதையெல்லாவற்றையும் விட மழையையும் ஈர்க்க முடியும்.

மரங்களின் ‘பீமன்’ என்று அழைக்கப்படும் ஈட்டி மரம் பற்றி அடுத்த இதழில்...

- வளரும்.

தாய்ப்பால் சுரக்கும்!

போதுமான பால் சுரக்காத தாய்மார்களுக்கு இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இலுப்பைப்பூவைத் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, அந்த நீரைப் பருகி வந்தால் வெப்பத்தினால் உண்டான சுரம், இருமல், தீராத தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும்.

நடவு செய்யும் முறை! 

உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!

மிழகத்தில் உள்ள அனைத்து வகை மண்ணிலும் இலுப்பை வளரும். கண்மாய்க் கரைகள், புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், சாலையோரங்கள், விவசாய நிலங்களின் வேலியோரங்கள் போன்ற இடங்களில் நட்டு வளர்க்கலாம். வீடுகளிலும் இதை வளர்க்கலாம். மரங்களிலிருந்து உதிரும் பழங்களில் சதையை நீக்கி, விதையைப் பிரித்து உடனே விதைத்து விட வேண்டும். எண்ணெய்ப் பசை கொண்ட விதை என்பதால் தாமதித்தால் முளைப்புத்திறன் குறையும்.

30 அடி இடைவெளியில் குழியெடுத்து பிறகு, குழியை ஆறப்போட வேண்டும். மழைக்காலத்தில் குழிக்கு நான்கு அல்லது ஐந்து விதைகளை ஊன்றி விட வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு, திடகாத்திரமான ஒரு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் களைந்து விட வேண்டும். நாற்று மூலமாக நடவு செய்யும்போது, ஓர் ஆண்டு வயதுடைய செடிகளை வாங்கி நடவு செய்ய வேண்டும். போத்து மூலமாக நடவு செய்பவர்கள் திடகாத்திரமான, தடிமனான குச்சிகளை வெட்டி நடலாம்.

இலுப்பையின் வேர்கள் மண்ணுக்கு மேற்புறமாகப் படரும் தன்மைகொண்டது என்பதால், செடியைச் சுற்றி களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மரத்தில் ஆண்டுக்கு 90 கிலோ பூ!

ன்றாக வளர்ந்த ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 90 கிலோ பூக்கள் கிடைக்கும். ஒரு டன் பூக்களில் இருந்து 340 லிட்டர் ஆல்கஹால் தயாரிக்கலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 150 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோவில் 450 விதைகள் இருக்கும். ஒரு கிலோ விதையை அரைத்தால் 300 மில்லி எண்ணெய் கிடைக்கும்.

இலுப்பை மரம், ஜனவரி மாதத்தில் இலைகளை உதிர்க்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதுத் தளிர்கள் உருவாகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்கள் தோன்றும். மே, ஜுன் மாதங்களில் பழங்கள் கிடைக்கும். தற்போது புதிதாக உருவாகியுள்ள தெலங்கானாவின் ‘மாநில மரமாக’ இலுப்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.