மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

வாத நோய்க்கு வாதநாராயணன்... மூட்டு வலிக்கு முடக்கற்றான்! மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

வாத நாராயணன் - DELONIX ELATA
தழுதாழை - CLERODENDRON PHLOMIDES
முடக்கற்றான் -
CARDIOSPERMUM HELICACAVUM

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன தாவரம் இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் வாதநாராயணன், குத்துவாதமடக்கி ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம். 

  ‘வாதநாராயணன்’ என்பது இலக்கியப் பெயராக இருந்தாலும், வட்டார வழக்கில் இது, ‘வாசமடக்கி’, ‘வாதமடக்கி’, ‘வாவரக் காய்ச்சி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வேலிப்பயிர் மற்றும் தீவனப்பயிராகவும் பயன்படுகிறது. இது, கிளை பரப்பி உயரமாக வளரக்கூடிய மரம். ஆனால், வலுவிருக்காது. வேலிப்பயிராகவும், தீவனப்பயிராகவும் வளர்க்கும்போது குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வளரவிடாமல் கவாத்துச் செய்து வந்தால், இலை பறிக்க ஏதுவாக இருக்கும். இதன் இலைகள் மண்ணை வளப்படுத்தக்கூடியவை. புளியமரத்தின் இலையை ஒத்த இலைகளைக் கொண்ட மரம் இது. மரத்தின் உச்சியில், வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். தட்டையான காய்களைக் கொண்டிருக்கும். இது வாதநோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

முழங்கால் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், வாரம் இருமுறை இதன் இலைகளைக் கீரை சமைப்பதுபோலச் சமைத்து உண்டு வந்தால், இரண்டொரு முறை மலம் கழிந்து வாத நீர் வெளியேறி மேற்கண்ட நோய்கள் குணமாகும். ‘சரவாங்கி வாதம்’ என அழைக்கப்படும் ‘ரொமாட்டாய்டு’ வாத நோயாளிகளுக்கு மேற்குறிப்பிட்ட மருந்துணவு மிகவும் நல்லது. இதைச் சாப்பிட்டு வந்தால், வீரியமான வலிநிவாரண மருந்துகளைத் தவிர்க்க முடியும். பக்கவாதம் முதலான வாத நோயாளர்கள் இந்த இலையைத் தண்ணீரில் ஒரு பிடி  போட்டுக் காய்ச்சிக் குளித்து வந்தால், துவண்டுபோன கை கால்கள் விரைவில் நல்ல நிலைக்குத் திரும்பும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, ஒரு துணியில் பந்துபோல முடிந்துகொள்ள வேண்டும். மூட்டு வீக்கம் முதலான வாத வீக்கங்கள் உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்து வந்தால் விரைவில் குணமாகும்.

வாதநாராயண இலைகளை நிழலில் காய வைத்துப் பொடித்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து விதமான வாத நோயாளிகளும் இரவு படுக்கப் போகும் முன்பு, இந்தப் பொடியை அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து உண்டு வந்தால், நன்மை கிட்டும்.

ஒரு லிட்டர் வாதநாராயணன் இலைச்சாற்றுடன் 1 கிலோ பனைவெல்லம் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி பாகுபதத்தில் இறக்கி, உடனே வேறொரு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். ஆறிய பிறகு, இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன்பு 5 மில்லி முதல் 10 மில்லி வரை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வாதநோய்கள் அண்டாது. மலம் இளகி வெளியேறும்.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

தழுதாழை

இதுவும் வாதத்தைச் சமன் செய்யும் மூலிகைத் தாவரமாகும். இது புதர்த்தாவர வகையைச் சேர்ந்தது. சிறிது வெகுட்டலான மணத்துடன் வெளிர் பச்சைநிற இலைகளைக் கொண்டிருக்கும். இதை ஆடு மாடுகள் உண்பதில்லை. அதனால், வேலி அமைக்க ஏற்றவை. குத்துத்தாவரமாக வளர்வதால், இதை, ‘குத்துவாதமடக்கி’ என்றும் அழைக்கின்றனர். தென் தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘காயத்திருமேனித் தைலம்’ அனைத்து வீடுகளிலும் இருக்கும். இத்தைலம் வாதம், தோல்நோய்கள், அடிபட்ட வெட்டுக்காயங்கள் மற்றும் தீப்புண்கள் எனப் பலவற்றையும் குணமாக்கும் சர்வரோக நிவாரணி. பொதுவாக இது மேல்பூச்சுத் தைலமாகவே பயன்பட்டாலும், சில அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், உள்ளுக்குக் குடிக்கவும் கொடுத்துப் பலன் கண்டிருக்கிறார்கள்.

