மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

புறா பாண்டி

‘‘பசுந்தாள் உரப்பயிரில் ‘மணிலா அகத்தி’ என்ற ரகம் உள்ளது என்று கேள்விப்பட்டோம். இதனைப் பற்றிக் கூடுதல் தகவல் சொல்லுங்கள்?’’

கே.லலிதா, செய்யூர். 

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

‘‘மணிலா அகத்தி என்ற பசுந்தாள் உரப்பயிர் ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மணிலா, ஆப்பிரிக்கா... என சொன்னவுடன் நமக்கு அறிமுகம் இல்லாத பயிர்போல உள்ளது என நினைத்துவிட வேண்டாம். இந்த மணிலா அகத்திக்கு, தக்கைப்பூண்டு என விவசாயிகள் பெயர் வைத்துள்ளார்கள். தக்கைப்பூண்டு, பசுந்தாள் உரச் செடியில் பாக்டீரியா முடிச்சுகளை வேர்களுடனும், தண்டுப் பகுதிகளிலும் கொண்டிருப்பதால் அதிகத் தழைச்சத்தை ஆகாயத்திலிருந்து கிரகித்து, நிலத்தில் சேர்க்கிறது. இதன் மூலம் ரசாயன உரச் செலவும் குறையும். விளைச்சலும் கூடும். விதைத்த 45-ம் நாளில் பூக்கும் இப்பயிரை மடக்கி உழும்போது ஹெக்டேருக்கு 0.4 முதல் 24.9 டன் பசுந்தாளும், 146 முதல் 219 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது. மேலும், பட்டம் விட்டு வரிசையாக நடவு செய்யப்படும் நெல் வயல்களில் 25 நாள்கள் வயதுகொண்ட மணிலா அகத்தியின் நாற்றுகளை 15-30 செ.மீ இடைவெளியில் நட்டு 45-60 நாள்களில் அறுவடை செய்து நிலத்தில் மிதித்துவிடலாம். மீதமுள்ள தண்டுப்பகுதியை மறுதாம்பு வளர்ச்சிக்கு விடலாம். பின் இரண்டாம் போக நெல் பயிரை நடவும் செய்யலாம். இதனால், ஹெக்டேருக்கு 15 டன் தழை உரமும், 13 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது. இதன் மூலம் இரண்டாம் போகம் நெற்பயிர் அதிக வளர்ச்சியையும், 9 சதவிகிதம் வரை அதிக விளைச்சலையும் கொடுப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கிறது.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

மணிலா அகத்தியின் 15-20 செ.மீ நீளமுள்ள குச்சிகளைச் சாணக் கரைசலில் நனைத்து நடுவதால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு வேர்கள் வளரவும் ஏதுவாகின்றது.

கோ-1 என்ற புதிய மணிலா அகத்தி ரகத்தைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த விதை தேவைப்படும் விவசாயிகள், கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மத்தியப் பண்ணையை தொடர்புகொள்ளலாம்.’’

தொடர்புக்கு, மத்தியப் பண்ணை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422 6611203.

‘‘இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஆரம்பகாலத்தில் உருவாக்கிய கொழிஞ்சிப் பண்ணையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இங்கு இயற்கை விவசாயப் பயிற்சிகள் கொடுக்கிறார்களா?’’
 
கே.விஜயன், புதுச்சேரி.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியில் உள்ள குடும்பம் நிறுவனத்தின் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணையின் துணை இயக்குநர் பாப்பி என்கிற பங்கயவல்லி பதில் சொல்கிறார்.

‘‘30 ஏக்கரில் விரிந்துள்ள இந்தப் பண்ணையில், ஒரு காலத்தில் புல் பூண்டுகள்கூட முளைக்க முடியாத அளவுக்கு வளம் குறைந்து இருந்தது. சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையே இருக்காது. ஆனால், இந்தப் பண்ணையில் மட்டும் மழை பெய்யும். வெளிப்பகுதியின் வெப்பநிலையைவிட இந்தப் பண்ணைக்குள் 2 டிகிரி அளவுக்கு வெப்பம் குறைவாக இருக்கும். இந்தப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் 700 அடி ஆழத்தில்தான் தண்ணீர் கிடைக்கும். இங்கு மட்டும் 150 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம், இங்கு உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சூழ்நிலைதான். 

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இந்தப் பண்ணையில் தங்கி, இயற்கை விவசாய நுட்பங்கள் மூலம், வளமான நிலமாக மாற்றிக் காட்டினார். வளம் குறைந்த நிலத்தை, வளம் கொழிக்கும் நிலமாக மாற்றி நல்ல விளைச்சலை எடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திய மாதிரிப் பண்ணை இது.

இங்குள்ள மரங்களுக்கிடையில் காய்கறி, கீரைகள், சிறுதானியங்கள், நெல், தீவனப்பயிர்களும் சாகுபடி செய்கிறோம். வாரந்தோறும் 100 கட்டு் கீரைகள், 300 கிலோ அளவுக்குக் காய்கறிகள் கிடைத்து வருகின்றன. ஆண்டுக்கு 150 மூட்டை (100 கிலோ மூட்டை) அளவுக்குச் சிறுதானியங்கள், 80 மூட்டை அளவுக்குப் பாரம்பர்ய நெல் ரக விளைச்சலும் கிடைக்கின்றன. 

