
அசோலா, சுருள்பாசி, காய்கறிகள், நாட்டுக்கோழி... - அசத்தலான மாதிரி பண்ணை!பயணம்துரை.நாகராஜன் - படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயிகளாக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள்... தகவல் தொடர்பு துறை ஊழியர் மோகன்-மாலதி தம்பதி, கால் டாக்ஸி ஓட்டுநர் சரவணன், தகவல்தொடர்பு துறை ஊழியர் முகமது, தனியார் வங்கி ஊழியர் முரளி, மென்பொருள் பொறியாளர் ஜெகதீசன், கல்லூரி மாணவி கிருத்திகா, அவரது நண்பர் அரவிந்தன் ஆகியோர். இவர்களை அழைத்துச் செல்ல நாம் தேர்ந்தெடுத்த பண்ணை, ஈழ ஏதிலிய மறுவாழ்வு கழகத்தின் சகோதர நிறுவனம் ‘நல்லாயம் நான்குநிலை ஆராய்ச்சி மையம்’ என்கிற ஒருங்கிணைந்த பண்ணைக்கு. இந்தப் பண்ணை காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரி சிப்காட் அருகே நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.

மையத்தில் உள்ளோர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுருள்பாசி வளர்ப்பில் (ஸ்பைருலினா) ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆடுகள், கோழி என்று ஒருங்கிணைந்த பண்ணையமாக வேளாண்மை செய்து வருகிறார்கள். இதன் திட்ட இயக்குநராக இருப்பவர் ரத்தின ராஜ சிங்கம். இவர், சுருள்பாசி வளர்ப்பு குறித்து பல கூட்டங்களில் கலந்துகொண்டு பயிற்சியளித்து வருகிறார்.
2007-ம் ஆண்டு வெளிவந்த ‘பசுமை விகடன்’ முதல் இதழில், ‘ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்! பாசியில் கொழிக்குது பலன்’ என்ற தலைப்பில் இந்த பண்ணையின் சுருள்பாசி வளர்ப்பு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. காலை 9.30 மணியளவில், பண்ணையை அடைந்தோம். ஒரு நாள் விவசாயிகளுக்கு ‘சுருள்பாசி ஜூஸ்’ கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றார் ரத்தின ராஜ சிங்கம். அதன் மணத்தை புதிதாக நுகர்ந்த சிலர் முகம் சுளிக்க...
“இது ரொம்பச் சத்தான ஸ்பைருலினா ஜூஸ், கவலைப்படாம குடிங்க. ஒண்ணும் செய்யாது” என்றார், அவர்.
அனைவரும் குடித்து முடித்தவுடன், “ஸ்பைருலினாவை எப்படி உற்பத்தி செய்றது” என்று ஆர்வம் பொங்க கேட்டார், சரவணன்.

