
ஓவியம்: ஹரன்
மூட்டை பிடித்து வைத்திருந்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு அனுப்ப, மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மூட்டைகளை எண்ணிக் கணக்கு எழுதி வைத்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, மூட்டைகள் அனைத்தையும் வண்டியில் ஏற்றிவிட்டு வந்து அமர்ந்தார், ஏரோட்டி.
“என்னய்யா... வேகமா வண்டியில ஏத்தி வெச்சுட்டு இங்க வந்து உக்கார்ந்துட்ட, விற்கிறதுக்குக் கொண்டு போகலையா..” என்று கேட்டார், காய்கறி.

“பக்கத்துத் தோட்டத்து மாடசாமியும்கூட வர்றேன்னு சொன்னாப்புல. இன்னும் ஆளைக் காணோம். வந்தவுடனே கிளம்பிட வேண்டியதுதான்” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போது, வாத்தியார் ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
“தேனி மாவட்டம், போடி மலைப்பகுதியில் பொட்டிபுரம் கிராமத்துல நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கிறதுக்கு 2011-ம் வருஷம் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருந்துச்சு. அதுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் நடந்துட்டு இருந்துச்சு. இந்தியாவோட பன்னண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துல அறிவிக்கப்பட்ட பெரிய அறிவியல் ஆய்வுத்திட்டம் இது. அதனால, மத்திய அரசு அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துச்சு. ‘இந்தத் திட்டத்தால, மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மலைக்குள்ள வெடி வெச்சு பாறைகளை உடைச்சா, மேற்குத் தொடர்ச்சி மலையில், இருக்கிற முல்லை பெரியாறு அணை பாதிக்கப்படும். சுற்றுசூழலும் கெடும். அதோட, இந்தத் திட்டத்தால விளையுற பாதிப்புகள் பத்தியும் சரியா மதிப்பீடு செய்யலை. அதனால, சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்யணும்’னு பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துல மனுதாக்கல் செஞ்சிருந்தார்.
சமீபத்துல இந்த வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நியூட்ரினோ திட்டத்துக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கின அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வெச்சு வழக்கை முடிச்சிட்டாங்க. அதனால, சூழல் ஆர்வலர்களும் அந்தப் பகுதி மக்களும் கொஞ்சம் நிம்மதி அடைஞ்சிருக்காங்க” என்றார்.
“பரவாயில்லை, அப்பப்போ சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகள்ல இதுமாதிரி நல்ல தீர்ப்புகளும் வருது” என்ற காய்கறி, கூடையில் இருந்து வெள்ளரிப் பிஞ்சுகளை ஆளுக்கு இரண்டு எடுத்துக்கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் ஆரம்பித்தார், வாத்தியார்.
“கடும் வறட்சியால விவசாயிகள் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்துட்டு இருக்காங்க. இதில்லாம, பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துல சேர்ந்திருந்த விவசாயிகள், இழப்பீட்டுத் தொகை எப்போ வரும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, அவங்களுக்கு இப்போதைக்கு இழப்பீட்டுப் பணம் கிடைக்காது போலிருக்கு. மே மாசத்துக்குப் பிறகுதான் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்னு காப்பீட்டு நிறுவனத்துல சொல்றாங்களாம்.
30 லட்சம் ஏக்கர் நிலத்துல இருந்த பயிர்களுக்குப் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துல 14 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் காப்பீடு செஞ்சிருக்காங்களாம். ஆனால், இதுவரைக்கும் மாநிலம் முழுவதுமான ஆய்வுப்பணிகளே முடியாம இருக்குதாம். ஆய்வு முடிஞ்ச பிறகுதான், நிவாரணத் தொகையை நிர்ணயம் செய்வாங்களாம். இதனால, விவசாயிகள் எல்லாம் ரொம்ப விரக்தியில் இருக்கிறாங்க. இதுல இன்னொரு கொடுமை என்னான்னா நிறைய பகுதிகள்ல விவசாயிகளுக்கு இன்னமும் 2014-ம் வருஷத்துக்கான காப்பீட்டுத் தொகையே கிடைக்கலையாம். முதலமைச்சர் தலையிட்டுதான் இழப்பீட்டுத்தொகையை வாங்கித் தரணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றவர், அடுத்த செய்தியைச் சொன்னார்.
“தனியார் சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை 2,300 கோடி ரூபாய். இதை உடனே வழங்கச் சொல்லி சென்னையில கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வந்தாங்க. இதையடுத்து, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளை அழைச்சுப் பேசி ஆலை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டிருக்கிறாரு. ஏப்ரல் மாசத்துல விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை கிடைச்சிடும்னு உறுதியா சொல்லியிருக்காரு அமைச்சர்.
உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ம் தேதி கொண்டாடப்படுது. இதன் மூலமா தண்ணீர்பத்தின விழிப்பு உணர்வு கூடுதலா ஏற்படணும்” என்று வாத்தியார் சொல்லி முடிக்கும்போதே, பக்கத்துத் தோட்டத்து மாடசாமி வந்துவிட, கிளம்ப ஆயத்தமானார், ஏரோட்டி. அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
‘‘காவிரி நீர் கொடுக்க முடியாது!’’
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை ஜூலை மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஜூலை 11-ம் தேதி வரை கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தினமும் 2,000 கன அடி நீர் திறக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், “காவிரியில் எங்கள் மாநிலத்துக்கே போதிய தண்ணீர் இல்லை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட முடியாது” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வழக்கம் போலவே சொல்லியிருக்கிறார்.