மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

நண்டு வளர்க்க பயிற்சி கிடைக்குமா?புறா பாண்டி

##~##

''கரும்புச் சாறு தயாரித்து விற்பனை செய்ய விரும்புகிறேன். விற்பனை யுக்திகளைச் சொல்ல முடியுமா?''

சுந்தர், ஈரோடு.

முன்னோடி இயற்கை விவசாயி செங்கற்பட்டு முகுந்தன் பதில் சொல்கிறார்.

''கரும்புச் சாறு எடுக்க கோ-32 ரகம் ஏற்றது. சாறு பிழிய, டீசல் மோட்டாரில் இயங்கும் இயந்திரம் தேவை. 300 மில்லி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யலாம். இதற்காக பாக்கெட் செய்யும் சிறிய இயந்திரம் தேவைப்படும். ஆறு முதல் எட்டு மாதங்கள் வயது கொண்ட கரும்பு மூலம் சாறு எடுக்கலாம். அடிக்கரும்பில்தான் சாறு கிடைக்கும். கரும்பைச் சாறு பிழிவதற்கு முன்பு தோல் பகுதியை நன்றாக சீவிக் கொள்ளவும். இப்படிச் செய்வதால், சாறு வெண்மை நிறத்துடன் இருக்கும்.

சாறு எடுக்கும்போது மறந்தும், அதில் தண்ணீர் பட்டு விடக்கூடாது. குளுமையாக்குகிறோம் என்று ஐஸ் கட்டிகளைப் போட வேண்டாம். தேவைக்கு ஏற்ப எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றைக் கலந்து கொள்ளலாம். சாறு பிழிந்த உடனே பாக்கெட்டில் அடைத்து, சுமார்  4 டிகிரி சென்டிகிரேட் குளிர்நிலையில் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

கரும்புச் சாறு, பிப்ரவரி முதல் ஜூலை வரைதான் நன்றாக விற்பனையாகும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள்... என மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் உள்ள கடைகள் மூலமாக விற்பனை செய்யலாம்.

நீங்கள் கேட்டவை

100 கிலோ கரும்பைப் பிழிந்தால், 55 லிட்டர் சாறு கிடைக்கும்.

300 மில்லி பாக்கெட்டை 7 ரூபாய் என விற்பனை செய்யலாம். நூறு கிலோ கரும்பு மூலம் 1,150 ரூபாய் கிடைக்கும். மெஷின் ஓட்டும் செலவு, பாக்கெட் போடும் செலவு என எல்லாம் சேர்த்தால்...

150 ரூபாய் வரும். சுளையாக 1000 ரூபாய் கையில் நிற்கும். 1 டன் மூலம் 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆலைக்கு அனுப்பினால், ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் சூழலில்... இது மிக மிக பெரிய லாபம்தானே!

ஆரம்பத்தில் அதிக முதலீடு போடாமல், சிறிய அளவில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்துவது நல்லது. சமீபத்தில், என்னிடம் விற்காமல் தேங்கிய, 50 கரும்புச் சாறு பாக்கெட்டுகளை அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் கொடுத்தபோது... நன்கு விற்பனையானது. இதுபோல நாமே விற்பனை வாய்ப்புகளை புதிது புதிதாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 93823-37818.

''மருத மரத்தின் சிறப்புத் தன்மை என்ன? இதில் 'நீர் மருது’ என்று ஒரு வகை உள்ளதா? இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

பி. செல்வம், நரசிங்கன்பேட்டை.

மரம் வளர்ப்பில் அனுபவம் கொண்ட 'மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட மருத மரத்தில்... நீர் மருது, வெண்மருது செம்மருது என பல வகைகள் உள்ளன. 'அர்ஜூன மரம்’ என்றும் இதைச் சொல்வார்கள். மதுரையில் இம்மரங்கள் நிறைய இருந்ததால்தான் அப்பெயர் வந்தது என்றும், சொல்வார்கள்.

நீங்கள் கேட்டவை

சிவகங்கையை ஆண்ட மன்னர்களான பெரிய மருது, சின்ன மருது ஆகியோர் மருத மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு முறை தேர் செய்ய, மருத மரங்கள் தேவைப்பட்டதால், அரண்மனை ஊழியர்கள் சிவகங்கைக்கு அருகில் இருந்த மரங்களை வெட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மரங்களைக் கட்டிப் பிடித்துக்கொன்டு 'இந்த மரத்தின் இலைகளைச் சாப்பிட்டுத்தான் நாங்கள் நோய்களைக் குணப்படுத்திக் கொள்கிறோம். இது மரமல்ல எங்கள் சாமி’ என்று சொல்லி வெட்டவிடாமல் மன்றாடியிருக்கிறார்கள். அதன்பிறகுதான், மருது சகோதர்கள் இம்மரங்களைப் போற்றிப் பாதுகாக்க ஆரம்பித்ததாக சொல்வார்கள்.

