மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

புறா பாண்டி

‘‘தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கேள்விப்பட்டோம். இதற்கு யாரை தொடர்பு கொள்வது?’’

கே.ஈஸ்வரி, உத்திரமேரூர்.  

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

சென்னையில் உள்ள தாட்கோ நிறுவனத்தின் அலுவலர் பதில் சொல்கிறார்.

‘‘தாட்கோ(TAHDCO-Tamilnadu AdiDravidar Housing And Development Corporation Limited) என்பது ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமாகும். இதில் நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நிலம் மேம்படுத்துதல், பம்ப்செட் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம், ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, குழாய் அமைத்தல் மற்றும் சுழல்நீர்ப் பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. சுயஉதவி குழுக்கள் மற்றும் பயனாளிகளைத் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. வட்டார அளவில் தாட்கோ மேலாளரை தலைவராகக்கொண்ட குழுவும் உள்ளது. தற்போது தாட்கோ நிறுவனம் சார்பில், ஆதி திராவிட விவசாயிகளுக்காக, துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு விவசாயத்துக்காக இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இது. சொந்த நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அல்லது கிணறு அமைத்திருக்கும் விவசாயிகள் இலவச மின்சார இணைப்புக் கேட்டு விண்ணப்பித்திருந்து இதுவரை இணைப்புக் கிடைக்காமல் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் உடனடியாக மின் இணைப்பு பெற முடியும். 

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், http:/application.tahdco.com என்ற இணையதள முகவரியில், விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் ஜாதி, வருமானம், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கல்வித்தகுதிச் சான்று மற்றும் வயதுக்கான ஆதாரச் சான்று ஆகிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதோடு நிலப்பட்டா, சிட்டா அடங்கல், ‘அ’ பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைத்ததற்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீதின் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றையும் ‘ஸ்கேன்’ செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள், மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகங்களில் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள முடியும்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சம்பந்தமாகக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் மாவட்ட அலுவலகத்தையோ தலைமை அலுவலகத்தையோ தொடர்புகொள்ளலாம்.’’

தொடர்புக்கு,

தொலைபேசி: 044 24310221.

‘‘தேற்றான் கொட்டை மூலம் தண்ணீரைச் சுத்தம் செய்ய முடியும் எனச் சொல்கிறார்கள். இது சாத்தியமா?’’


கே.குணசேகரன், திருச்சி.


சென்னையில் உள்ள ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ‘பம்மல்’ இந்திரகுமார், பதில் சொல்கிறார்.

‘‘கலங்கிய, மாசுப்பட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க, நம் முன்னோர்கள் தேற்றான் கொட்டையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதைப் பேச்சுவாக்கில் ‘தேத்தான் கொட்டை’ என்றும் சொல்வார்கள். தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. இந்த மரத்துக்கும் நம் முன்னோர்கள் தெய்வீக முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். தேற்றான் கொட்டை மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

திருவாரூரில் இருந்து எட்டிக்குடி செல்லும் சாலையில் உள்ள திருக்குவளையில் திருக்கோளிலிநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள பிரம்மபுரீஸ்வரருக்கு இணையாகத் தேற்றான் கொட்டை மரத்தை, தல விருட்சமாக வணங்கி வருகிறார்கள். தேற்றான் கொட்டை அடிப்படையில் மருத்துவத் தன்மை கொண்டது. இதன் மூலம் சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், தேற்றான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில், தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். அடிப்பகுதியில் நீரில் இருந்த அசுத்தம் தேங்கி இருக்கும். மேல் பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிக்கட்டி குடிக்கலாம். ஒரு கொட்டையின் மூலம் குறைந்தபட்சம் 50 லிட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும்.

அண்மையில் கிராம பகுதிகளுக்குச் சென்றபோது, ஒரு காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், அருகில் இருந்த குட்டையில் நீரை எடுத்துச் சென்றார். இதை எதற்கு எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டேன். ‘இந்தப் பகுதியில் குடிநீர் பஞ்சம். இந்தக் குட்டை நீரைத்தான் குடித்து வருகிறோம். வசதி உள்ளவர்கள் கேன் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்கள்...’ என்றார்.

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?



அசுத்தமான அந்தக் குட்டை நீரைக் குடித்தால், உடல் நலம் கெடும். எனவே, தேற்றான் கொட்டையைக் கொண்டு, நீரைச் சுத்திகரித்துக் குடியுங்கள்’ என்று சொன்னதோடு, என்னிடம் இருந்த சில தேற்றான் கொட்டைகளைக் கொடுத்துவிட்டு வந்தேன். குறைந்த செலவில் நீரைச் சுத்திகரிக்க இயற்கைக் கொடுத்த பரிசுதான் தேற்றான் கொட்டை. யுரேனியத்தின் கழிவுகளைச் சமன் செய்யும் தன்மை தேற்றான் கொட்டைக்கு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99410 07057.

நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.