
பித்தம் தணிக்கும் அகத்தி... தலைபாரம் நீக்கும் சிற்றகத்தி!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்
ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

தோட்டங்களில் குளுமையான சூழலை ஏற்படுத்துவதுபோலவே, உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும், அற்புத மூலிகைதான் அகத்தி. அகத்தியில் மூன்று வகைகள் உள்ளன. வழக்கமாகத் தோட்டங்கள், வெற்றிலைக்கொடிக்கால் ஆகியவற்றில் வளர்க்கப்படுவது, ‘சாழை அகத்தி’. பொதுவாக வெள்ளை நிறத்தில் பூ பூக்கும் அகத்திதான் அதிகமாகக் காணப்படும்.
இதில், அரிதான ஓர் இனத்தில் சிவப்புப் பூ பூக்கும். இது ‘சிவப்பகத்தி’ எனப்படுகிறது. ஆனாலும், இவை இரண்டுமே சாழை அகத்தி வகைதான். பொதுவாக, இவை இரண்டையுமே அகத்தி என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இவை, உயரமாக வளர்ந்து கிளைகள் பரப்பி மரமாக வளரக்கூடியவை.
இதில் அளவில் கொஞ்சம் சிறியதாகவும், கறுப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் சிறிய பூக்கள் பூக்கக்கூடிய வகை ‘சிற்றகத்தி’. இதை ‘செம்பை’ என்றும் சொல்வர். கறுப்பு பூ பூப்பதைக் கறுஞ்செம்பை எனவும் மஞ்சள் பூ பூப்பதை மஞ்சள் செம்பை எனவும் சொல்வர்.

சாழை அகத்தி, சிற்றகத்தி ஆகிய இரண்டும் நாட்டினங்கள். இவையில்லாமல் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவை ‘சீமை அகத்தி’. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டது இது. இதன் இலைகள் அகத்தியை ஒத்து இருந்ததால், இதைச் சீமை அகத்தி என அழைக்க ஆரம்பித்தனர். இது, பெரியளவில் முட்டை வடிவ இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் கொண்டிருக்கும். நீர்நிலைகளின் ஓரம், சாக்கடை ஓரங்களில் இது செழித்து வளர்ந்திருப்பதைக் காண முடியும். உலர வைக்கப்பட்ட சீமை அகத்தி இலைகள் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த இலைகளில் அதிகமாகக் காணப்படும் ‘கிரையேகோனிக்’ எனும் வேதிப்பொருள், தோல் நோய்களைக் குணமாக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதைத்தவிர, சீமை அகத்தி இலைகள், நுண்ணுயிர் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சாழை அகத்தி
இது சிறந்த கால்நடைத் தீவனம். இதன் இலை, பூ, பிஞ்சு ஆகிய அனைத்துமே மக்களால் சமைத்து விரும்பி உண்ணப் படுகிறது. அகத்தி, சித்த மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும் என்பதால், மிகவும் வீரியமுடைய சில செந்தூரங்களை உண்ணும்போது, அகத்திக்கீரையைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. இக்கீரையை வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும். அடிக்கடி சாப்பிட்டால், உடலில் வாயு பெருகி, கரப்பான் முதலிய தோல் நோய்கள் பெருகும். அதனால், நாள்பட்ட தோல்நோயாளிகள், விஷக்கடி உள்ளவர்கள் அகத்திக்கீரையைத் தவிர்ப்பது நல்லது. ‘வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதாவது, முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைத்துவிட்டால், அதன் பலன்கள் பாதிக்கப்படும். அகத்தியை நன்றாக வேக வைக்காவிட்டால் அகத்திக் கீரையின் சத்துகள் மனித உடலுக்கு கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.

அதிகம் வெயிலில் அலைவதாலும் தேநீர், காபி போன்ற பானங்களை அடிக்கடி குடிப்பதாலும் உடலில் பித்தம் அதிகரிக்கும். வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்றவை பித்தம் அதிகரித்ததன் அறிகுறிகள். இதனால், பாதிக்கப்பட்டவர்கள், அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிடுவது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் 15 மில்லி முதல் 30 மில்லி வரை அகத்திக்கீரைச்சாறு அருந்தினால், பேதியாகி வயிற்றிலுள்ள நுண்புழுக்கள் வெளியாகும்.
