மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

படை தீர்க்கும் தகரை... மலமிளக்கும் நில ஆவாரை! மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நில ஆவாரை, பொன்னாவாரை, சுடலாவாரை ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

பொன்னாவாரை, சுடலாவாரை ஆகிய இரண்டு செடிகளும் அனைத்து இடங்களிலும் தன்னிச்சையாக வளரக்கூடிய புதர்ச்செடிகள். குறிப்பாக குப்பை மேடுகளில் இவற்றைக் காண முடியும். இவை இரண்டிலுமே மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் பூத்து, கொத்தவரங்காய் போன்ற காய்கள் வரும். இவை இரண்டுமே ‘தகரை’ எனும் பொதுப்பெயரில் அழைக்கப்படுகின்றன. இவற்றின் இலைகளில் ஒரு குமட்டலான மணம் இருப்பதால், உள்ளுக்குச் சாப்பிட இயலாது. வெளி மருந்தாகத்தான் உபயோகப்படுத்த முடியும்.

நிலவாகை, நாட்டு நிலவாகை, அகத்தியர் நிலவாகை எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் தாவரம், நில ஆவாரை. தரையில் படர்ந்து, கிளைத்து வளரக்கூடியது. மஞ்சள்நிறப் பூக்கள் பூத்து, ஆரஞ்சு பழச் சுளைகளைப் போலக் காய்கள் காய்க்கும். செம்மண் தரிசு பூமியில் அதிகமாகக் காணப்படும். நமது நாட்டின் பூர்வீகத் தாவரம் இது. இதற்குப் பல பெயர்கள் இருந்தாலும், நில ஆவாரை, நில வாகை என்ற பெயர்களால்தான் அதிகம் குறிப்பிடப் படுகிறது. 

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல இன்னொரு தாவரம், நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இதை ‘நாட்டு நில ஆவாரை’ என அழைக்க ஆரம்பித்தனர். புதிய தாவரத்தை ‘சீமை நில ஆவாரை’ என்று அழைத்தனர். இரண்டுக்குமே மருத்துவக் குணம் ஒன்றுதான்.

சீமை நில ஆவாரை, எகிப்து நாட்டிலிருந்து அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டு, குஜராத் மாநிலம் சூரத் துறைமுகம் வழியாக நமது நாட்டுக்குள் வந்த தாவரம். அதனால், இதை, ‘சூரத்து நில ஆவாரை’ என்றும் அழைக்கிறார்கள். இந்தச் சூரத்து நில ஆவாரை, சாயத்துக்கான செடி என நம்பப்பட்டதால், இதை அவுரி என்று சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அவுரி, சூரத்து நில ஆவாரை இரண்டும் வேறு வேறு.

சூரத்து நில ஆவாரை, திருநெல்வேலியில் 1906-ம் ஆண்டு வெள்ளையர்களால் அதிகளவில் பரவ ஆரம்பித்தது. அதன் பிறகு, இந்த தாவரத்தைச் சோதனைக்குட் படுத்தியபோது, இதில், ‘சென்னா சாய்டு’ எனும் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், சூரத்து நில ஆவாரையைத் ‘திருநெல்வேலி சென்னா’ என்றும் அழைத்தனர். இது பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், உலகளவில் திருநெல்வேலி சென்னா என்ற வணிகப்பெயர் நிலைத்து விட்டது.
 
பல மூலிகைகள் காண்பதற்கு ஒரே தோற்றத்துடன் இருக்கும். ஆனால், வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும். அப்படிப்பட்டவற்றின் இலைகளை மோந்து பார்த்துதான் இன்ன செடி என்று அறிய முடியும். அதேபோல ஒரே செடி, ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும். இதனாலும் குழப்பங்கள் ஏற்படும். அதனால்தான், ஒரே தாவரத்தின் பல்வேறு பெயர்களை இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13திருநெல்வேலி சென்னா, சீமை நிலவாகை, சீமை நில ஆவாரை, சூரத்து நில வாகை, சூரத்து நில ஆவாரை ஆகிய அனைத்துப் பெயர்களும் ஒரே தாவரத்தைக் குறிப்பவைதான்.

அதேபோல நிலவாகை, நாட்டு நிலவாகை, அகத்தியர் நிலவாகை, நில ஆவாரை, நாட்டு நில ஆவாரை ஆகிய அனைத்துப் பெயர்களும் ஒரே தாவரத்தைக் குறிப்பவைதான்.

சூரத்து நிலவாகை, திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதிகளில் அதிகளவு விளைவிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஐரோப்பிய நாடுகளில் பன்றி இறைச்சி அதிகமாக உண்போருக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு (Habitual Constipation) இது பக்கவிளைவில்லாத அரு மருந்தாக விளங்குகிறது. தவிர பல நாடுகளில் இது, மூலிகைத் தேநீரில் (Herbal Tea) சேர்க்கப்படுகிறது

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

நாட்டு நில ஆவாரை, ‘நில வாகை’ என்ற பெயரில்தான் அதிகம் வழங்கப்படுகிறது. தமிழ் மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் அகத்தியரின் பெயரால், ‘அகத்தியர் நிலவாகை’ என அழைக்கப்படும் ஒரே மூலிகையும் இதுதான். பொதுவாக, இது மலமிளக்கி என்றே அறியப்பட்டாலும்... மலத்தை இளக்கி வெளியேற்றுவதால், குணமாகும் பல்வேறு நோய்கள் குறித்தும் சித்தமருத்துவம் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளது. 