ஒரு நாள் விவசாயிகள் அனைவரையும் சுருள்பாசி வளர்ப்புத் தொட்டிக்கு அழைத்துச் சென்ற ரத்தின ராஜ சிங்கம், அதுகுறித்து விரிவாக பேசினார். “ஆரம்பத்துல ஒரு தொட்டியில ஆரம்பிச்சோம். இப்போ 18 தொட்டிகளுக்கு மேல சுருள்பாசி வளர்க்கிறோம். சுருள்பாசி வளர்க்க 28 டிகிரி செல்சியஸ்ல இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுற பகுதிதான் ஏற்றது. பொதுவா, தமிழ்நாட்டுல நிலவுற வெப்பநிலை சரியா இருக்கும். வளர்க்கிற இடமும் உபயோகப்படுத்துற தண்ணீரும் ரொம்பச் சுத்தமா இருக்கணும். காற்று மாசுபாடு உள்ள இடங்களாக இருந்தா நிழல்வலைக்குடில் அமைச்சுக்கலாம். இதை அமைச்சா பூச்சிகளும் வராது. வழக்கமா 10 அடி நீளம், 5 அடி அகலம், 1 அடி உயரத்துல தொட்டி அமைப்பாங்க. இப்போ நவீன முறையில் 15 அடி நீளம், 7 அடி அகலம், ஒன்றரை அடி ஆழத்துல தொட்டி அமைச்சு வளர்க்கிறோம். இப்படித்தான்னு இல்லாம நம்ம வசதிக்கேத்த மாதிரி நீள, அகலத்தை வெச்சுக்கலாம்.
தொட்டியில் சுத்தமான தண்ணீர் நிரப்பி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் தாய்ப்பாசி, 8 கிராம் சோடியம் பை-கார்பனேட், 5 கிராம் சோடியம் குளோரைடு, 0.2 கிராம் யூரியா, 0.5 கிராம் பொட்டாசியம் சல்பேட், 0.16 கிராம் மெக்னீசியம் சல்பேட், 0.052 மில்லி பாஸ்பாரிக் அமிலம்ங்கிற கணக்குல தொட்டியில் விட்டு கலக்கணும். தினமும் பகல் நேரத்துல 15 நிமிஷம் தண்ணீரைக் கலக்கி விடணும். தாய்ப்பாசி விட்ட ஏழாவது நாள்ல இருந்து பத்து நாளுக்குள்ள அறுவடை பண்ண ஆரம்பிக்கலாம். தொடர்ந்து மூணு மாசத்துக்குத் தினமும் அறுவடை செய்யலாம். அதுக்கப்புறம் தாய்ப்பாசியை மாத்திடணும். தற்போதைக்கு ரசாயன முறையிலதான் சுருள்பாசி வளர்க்கிறேன். இயற்கை முறையில செய்றதுக்கான முயற்சியிலேயும் இறங்கியிருக்கேன்.

காலையில 6 மணியிலிருந்து 8 மணிக்குள்ள பாசியை அறுவடை செஞ்சுடணும். தண்ணியோடு சேர்த்து அப்படியே அள்ளி சல்லடையில ஊத்தினா, பச்சை நிறத்துல பாசி தேங்கும். அந்த ஈரப்பாசியை மெல்லிசான வலைக்குள்ள போட்டு 50 கிலோ எடை கொண்ட கல்லால் ஒரு நிமிஷம் அழுத்தினா, தண்ணீர் வடிஞ்சிடும். அடுத்து இடியாப்பம் பிழியும் கருவியில போட்டு பிழிஞ்சு, பசுமைக் குடில்ல 5 மணி நேரம் காய வைக்கணும். அதுக்கப்புறம் தூளாக்கி விற்பனை செய்யலாம்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சரவணன், “சுருள்பாசி வளர்ப்பை ஆரம்பிக்க நிறைய முதலீடு தேவையா... இதுல ஏதும் மருந்துப் பொருள் இருக்குதா... இதுசம்பந்தமான படிப்பு இருக்கா” என்று கேள்விகளை அடுக்கினார்.
“தொட்டி அமைக்கிறதுக்குத்தான் அதிகச் செலவு ஆகும். மத்ததுக்கெல்லாம் ரொம்பச் செலவாகாது. சுருள்பாசி, சாப்பிட்டா பசி எடுக்காது. உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். இதுக்குனு தனியா படிப்பெல்லாம் இல்லை. சுருள்பாசி வளர்க்கிற பண்ணைகள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு வளர்க்க ஆரம்பிக்கலாம்” என்று பதில் சொன்னார் ரத்தின ராஜ சிங்கம்.
“இதுக்குச் சந்தை வாய்ப்பு இருக்கா... என்ன விலை கிடைக்கும்” என்று கேட்டார், முகமது.
“ஸ்பைருலினாவுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு. நேரடியா தாய் பாசியா விற்பனை செய்யலாம். பொடியாக்கியும் விற்பனை செய்யலாம். ஜூஸ், அப்பளம், மாத்திரை, சோப்பு, சாக்லேட், இனிப்பு பண்டங்கள், ஷாம்பூ, எண்ணெய்னு பல வழிகள்ல மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம். இதுமாதிரி பாசி வளர்க்கிறவங்களை ஒருங்கிணைச்சு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்துற முயற்சிகளையும் எடுத்துட்டு இருக்கேன்.

