
சுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்
உலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை, சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள்தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

ஒவ்வொரு உயிருக்கும் தேவையான பொருள்களையும் சேர்த்தே படைத்துள்ள இயற்கையின் பெருங்கருணை, என்னை ஒவ்வொரு நொடியும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. சிட்டுக்குருவிக்காகப் புழு, பூச்சிகள்; சிங்கத்துக்கு மான் போன்ற விலங்கினங்கள்; யானைக்கு மூங்கில் காடுகள்... என ஒவ்வொன்றுக்குமான தேவைகள் அவை வசிக்குமிடங்களிலேயே பூர்த்தி செய்யப் படுகின்றன. இதே ஏற்பாடுகள்தான் மனிதர்களுக்கும். ஆனால், இயற்கை போட்டு வைத்திருக்கும் கோட்டைத் தாண்டிய மனிதன், அதற்கான பலனைப் பல வகைகளிலும் அனுபவித்து வருகிறான்.

குளியலுக்காகவும், கேசப் பராமரிப்புக்காகவும் இயற்கை செய்து கொடுத்துள்ள அற்புத ஏற்பாடுதான், ‘உசிலை மரம்’ என்று அழைக்கப்படும் ‘அரப்பு மரம்’. இந்த மரத்தின் இலைகளைக் குளியலுக்காக மனிதர்கள் பயன்படுத்திய காலத்தில், இத்தனை வழுக்கை மனிதர்கள் இருந்ததில்லை. நாகரிகம் என்ற பெயரில் அனைத்துப் பொருள்களிலும் நுழைந்து மனித வாழ்வையே மருத்துவத்துக்குள் முடக்கி வைத்திருக்கும் ரசாயனங்கள், நம் மண்ணை மட்டுமல்ல; தலையையும் வழுக்கையாக்கி வைத்திருக்கின்றன. தற்போது ஷாம்பூ போடாமல் யாரும் குளியலை நிறைவு செய்வதில்லை. இயற்கை ஷாம்பான அரப்பும், சிகைக்காயும் இருந்த இடத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருள்கள் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன. ‘அரப்பு, சிகைக்காய்த் தேய்த்துக் குளிப்பது, மனித இனத்துக்கே ஒவ்வாத செயல்’ என்ற நாகரிக மனநிலைதான் இதற்குக் காரணம்.

சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய்த் தூள், அரப்புத்தூள் போட்டு முடியை அலசிவிட்டுத் தலையைத் துவட்டினால் உடல் குளிர்ந்து ஜிலுஜிலுவெனப் புத்துணர்ச்சி தோன்றும். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பு அனைவரும் கடைப்பிடித்த பழக்கம்தான் இது. குளியலறைக்குள் சோப்பும் ஷாம்பும் நுழைந்த பிறகு, சனி நீராடுவது என்பதே வழக்கொழிந்துவிட்டது. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் சிலர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள். எண்ணெய்க் குளியலை மறந்த பிறகு, உடல் சூடு அதிகமாகிவிட்டது. ரசாயன ஷாம்பூகளால் முடி உதிர்தல் உள்பட பல இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்.
வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதுபோல், செயற்கை முறைகளால் வாங்கிய சூடு, மனிதர்களை மறுபடியும் இயற்கையை நோக்கித் திருப்பியிருக்கிறது. அந்த வகையில் அரப்புத்தூளும் பச்சைப் பொடி என்ற பெயரில் தற்போது சந்தைப்படுத்தப்படுகிறது. அரப்பு, நம் மண்ணுக்கே உரிய அற்புதமான மரமாகும். வேறெந்த மரங்களும் வளராத இடங்களிலும் அரப்பு வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.

ஆண்டுக்கு 600 மில்லிமீட்டர் மழையளவே உள்ள பகுதிகளிலும்கூட இது வளரும். நடுத்தரமான உயரம் கொண்ட இந்த மரம், அதிக கிளைகளுடன் அடர்ந்து வளர்வதால் நிழல் தரக்கூடிய மரமாகவும் விளங்குகிறது. அதோடு, காற்றுத் தடுப்பானாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் மரமாகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் கிளைகளை விறகாகப் பயன்படுத்தலாம்.
அரப்பு, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படும். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அரப்பு மோர் கரைசல், இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கரைசலில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளர்ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால், அதிகப் பூக்கள் பிடிக்கும். உசிலை மரத்தின் தாவரவியல் பெயர், அல்பீஸியா அமரா (Albizia Amara). உசிலை மரங்கள், ஆப்பிரிக்க மணல் காடுகளில் அதிகளவு உள்ளன. இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்குத்தொடர்ச்சி மலைக் குன்றுகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சின்னச் சின்ன கரடுகள் உள்ள பகுதிகளில் இது அதிகளவில் தானாகவே வளர்ந்து காணப்படுகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘உசிலம்பட்டி’ என்று அந்த ஊருக்குப் பெயர் உருவாகியதாகக் கூறுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும். மே மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகள் காற்று மூலமாகப் பரவுகின்றன. அவை சென்று விழும் இடங்களில் விதைகள் முளைத்து மரமாகின்றன. இதை அதிகளவு பரப்ப நினைப்பவர்கள், கோடைக்காலங்களில் சாணத்தில் இதன் விதைகளை வைத்து, விதை உருண்டைகள் செய்து கரடுகளில், வேலி ஓரங்கள், தரிசு நிலங்களில் வீசி எறியலாம். உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகளைச் சேகரித்து, உலர்த்தி அடித்துத் தூற்றி எடுத்தால் விதைகள் கிடைக்கும். இந்த விதைகள் மூலம் நாற்று உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். நாற்றாக நடும்போது, ஆறு மாத வயதான செடிகளைதான் நடவு செய்ய வேண்டும்.
- வளரும்
அரப்பு மோர் கரைசல்
உசிலை எனப்படும் அரப்பு மரத்தின் இலையை 2 கிலோ அளவுக்குப் பறித்துக் கொள்ள வேண்டும். இதை, நன்றாகத் தண்ணீர்விட்டு அரைத்து 5 லிட்டர் கரைசலாக மாற்றி, அத்துடன் 5 லிட்டர் புளித்த மோர் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி வைத்து, ஒரு வாரம் புளிக்க விட வேண்டும். பிறகு, பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கரைசலைச் சேர்த்துப் பயிர்களில் தெளிக்கலாம்.
அரப்புப் பொடி
அரப்பு இலையை நிழலில் உலர்த்தி, தூசுகளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சேர்த்துக் குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதன் இலை, பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.