மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!

மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

குஜராத் மாநிலத்துக்குப் பயணம் செய்த சமயம், சபர்மதி ஆசிரமத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். மகாத்மா காந்தி இந்தியாவுல தொடங்கின முதல் ஆசிரமம் இது.

காந்தி பயன்படுத்தின பொருள்கள்... புத்தகம், வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லும் புகைப்படங்கள் கண்காட்சியா இருந்துச்சு. காந்தி ஆசிரமத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்த குஜராத் மாநில காந்திய நண்பர், ஒவ்வோர் இடத்தைப் பத்தியும் விளக்கமா சொல்லிக்கிட்டு வந்தார். காந்தியோட புகழ்பெற்ற வாசகங்கள் பத்தி எங்களோட பேச்சுப் போனது. ‘பசித்தவனுக்கு ரொட்டி தான் கடவுள்’னு காந்தி சொல்லியிருக்கார். அதை எப்போ, எங்க சொன்னார்னு கேட்டேன். 

மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!

குஜராத் நண்பர், தன் தலையில் இருந்த காந்தி குல்லாவைச் சரி செய்தபடி பேச ஆரம்பித்தார்.

‘‘இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள 1931-ம் ஆண்டு, காந்தியடிகள் சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில்...

‘ஏழைகளின் கந்தல் துணியில் முடிபோட்டு வைத்திருந்த செப்புக் காசுகளை, களிம்பேறிய தம்படிகளைத்தான் இந்தக் கையால் வாங்கி வருகிறேன். இந்த ஏழை மக்களின் ஒளியற்ற கண்களைப் பார்க்கும்போது ஆண்டவனைப் பற்றிப் பேச எனக்கு எப்படி மனசு வரும்? பசித்தவர்களுக்கு ரொட்டியே தெய்வம். இந்த மக்களுக்குக் கூலி தரும் வேலையைக் காட்டிய பிறகே, நான் ஆண்டவனைப் பற்றிப் பேச முடியும். இங்கே, காலை பலகாரம் முடித்து, மத்தியான சாப்பாடு என்னவாக இருக்கலாம் என்று யோசனை செய்யும் நிலையில் நாம் ஆன்மிக ஆராய்ச்சி செய்யமுடியும். ஒரு வேளை ரொட்டிக்குத் திண்டாடும் நிலையில் வாழும் மக்களிடம் நான் தெய்வ ஆராய்ச்சி செய்ய முடியுமா? அந்த மக்களுக்குக் கடவுளின் அவதாரமே ரொட்டியும் வெண்ணெய்யும் தான். ஏழை விவசாயிகள் நிலத்தை உழுது ரொட்டி சம்பாதித்துக் கொள்வார்கள். அந்த ரொட்டிக்கு வெண்ணெய் கிடைக்க ராட்டையைக் கொடுத்தேன். இன்று நான் முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்டு, பசியில் தவிக்கும் அந்த ஏழை மக்களின் தனிப் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன்...’ உணர்ச்சி பொங்கப் பேசிய காந்தி மகான், தன் வாழ்நாள் முழுக்க விவசாயிகள் போன்ற எளிய மக்களுக்கான பிரதிநிதியாகத்தான் வாழ்ந்தார். அவருடைய தோற்றம் விவசாயிகளை நினைவுபடுத்துவதாகத்தான் இருந்தது.

பொது நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் காந்திக்கு எப்போதுமே அதீத கவனம் இருந்து வந்தது. ஒருமுறை மகாராஷ்டிர மாநிலம், புனே பார்வதி குன்றில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு ஆச்சார்ய கிருபளானி, ஆச்சார்ய பன்சாலியுடன் காந்தி சென்றிருந்தார். அங்கிருந்து திரும்புகையில், காந்தி கிருபளானியிடம், இரவு விருந்துக்குச் செல்ல குதிரை வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தச் சொன்னார். இதற்கிடையில் ஒரு கல்லூரி மாணவி, காந்தியிடம் அவருடைய கையெழுத்து வேண்டும் எனக் கேட்டாள். பொதுப் பணிகளுக்காக அவள் ஏதேனும் சிறு தொகையை நன்கொடையாக அளிக்க வேண்டும் எனக் காந்தி வலியுறுத்தியதால், அந்தப் பெண் பத்து ரூபாய் நிதி அளித்தார். இதற்குப் பிரதி உபகாரமாகக் காந்தி கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார். அடுத்து, காந்தி அந்தப் பணத்தை ஆச்சார்ய கிருபளானியிடம் கொடுத்து, குதிரை வண்டி வாடகைக்கான ஐந்து ரூபாயை அதிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

காந்தி விருந்தினராகச் செல்லவிருந்த வீட்டுக்குக் குதிரை வண்டி சென்றது. வீட்டுக்குள் சென்றவுடன் காந்தி, தான் கொடுத்த பத்து ரூபாயில், ஐந்து ரூபாய் போக மீதி ஐந்து ரூபாய் வேண்டும் எனக் கேட்டார். கிருபளானி, பன்சாலியைப் பரிதாபமாகப் பார்த்தார். காரணம் அந்த வண்டிக்காரன் ஐந்து ரூபாயைத் திருப்பி அளிக்காமல், மறந்துவிட்டு பத்து ரூபாயோடு சென்று விட்டான். இதை பன்சாலி காந்தியிடம் தெரிவித்தார். மூன்று பேருக்கும் உணவு பரிமாற உள்ள விருந்தினர் இல்லத்துப் பெண்ணிடம் காந்தியடிகள், ‘ஆச்சார்ய கிருபளானி, இன்று பொது நிதியான பத்து ரூபாயில், ஐந்து ரூபாயை வீணடித்துவிட்டதால், இன்று இரவு உணவை உட்கொள்ள மாட்டார், ஆகவே, எங்கள் இருவருக்கு மட்டும் உணவு பரிமாறினால் போதும்’ என்று உறுதியுடன் சொல்லிவிட்டார்.

அன்று ஐந்து ரூபாய்க்காகக் காந்தி கவலைப்பட்டார். ஆனால், இன்று..?’’னு கேட்டு குஜராத் நண்பர் அர்த்த புஷ்டியுடன் சிரிச்சார்.