1 பங்கு அகத்திக்கீரைச்சாறு, 5 பங்கு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, சிறிதளவு எடுத்து உச்சந்தலையில் தேய்த்தால், பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு நீங்கும். தேனைத் தலையில் தடவினால் தலைமுடி நரைக்கும் என்பதெல்லாம் வீணான கட்டுக்கதை. சிவப்பு நிற அகத்திப்பூச் சாற்றை மூக்கில் பிழிந்தால், மூக்கிலிருந்து வழியும் ரத்தம் நிற்கும். சிவப்பு நிற பூ கிடைக்காவிடில், வெள்ளை நிற அகத்திப்பூச் சாற்றைப் பயன்படுத்தலாம்.
நான் பாபநாசத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கும்போது, முதலாமாண்டில் நடப்பட்ட பல்வேறு தாவரங்கள் விரைவில் கருகிவந்தன. எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றினாலும் அவை கருகுவது நிற்கவில்லை. பிறகு, ஏராளமான அகத்தியை நட்டு, நிழல் ஏற்படுத்தினேன். தற்போது நட்ட அனைத்து தாவரங்களும் நன்றாக வளர்ந்து வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரமான பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய குங்கிலியம் முதலான மரங்கள்கூட என்னுடைய மூலிகைப் பொழிலில் நன்றாக வளர்ந்து வருவதற்குக் காரணம் அகத்தியின் கருணைதான்.
சிற்றகத்தி (கறுஞ்செம்பை, மஞ்சள் செம்பை)
இதைப் பேச்சு வழக்கில் ‘சித்தகத்தி’ என்பார்கள். சிறிய மரமாய் வளர்ந்து, ஏராளமான பூக்கள் பூக்கும். மஞ்சள், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பயிரிடும்போது அவற்றுக்கு நிழல் தருவதற்காகச் சிற்றகத்தி பயிரிடப்படுகிறது. சிற்றகத்தி இலைகளை அரைத்து சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால், பழுத்து உடையும்.

கறுஞ்செம்பை இலையுடன் சிறிது குப்பைமேனி இலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து... சொறி, சிரங்குகள் மீது பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் குணமாகும். இவ்வாறு 3 முதல்
5 நாள்கள் வரை செய்ய வேண்டும். 10 மில்லி நல்லெண்ணெயில் 10 கறுஞ்சிற்றகத்திப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர தலைகணம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் குணமாகும். இவ்வாறு வாரம் இருமுறை தலைமுழுகி குளித்து வர வேண்டும்.
15 மில்லி சிற்றகத்தி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 5 நாள்கள் குடித்து வந்தால், இரண்டொருமுறை மலம் இளகலாய்க் கழியும். நாள்பட்ட கரப்பான் குணமாகும். வாயுவினால் தடைப்பட்ட மாதவிடாய் வெளியாகும்.
சீமையகத்தி
இது, வெளிநாடுகளிலிருந்து வந்த வகையென்றாலும், தமிழகம் முழுவதுமே இது காணப்படுகிறது. சீமையகத்தி இலை, விதை ஆகியவற்றை எலுமிச்சைப்பழச்சாறு விட்டு அரைத்து அதை... கழிப்பறை பற்று, கரப்பான் புண், படை, சொறி, சிரங்கு ஆகியவற்றின் மீது தடவி வந்தால் குணமாகும். இதன் இலைகளைக் குறுக அரிந்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, நாள்பட்ட படுக்கைப்புண்ணைக் கழுவப் பயன்படுத்தலாம். சித்தமருந்துக் கடைகளில், ‘சீமையகத்திக் களிம்பு’ எனும் மருந்து கிடைக்கும். இதையும் பற்று, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கப் பயன்படுத்தலாம்.
அடுத்த இதழில் முருங்கை, முள் முருங்கை பற்றிப் பார்ப்போம்.
