மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”

மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மீபத்துல ஒரு பெரிய புத்தகம் கைக்கு வந்து சேர்ந்துச்சு. ஜே.சி. குமரப்பா எழுதின கட்டுரைகளோட தொகுப்புதான் அது. காந்திய பொருளாதார அறிஞரான ஜே.சி.குமரப்பா, நம்ம தஞ்சாவூர் மண்ணுல பிறந்தவரு. வெளிநாட்டுல பெரிய பெரிய படிப்புப் படிச்சிருந்தாலும், தாய்நாட்டுக்கு வந்து மகாத்மா காந்திகிட்ட, கிராமிய வாழ்க்கை முறையை அனுபவப் பாடமா கத்துக்கிட்டாரு. நாடு சுதந்திரம் அடைஞ்சவுடனே, கிராம முன்னேற்றம் சம்பந்தமா பிரதமர் நேரு, ஓர் அறிக்கை கேட்டாரு. 

மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”

நாடு முழுக்கச் சுத்தி அலைஞ்ச, ஜே.சி.குமரப்பா ‘விவசாயிகளுக்கு யூரியா மாதிரியான ரசாயன உரத்தைக் கொடுக்கிறதைவிட, அகத்தி விதையைக் கொடுக்கலாம்’னு ஆலோசனை சொன்னாரு. அதாவது, ‘அகத்தி விதையை விவசாயிகள்கிட்ட கொடுத்தா, அத நிலத்துல விதைப்பாங்க. அப்படி வளர்ந்து வர்ற அகத்திச் செடி காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும். இதனால, பணம் கொடுத்து யூரியா வாங்க வேண்டாம். அகத்திக்கீரையை மாடுகளுக்குக் கொடுத்தா, விவசாய வேலைகளும் நடக்கும். சத்தான பாலும் கிடைக்கும். அதோட சாணத்தை வயல்ல போட்டா, விளைச்சலும் குறைவில்லாம கிடைக்கும். விவசாயிங்க, யார் கிட்டேயும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை உருவாகாது’னு சொன்ன ஜே.சி.குமரப்பா விவசாயக் கல்லூரிகளைப் பத்தியும் இப்படி எழுதியிருக்காரு... 

மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”

‘‘நமது வேளாண்மை கல்லூரிகளின் செயல்பாடு எப்படி உள்ளன என்பது பற்றிய ஆய்வு அவசியம். கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் இக்கல்லூரிகளின் ஆய்வுக்குக் கொட்டப்படுகிறது. இருப்பினும் பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது நமது உற்பத்தி கேவலமாக இருப்பது நமக்கு அவமானம் அல்லவா? இதற்கான பதில் எளிமையானது. இங்கு நடக்கும் அற்புதமான ஆய்வுகள் பலவும் பணப்பயிர்களுக்காக (கரும்பு, புகையிலை) உள்ளதே தவிர, உணவுப்பயிர்களுக்காக அல்ல. மக்களின் துணி நெசவுக்கான நீண்ட இழைப்பருத்தி, சணல், ஆலைகள், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு, சிகரெட்டுக்கான புகையிலை இவற்றுக்கே செலவிடப்படுகிறது. தப்பித்தவறி ஏதாவது உணவுப்பயிர்  பற்றி ஆய்வு செய்திருந்தால், அது தமது முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே.

எனவே, மக்களுக்குப் பயன்படாத இந்த ஆய்வுகளுக்கான செலவை மக்கள் வரிப்பணத்தில் எடுக்காமல், பயன்பெறுபவர்களிடம் பெறுவதுதானே நியாயம்? உண்மையில் இக்கல்லூரிகளை வேளாண்மைக் கல்லூரி என்று கூறுவதைவிட ஆலைகளின் ஆய்வு நிறுவனம் என்று பெயர் சூட்டிவிடலாம். மக்கள் பணத்தை உறிஞ்சி வாழும் இவற்றுக்குத் தவறான பெயர் சூட்டக்கூடாது. உண்மையில், வேளாண்மைக் கல்லூரி கிராமப்புறத்தில் அமைய வேண்டும். அதன் கட்டடங்கள் யாவும் கிராமச் சூழலுக்கு முரண்படாது இருக்க வேண்டும். அதன் பேராசிரியர்கள் உண்மையில் விவசாயத்தைத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கெனச் சிறிய நிலம் தரப்பட்டு, அதில் விளைவித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைதான் சம்பளமாகப் பெற வேண்டும். பேராசிரியர்களின் விஞ்ஞான அறிவு, செலவு குறைந்த உணவு உற்பத்தி, குட்டை இழைப்பருத்தி போன்ற கிராமப்புற பொருளாதாரத் தேவைகளுக்கு உதவ வேண்டும்.

மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”



வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்குத் தாய் மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். வேளாண்மைக் கல்வி பெற முன்வரும் மாணவர்கள், விவசாயிகளாகும் நாட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பட்டம் பெற்று எங்கோ வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. நாட்டின் அனைத்து வேளாண்மைக் கல்லூரிகளின் கல்வி, ஆய்வு, செயல்பாடுகள், பயன்பாடுகள் பற்றிய ஆழ்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். வேளாண்மைக் கல்லூரிகளின் கல்வியும் ஆய்வும் விவசாய மக்களுக்குப் பயன்படுவதாகவும் வறுமை ஒழிப்புக்கு உதவுவதாகவும் வறட்சி, பஞ்சத்துக்கு எதிரான காப்பீடாகவும் அமைய வேண்டும்’’னு ஆக்கபூர்வமான ஆலோசனை சொல்லியிருக்காரு ஜே.சி.குமரப்பா.