மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன் - படம்: தி.விஜய்

வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார், வாத்தியார். அந்த வழியாக வந்த ஏரோட்டி, வாத்தியார் டி.வி. பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவுடன், “என்ன வாத்தியார்? டி.வியில விசேஷம்” என்று கேட்டார்.

அதற்கு வாத்தியார் “எல்லாம் நம்ம விவசாயிகள் பிரச்னைதான். 20 நாள்களுக்கு மேலாக தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில போராட்டம் பண்ணிட்டிருக்காங்க. பிரதமர் என்னான்னு வந்து எட்டி பார்க்கல. விவசாயிகளும் பிரதமர் வந்தாதான் போராட்டத்த கைவிடுவோம்னு உறுதியாக இருக்காங்க” என்றவர், டி.வியை அணைத்துவிட்டு,  ஏரோட்டியோடு நிலத்துக்குக் கிளம்பினார். வழியில் காய்கறி விற்றுவிட்டு வந்துக் கொண்டிருந்த கண்ணம்மாவும் இவர்களோடு சேர்ந்துகொண்டார். ‘‘ஒரு மகிழ்ச்சியான சேதிய்யா’’ என்று சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

“போன வருஷம் நவம்பர் மாசம் எட்டாம் தேதி, 500, 1,000 ரூபாய் செல்லாதுனு பிரதமர் அறிவிச்ச பிறகு, தமிழ்நாட்டுல இருக்கிற 4,500 தொடக்க வேளாண்மை சங்கங்கள்லயும் கொஞ்ச நாளைக்குப் பயிர்க்கடன் கொடுக்கிறதை நிறுத்தி வெச்சிருந்தாங்க. அப்புறம், மத்திய கூட்டுறவு வங்கியில கணக்கு ஆரம்பிக்கிறவங்களுக்கு மட்டும்தான் பயிர்க்கடன் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. நிறைய விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க முடியாததால... கடன் வாங்குறதுல சிக்கல் இருந்துச்சு. இப்போ அந்த விதிகளைத் தளர்த்தியிருக்காங்க.

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து எல்லாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்லயும் வழக்கம்போல விவசாயிகளுக்குப் பயிர்க்கடனையும் நகைக்கடனையும் கொடுக்கச் சொல்லி தமிழக அரசு உத்தரவு போட்டிருக்கு. அதனால, மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகளும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள்லயே கடன் வாங்கிக்க முடியுமாம். இதனால விவசாயிகள் சந்தோஷத்துல இருக்கிறாங்க.” என்றார், வாத்தியார்.

அதைத் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, “உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்து விவசாயிகளுக்குக் கூடுதல் சந்தோஷம் கொடுத்திருக்கே... அதுவும் கூட்டுறவு கடன் பத்தின விஷயம்தான்” என்று அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.  “போன வருஷம், சட்டமன்றத் தேர்தல் முடிஞ்சு திரும்பவும் அ.தி.மு.க கட்சி ஆட்சி அமைச்சதும், கூட்டுறவு வங்கிகள்ல கடன் வாங்கியிருந்த சிறு, குறு விவசாயிகளோட கடனைத் தள்ளுபடி செஞ்சு உத்தரவிட்டாங்க. அதுக்கடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ‘சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடிங்கிறது, பாரபட்சமானது. எல்லா விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யணும்’னு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்.

அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதிகள், ‘சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடினு அரசு அறிவிச்சிருக்கு. அதுக்கான அறிக்கைகளைப் பரிசீலனை பண்ணிப் பார்த்தோம். விவசாயிகளைச் சிறு, குறு விவசாயிகள்; இதர விவசாயிகள்னு பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்ததுங்கிற விவரம் அரசாணையில் இல்லை. சிறு, குறு விவசாயிகள் மட்டும்தான் வறட்சியாலும் பயிர் இழப்பாலும் பாதிக்கப் பட்டிருக்காங்கறதுக்கான ஆதாரமும் இல்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதுக்காகத் தள்ளுபடி வழங்க, அரசு முடிவெடுத்து ஆணை வெளியிட்டுருக்குனு தெளிவா தெரியுது.

 நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, விவசாயிகளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது. துன்பத்தில் இருந்து விவசாயிகளை மீட்பதுதான் அரசின் நோக்கம்ங்கிறபோது, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தான் தள்ளுபடி கொடுக்கணும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து விவசாயிகளும்தான் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால, மூணு மாசத்துக்குள்ள கூட்டுறவு சங்கங்கள்ல கடன் வாங்கியிருக்குற அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செஞ்சு உத்தரவை வெளியிடணும். அதுக்கு மத்திய அரசோட நிதி உதவியை மாநில அரசு கேட்கணும்.