இதை வளர்க்க ஆரம்பிக்கிறவங்க முதல்ல உள்ளூர், அடுத்து மாவட்டம்னு சந்தைப்படுத்தி அதுக்கப்புறம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பணும். படிப்படியா உற்பத்தி அளவை அதிகரிக்கணும். எடுத்த எடுப்பிலேயே அகலக்கால் வைக்கக்கூடாது. சந்தை வாய்ப்பை உறுதிப்படுத்திக்கிட்டு இறங்கினா நிச்சயம் ஜெயிக்கலாம்” என்றவர் அனைவரையும் அசோலா வளர்ப்புக் குடிலுக்கு அழைத்துச் சென்றார்.
“இதுவும் ஒரு வகைப் பாசிதான். இதுல புரதச்சத்து அதிகமா இருக்கு. கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். இதைச் சாப்பிடுற கோழிகள் சீக்கிரத்துல நல்ல எடைக்கு வரும். கறவை மாடுகள் கூடுதலா பால் கறக்கும். வயல்ல தழைச்சத்துக்காகவும் பயன்படுத்தலாம். நெல் வயல்ல இதை வளர்த்தா காற்றுல இருக்கிற நைட்ரஜனைக் கிரகிச்சுப் பயிருக்குக் கொடுக்கும்” என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் அசோலாவை எடுத்துக் கோழிகளுக்குக் கொடுத்தார். தொடர்ந்து ஒரு நாள் விவசாயிகளும் அசோலாவை அள்ளி கால்நடைகளுக்குக் கொடுத்தனர்.

“பண்ணைக்குத் தேவையான பொருள்கள்ல எதையெல்லாம் நாம உற்பத்தி செய்ய முடியுமோ... அதையெல்லாம் பண்ணைக்குள்ளயே உற்பத்தி செஞ்சுட்டோம்னா லாபம் அதிகமாகும். இங்க மொத்தம் 10 தொட்டிகள்ல அசோலா இருக்கு” என்றவர் பாலித்தீன் ஷீட், செங்கல் பயன்படுத்தி அசோலா வளர்ப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். ஒரு நாள் விவசாயிகளே அந்த வேலைகளைச் செய்து முழுமையாகக் கற்றுக் கொண்டனர்.
தொட்டி அமைத்து முடித்ததும், “அசோலாவை எப்படி அறுவடை செய்றது” என்று கேட்டார், மாலதி.
“அசோலாவை அள்ளறதுக்குனே தனியா வலை இருக்கு. இதை பயன்படுத்தி தண்ணியில மேலாக அள்ளினா அசோலா வலையில தேங்கிடும்” என்று சொன்னவர் அதை அள்ளியும் காட்டிய ரத்தின ராஜ சிங்கம், “அடுத்து நாட்டுக்கோழிகளைப் பார்க்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
“நல்ல காத்தோட்டமான இடமிருந்தா, தென்னங்கீத்துல கொட்டகை அமைச்சு நாட்டுக்கோழி வளர்க்கலாம். ஒரு சென்ட் நிலத்துல 200 கோழிகள் வளர்க்கலாம். நல்ல தரமான குஞ்சுகளா தேர்ந்தெடுத்து வளர்க்கணும். இங்க 250 கோழிகள் இருக்கு. தாய்க்கோழிகளா வளர்த்து குஞ்சுகளை உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யலாம். இல்லைன்னா குஞ்சுகளா வாங்கிக் கொஞ்சம் வளர்ந்த பிறகு விற்பனை செய்யலாம். நமக்கு ஏத்தது எதுனு தேர்வு செஞ்சுட்டு வளர்ப்புல இறங்கலாம். ஒன்றரை கிலோ எடைக்கு மேல வந்ததும் விற்பனை செய்யலாம். ஒரு கிலோ உயிர் எடைக்கு 250 ரூபாய் வரை விலை கிடைக்குது. அதில்லாம நாட்டுக்கோழி முட்டைகளுக்கு நல்ல தேவை இருக்கிறதால முட்டைகள் மூலமாவும் வருமானம் கிடைக்கும்” என்றார்.