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13

நாட்டு நில ஆவாரையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘நில வாகை சூரணம்’ அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இச்சூரணத்தைத் தினமும் மாலையில், 5 கிராம் அளவு எடுத்து வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் காலையில் சிக்கல் இன்றி மலம் கழியும். இதை, 15 நாள்களிலிருந்து 20 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் நிரந்தரமாகக் குணமாகும். இதே சூரணத்தை 2 கிராம் வரை தினமும் இரு வேளைகள் பசுநெய்யில் கலந்து உட்கொண்டு வந்தால்... ஆஸ்துமா, அண்டவாயு (விதைவீக்கம்) ஆகியவை குணமாகும். இதைத் தேனில் கலந்து உட்கொண்டு வந்தால்... தீராத மூக்கடைப்பு, நாசிப்புண் ஆகியவை குணமாகும். சர்க்கரை கலந்து உட்கொண்டு வந்தால் புழுவெட்டு தீரும்.

நாட்டு நில வாகை அதிகம் கிடைக்காத காரணத்தால், பலரும் சீமை நில வாகையைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இரண்டுக்கும் மருத்துவக் குணம் ஒன்றாக இருந்தாலும், நம் மண்ணுக்குச் சொந்தமான நாட்டு நில வாகையைப் பெருக்கி அதைப் பயன்படுத்துவது தான் நல்லது. நாட்டு நில வாகையைப் பெருக்கி நலமுடன் வாழ்வோம்.

அடுத்த இதழில் அகத்தி, சிற்றகத்தி, சீமையகத்தி ஆகியவை பற்றிப் பார்ப்போம்.

- வளரும்

பற்று அகலும்!

கரைச்செடிகளின் (பொன்னாவாரை, சுடலாவாரை) இலைகளைப் பறித்துச் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சிரங்கு மற்றும் கரப்பான் புண்கள் மீது பூசினால் அவை குணமாகும். ‘கக்கூஸ் பற்று’ எனப்படும் அரையிடுக்குகளில் அரிப்புடன் கூடிய படை பரவலாக வரும் நோய். சுகாதாரமின்மை, உள்ளாடை பிரச்னைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய் இது. இந்நோய்க்கு, தகரைச்செடிகளின் விதைகளை நிழலில் காயவைத்து அவற்றை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து அரைத்துப் பற்று போட்டால், முற்றிலும் குணமாகும்.

கக்கூஸ் பற்று என்பது ‘டீனியர்’ எனும் பூஞ்சணத்தால் பரவக்கூடிய நோய். வயிறு, இடுப்பு, அரைப்பகுதிகளில் மட்டுமல்லாது முதுகு, மார்புப் பகுதிகளிலும் படை வர வாய்ப்புண்டு. இது வெகு வேகமாகப் பரவக்கூடியது. பொதுவாக அலோபதி மருத்துவத்தில் இதற்கு ஆன்டி ஃப்ங்கல் பசைகள் பரிந்துரைக்கப்படும். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட இடத்தில் அது மறைந்தாலும், இன்னொரு இடத்துக்குப் பரவக்கூடும். அதனால், இந்தப் பூஞ்சணத்தின் வாழ்வியல் சுழற்சியைத் தகர்த்தால்தான் அதைப் பரவாமல் செய்ய முடியும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவரின் உள்ளாடைகளைத் துவைத்த பிறகு, ஒரு மணி நேரம் வரை நன்கு கொதிக்கிற வெந்நீரில் மூழ்க வைக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் வரை செய்து வந்தால், பூஞ்சணத்தை முற்றிலும் அழிக்கலாம். அதோடு, தகரை விதைப் பற்றையும் போட்டு வர வேண்டும்.

1. பசு நெய்யில் கலந்து உட்கொள்ள உடம்பு பூரிக்கும் (பெருக்கும்).

2. தேனில் கலந்து உட்கொள்ள உடம்பு வற்றும் (மெலியும்).

3. சிற்றாமணக்கு எண்ணெயில் உட்கொள்ள எலிக்கடி விஷம், சில் விஷம், ஏப்பம் தீரும்.

4. வெந்நீரில் உட்கொள்ளக் கிருமி தீரும்.

5. பசுவின் மோரில் உட்கொள்ளச் செரியாமை விஷம் தீரும்.

6. எருமை மோரில் உட்கொள்ள எலிக்கடி விஷம் தீரும்.

7. எருமைச் சாணிப்பாலில் உட்கொள்ளப் பாண்டு தீரும்.