இத்தைலம் அவரவர் குடும்ப மரபுப்படி பல்வேறு முறைகளில் காய்ச்சப்படுகிறது. 14 வகையான மூலிகைச்சாறுகள், 18 வகையான மூலிகைச்சாறுகள், 31 வகையான மூலிகைச் சாறுகள் எனச் சேர்த்து, 11 வகைகளில் காயத்திருமேனி தைலம் காய்ச்சப்படுகிறது. இன்றளவும், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டில் இது உள்ளது. இத்தைலத்தில் தழுதாழைச்சாறு தான் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16



தழுதாழை இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறியவுடன், இளஞ்சூட்டில் குளித்து வந்தால், உடல் வலிகள் குணமாகும். பக்கவாதம் மற்றும் மூட்டுவாத நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. உடல் முழுவதும் மாறி மாறி வரும் குத்து வலி, உடற்கடுப்பு முதலியவற்றால் வருந்துபவர்கள் இம்முறையில் குளித்துப் பயன்பெறலாம்.

தழுதாழை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுவலி, மூட்டு வீக்கங்களில் வைத்துக் கட்டி வர குணமாகும். இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, ஒரு மெல்லிய சீலைத் துணியில் பந்துபோல முடிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பெயர் ‘கிழி’. ஒரு பாத்திரத்தில் இளஞ்சூட்டில் விளக்கெண்ணெய் வைத்துக்கொண்டு கிழியை அதில் தோய்த்து ஒற்றடமிட... சுளுக்கு, பிடிப்பு முதலியன குணமாகும்.

தழுதாழை இலைகளை நிழலில் உலர்த்தி நன்கு பொடி செய்து, ஆளி விதை எண்ணெயில் வதக்கிப் பூசி வந்தால்... நெரிக்கட்டுகள், யானைக்கால் வீக்கம், வாதவீக்கம் ஆகியன படிப்படியாகக் குணமாகும்.

முடக்கற்றான்

முடக்குகளை அறுப்பதால் ‘முடக்கறுத்தான்’ என்று பெயராகி, அது மருவி, ‘முடக்கற்றான்’ ‘முடக்கத்தான்’ என்று ஆகிவிட்டது. சங்க இலக்கியங்களில் பேசப்படும் உழிஞைத் திணைக்குரிய ‘உழிஞை’ முடக்கற்றான் ஆகும். இன்றளவும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும், கேரளா மாநிலத்திலும் முடக்கற்றான் கொடி, உழிஞை என்றே அழைக்கப்படுகிறது. இதுபோல நிறைய மூலிகைகளின் பெயர்கள் கேரளாவில், தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பெயர்களாலேயே அழைக்கப்படுவது, வியப்பான விஷயம். முடக்கற்றான் இலைகளை அவித்துப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் மிளகு, உப்பு சேர்த்து ரசம் செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இந்த ரசத்தை வாரம் இருமுறை உண்டு வந்தால், வாய்வு கலையும். மலச்சிக்கல், வாதவலி ஆகியவை குணமாகும்.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

வாதநாராயணன், தழுதாழை, முடக்கற்றான் ஆகிய மூன்று மூலிகைகளுக்குமே வாதத்தைக் குணமாக்கும் பண்புகளும், மலமிளக்கும் பண்புகளும் உள்ளன. சித்த மருத்துவத்துக்கு என்று தனிப்பட்ட ஒரு தத்துவப் பின்னணி உண்டு. அதைத்தான்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலார்
வளிமுதலா எண்ணில் மூன்று
- என்ற குறள் மூலம் வள்ளுவர் விளக்கியுள்ளார்.

உடலை இயக்குகிற வளி (வாதம்-காற்று), அழல் (பித்தம்-சூடு), ஐயம் (கபம்-தண்ணீர்) ஆகியன மூன்றும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். வாதம் எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையான வளி எனும் தமிழ்ச்சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். கேரளாவில், மனித உடலிலிருந்து கெட்ட காற்றுப் பிரிவதை ‘வளி பிரிகிறது’ என்றே சொல்கிறார்கள்.

இந்த மூன்றில், அழல் எனும் பித்தம்தான் (உடற்சூடு) முதன்மையானது. சூடு அதிகமானால், வளி விரிவடையும். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் வளி தண்ணீராக மாறும்.

‘பேதியால் வாதந்தாழும்
வமணத்தால் (வாந்தியால்) பித்தந்தாழும்
நசியத்தால் மூக்குதுளி கபம்தாழும்
குடலைக் கழுவி உடலை வளர்’
- என நோயணுகாமல் நீண்ட நாள்கள் வாழ கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களாகச் சித்த மருத்துவம் வகுத்துள்ளது. வாரத்துக்கொருமுறை எண்ணெய் முழுக்கினால் உடல்சூடு தன்னிலை அடையும். ஆண்டுக்கு இருமுறை வாந்தி, பேதி மருந்து உட்கொள்வதால் உடலில் கெட்ட நீர் சேராது. வாதநோய்கள் வராது. நாமும் அன்றாட வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ்வோம்.

முட்சங்கன் மற்றும் சங்கன்குப்பி ஆகிய மூலிகைகள் குறித்து அடுத்த இதழில்...