அடுத்து காய்கறி சாகுபடிக்காகக் குழித்தட்டு முறையில் நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார், ரத்தின ராஜ சிங்கம்.
“காய்கறிப் பயிர்களை நேரடியா விதைக்காம குழித்தட்டு மூலம் நாற்று உற்பத்தி செஞ்சு நடவு செஞ்சா நல்ல முறையில் விளைஞ்சு வரும். ஒரு ஏக்கருக்கு நாற்று உற்பத்தி செய்யக் கிட்டத்தட்ட 120 குழித்தட்டுகள் தேவை. தென்னை நார்க்கழிவு, எரு, அசோஸ்பைரில்லம் எல்லாத்தையும் கலந்து குழித்தட்டில் நிரப்பி விதையை விதைச்சு, தினமும் தண்ணீர் தெளிச்சா 21 நாள்ல நாற்றுகள் தயாராயிடும். மாடித்தோட்டத்துல செடிகள் வளர்க்கிறவங்க இந்த மாதிரி நாற்று உற்பத்தி செஞ்சு வளர்த்தா செடிகள் நல்லா வளரும். இப்படி நாற்று உற்பத்தி செய்றதையே தொழிலாவும் செய்யலாம்” என்ற ரத்தின ராஜ சிங்கம் அனைவரையும் கத்திரி வயலில் அறுவடை செய்ய அழைத்துச் சென்றார். வயலில் இறங்கிய சரவணன் வேக வேகமாகக் காய்கறிகளைப் பறிக்க ஆரம்பித்தார்.
அவரிடம், “தம்பி, கத்திரிக்காயைக் காம்போடு சேர்த்துதான் பறிக்கணும். அப்பதான் சீக்கிரம் வாடாது” என்றார்.அதேபோல அனைவரும் கத்திரிக்காயை அறுவடை செய்தனர்.
அறுவடை முடிவதற்குள் மதிய வேளை நெருங்கிவிட... அனைவரையும் மதிய உணவருந்த அழைத்துச் சென்றார்.
வேப்பம் பூ வடை, முருங்கைக் கீரை பொறியல், மீன், முட்டை, நாட்டுக்கோழி, தங்கச் சம்பா சோறு, காய்கறியுடன் சேர்ந்த மோர்குழம்பு (சொதி), ரசம்... எனத் தடபுடலாகப் பரிமாறப்பட்ட விருந்தை ஒரு பிடி பிடித்தனர், ஒரு நாள் விவசாயிகள். நன்கு உண்ட களைப்பில் அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். களைப்பு சற்று நீங்கியதும் ஆட்டுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரணில் கம்பீரமாக நின்றிருந்த ஆடுகளை அனைவரும் சுற்றிப் பார்த்தனர்.