8. எருமைப் பாலில் கலந்து கொடுக்கப் பெண்களின் மசக்கை தீரும்.

9. பாகலிலைச் சாற்றில் உட்கொள்ள உடலில் தடிக்கும். செய்யான் விஷம் தீரும்.
 
10. மேனிச்சாற்றில் (குப்பை மேனி) உட்கொள்ளத் தேனீ விஷம் தீரும்.

11. ஆலம்பழுப்புச் சாற்றில் உட்கொள்ளப் பெருச்சாளி விஷம் தீரும்.

12. வேம்பாடம்பட்டைச் சாற்றில் உட்கொள்ளச் செவ்வட்டைக்கடி விஷம் தீரும்.

13. செம்மறி ஆட்டு சிறுநீரில் உட்கொள்ள ‘அரணைக்கடி’ விஷம் தீரும்.

14. வீழிச்சாற்றில் உட்கொள்ளக் கட்டு விரியன் பாம்பு விஷம் தீரும்.

15. தேசி(எலுமிச்சை)பழச்சாற்றில் உட்கொள்ளச் சர்வ விஷமும் தீரும்.

16. பாகலிலைச் சாற்றில் உட்கொள்ள நட்டுவாக்காலி விஷம் தீரும்.

17. அவுரி இலைச்சாற்றில் உட்கொள்ள அரணை, வண்டுக்கடி, புடையன், குத்து தவளை, குரங்கு, நாய், கீரி, பேய்நாய், பேய் நரி ஆகியவற்றின் விஷம் தீரும்.

18. கையாந்தகரை, கண்டங்கத்திரிச் சாற்றில் உட்கொள்ள ஈளை, சயம் தீரும்.

19. கொடிக்கள்ளிச் சாற்றில் உட்கொள்ள மாறல் சுரம், குளிர் சுரம் தீரும்.

20. நல்லெண்ணெயில் உட்கொள்ள விக்கல் தீரும்.

21. வெள்ளாட்டுச் சிறுநீரில் உட்கொள்ளக் குஷ்டம், சோகை, காமாலை ஆகியன தீரும்.

22. பசுவின் சிறுநீரில் உட்கொள்ளச் சொறி, சிரங்கு , உளைவு, பெருவயிறு, மகோதரம், நீராமை நீங்கும்.

22 நோய்களுக்கு ஒரு மருந்து!

ரே மருந்தை அனுபானத்தை (நெய், தேன் போன்ற துணை மருந்துகள்) மட்டும் மாற்றி உண்டு வந்தால், பல்வேறு நோய்கள் குணமாவதுதான் சித்தமருத்துவத்தின் சிறப்பு. அந்த வகையில், நிலவாகை இலைப்பொடிக்கு 22 நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது என ‘அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்’ எனும் சித்த மருத்துவ மரபு வழி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலவாகை சமூலத்தை இடித்துத் தூள் செய்து பேய்ச்சுரைக் குடுக்கையில் அடைத்துக் கொள்ள வேண்டும். அதைத் திரிகடிப் பிரமாணம் (மூன்று விரல்களைச் சேர்த்து எடுக்கும் அளவு) எடுத்து நெய், தேன் உள்ளிட்ட அனுபானத்துடன் பயன்படுத்தி நோய்களைத் தீர்க்கலாம். இம்மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது புளி சேர்க்காத உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். புகையிலை பயன்படுத்தக்கூடாது.

பெயர்  தாவரவியல் பெயர்

பொன்னாவாரை -CASSIA OCCIDENDALIS

சுடலாவாரை, ஊசித்தகரை -CASSIA TORA

நாட்டு நில ஆவாரை -CASSIA OBOVATA

சீமை நில ஆவாரை -CASSIA SENNA

நிலவாகை சூரணம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், வாயுவிடங்கம் ஆகியவற்றில் வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அவற்றை 50 கிராம் காய்ந்த நிலவாகை இலையுடன் சேர்த்து இடித்துப் பொடி செய்து சலித்து வைத்தால் நில வாகை சூரணம் தயார்.

மூலத்தைப் போக்கும் சுகபேதி அல்வா

வி
தை நீக்கிய பேரீச்சை, விதைநீக்கிய உலர்ந்த திராட்சை, நாட்டு வெல்லம், உலர்ந்த நிலவாகை இலைப்பொடி, நெய், தேன் ஆகியவற்றைச் சம அளவு எடையில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை வரிசைப்படி ஒவ்வொன்றாக இட்டு இடித்துக் கலக்கினால், அல்வா பதத்தில் லேகியம் போல மருந்து கிடைக்கும். இதுதான், ‘சுகபேதி அல்வா’. தினமும், மாலை 5 முதல் 6 மணிக்குள் இந்த மருந்தை நெல்லிக்காயளவு (5 கிராம் ) உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். ரத்த மூலம், பவுத்திரம், மலவாய்க்கட்டி போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அற்புத மருந்து. இந்நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். சர்க்கரை நோயுள்ளவர்களும் இம்மருந்தை சாப்பிடலாம்.