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

ஆண்டு முழுவதும் இயற்கை வேளாண்மையின் முன்னோட்டப்பயிற்சி நடைபெற்று வருகின்றன. இந்தப் பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள், ஒருங்கிணைந்த பண்ணையம், மண், நீர் பாதுகாப்பு மற்றும் மண்வளம் கூட்ட இயற்கை வேளாண்மை இடுபொருள்களான மண்புழு உரம், மட்கு உரம், அசோலா, பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் தயாரித்தல்... பூச்சிக்கட்டுப்பாட்டிற்கான மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சி-பூண்டு கரைசல் உள்ளிட்டவை செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிர்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பங்கேற்பாளர்களே முடிவு எடுக்கும் வகையில் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிர்ச் சூழலில் காணப்படும் நன்மை, தீமை உயிரினங்களை அடையாளம் காணுதல், அதன் உணவு, இருப்பிடம் சூழலில் அவற்றின் பங்கு பற்றியும் நேரடியாக விளக்கப்படும். குழு விளையாட்டு, கிராம கலைகளும் நிகழ்த்தப்படும். கட்டண அடிப்படையில் தங்குமிடம், உணவு உள்ளிட்டவையுடன் நடக்கும் இந்தப் பயிற்சியில், இந்தியா மட்டுமல்லாமல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மலேசியா... போன்ற வெளிநாட்டினரும் பங்கு கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98428 33187, 84890 19435.

‘‘வாட்ஸ்அப் மூலம் காராம் பசு குறித்த செய்தியைப் படித்தேன். உண்மையாகவே இப்படி ஒரு ரகம் உள்ளதா? இதன் சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

நிர்மலா, விருதுநகர்.


பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பற்றி ஆய்வு செய்துவரும் மதுரையைச் சேர்ந்த ‘சேவா’ விவேகானந்தன் பதில் சொல்கிறார். 

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

‘‘காராம் பசுவை,  இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான், தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் மட்டுமே, இந்த பசுக்களின் எண்ணைக்கை உள்ளன. காராம் பசு என்பவை, நாட்டு இன மாடுகளில் மட்டும் உருவாகக் கூடியவை. அதாவது, நாக்கு முதல் மடிக்காம்பு வரை உடல் முழுவதும் கறுப்பாக உள்ள நாட்டுப் பசுதான் ‘காராம் பசு’ என்று அழைக்கப் படுகிறது. காராம் பசுத் தனி ரகம் என்றும் பலர் நினைக்கிறார்கள். இது, தவறு. நாட்டுப் பசுக்களில் அரிதாகப் பிறப்பவைதான், காராம் பசுக்கள். நமது சித்த மருத்துவத்தில் கறுப்பு நிறத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. கறுந்துளசி, கறுநொச்சி, காராம் பசு... போன்றவை அந்தப் பட்டியலில் அடங்கும். காராம் பசுவை பற்றி ஓலைச்சுவடிகளும், செவி வழிச்செய்திகளும் ஏரளமாக உள்ளன. காராம் பசு வீட்டில் இருந்தால், அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால்தான், இந்த மாட்டின் விலை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், காராம் பசுக்களின் பாலில் மருத்துவக் குணம் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. கறுப்புத்தோல் கொண்ட பசு, சூரிய ஒளியைக் கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால், அதன் பாலில் கூடுதல் சத்துகள் இருக்கின்றன. காராம் பசுவின் பால் கெட்டியாக இருப்பதோடு, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், மணமாகவும் இருக்கும். பழங்காலங்களில் புகழ்பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட சில பரிகாரங்களுக்கும், விசேஷ காலத்தின் போதும் கோயில்களில் காராம் பசுவின் பாலைப் பயன்படுத்தி வருகிறார்கள்.’’

‘‘4 ஆயிரம் காய்கள் கிடைக்கும்!’’

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

டந்த இதழில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில், ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராமல் உள்ள ஒட்டு ரகச் செடிகள்?’’ குறித்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த  முன்னோடி எலுமிச்சை விவசாயி, புளியங்குடி அந்தோணிசாமி, ‘‘எலுமிச்சையில் நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 காய்கள் முதல் 300 காய்கள் வரை கிடைக்கும்’’ என பதில் சொல்லியிருந்தார்.

தற்போது, நம்மைத் தொடர்புகொண்ட, அந்தோணிசாமி, ‘‘எலுமிச்சை நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதலே ஆண்டுக்கு 200 காய்கள் கிடைக்கும். ஆண்டுகள் அதிகரிக்கும்போது, விளைச்சலும் கூடிக்கொண்டே செல்லும். சுமார் 7 ஆண்டுகள் ஆன எலுமிச்சை மரத்தில் ஆண்டுக்கு 4,000 முதல் 5,000 காய்கள்கூட காய்க்கும்’’ என்று கூடுதல் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.