“இதுதான் பரண்ல ஆடு வளர்க்கிற முறையா” என்று கேட்டார், ஜெகதீசன்.
“முன்ன நாலு பக்கமும் தடுப்பு அமைச்சு ஆடுகளை வளர்த்தோம். இப்போ, பரண் அமைச்சு வளர்க்கிறோம். அதிக வெயில், அதிக குளிர், காற்று ஆடுகளைத் தாக்காது. மத்த விலங்குகள்கிட்ட இருந்தும் பாதுகாக்கலாம். அதில்லாம மூத்திரம், புழுக்கை எல்லாம் கீழ வந்திடறதால ஆடுகளைச் சுத்தமாப் பராமரிக்க முடியும். நோய்கள் தாக்காது. இங்க நாட்டு ஆடுகள், தலச்சேரி ஆடுகள்ல சேர்த்து 40 ஆடுகள் இருக்கு. மாசம் 2 ஜோடி ஆடுகள் விற்பனையாகுது” என்றார்.
தொடர்ந்து மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்று காட்டியதோடு கறவை மாடு வளர்ப்பு குறித்தும் சொல்லிக் கொடுத்தார். அடுத்ததாகச் சாண எரிவாயு உற்பத்தி, சோலார் பம்ப்செட், பசுந்தீவன சாகுபடி வயல் போன்றவற்றைக் காட்டி விளக்கிவிட்டு அனைவரையும் பண்ணைக்குட்டைக்கு அழைத்துச் சென்றார்.
“ஒவ்வொரு பண்ணையிலும் பண்ணைக் குட்டை கட்டாயம் இருக்கணும். தண்ணீர் அதிகமா தேங்குற தாழ்வான பகுதியில் பண்ணைக்குட்டை அமைக்கலாம். பண்ணைக் குட்டை அமைச்சா, நம்ம நிலத்துல பெய்ற மழையைச் சேமிச்சு நிலத்தடி நீரை அதிகரிக்கலாம். இந்தக் குட்டை வெட்டுன பிறகு, எங்க கிணத்துல தண்ணி வத்தவே இல்லை. அடுத்து, மீன்களை வளர்க்கலாம்னு இருக்கேன்.
இப்படி பண்ணையில் ஒவ்வொண்ணையும் முறையாக செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். பண்ணையில கிடைக்கிற வருமானம், மையத்துல வேலை செய்யுற ஈழ அகதிகளோட குடும்பங்களுக்கு போகுது. இங்கே வேல செய்றவங்களும் அகதிகள்தான். இதுவொரு கூட்டுமுயற்சியோடு நடத்தப்படுற பண்ணை. அதனால இதுசம்பந்தமா எந்தவித சந்தேகம் இருந்தாலும் எங்கள அணுகலாம்” என்று சொல்லி முடிக்கும் போது மாலை நேரம் வந்துவிட அனைவருக்கும் தேநீர் கொடுத்தார்.
தேநீர் அருந்தி முடிந்ததும் ஒரு நாள் விவசாயிகள் கிளம்ப ஆயத்தமாகினர். அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பி வைத்தார் ரத்தின ராஜ சிங்கம்.
தொடர்புக்கு, ரத்தின ராஜ சிங்கம், செல்போன்: 98840 00413
பண்ணையின் சிறப்பம்சங்கள்
• பரண்மேல் ஆடு வளர்ப்பு
• காய்கறிச் சாகுபடி
• நாட்டு மாடு வளர்ப்பு
• நாட்டுக்கோழி வளர்ப்பு
• அசோலா வளர்ப்பு
• பண்ணைக்குட்டை
• இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு
• சோலார் மின்சாரப் பயன்பாடு
• இயற்கை எரிவாயு உற்பத்தி
ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!
“சுருள்பாசி, அசோலா எல்லாமே புதுசு”

மாலதி, சென்னை: “புதுசா ஏதோ சாதிச்ச மாதிரி உணர்றேன். விவசாயம் செய்யணும்னு ஆசை வந்திருக்கு. கண்டிப்பா நானும் இயற்கை விவசாயியா மாறுவேன். இங்க பார்த்த எல்லாமும் என் பண்ணையிலேயும் இருக்கும்.”

மோகன், சென்னை: “சுருள்பாசி, அசோலா எல்லாமே எனக்குப் புதுசு. இந்த ஒரு நாளை எனக்கு நல்ல நாளாக அமைச்சுக் கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி.”

சரவணன், சென்னை: “இந்த ஒரு நாள் ரொம்ப உபயோகமாக இருந்தது. பண்ணைக்குட்டை, அசோலா, சோலார் எல்லாமே புதுசா இருந்தது.”

முகமது, சென்னை: “எனக்கு ஊர்ப்பக்கம் கொஞ்சம் நிலமிருக்கு. அதுல விவசாயம் செய்யணும்னு ஆசையா இருக்கு. அதுக்கு வழிகாட்டின பசுமை விகடனுக்கு நன்றி.”

முரளி, காஞ்சிபுரம்: “சுருள்பாசி பத்தி முன்னாலேயே கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்போதான் நேர்ல பாக்குறேன்.”

ஜெகதீசன், சென்னை: “எனக்குப் பொதுவா விவசாயம்னாலே ஆர்வம் அதிகம். இங்க கோழி, ஆடு, மாடுனு எல்லாத்தையும் நேர்ல பாத்து தெரிஞ்சுக்குற வாய்ப்பை கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி.”

கிருத்திகா, சென்னை: “காலேஜ்ல படிக்கிறப்பவே விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை.”

அரவிந்தன், சென்னை: “எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். ஆனாலும், நேர்ல பார்த்ததில்லை. ரொம்பச் சந்தோஷமா இருக்கு.”
நீங்களும் ஒரு நாள் விவசாயி ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே
044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி
வரை. சனி, ஞாயிறு விடுமுறை)
மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.