மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!

மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில நடந்த ஒரு விழாவுக்கு... ரஷ்யா நாட்டுல படிச்சி, இஸ்ரேல் நாட்டுல விஞ்ஞானியா இருந்த நண்பர் வந்திருந்தார். விழா தொடங்குறதுக்கு முன்னாடி, ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளைப் பத்தின பசுமையான நினைவுகளை அசைபோட ஆரம்பிச்சார்.

மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!

‘‘இப்போது சோவியத் ரஷ்யா என்ற நாடு இல்லை. அப்போதைய சோவியத்தில் 15 நாடுகள் அங்கம் வகித்தன. அந்தக் காலத்தில் சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியாக இருந்தது. ரஷ்யா புரட்சிக்குப் பின்னர், நான்கு ஆண்டுகள் சோவியத் ஒன்றியம் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற வேலைகளையெல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. இதற்குச் செயல் வடிவம் கொடுத்த பெருமை லெனின் என்ற மாபெரும் மனிதரையே சாரும்.

இந்தக் கூட்டுப்பண்ணைகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்திருந்தன. கூட்டுப்பண்ணையில் நடக்கும் விவசாயம், வேலை என்பதாக இல்லாமல், மக்களுக்குச் சேவைச் செய்யும் பணியாகக் கருதப்பட்டது. கூட்டுப்பண்ணை ஒவ்வொன்றும், தங்களுக்கான உற்பத்தி இலக்கை நிர்ணயம் செய்து, போட்டிபோட்டுக்கொண்டு விளைச்சலை அள்ளிக் குவித்தன. நாட்டு மக்களின் பசியைப்போக்க, நல்ல விளைச்சல் எடுக்கும், கூட்டுப்பண்ணைகளுக்குச் சோவியத் அரசு, பரிசுகளையும் சலுகைகளையும் வாரி வழங்கியது.

நம் கிராமங்களில் நன்றாக விவசாயம் செய்யும், விவசாயிகள் வீட்டில் டிராக்டர் நிற்பதுபோல, சோவியத்திலிருந்த ஒவ்வொரு கூட்டுப் பண்ணையிலும் குட்டி விமானங்கள் இருந்தன. கூட்டுப்பண்ணையில் விளையும் பொருள்களை, நகரங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தில் இருந்த உஸ்பெகிஸ்தானின் பாலைவனப் பகுதியில் பருத்திச் சாகுபடி நடந்தது. இன்று பாலைவனத்தில் இஸ்ரேல் விவசாயம் செய்வதற்கு, முன்னோடி சோவியத் ஒன்றியம்தான். ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் கலையைக் கற்றிருந்தனர் சோவியத் மக்கள்.

காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்ணை வளப்படுத்தி, ரசாயன உரங்களை ஓரம்கட்டி வரும் உயிர் உரங்களில் முக்கியமானது, அசோஸ்பைரில்லம். இந்த அற்புதமான அசோஸ்பைரில்லம் கூட்டுப் பண்ணை ஒன்றில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று, அது உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ஆனால், சோவியத் கூட்டுப்பண்ணைகளில் ரசாயன விவசாய முறைதான் பின்பற்றப்பட்டன என்பதுதான் உச்சகட்ட சோகம். இதோடு கூட்டுப் பண்ணைகளுக்குச் சொந்தமான நிலங்களில், ஒற்றைப் பயிர்ச் சாகுபடி முறை நடந்துவந்தது. பூச்சி, நோய்த் தாக்குதல்கள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த விளைச்சலும் பாதிக்கப்பட்டது. பல பயிர்ச் சாகுபடி செய்திருந்தால், ஒரு பயிரில் விளைச்சல் குறைந்தாலும், மற்றொரு பயிர் கைகொடுத்திருக்கும். இப்படி.... கூட்டுப் பண்ணையில் ஓட்டைகளும் இருந்தன.

இந்த ஓட்டைகளை அடைப்பதற்குள், சோவியத் ஒன்றியம் 1991-ம் ஆண்டுவாக்கில் துண்டு துண்டாக உடைந்து, தனித்தனி நாடுகளாக உருவாகின...’’ என்று சொல்லிவிட்டு பெருமூச்சுவிட்டபடி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு மிடறு குடித்துவிட்டு, இஸ்ரேல் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார். அப்போ  அவரோட முகம் பிரகாசமா மாறத் தொடங்கிச்சு.... ‘‘சோவியத் கூட்டுப் பண்ணையில் ஏற்பட்ட படிப்பினைகளை இஸ்ரேல் நாடு உற்றுக் கவனித்தது. மிகவும், கவனமாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தது. இஸ்ரேல் விவசாயத்தில் இன்று சாதனை செய்வதற்கு ‘கிபுட்ஸ்’ (Kibbutz) என்ற கூட்டுப் பண்ணை விவசாய முறைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல், இயற்கை விவசாயம்... என உலகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கபடி, இஸ்ரேல் என்ற குட்டி நாடு தன்னை மாற்றிக் கொண்டது. இதனால்தான், விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறது. பிற நாடுகளின் தவறுகளைக்கூடப்  பாடமாகக் கற்றுக்கொண்டு முன்னேறி வருகிறது இஸ்ரேல்...’’ என்று அந்த நண்பர் சொல்லி முடிக்கவும் விழா தொடங்கவும் சரியாக இருந்துச்சு. இந்த ரெண்டு நாடுகளோட பாடங்களும் நம்ம நாட்டுக்கும் பொருந்தும்தானே!