மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இரும்பு மரம் ‘ஈட்டி’!

இரும்பு மரம் ‘ஈட்டி’!
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்பு மரம் ‘ஈட்டி’!

சுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

லகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை, சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இரும்பு மரம் ‘ஈட்டி’!

தென்னிந்தியாவின் பெருமை, மாடமாளிகைகளும் வானுயர்ந்த கோபுரங்களும் அல்ல... நமது காடுகளில் கம்பீரமாக வளர்ந்து நிற்கும் ஈட்டி மரங்களே. பண்டைக்காலப் போர்க்கருவியான ஈட்டி, மிகவும் உறுதியானது. இந்த மரமும் இரும்பைப்போல் உறுதியானது என்பதால் இதற்கு ‘ஈட்டி மரம்’ எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழில் ‘தோதகத்தி’ எனவும், ஆங்கிலத்தில் ‘ரோஸ்வுட்’ எனவும் அழைக்கப்படும் ஈட்டி மரம், நம் கலாசாரத்தோடு கலந்த மரம். 

இரும்பு மரம் ‘ஈட்டி’!

இதன் வைரப்பகுதி, தேக்கு மரத்தைவிட 60 சதவிகிதம் அதிகக் கடினத்தன்மை கொண்டது. பளு தாங்குவதில் தேக்கைவிட 40 சதவிகிதத்துக்கு மேல் திறனுடையது. பர்மா தேக்கைவிட வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தாலும், மரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதைப் பூச்சிகளும் பூஞ்சணங்களும் தாக்குவதில்லை. இதில் செய்யும் பொருள்கள், பல தலைமுறைகள் தாண்டியும் உழைக்கும். ஈட்டி மரத்தில் செய்யப்பட்ட மேஜைகளை நான்கு பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாது. நல்ல வேலைப்பாடுகளுக்கும், நீடித்த உழைப்புக்கும் ஈட்டி மரத்துக்கு இணையாக உலகில் வேறெந்த மரமுமில்லை. இத்தனை அற்புதம் நிறைந்த ஈட்டி மரத்தை, பண்டைத் தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஈட்டி மரங்களின் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகக் காலத்தில் வீடுகளின் உத்தரங்களுக்கு ஈட்டி மரங்கள் பயன்படுத்தப்பட்டதைப் புதைபொருள் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. பண்டைத் தமிழர்களின் கடல் வணிகத்தில் ஈட்டி மரம் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ‘ஆனைமலை டிரஸ்ட்’ என்ற வணிகக்குழுவினர் 4.8 மீட்டர் நீளம், 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஒரே மரப் பலகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜையைச் செய்து, வெலிங்டன் சீமாட்டிக்குப் பரிசளித்துள்ளனர். லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த மேஜை, இன்றைக்கும் காண்போர் மனதைக் கொள்ளைகொண்டு வருகிறது.

மனதை மயக்கும் நறுமணம்!

ஈட்டி மரத்தின் மென்பகுதி சிறிய அளவில் இருக்கும். இது பழுப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. இதன் வைரப்பகுதி பலவகையான வண்ணங்களில் கரும்ஊதா சாயலுடன் இருக்கும். இந்த மரக்கட்டைகளில் வேலை செய்யும்போது, மனதை மயக்கும் ஒரு சுகந்தமான நறுமணம் கமழும். இதன் மணத்துக்காகவே வாசனை திரவியங்கள் (சென்ட்)  தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது; ரோஸ்வுட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து மேஜை, நாற்காலி, பீரோ, அலமாரி, ரயில்பெட்டிகள் போன்ற பல்வேறு பொருள்களைச் செய்யலாம். நாளாக நாளாக இந்தப் பொருள்கள் பளபளப்பாகிக் கொண்டு இருக்குமே தவிர, மங்காது.  மரத்தின் விலை அதிகம் என்பதால், இந்த மரத்தால் செய்யப்படும் பொருள்களின் விலையும் மிக அதிகம். நம் நாட்டில் ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் இந்த மரங்களில் செய்யப்பட்ட பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களும் இந்த மரத்தைப் பயன்படுத்தியதால், பெருமளவில் ஈட்டி மரங்கள் அழிக்கப்பட்டன. இந்த அரிய வகை மரங்களைப் பாதுகாக்கவும், காடுகளின் பழைமையைப் பராமரிக்கவும், ஈட்டி மரங்கள் வெட்டுவதை அரசு தடை செய்தது.

இரும்பு மரம் ‘ஈட்டி’!

தமிழக அரசு, 1994-ம் ஆண்டில் ‘தமிழ்நாடு ஈட்டிமரப் பாதுகாப்புச் சட்ட’த்தை இயற்றியது. அடுத்த 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் வகையில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 2009-ம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலைகளைக் கிள்ளினால் சிறை!