இம்மரங்களின் இலை, பட்டை போன்றவை சித்த மருத்துவத்தில் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகளில் பயன்படுகின்றன. நீர் மருது, மூன்று மாதங்கள் வரை நீர் சூழ்ந்து நின்றாலும், தாங்கி நிற்கும் தன்மையுடையது. தண்ணீர் தேங்கும் நிலங்களுக்கு ஏற்ற மரங்கள் இவை. நடவு செய்து 7 முதல் 10 ஆண்டுகளில் மரப்பொருட்கள் செய்ய இம்மரங்களைப் பயன்படுத்தாலம். இதன் கன்றுகள், மாவட்டந்தோறும் உள்ள வன விரிவாக்க மையங்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் கிடைக்கின்றன.''

தொடர்புக்கு, வன மரபியல் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422-2484100, 2484101. 'மரம்’ கருணாநிதி: 93661-09510.

''நண்டு வளர்த்து விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கு விற்பனை வாய்ப்பு உள்ளதா. எங்கு பயிற்சி கிடைக்கும்?''

எஸ். சிவகுமார், நாகப்பட்டினம்.

மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின், முதன்மை விஞ்ஞானி வி.எஸ். சந்திரசேகரன் பதில் சொல்கிறார்.

''இந்தியக் கடலோரப் பகுதிகளில் சுமார் 837 வகை நண்டுகள் உள்ளன. இவற்றில் 27 வகைகள் பெரிய அளவில் வளரக் கூடியவை. இவற்றைத்தான் உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள். நண்டில் புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளன.

நீங்கள் கேட்டவை

கடல் நண்டுகளைத் தவிர, உவர் நீர் உள்ள பகுதிகளில் பண்ணைகள் அமைத்தும் நண்டுகளை வளர்க்கலாம். பண்ணையில் வளர்க்க பச்சை மற்றும் களி நண்டு வகைகள் ஏற்றவை. இவை 2 கிலோ எடை அளவுக்கு வளருகின்றன. இந்த வகை நண்டுகள் உவர் நீர் பகுதிகளில் காணப்படும்

நீங்கள் கேட்டவை

உப்புத்தன்மையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கி வளரக் கூடியவை. தவிர, இந்த வகை நண்டுகள் கரையில் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் தன்மையுடையவை. உயிருடன் உள்ள நண்டுக்குத்தான் நல்ல விலை கிடைக்கும் என்பதால், இவைதான் வளர்ப்புக்கு ஏற்றவையாக உள்ளன.  

உவர் நீர் பகுதிகளில் 1,000 சதுரடியில் குளம் அமைத்து நண்டு வளர்க்கலாம். இந்த அளவு குளத்தில் இருந்து, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வரை வருமானம் எடுக்க முடியும். தமிழ்நாட்டில் நண்டு வளர்ப்பை ஊக்கப்படுத்த எங்கள் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.''

தொடர்புக்கு: இயக்குநர், மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. தொலைபேசி: 044-24618817, 24610565.

''தென்னை மட்டைகளை மட்க வைக்க எளிய தொழில்நுட்பம் என்ன?''

பி. தனபாலன், கே. செட்டிப்பாளையம்.

முன்னோடி தென்னை விவசாயி பொள்ளாச்சி, மது. ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''ஒரு மரத்தில் இருந்து மாதம் ஒரு  மட்டை விழுகிறது. ஒரு மட்டையின் எடை 8 கிலோ. ஒரு வருடத்துக்கு 96 கிலோ மட்டை கிடைக்கிறது. மேலும் பாளை, பன்னாடை... எல்லாம் சேர்த்தால் மொத்தம் 100 கிலோ அளவுக்கு கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றை எளிதாக மட்க வைக்க இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன.

தென்னை மட்டைகளைத் தூளாக்கும் இயந்திரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக மட்டைகளைத் தூளாக்கி, பசுந்தழைகளைச் சேர்த்து, சாணக் கரைசலைத் தெளித்து வைத்தால்... மூன்று மாதங்களில் நன்கு மட்கிவிடும். அவற்றை அப்படியே வயலில் பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை

நுண்ணுயிரிகள் மூலமாக மட்க வைக்கும் முறையும் இருக்கிறது. மட்டை விழுகிற இடத்திலேயே அவற்றை ஒரு சாண் அளவுள்ள துண்டுகளாக வெட்டிப் போட்டால்... கொஞ்சம் கொஞ்சமாக மட்கத் தொடங்கி விடும். அவற்றில் நுண்ணுயிரிகளும் பெருகிக்கொண்டே இருக்கும். மூன்றாண்டுகளில் முதலாவதாகப் போட்ட மட்டை மட்கி விடும். அடுத்தடுத்து துண்டுகளாக்கிப் போடப்படும் மட்டைகள் மட்கும் காலம் குறுகிக் கொண்டே வரும்.

ஐந்தாண்டுகள் இப்படிச் செய்து விட்டால் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் பெருகிவிடும். அதற்குப்பிறகு துண்டுகளாக்காமல் போட்டால்கூட சில வாரங்களிலேயே மட்டைகள் மட்கி விடும். இப்படிச் செய்வதால், மண்ணின் வளம் கூடும். மண்ணில் நீண்ட நாட்களுக்கு ஈரப்பதம் இருக்கும். தென்னையில் நல்ல மகசூலும் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 92458-93294.  

''தமிழ்நாட்டில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் அலுவலகம் எங்கு உள்ளது?''

சென்னையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகம் உள்ளது.தொலைபேசி: 044-26164048.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே  'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.