- வளரும்
அகத்தித் தைலம்
ஒரு லிட்டர் அகத்திக்கீரைச் சாறுடன் (சாழை அகத்தி) 1 லிட்டர் நல்லெண்ணெய் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதித்துச் சுண்டி, அடியில் படியும் வண்டல் மெழுகு பதத்துக்கு வரும்போது... கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, விலாமிச்சை வேர், சாம்பிராணி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் சேர்த்து இடித்துத் தயாரித்த பொடியைத் தூவி வடித்து ஆற வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ‘அகத்தித் தைலம்’ என்று பெயர். இத்தைலத்தை வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையோ தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பித்தத் தலைவலி குணமாவதோடு கண்கள் குளிர்ச்சி அடையும். அதிகமான தலைவலியுடன் மஞ்சள் நிறத்தில் வாந்தியும் வருவதுதான் பித்தத் தலைவலி. வாந்தி ஏற்பட்டவுடன் தலைவலி நீங்கிவிடும். இந்த நோயாளிகளுக்கு அகத்தித்தைலம் ஒரு நிரந்தரத் தீர்வு.
குடிபோதை அதிகமாகி அதிகப் பிதற்றலுடனும் ஆரவாரத்துடனும் காணப்படுபவர்களுக்கு இத்தைலத்தைத் தலைக்குப் பூசி, குடம் குடமாய்த் தண்ணீரை ஊற்றினால் போதை தணியும். குடியை விட்டு விலக நினைப்பவர்கள், இந்தத் தைலத்தை அடிக்கடி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். குடியை விட்டவர்களும் இத்தைலத்தைத் தேய்த்து குளித்து வந்தால் கை, கால் நடுக்கம் குறையும்.
பெயர் தாவரவியல் பெயர்
அகத்தி, சிவப்பகத்தி - SESBANIA GRANDILLORA
சிற்றகத்தி (மஞ்சள் செம்பை, கறுஞ்செம்பை) - SESBANIA SESBAN
சீமை அகத்தி - CASSIA ALATA
அகத்திப்பட்டைக் குடிநீர்
50 கிராம் அகத்திப்பட்டையை (சாழை அகத்தி) ஒன்றிரண்டாகப் பொடித்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராக வற்றும் வரை கொதிக்க வைத்து எடுப்பதுதான் அகத்திப்பட்டைக் குடிநீர். இதை 50 மில்லி வீதம் ஒரு நாளைக்கு 5 முறை குடித்துவர, அம்மைச்சுரத்தின் வேகம் குறையும். மேலும், அதிக தாகம் கை கால் எரிச்சல், மார்பு எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.
கறுஞ்செம்பைத் தைலம்
கறுஞ்சிற்றகத்திச்சாறு, வெள்ளைப் பூண்டுச்சாறு ஆகியவற்றை வகைக்கு 1 லிட்டர்; நல்லெண்ணெய் 2 லிட்டர்; சீரகம், கறுஞ்சீரகம், மிளகு, சாம்பிராணி ஆகியவற்றில் வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாக எரிக்க வேண்டும். அடியில் படியும் வண்டல் மெழுகுபதத்தில் வந்தவுடன் இறக்கி, வடிகட்டினால் அதுதான், ‘கறுஞ்செம்பைத் தைலம்’. இதைக்கொண்டு வாரம் இருமுறை தலைமுழுகி வர, நாள்பட்ட தலைவலி, ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு, கழுத்துவலி ஆகியவை குணமாகும்.
சீமையகத்திக் களிம்பு
• சீமையகத்தி இலைச்சாறு - 1 லிட்டர்
• எலுமிச்சைப் பழச்சாறு - 1 லிட்டர்
• தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
• கார்போக அரிசி - 20 கிராம் (சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
• கறுஞ்சீரகம் - 20 கிராம்
• காட்டுச்சீரகம் - 20 கிராம்
• கசகசா - 20 கிராம்
• நீரடிமுத்து - 20 கிராம்
(சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
மேற்கண்ட பொருள்களைத் தேவையான அளவு தேங்காய்ப்பால் விட்டு அரைத்து அடுப்பிலேற்றி, சிறு தீயாக எரித்துக் கொதிக்க வைக்க வேண்டும். அடியில் படியும் வண்டல், மெழுகு பதமாகும் பக்குவத்தில் இறக்கி வடிகட்டி அதில், 300 கிராம் தேன்மெழுகை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட வேண்டும். நன்கு ஆறும் வரை கலக்கிக்கொண்டே இருந்தால் களிம்பாக உறைந்துவிடும்.