- வளரும்  

மசாஜ் எண்ணெய் தைலம்!

வாதநாராயணன் இலைச்சாறு    -    350 மில்லி
சிற்றாமணக்கு எண்ணெய்    -    350 மில்லி
வெள்ளைப்பூண்டு    -    10 கிராம்
சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு    -    15 கிராம்
வெண்கடுகு    -    3 கிராம்

பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு ஆகியவற்றை நன்கு அரைத்து வாதநாராயணன் இலைச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றோடு கலந்து அடுப்பிலேற்றி, சிறுதீயாக எரிக்க வேண்டும். நன்கு கொதித்து அடியில் படியும் வண்டல் மெழுகுப் பதமானவுடன், இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இத்தைலத்தை, காலையில் மட்டும் ஒரு டம்ளர் காபி, தேநீர் அல்லது வெந்நீரில் 5 மில்லி முதல் 10 மில்லி வரை கலந்து குடித்துவந்தால், கை கால் குடைச்சல், மூட்டுவலி, மூட்டுவீக்கம் போன்ற வாத நோய்கள், பக்கவாதம் கண்டவர்களுக்கு ஏற்படும் கைகால் துவளல், நடுக்கு வாதம் ஆகியன குணமாகும். சித்தமருந்துக் கடைகளில் கிடைக்கும் நாராயணத்தைலம், வாதநாராயணன் இலைகளைக்கொண்டே தயாரிக்கப்படுகிறது. இத்தைலத்தை மேல்பூச்சுத் தைலமாகவும், மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

முறைக்காய்ச்சலுக்குத் தழுதாழை!

சிலருக்கு வெப்பமானியில் அளக்கும்போது உடற்சூடு சரியாக இருந்தாலும், உள்ளுக்குள் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் அனைத்தையும் உணர்ந்து அவதிக்குள்ளாவர். சிலருக்கு மலேரியா காய்ச்சல் அறிகுறிபோல, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடல் சூடு அடையும். இதைச் சித்த மருத்துவத்தில் ‘முறைச்சுரம்’ என்பார்கள்.

நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

இவ்விதமான காய்ச்சல் கண்டோர், நிலவேம்புக் குடிநீர் குடிப்பதோடு... காலையும் மாலையும் உணவுக்குப் பிறகு 15 மில்லி தழுதாழைச்சாற்றையும் சேர்த்துக் குடித்து வந்தால், குணமாகும்.

சிலர் காலையில் எழுந்தவுடன் விடாமல் தும்முவார்கள். மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல், மண்டைக்குடைச்சல் போன்றவற்றால் அவதிப்படுவர். ஆங்கில மருத்துவத்தில் இவ்வியாதிகளுக்கு ஆண்டுக்கணக்கில் ஒவ்வாமை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிப்பட்டவர்கள், தினமும் 2 துளி தழுதாழை இலைச்சாற்றை மூக்கில் உறிஞ்சி வந்தால், விரைவில் நோய் முற்றிலும் குணமாகும்.

உடல் மெலிய முடக்கற்றான்

முடக்கற்றான் இலைகளைப் பச்சரிசி மாவுடன் சேர்த்து அரைத்து, அடையாகச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலி தீரும். உடல் பருத்தவர்கள் இதைச் சாப்பிட்டால், கெட்ட நீர் வெளியேறி உடல் மெலியும். முடக்கற்றான் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை உணவுக்குப் பிறகு, 1 தேக்கரண்டியளவு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் சரியாகும். 

குறைவான மாதவிடாய், அதிக வலியுடன் கூடிய மாதவிடாய்க் காலங்களில் முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், குணமாகும். அதோடு, உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.

முடக்கற்றான் இலைச்சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி, காதுகளில் விட்டு வந்தால் காதுவலி, காதுகளில் சீழ் வடிதல் ஆகியவை குணமாகும். முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வாதவலி கண்ட இடங்கள், மூட்டு வீக்கங்களில் ஒற்றடம் கொடுத்து வந்தால், குணமாகும்.

முடக்கற்றான் இலைகளைக் கொடியுடன் பிடுங்கி, ஒரு கையளவு எடுத்து உரலில் போட்டு இடித்து, அதனுடன் 5 வெள்ளைப் பூண்டு பல், 10 கிராம் மிளகு, 600 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 150 மில்லியாக சுண்டும்வரை வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், நன்கு பேதியாகும். அதோடு, வாய்வு, மலச்சிக்கல், உடல்வலி, மூட்டுவீக்கம் ஆகியவை நீங்கும். இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும்.

முடக்கற்றான் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து உரலில் போட்டு இடித்து, 600 மில்லி தண்ணீர் சேர்த்து 200 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை, மாலை இரு வேளைகளிலும் 100 மில்லி அளவு குடித்து வர தீராத மூல வியாதி குணமாகும்.