மத்திய அரசும் நிதி உதவி செய்யணும்’னு தீர்ப்பளிச்சிருக்காங்க. அதோட, கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள்கிட்ட இருந்து கடனை வசூலிக்கிற முயற்சிகளை நிறுத்த சொல்லியும் உத்தரவு போட்டுருக்காங்க நீதிபதிகள். அதனால, விவசாயிகள், கூடுதல் சந்தோஷத்துல இருக்குறாங்க” என்றார், ஏரோட்டி.

“பரவாயில்லை... ஏதோ கொஞ்சம் ஆறுதலான விஷயம் சொல்லியிருக்காங்க. பெரிய அளவுல பலன் இல்லாட்டியும் கடன் வாங்கின விவசாயிகள் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க” என்று சொன்ன காய்கறி, தான் கொண்டு வந்திருந்த தர்பூசணி பழத்தை நறுக்கி இருவருக்கும் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“கேரளா மாநிலம், கொச்சின்ல மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் இருக்கு. நாடு முழுசும் தென்னை சாகுபடியை அதிகரிக்கிறது, தென்னையில் புதிய ரகங்களை உருவாக்குறது, தென்னை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்குறது இதெல்லாம்தான் இந்த வாரியத்தோட பணிகள்.

இதுக்காக ஒவ்வொரு வருஷமும் தென்னை வளர்ச்சி வாரியத்துக்குப் பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்குது, மத்திய அரசு. அதுல, ‘தென்னை மறு நடவு’க்குனு ஒரு மானியம் இருக்கு. வாடல் நோய், பூச்சித் தாக்குதல், அதிக வயது, காய்ப்புத்திறன் இல்லாமப் போவது, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புனு பாதிக்கப்படுற மரங்களை வெட்டிட்டு அதுக்குப் பதிலா புதுக் கன்றுகளை நடறதுதான் திட்டம். அதுக்கு மானியம் கொடுக்குது, தென்னை வளர்ச்சி வாரியம்.
மரங்களை வெட்டி அகற்றுவதற்கு ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். மறு நடவுக்கு 100 தென்னங் கன்றுகள் கொடுப்பாங்க. அதோட, ரெண்டு வருஷத்துக்குப் பராமரிப்புச் செலவா 25,500 ரூபாய் மானியமும் உண்டு. ஆனா, இந்தத் திட்டத்துல தமிழக விவசாயிகளுக்கு மானியம் சரியாகக் கிடைக்கிறதேயில்லை. மானியத்துக்கு விண்ணப்பிக்கிற விவசாயிகளையும் தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுக்கிறதேயில்லையாம். குறைஞ்ச அளவுதான் மானியம் கொடுக்குறாங்களாம். ஆனா, கேரள மாநிலத்துல மட்டும் வருஷா வருஷம் பல கோடி ரூபாய் மானியத்தை அள்ளிக் கொடுக்கிறாங்களாம்.

தமிழ்நாட்டுல நிலவுற கடுமையான வறட்சியால ஏகப்பட்ட தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கு. உடுமலைப் பேட்டை சுத்து வட்டாரத்துல மட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் நிலத்துல பாதிப்பு ஏற்பட்டிருக்காம். ஆனா, தென்னை வளர்ச்சி வாரியம் 500 ஹெக்டேருக்கு மட்டும்தான் மானியம் ஒதுக்கியிருக்குதாம். அதனால, விவசாயிகள் கடுமையா பாதிப்புக் குள்ளாகியிருக்காங்களாம்” என்றார். “அடப்பாவிகளா... முல்லைப் பெரியாறு தண்ணியைத்தான் தர மாட்டேங்குறாங்கனு பார்த்தா, மத்திய அரசு கொடுக்குற மானியத்தைக் கூட கொடுக்க மாட்டோம்னு சொல்றாங்களே” என்று வருத்தப்பட்டார், காய்கறி.

“சூரியன் உச்சிக்கு வந்திடுச்சு, மாடுகளுக்குத் தண்ணி காட்டிட்டு நிழல்ல கட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே மாடுகளை நோக்கி ஏரோட்டி  செல்ல, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

வேளாண் பல்கலை மாணவர்கள் போராட்டம்! 

மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும் கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பல்கலைக்கழகம், காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.