ஈட்டி மரப் பாதுகாப்புச் சட்டம், கடுமையான பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவு 3-ன் படி எந்த ஒரு நபரும் ஈட்டி மரத்தை வெட்டவோ வீழ்த்தவோ கூடாது. அடிப்பகுதியில் பட்டையை வெட்டி மரத்தைக் காயும்படி செய்யவோ கிளைகள், இலைகளை வெட்டவோ, எரிக்கவோ அல்லது வேறெந்த வகையிலுமோ சேதம் விளைவிக்கக்கூடாது. இந்த இனம் அழியும்படியான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. எந்தவொரு தனிநபரும் ஈட்டி மரத்தைக் கடத்தவோ  விற்கவோ தன் பொறுப்பில் வைத்திருக்கவோ கூடாது என்கிறது, இதன் 4-வது பிரிவு. இந்தச் சட்டவிதிகளை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்கிறது இதன் 6-வது விதி. 

இரும்பு மரம் ‘ஈட்டி’!

இந்த மரத்தின் இலைகளைக் கிள்ளினாலே சிறைத் தண்டனை எனக் கடுமையான சட்டம் வந்த பிறகுதான், காடுகளில் இவை ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்திருக்கின்றன. காய்ந்துபோன ஈட்டி மரங்களைக்கூட நாம் பயன்படுத்திவிட முடியாது. அதற்கு வனத்துறையிடம் முறையாக விண்ணப்பித்தால், மாவட்ட வன அலுவலர் பதவிக்குக் குறையாத பதவியில் உள்ள அதிகாரிகள் விண்ணப்பத்தைத் தணிக்கை செய்வார்கள்.

பிறகு, அந்த மரத்தை எடுத்துச் செல்ல அனுமதியளிப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படும். அதை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவார். அனுமதி வழங்குவதற்கோ மறுப்பதற்கோ மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு.

ஒருவேளை, அனுமதி கிடைத்துவிட்டால், உத்தரவு கிடைத்ததிலிருந்து 6 மாத காலத்துக்குள் அந்த மரங்களை வெட்டி நீக்கும் பணியை முடித்து விட வேண்டும்.

ஈட்டி மரம் வளர்ப்பது சமூகக் கடமை!


இத்தனை கடுமையான சட்ட திட்டங்களைக்கொண்ட ஈட்டி மரத்தை நாம் ஏன் வளர்க்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். தற்போது, இந்த மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இதைப் பாதுகாப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தச் சட்டம் முடிவுக்கு வரும். அப்போது, காலவரம்பை நீட்டிப்பது அல்லது சட்ட விதியை நீக்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 

இரும்பு மரம் ‘ஈட்டி’!

எப்படி இருந்தாலும், ஈட்டி மரம் வளர்க்க வாய்ப்புள்ளவர்கள், இதை வளர்த்து வந்தால் அழியும் இனத்தைக் காத்த புண்ணியம் கிடைக்கும். எதிர்காலத்தில் சந்தனமரத்தைப் போல, ஈட்டி மரத்துக்கும் சில நிபந்தனைகளைத் தளர்த்தும் வாய்ப்பு உருவானால்... அப்போது மிகப்பெரிய சொத்தாக ஈட்டி மரம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள பகுதிகள், காடுகள், மலைகளில்தான் இந்த மரங்கள் வளரும்.

இயற்கை விவசாயம் மற்றும் பண்டையத் தமிழர்களின் கேசப் பாதுகாப்புக் கவசமான ‘உசிலை’ என்ற அரப்பு மரம் பற்றி அடுத்த இதழில்...

- வளரும்   

ஈட்டி மர வளர்ப்பு!

ட்டி மரத்தை ஆற்றோரங்கள், ஈரமான நிலப்பகுதிகள், ஆழமான மண்கண்டம் உள்ள இடங்களில் வளர்க்கலாம். ஆனால், இந்த மரத்தின் மூலம் பயன்பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். தேக்குடன் ஒப்பிடும்போது இதன் ஆரம்ப வளர்ச்சி மிகவும் நிதானமாகவும் இடைக்காலத்தில் தேக்கைவிட வேகமாகவும் இருக்கும். இதன் விதையை நேரடியாக விதைக்கலாம்; நாற்றுகளாகவும் நடவு செய்யலாம். வேர்ச்செடிகளை எடுத்தும் நடவு செய்யலாம். வேர்ச்செடிகளைப் பெற, மரத்தைச்சுற்றி ஆழமான பள்ளம் தோண்டி வைத்தால், சில நாள்களில், வெட்டப்பட்ட வேர்களில் இருந்து செடிகள் முளைத்து வரும். இவற்றை வேருடன் எடுத்து நடலாம். ஓரளவுக்குச் சுமாரான மரத்தைப் பெற
60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஒரு கன அடி ரூ.18 ஆயிரம்

‘டல்பெர்ஜியா லட்டிஃபோலியா’ (Dalbergia Latifolia) என்ற ஈட்டி இனம், இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. பாகிஸ்தான் நாட்டில் தோட்டங்களாக வளர்க்கப்படுகிறது. ‘Dalbergia migra’ என்ற இனம், மேலைநாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அழியும் நிலையில் உள்ள இனமாக இது அறிவிக்கப்பட்டு, 1992-ம் ஆண்டு முதல் இதன் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த மரம், கர்நாடக மாநிலத்தில் ஒரு கன அடி 18 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது.